“நதிகளை மீட்போம்” பேரணியின் ஒருமாத கால பயணத்திற்கு பிறகு சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம்” இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையை அக்டோபர் 3 அன்று அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இந்த முயற்சியானது நதிகளை மீட்பதில் எந்த விதத்தில் செயல்படும் என்பதை அறிந்துகொள்ள விருப்பமா? அந்த அறிக்கையிலுள்ள சில முக்கியமான பகுதிகளை தொகுத்து இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பகுதி 1ல் சத்குரு நமது தேசத்தின் நதிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் முன்வைக்கிறார்.

சத்குரு:

எனக்கும் மலைகளுக்கும், காடுகளுக்கும் நதிகளுக்குமான தொடர்பு என் பால்ய வயது காலங்களுக்கு செல்லும். இயற்கை, ரசிப்பதற்கான ஒரு பொருள் என்றல்லாமல், என் வாழ்வின் அங்கமாய் அவை இருந்திருக்கின்றன. 4 லாரிச் சக்கர டியூப்கள் மற்றும் கட்டப்பட்ட மூங்கில் கம்புகள் ஆகியவற்றோடு நான் காவிரியின் வழியே தனியாக 13 நாட்கள் பயணம் செய்தேன். அந்த நதி என்னைக் காட்டிலும் மகத்தான மாபெரும் ஓர் உயிர்த்தன்மை என்பதை அப்போது நான் பார்த்தேன். என்னையும் உங்களையும் போன்றவர்கள் வந்து போவார்கள். ஆனால், இந்த நதியானது தொடர்ந்து ஆண்டாண்டு காலத்திற்கு ஓடி, உயிர்களுக்கு ஆதாரமாக கற்பனைக்கு எட்டாத பங்களிப்பை வழங்குகிறது. நதி என்பது என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வளம் அல்ல; அது ஒரு தீவிரமான உயிர்த்தன்மை. இயற்கையாக நமது உடலில் நான்கில் மூன்று பாகம் நீரால் ஆனது. எனவே தண்ணீர் என்பது வியாபாரப் பொருளல்ல, அது உயிர் உருவாக்கும் மூலமாகும். அது நம் உடலில் இருக்கும்போது அதனுடன் நாம் எத்தகைய ஓர் பிணைப்போடு இருக்கிறோம்?! வெளியே நதியாக பாயும்போது மட்டும் நாம் ஏன் அதனை வேறுவிதமாக நடத்தவேண்டும்?

நம்முடைய வாழ்நாளில் இப்படி ஆறுகள் வறண்டு வருவதை நாம் கண்டுகொள்ளாமல் செல்வது, நம்முடைய வருங்கால சந்ததிகளின் நலனின் மேல் நமக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில், தேசம் முழுவதும் நதிகள் வற்றி வருவதை நான் கவனித்து வருகிறேன். அதுவும், இது ஒரே ஆண்டில் நிகழ்ந்து விடவில்லை! ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து, வற்றி, அதன் நீரோட்ட விகிதம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த குறைபாடு மிக அதிக அளவில் ஏற்பட்டிருந்தது. நம்முடைய வாழ்நாளில் இப்படி ஆறுகள் வறண்டு வருவதை நாம் கண்டுகொள்ளாமல் செல்வது, நம்முடைய வருங்கால சந்ததிகளின் நலனின் மேல் நமக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் விஞ்ஞானி அல்ல, தேவையான அறிவியல் ஞானமோ, அதனை விளக்குவதற்கான வார்த்தைகளோ என்னிடம் இல்லை. ஆனால், நான் கவனித்ததில், பசுமையின்மையும், நிலத்தடி நீர் மிகையாய் உறிஞ்சப்படுவதும்தான் நம் நதிகளை அழிவினை நோக்கி அழைத்துச் செல்கின்றன எனத் தெரிகிறது. குறிப்பாக வெப்ப மண்டலமான நம் நாட்டில் போதுமான மரங்கள் இல்லையென்றால் மண்ணானது மணலாக மாறும். மண்ணுக்கும் நதிகளுக்கும் மிக ஆழமான தொடர்புள்ளது. நாம் மண்ணை பாழ்படுத்தினால் ஆறுகளை பாழ்படுத்துகிறோம். நமது நீர்நிலைகள் வறண்டு போவதும், மண்வளம் குறையும் நிலையும் இதனால்தான் ஏற்பட்டுள்ளது.

எந்தவித விஞ்ஞான அறிவும், முறையான தொழிற்நுட்ப வசதியும் இன்றி, பாரம்பரிய அறிவை மட்டுமே கொண்டு இந்த நாட்டில் விவசாயிகள் சுமார் 130 கோடி மக்களுக்கு உணவை வழங்கி வந்துள்ளனர் என்பது மிகப்பெரிய சாதனையாகும். மண்ணின் கரிமவளக் குறைப்பாடும், போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாமையும், இத்தனை பெரிய மக்கள்தொகைக்கு உணவளித்த நம் விவசாயிகளை தற்கொலையை நோக்கிச் செலுத்துகிறது.

உங்களையோ அல்லது என்னையோ ஊட்டமில்லாத மண்ணையும், போதுமான நீர் இல்லாத நிலையையும் வைத்து விவசாயம் செய்யச் சொன்னால் நாமும் அதே நிலைக்குதான் தள்ளப்படுவோம். நமக்கு உணவளித்து நம் உயிரை பேணி வளர்த்த விவசாயிகள், தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பேணி வளர்க்க வழியின்றி உள்ளனர். நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலை இப்படி மோசமாக இருக்கும்போது எப்படி நம்மால் நிமிர்ந்த தலையுடன் நடந்துசெல்ல முடியும்? இது மிகப்பெரிய அவமானமாகும். நான் இதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்.

8000 முதல் 12,000 வருடங்களாக விவசாயம் செய்துவரும் வரலாறைக் கொண்ட விவசாயிகளிடத்தில் அதனைப் பற்றிய ஞானம் பொதிந்துள்ளது. இது வெறும் கடின உழைப்பு மட்டும் அல்ல, தொன்றுத்தொட்டு இருந்து வரும் அறிவு. தற்போது விவசாயிகளில் 15 சதவித பேர் மட்டுமே தங்கள் குழந்தைகளை விவசாயத்திற்குள் கொண்டுவர விருப்பமாக உள்ளனர். நாம் அவர்களுக்கான தகுந்த சூழலை ஏற்படுத்தவில்லை என்றால், இந்த அறிவை நாம் முழுமையாக இழக்கும் நிலை உருவாகும். விவசாயிகளின் பாரம்பரிய அறிவைக்கொண்டு மண்வளம் மற்றும் நீர்வளத்தை பெருக்கி, நிலத்தில் சாத்தியமான வழிகளிலெல்லாம் பசுமையை உருவாக்கி, சரியான தொழிற்நுட்பங்களைக் கொண்டு தண்ணீர் மேலாண்மை மேற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

பெரிய நதிகளின் இரு கரைகளிலும் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடவேண்டும், சிறுநதிகளின் கரைகளில் குறைந்தது 500 மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடவேண்டும் மற்றும் நிலங்கள் மரங்களால் சூழப்பட வேண்டும் என்ற இந்த தீர்வுகளை நாம் முன்வைக்கிறோம். நிலங்கள் மரங்களின் நிழல்களில் இருக்கும்போதுதான் மண்ணில் உள்ள உயிரியல் தன்மை மேம்படும். அதனால் மண் தண்ணீரை தக்க வைக்கும் திறன் அதிகரிப்பதோடு, நதிகளுக்குள் நீரை கொண்டு சேர்க்கிறது. அரசாங்கத்திடம் நிலம் இருக்கும்பட்சத்தில் அங்கே காடு உருவாக்கம் நிகழவேண்டும். விவசாயிகளிடத்தில் நிலம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் வழக்கமான பயிர்களிலிருந்து மரப்பயிர்களுக்கு மாறவேண்டும். ஒரு விவசாயிக்கு இத்தகைய முன்னெடுப்பு பொருளாதாரத்தில் சிறப்பான நிலையை அளிக்க முடியும். இதன்மூலம், அவர்கள் சுமார் 3 முதல் 5 மடங்கு அதிகமான வருமானம் ஈட்ட முடியும்.

பெரிய நதிகளின் இரு கரைகளிலும் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடவேண்டும், சிறுநதிகளின் கரைகளில் குறைந்தது 500 மீட்டர் அகலத்திற்கு மரங்கள் நடவேண்டும் மற்றும் நிலங்கள் மரங்களால் சூழப்பட வேண்டும் என்ற இந்த தீர்வுகளை நாம் முன்வைக்கிறோம்.

இந்தத் திட்டவரைவினை, சுற்றுச்சூழல் மீது தாக்கம் ஏற்படுத்தும், ஒரு பொருளாதார திட்டமாகவும் ஆக்க விரும்புகிறோம். செயல்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கையே நமது முக்கிய நோக்கம். பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் இந்த திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களின் நலனையும் கருத்தில்கொண்டு, குன்றிவரும் நம் மண் மற்றும் நீர்வளம் எனும் கொடிய பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படுகிறது. இதில் முதல் பங்குதாரர் ஆறுகள். அதன்பின் அதில் வாழும் உயிர்கள், உழவர்கள். அதன்பின், அதன்மூலம் வாழும் சமூகம், அதன்பின் உள்ளூர் மற்றும் மத்திய நிர்வாகங்கள். இத்திட்ட வரைவை நிறைவேற்றி அமல்படுத்துவதே நமது பிரதான குறிக்கோளாகும். அறிவியலாளர்களின் குழுவும் மற்றும் நானும் இதுகுறித்த எந்தவித விளக்கங்களையும் தெளிவுபடுத்துவதற்கு தயாராக உள்ளோம்!

நூற்றாண்டுகள் கடந்து பல தலைமுறைகளுக்கு நமது நதிகள் நம்மை பேணி பாதுகாத்து சிறப்பாக்கி வந்துள்ளது. இப்போது நாம் நதிகளை பேணி பாதுகாப்பதற்கான தருணம் வந்துள்ளது. நமது பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான சட்டம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும், அச்சட்டம் கட்டாய சட்டமாக்கப்படும் என்றும் நம்புகிறோம். நமது நதிகள், நமது நீர்நிலைகள், நமது மண் இவற்றை எல்லாம் தேசிய வளங்களாக, பொக்கிஷங்களாக மாற்றுவதை நோக்கி நாம் இயங்குவோம்!

ஆசிரியர் குறிப்பு: மேலுள்ள பகுதிகள் “நதிகளை மீட்போம்” சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது. நீங்களும் இந்தியாவின் நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் பங்குபெற விரும்பினால் அதற்கான எளிய வழி, 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பது! நதிகளை மீட்பதில், மிஸ்டு கால் கொடுப்பதால் என்ன நிகழும் என்பதை அறிய க்ளிக் செய்யுங்கள்!