கேள்வியாளர்: இறப்புக்குப் பிறகு என்ன நிகழ்கிறது? மறுபிறப்பு என்பது இருக்கிறதா? அவ்வாறு இருந்தால், ஒரு நபரை எது ஒரு பிறவியில் இருந்து மற்றொன்றுக்குக் கொண்டுசெல்கிறது?

சத்குரு: யோகத்தில் மனித உடலை ஐந்து பரிமாணங்களாக அல்லது ஐந்து அடுக்குகளாகப் பார்க்கிறோம். பௌதீக உடல் அன்னமய கோசம் எனப்படுகிறது. அன்னம் என்றால் உணவு. எனவே இது உணவு உடல். அடுத்து மனோமய கோசம் அல்லது மனோ உடல் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது சக்தி உடல் என்ற பொருளில் பிராணமய கோசம் என்று அழைக்கப்படுகிறது. பௌதீக உடல், மனோ உடல் மற்றும் சக்தி உடல் ஆகிய மூன்றும் உயிரின் பொருள் சார்ந்த பரிமாணங்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு மின்விளக்கை எடுத்துக்கொண்டால், அது பொருள் சார்ந்தது என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்கமுடியும். மின்சாரம் என்பது அதாவது, மின்கம்பியில் ஓடும் மின்னணுக்களும் பொருள் சார்ந்தவைதான். அவ்வாறே மின்விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, இவை மூன்றும் பொருள் சார்ந்தவையாக உள்ளன. அதைப்போலவே, பௌதிக உடல் கண்ணுக்கு புலப்படும் வகையில் உள்ளது. மனோ உடல் சூட்சுமமாக உள்ளது. சக்தி உடல் மேலும் அதிக சூட்சுமமானது. ஆனால் இவை மூன்றும் படைப்பின் தன்மையில் பொருள் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒருவரின் கர்மா, அவரது உடல், மனம் மற்றும் சக்தியில் பதிவு செய்யப்படுகிறது. கர்மப்பதிவு அல்லது கர்மக் கட்டமைப்பானது, உங்களை பௌதிக உடலுடன் ஒட்டவைக்கும் சிமெண்ட் பூச்சாக இருக்கிறது. கர்மா என்பது ஒரு பிணைப்பாக இருந்தாலும், கர்மக் கட்டமைப்பு இருக்கும் காரணத்தினால்தான் நீங்கள் இந்த உடலை பற்றிக்கொண்டு, இங்கு இருக்க முடிகிறது.

அடுத்த இரண்டு பரிமாணங்கள் – விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் என்று அழைக்கப்படுகின்றன. விஞ்ஞானமய கோசம் பொருள்சார்ந்தது அல்ல, ஆனால் பௌதிகத்துடன் தொடர்புடையது. விஷேச ஞானம் அல்லது விஞ்ஞானம் என்பதற்கு அசாதாரணமான ஞானம் அல்லது ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம் என்று பொருள். இது பரவெளி உடல். இது பொருள்தன்மையில் இருந்து பொருளற்ற தன்மைக்கு மாறும் தன்மையில் உள்ள உடல். இது பொருள் தன்மையோ அல்லது பொருளற்ற தன்மையோ அல்ல. இது, இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு இணைப்பு போன்றது. ஆனந்தமய கோசம் என்பது பரவச உடல். இது முற்றிலும் பொருளற்ற தன்மையில் உள்ளது. இதற்கென்று ஒரு உருவம் கிடையாது. சக்தி உடல், மனோ உடல் மற்றும் பௌதிக உடல் இவை மூன்றும் ஒரு வடிவத்தில் இருந்தால்தான், அது ஆனந்த உடலைக் கொண்டிருக்க முடியும். இவை மூன்றும் இல்லையெனில் ஆனந்த உடல் பிரபஞ்சத்தின் பகுதியாகிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இறப்பு என்பது என்ன?

ஒருவர் இறந்துவிட்டால் "அவர் இனி இருக்கப் போவதில்லை" என்று கூறுகிறோம். அது உண்மை அல்ல. நீங்கள் அறிந்திருக்கும் நிலையில் இனி அவர் இருக்கப் போவதில்லை. ஆனால் அவர் இங்குதான் இருக்கிறார். பௌதிக உடல் விழுந்துவிட்டது. ஆனால் கர்மாவின் வலிமையைப் பொருத்து மனோ உடல் மற்றும் பிராண உடல் இருந்து கொண்டிருக்கிறது. மற்றொரு கருவறை கிடைப்பதற்கு, இந்தக் கர்மக் கட்டமைப்பின் தீவிரம் குறைந்து ஒரு செயலற்ற தன்மைக்கு மாற வேண்டும். கர்மக் கட்டமைப்பின் செயல்பாடு முடிந்துவிட்ட காரணத்தால் அது பலவீனமாக இருந்தால், அப்போது இன்னொரு உடலை மிக எளிதாக அது தேடிக்கொள்கிறது. ஒருவர் இந்த வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்ட கர்மாவைத் தீர்த்துவிட்டால், அவர் நோய், விபத்து அல்லது காயம் எதுவுமில்லாமல் சட்டென இறந்துவிடுவார். அந்த நபர் அடுத்த சிலமணி நேரங்களுக்குள், மற்றொரு உடலை அடைந்துவிடலாம்.

நீங்கள் நூறு சதவிகிதம் உங்கள் கர்மக் கட்டமைப்பை அழித்துவிட்டால், நீங்கள் படைப்போடு கலந்துவிடுகிறீர்கள்.

ஒருவர் தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்து அமைதியாக மரணமடைந்தால், அவர் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது உடனடியாக அகன்றுவிடுகிறது. எனினும் கர்மக் கட்டமைப்பு மிகத் தீவிரமாக, முடிக்கப்படாமல் இருந்தால், அப்போது அது கர்மாவை முடிக்க வேண்டும். இப்போது இன்னொரு உடலைத் தேடி அடைவதற்கு அவருக்கு மிக அதிகமான காலம் தேவைப்படுகிறது. இதைத்தான் நீங்கள் ஆவிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். உங்கள் அனுபவத்தில் அதை நீங்கள் உணரமுடியும். ஏனெனில், அவைகள் மிகத் தீவிரமான கர்மக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் அறிந்தாலும், அறியாமல் இருந்தாலும், உங்களைச் சுற்றிலும் அத்தகைய எண்ணற்ற உயிர்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளுள் பெரும்பாலானவைகளை நீங்கள் உணரமாட்டீர்கள். ஆனால் பெரும்பாலும் அவை உங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை. ஏனெனில், அவற்றின் கர்மா பலவீனமாக்கப்படுகிறது. அவைகள் மற்றொரு உடலை அடைவதற்கு முன்பு, கர்மா மேலும் வலுவிழப்பதற்காகத்தான் அவைகள் காத்திருக்கின்றன.

மஹாசமாதி – உச்சபட்ச விடுதலை

நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடக்கும்போது, ஒவ்வொரு ஆன்மீக சாதகருக்கும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் உடைத்தெறிவதுதான் உச்சபட்ச இலக்காக இருக்கிறது. இது ஒரு குமிழியைப் போன்றது. குமிழியின் வெளிப்புற வட்டம் உங்கள் கர்மக் கட்டமைப்பாகவும், உள்புறத்தில் காற்றும் உள்ளது. குமிழியை நீங்கள் உடைத்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது உங்கள் காற்று எங்கே இருக்கிறது? உங்கள் காற்று என்று அப்படிப்பட்ட எதுவும் இல்லை; அது சர்வத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. தற்போது எல்லையில்லாத ஒரு தன்மையானது, வரம்புக்கு உட்பட்ட கர்மக் கட்டமைப்பில் கட்டுண்டு இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு தனி நபர் என்று அது உங்களை நம்ப வைக்கிறது. நீங்கள் நூறு சதவிகிதம் உங்கள் கர்மக் கட்டமைப்பை அழித்துவிட்டால், நீங்கள் படைப்போடு கலந்துவிடுகிறீர்கள்.

விடுதலை என்றால் உடல் மற்றும் மனதின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இருந்து விடுதலை அடைவது; வாழ்வு மற்றும் பிறப்பு - இறப்பு செயல்முறையில் இருந்தே விடுபடுவது.

இதுவே மஹாசமாதி என்று குறிப்பிடப்படுகிறது. சாவிகள் எங்கே இருக்கின்றன என்பதை நீங்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டு, கர்மக் கட்டமைப்பை முழுவதுமாக அழிப்பதனால், உண்மையிலேயே நீங்கள் இல்லாமல் போய்விடுகிறீர்கள். இந்து பாரம்பரியத்தில் இது, முக்தி என்று குறிப்பிடப்படுகிறது. யோக பாரம்பரியத்தில் இது, மஹாசமாதி என்று குறிப்பிடப்படுகிறது. பௌத்த மார்க்கத்தில் இது, மஹாபரிநிர்வாணம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, ஆங்கிலத்தில் நாம் இதை விடுதலை என்று கூறுகிறோம். விடுதலை என்றால் உடல் மற்றும் மனதின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இருந்து விடுதலை அடைவது; வாழ்வு மற்றும் பிறப்பு - இறப்பு செயல்முறையில் இருந்தே விடுபடுவது.