பொருளடக்கம்
1. வேப்பிலை என்பது என்ன?
2. வேப்பிலை நம் உடலில் எப்படி வேலை செய்கிறது?
3. வேப்பிலை பயன்கள்
3.1 வேப்பிலை தினமும் சாப்பிடலாமா?
3.2 தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது
3.3 சருமத்திற்கான வேப்பிலையின் பயன்கள்
3.4 யோக சாதனைக்கு துணைநிற்கும் வேப்பிலை
3.5 பல்வேறு பலன்களை வழங்கிடும் வேம்பு
3.6 வேப்பிலை சாறு பயன்கள்
3.7 வேப்பிலை பொடி பயன்கள்
4. வேம்பின் மருத்துவ பயன்கள்
4.1 பாதுகாப்பு - வேப்பிலை சருமத்தைப் பாதுகாக்கிறது
4.2 சுத்தப்படுத்துதல் – சுத்தப்படுத்துவதற்கான வேப்பங்கொட்டை
4.3 வேப்பம்பட்டை மற்றும் வேப்பங்குச்சி
4.4 சுத்திகரிப்புக்கான வேப்ப மரவேர்கள்
4.5 வேப்ப எண்ணெய் பயன்கள்
4.6 வேப்பம்பூவின் பயன்கள்
5. வேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

வேப்பிலை என்பது என்ன?

பசுமையான ஒரு மரவகையான வேம்பு, உலகிலேயே சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட தாவர இனம் என்ற பெயர்பெற்றது. வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது. இந்த மரம் இந்திய துணைக்கண்டத்தில் பரவலாக வளரக்கூடியதாக இருப்பினும், தற்போது மக்கள் இதன் பயன்களை அறிந்துகொண்டதால், இதேபோன்ற தட்பவெப்ப நிலைகொண்ட இடங்களில் உலகமெங்கும் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

வேப்பிலை நம் உடலில் எப்படி வேலை செய்கிறது?

வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் இரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பமரத்தின் பட்டை முதல் வேப்ப இலைகள், பூ, பழம், விதை மற்றும் வேர் வரை அனைத்து பகுதிகளும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

நீங்கள் தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கும். இதனால் அவை உங்கள் உடலமைப்பிற்கு எதிராக குழுவாக ஒன்றிணையாது.

ஆராய்ச்சிகளின் முடிவின்படி, வேம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான ஆதாரமாக இருப்பதால், செல்களின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் free radicals எனப்படும் சமனில்லா மூலக்கூறுகளைத் தடுப்பதற்கான பண்புகளைக் (free radical scavenging properties) கொண்டுள்ளது. மேலும் செல்களுக்கிடையே சமிக்ஞைகளைக் கடத்தும் பாதைகளை (cell signaling pathways) ஒழுங்குபடுத்துவதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. சைக்ளோஆக்சிஜனேஸ் (COX) மற்றும் லிபோக்சிஜனேஸ் (LOX) என்சைம்கள் உள்ளிட்ட அலர்ஜிக்கு ஆதரவான என்சைம் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அலர்ஜி எதிர்ப்பு அம்சமாகவும் வேம்பு பங்களிக்கிறது.

வேப்பிலை பயன்கள் (Veppilai Benefits in Tamil)

சத்குரு: வேம்பு மிகவும் தனித்துவமான ஒரு மரம். வேப்பிலைகள் பூமியின் மிகவும் நுட்பமான இலைகளாகும். வேப்பமரத்தில் உயிரியல் ரீதியாக செயல்படும் 130க்கும் மேற்பட்ட சேர்மங்கள் உள்ளன. மேலும், நீங்கள் பூமியில் காணக்கூடிய மிகவும் நுட்பமான இலைகளில் வேப்பிலை ஒன்றாகும்.

#1 வேப்பிலை தினமும் சாப்பிடலாமா? பயன் என்ன?

வேம்பு பல நம்பமுடியாத மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமான ஒன்று புற்றுநோய் செல்களை அழிப்பதாகும். ஒவ்வொருவரின் உடலிலும் புற்றுநோய் செல்கள் உள்ளன, ஆனால் அவை பொதுவாக ஒருங்கிணையாதவை. ஆனால், நீங்கள் உடலில் குறிப்பிட்ட சூழ்நிலைகளை உருவாக்கினால், அவை ஒருங்கிணைக்கப்படும். இந்த செல்கள் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் வரை, அது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தாக்கினால் பிரச்சனையாகிவிடும். இது சிறு குற்றத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு மாறுவது போன்றது. இது ஒரு தீவிர பிரச்சனை. நீங்கள் தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்கும். இதனால் அவை உங்கள் உடலமைப்பிற்கு எதிராக குழுவாக ஒன்றிணையாது.

#2 தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது

இந்த உலகமே பாக்டீரியாக்களால் நிறைந்தது. உடலும் அதுபோலத்தான். நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை விட அதிகமான நுண்ணுயிரிகள் உங்களுக்குள் வாழ்கின்றன. இந்த பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் இல்லாமல், நீங்கள் எதையும் ஜீரணிக்க முடியாது. உண்மையில், அவர்கள் இல்லாமல் நீங்கள் உயிருடன் இருக்கமுடியாது. ஆனால் சில பாக்டீரியாக்கள் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியாக்களை நிர்வகிக்க உங்கள் உடல் தொடர்ந்து சக்தியை செலவழிக்கிறது. அதிகப்படியான பாக்டீரியாக்கள் உருவானால், நீங்கள் சோர்வடைவீர்கள். ஏனெனில் உங்கள் தற்காப்பு மண்டலம் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேப்பிலையை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்துவதன் மூலம், இந்த பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகாத விதத்தில் நீங்கள் நிர்வகிக்க முடியும். மேலும், அவற்றை எதிர்த்துப் போராட உங்கள் உடல் அதிக சக்தியைச் செலவிட வேண்டியதில்லை. நீங்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு வேப்பிலையை உட்கொண்டால், அது குடல் பகுதியிலுள்ள தீமை தரும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். மேலும், உங்கள் பெருங்குடல் பொதுவாக சுத்தமாகவும் தொற்று இல்லாமலும் இருக்கும்.

மேலும், உங்கள் உடலின் சில பாகங்களில் சிறிது துர்நாற்றம் ஏற்பட்டால், அங்கே பாக்டீரியாக்கள் அதிகம் செயல்படுகின்றன என்று அர்த்தம்.

#3 சருமத்திற்கான வேப்பிலையின் பயன்கள்

பெரும்பாலும் நம் அனைவருக்குமே ஏதேனும் சிறிய தோல் பிரச்சனை இருக்கிறது. ஆனால் உங்கள் உடலை வேப்பிலைகளால் கழுவினால், அது சுத்தமாகவும் பொலிவாகவும் மாறும். குளிப்பதற்கு முன், வேப்பிலையை அரைத்து உடலில் தேய்த்து, சிறிது நேரம் உலர வைத்து, பிறகு தண்ணீரில் கழுவினால், அது ஒரு நல்ல பாக்டீரியா அழிப்பானாக செயல்படும். மாற்றாக, சில வேப்பிலைகளை இரவுமுழுக்க தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரில் குளிக்கலாம்.

#4 யோக சாதனைக்கு துணைநிற்கும் வேப்பிலை

அனைத்திற்கும் மேலாக, வேம்பு உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. உடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல்வேறு தன்மைகளுள், பாரம்பரிய அடிப்படையில் இரண்டு தன்மைகள் ‘சீதம் மற்றும் உஷ்ணம்'. ஆங்கிலத்தில் சீதத்திற்கு மிக நெருக்கமான வார்த்தை "குளிர்ச்சி", ஆனால் அது கச்சிதமாகப் பொருந்தவில்லை. உங்கள் உடல் சீதத்தை நோக்கி நகர்ந்தால், உடலிலுள்ள கோழை அளவு அதிகரிக்கும். ஜலதோஷம் மற்றும் சைனசிடிஸ் முதல் பல சிக்கல்கள் அதிகப்படியான சளியுடன் தொடர்புகொண்டுள்ளன.

#5 பல்வேறு பலன்களை வழங்கிடும் வேம்பு

வேப்பமரத்தின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிடத்தகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், இது உலகிலேயே மிகவும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மருத்துவ மரமாக உள்ளது. வேப்பமரத்தின் நன்மைகள் இந்திய துணைக்கண்டத்தில் பாரம்பரியமாக அறியப்பட்டிருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் நவீன ஆராய்ச்சிகள் எளிமையான வேப்பமரத்தின் மீது கவனம் ஈர்க்கச் செய்துள்ளது. வேம்பு தயாரிப்புகள் நச்சுத்தன்மை அற்றவையாகவும், நன்மை செய்யும் பூச்சிகள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரிகள் மற்றும் தேனீக்களுடன் இணக்கமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேம்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை, நீடித்து நிலைக்கும் தன்மைகொண்டவை, புதுப்பித்துக்கொள்ளக் கூடியவை, மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடியவை.

#6 வேப்பிலை சாறு பயன்கள் (Neem Juice Benefits in Tamil)

வேப்பிலைச் சாறு, Neem Juice

வேப்பிலைச் சாறு அருந்துவது, ஒருவரின் செரிமான செயல்முறையை மறுசீரமைக்க உதவும். மேலும் இது, வளர்சிதை மாற்றத்தையும் குறிப்பிடத்தக்க விதத்தில் மேம்படுத்துகிறது. ஜூஸாக உட்கொள்ளும்போது, ​​உடல் கொழுப்பைக் குறைப்பதில் வேம்பு சிறப்பாக செயல்படுகிறது. இது பெருங்குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் உடலின் கழிவுநீக்க செயல்முறையை மேம்படுத்துகிறது. இதில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் என்சைம்கள் இருப்பதால், தேவையற்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேற்குறிப்பிட்ட பல காரணங்களால் வேப்பிலை சாறு உட்கொள்வதற்கு மிகவும் பயனுள்ள சாறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இதை அதிகபட்சம் எவ்வளவு எடுக்கமுடியும் என்பதை ஆராய்ச்சிகள் இன்னும் நிறுவவில்லை. மேலும், வேப்பிலைச் சாறு உட்கொள்ளும்போது மிதமான அளவில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

#7 வேப்பிலை பொடி பயன்கள் (Veppilai Podi Uses in Tamil)

வேப்பிலை பொடி, Neem Powder

வேம்பு பொடியாகவும் கிடைக்கிறது. மேலும் இது பல நாட்களுக்கு வருவதனால், பயணத்தின்போது எடுத்து செல்ல ஏதுவாகிறது. வேப்பிலையை பொடி செய்வதன் மற்றொரு நன்மை என்னவென்றால், வேப்பமரம் வளராத உலகின் பகுதிகளுக்கு இதை எளிதாகக் கிடைக்கச்செய்யலாம். வேப்பிலை பொடியை உட்கொள்ளவும் முடியும், வெளிப்புறமாக தோலில் பூசிக்கொள்ளவும் முடியும். வேப்பிலையை வெயிலில் உலர்த்தி, பின் நன்றாக அரைத்து, வீட்டிலேயே பொடியாக்கிக் கொள்ளலாம்.

வேம்பின் மருத்துவ பயன்கள்

பண்டைய ஆயுர்வேத அறிவியலின்படி, வேம்பு அனைத்து மருத்துவ மூலிகைகளுக்கும் அரசனாகும். வேம்பு தோல் நோய்களையும் முடி பிரச்சனைகளையும் எவ்விதம் தீர்க்கிறது என்பதையும், பசியை அதிகரிப்பது, செரிமானத்தை அதிகரிப்பது, வயிற்றில் தேவையான சூட்டை உண்டாக்குவது, சுவாசத்தை மேம்படுத்துவது, நீரிழிவு நோய்களை நிர்வகிக்க உதவுவது, காயங்களை குணப்படுத்த உதவுவது மற்றும் குமட்டலை நீக்குவது பற்றியும் அடிப்படை ஆயுர்வேத நூல்கள் விவரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையால் வேம்பு "21ம் நூற்றாண்டின் மரம்" என அறிவிக்கப்பட்டுள்ளது. US National Academy of Science தனது 1992ம் ஆண்டு அறிக்கையில் “Neem: A tree for solving global problems” என்ற தலைப்பில் வேம்பின் மருத்துவ பலன்களை அங்கீகரித்துள்ளது. வேப்பிலையின் சில முக்கிய மருத்துவப் பயன்பாடுகள் இங்கே: 

#1 பாதுகாப்பு - வேப்பிலை சருமத்தைப் பாதுகாக்கிறது

பாரம்பரியமாக, தலைப்பேன், தோல் நோய்கள், காயங்கள் அல்லது தோல் அரிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேப்பிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கொசு விரட்டியாக பயன்பட தகுதிவாய்ந்ததாகவும் வேம்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. வேம்பு உலகின் தொன்மையான சருமத்தை மென்மையாக்கும் பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி சேமித்துவைத்து, சருமத்திற்கான களிம்பாகப் பயன்படுத்தலாம்.

#2 சுத்தப்படுத்துதல் – சுத்தப்படுத்தும் வேப்பங்கொட்டை

சுத்தப்படுத்தும் தன்மைகொண்ட வேப்ப விதைகள், குடல் புழுக்களை அகற்றப் பயன்படுகிறது. விதைகளிலிருந்து சாறு பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் உட்கொள்ளப்படுகிறது. இந்த வேப்பங்கொட்டை சாறு, குடல் புழுக்கள் மற்றும் குடலில் இருக்கக்கூடிய பிற தேவையற்ற ஒட்டுண்ணிகளை அழிக்கவல்லது.

#3 வேப்பம்பட்டை மற்றும் வேப்பங்குச்சி

வேப்பம்பட்டை, Neem Bark

வேப்பங்குச்சி, Neem Stick

வேப்பமரத்தின் பட்டை பல் நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவைக் குறைப்பதற்கும் பெயர்பெற்றது. பாரம்பரியமாக இந்த காரணத்திற்காகத்தான் வேப்பங்குச்சிகள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வேப்பம்பட்டை அதன் ஆன்டிசெப்டிக் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் வாயிலுள்ள புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.

#4 சுத்திகரிப்புக்கான வேப்பமரவேர்கள்

வேப்பமர வேர், Neem Tree Root

வேப்பமரத்தின் மற்ற பாகங்களைப் போலவே வேப்ப வேர்களிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 2011ல் நடந்த ஒரு ஆய்வின்படி, வேப்பமர வேர்ப்பட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, 27.3 μg/mL அளவில் 50% scavenging விளைவை வெளிப்படுத்தி, அதிக free radical scavenging (வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் free radicals எனப்படும் சமனில்லா மூலக்கூறுகளைத் தடுப்பது) விளைவை ஏற்படுத்தியுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

#5 வேப்ப எண்ணெய் பயன்கள் (Neem Oil Benefits in Tamil)

 வேப்பம்பழம், Neem Fruit, வேப்ப எண்ணெய், Neem Oil

வேப்பம்பழம் அதன் எண்ணெயைப் பிரித்தெடுப்பதற்காக அழுத்தப்படுகிறது. அந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவினால் பொடுகு நீங்குவதோடு, பொடுகு வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் ஒரு பயனுள்ள கொசுவிரட்டியாகவும் பயன்படுத்தப்படலாம். மேலும் வணிகரீதியாக கிடைக்கக்கூடிய பல அறை நறுமணமூட்டிகளில் (Room fresheners) பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

#6 வேப்பம்பூ பயன்கள் (Veppam Poo Benefits in Tamil)

வேப்பம்பூ, Neem Flower

ஒரு கிருமி நாசினியாக அறியப்படும் வேப்பம்பூவை உட்கொள்ளும்போது உடலமைப்பையும் சுத்தப்படுத்துகிறது. தென்னிந்திய உணவுகளில் சிலவகை பதார்த்தங்களில் வேப்பம்பூவை சேர்த்துக்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். உதாரணமாக, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் பாரம்பரிய புத்தாண்டு, வெல்லம் மற்றும் வேப்பிலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ‘உகாதி பச்சடி' என்ற தனித்துவமான பதார்த்தத்துடன் கொண்டாடப்படுகிறது.

வேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

சத்குரு: நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று, அதிகமாக வேம்பை உட்கொண்டால், அது விந்தணுக்களை அழிக்கும். கர்ப்பத்தின் முதல் நான்கைந்து மாதங்களில், கரு வளரும்போது, ​கர்ப்பிணிகள் வேப்பிலை சாப்பிடக்கூடாது. வேம்பு கருப்பையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அதிக வெப்பத்தை உண்டாக்குகிறது. ஒரு பெண் கருத்தரித்தவுடன், உடலில் அதிக வெப்பம் இருந்தால், அவள் கருவை இழக்கநேரிடும். ஒரு பெண் கருத்தரிக்கத் திட்டமிட்டால், அவள் வேப்பிலை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக வெப்பம் இருக்கும், மேலும் உடலமைப்பு குழந்தையை ஒரு அந்நிய அங்கத்தைப்போல நடத்தும்.

வெப்பம் அதிகரித்தால், உடலமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படும் - பொதுவாக ஆண்களைவிட பெண்கள் இதை அதிகம் கவனிப்பார்கள். உடலின் இயல்பான செயல்பாட்டில் இது ஒருவேளை பாதிப்பை ஏற்படுத்தினால், நாம் உடல்வெப்பத்தை ஓரளவு குறைக்கிறோம், ஆனால் பொதுவாக வேப்பிலையைக் கைவிட விரும்புவதில்லை. ஏனெனில் சாதனா செய்பவர்களுக்கு, உடமைப்பில் ஓரளவுக்கு வெப்பம் தேவைப்படுகிறது. தினமும் வேப்பிலை சாப்பிட ஆரம்பித்தவுடன், சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்காலம் குறைவதைக் காணலாம். அப்படியானால், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தை குறைக்க அதிக தண்ணீர் மட்டும் போதுமானதாக இல்லையெனில், தண்ணீரில் ஒரு எலுமிச்சை துண்டு அல்லது அரை எலுமிச்சை சாறு சேர்த்திடுங்கள். அதுவும் போதவில்லை என்றால், ஒரு டம்ளர் பூசணி சாறு சாப்பிடுங்கள், இது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றொரு வழி, ஆமணக்கு எண்ணெய் சிறிது எடுத்து உங்கள் தொப்புளிலும், அனாஹதாவிலும், தொண்டைக் குழியிலும், காதுகளுக்குப் பின்னாலும் வைத்தால், அது உடனடியாக உடலமைப்பை குளிர்விக்கும்.

குறிப்பு: வேம்பும் மஞ்சளும் பொடியாகவும் மாத்திரையாகவும் Ishalife.comல் கிடைக்கின்றன.  இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் இப்போது ஆர்டர் செய்து பெறலாம்.