பொருளடக்கம்
1. எப்படி உண்பது?
   1-1. கவனம் செலுத்துங்கள்
   1-2. நன்றியுணர்வோடு உண்ணுங்கள்
   1-3. கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்ணுங்கள்
   1-4. கைகளால் உண்ணுங்கள்
   1-5. உங்கள் உணவை இருபத்து நான்கு முறை மெல்லவும்
   1-6. சாப்பிடும்போது பேசக்கூடாது!
2. எப்போது சாப்பிடுவது?
   2-1. சாப்பிடும் முன் இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்
   2-2. செரிமானம் முக்கியமானது - உங்கள் வயதுக்கும் செயல்களுக்கும் ஏற்ற உணவு உண்ணவும்
   2-3. ஒரு நாளுக்கு இரு ஆகாரங்கள் மேலும் இடையில் எந்த சிற்றுண்டியும் இல்லை
   2-4. உடலும் மனமும் காலி வயிற்றிலேயே நன்றாக செயல்படும்
   2-5. இரவு உணவு மற்றும் உறக்க நேரம்
   2-6. ஏகாதசியின்போது உண்ணா நோன்பு
3. எதை சாப்பிட வேண்டும்?
   3-1. உங்களை சுறுசுறுப்பாகவும் உயிர்ப்புடனும் இருக்கச் செய்யும் உணவுகளை உண்ணுங்கள்
   3-2. அளவின்றி உண்ணுதல்
   3-3. சமைத்தவுடன் சாப்பிடுங்கள்
   3-4. பரிணாம வளர்ச்சியில் உங்களிடம் இருந்து தொலைவில் உள்ளவற்றை உண்ணுங்கள்
   3-5. செரிமானம் செய்தல்!
   3-6. உள்ளூர் உணவை உண்ணுங்கள்
   3-7. நல்வாழ்வுக்காக உண்ணுங்கள்
   3-8. காலங்களுக்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்
   3-9. தாவரங்கள் சார்ந்த உணவுப்பழக்கம்
   3-10. பழ உணவு கட்டுப்பாடு
   3-11. பல தானிய உணவு கட்டுப்பாடு
   3-12. பயணம் செய்யும்போது சரியாக உண்பது

சத்குரு:

அமெரிக்கர்கள் 20% உணவை காரில் உண்கிறார்கள் என்று எங்கோ நான் படித்தேன், 20% உணவு காரில் உண்ணப்படுகிறதென்றால், இன்னொரு 20% பாரில் உண்ணப்படுகிறது என்று கொள்ளலாம். எத்தனை மக்கள் உண்மையில் மேசையில் அமர்ந்து ஒரு உணவை விழிப்புணர்வோடும் அந்த உணவுடனும், சுற்றியுள்ள மக்களிடமும் ஒரு ஈடுபாட்டுணர்வோடும் உண்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உணவில் உள்ளவை பற்றி எல்லாம் போதுமான அறிவு இன்று உலகில் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் தேவையான மாற்றங்களை மக்கள் இனி செய்ய வேண்டும்.

உணவில் என்ன உட்கொள்கிறீர்கள் என்பது நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் நீங்கள் அதை எவ்வாறு உட்கொள்கிறீர்கள் என்பதும் சமஅளவு முக்கியமானது. எதை உண்பது என்பது பற்றி பெருமளவு பேசப்படுகிறது, ஆனால் உணவை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுவர எவ்வித முயற்சிகளும் இல்லை. நீங்கள் ஒரு மிருகத்தையோ, காய்கறியையோ அல்லது வேறு எதை உண்டாலும், உணவு என்பது ஒரு துண்டு உயிர்தான். தனி உயிராக இருந்த ஒன்று இப்போது உங்களுக்குள் ஒரு அங்கமாகிறது. உண்ணுதல் என்பது வெறும் செரிமானம் அல்ல, அது ஒரு உயிர் தன்னை மற்றொன்றுடன் இணைத்துக்கொள்வது.

எப்போது சாப்பிட வேண்டும், சாப்பிடும்போது எந்த ஆசனத்தில் அமர வேண்டும், மற்றும் உங்களுக்குள் அந்த உணவை எப்படி வரவேற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இன்று கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

உணவை எப்படி உண்பது?

உணவு, சாப்பாடு, Food in Tamil

#1 கவனம் செலுத்துங்கள்

சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமாக இருக்கக்கூடாது. இதெல்லாம் நீங்கள் கவனிக்கவேண்டும். இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒவ்வொரு மிருகமும் இதை அறிந்து வைத்துள்ளது. உங்களிடம் ஒரு நாய் இருந்தால், அவன்கூட சில நாட்களில் சாப்பிட மறுக்கிறான். ஆனால் இப்போது, அவனையும் தினமும் சாப்பிடும் முட்டாள்தனமான ஒழுக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டார்கள். இல்லையென்றால் சில நாட்களில் சாப்பிடாமல் இருப்பது அவனுக்கு இயற்கையே. அவன் புல்லை தின்று வாந்தி எடுத்து, தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்வான். எல்லா உயிரினங்களுக்கும் இந்த விழிப்புணர்வு உள்ளது, ஆனால் மனிதர்கள் மட்டும் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்வதற்கு, தன் காரண அறிவைப் பயன்படுத்துகின்றனர்.

எதை உண்பது என்பது பற்றி பெருமளவு பேசப்படுகிறது, ஆனால் உணவை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுவர எவ்வித முயற்சிகளும் இல்லை.

நமது கல்வி முறைகளின் இயல்பு காரணமாக, நாம் நமது எண்ணங்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம், நமது கவனம்தான் நம்மிடமுள்ள மிக உயர்ந்த தன்மையே அன்றி, எண்ணம் அல்ல. நாம் சேகரித்த சிறிய தரவுகளின் விளைபொருளே நமது எண்ணம். இது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. கூர்மையும், தீவிரமும் மிக்க கவனம்தான் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிமாணத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

#2 நன்றியுணர்வோடு உண்ணுங்கள்

ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும். இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான். ஒரு மனிதன் அறியக்கூடிய மிகப் பெரிய இன்பமே, தான் அல்லாத ஏதோவொன்று தன்னில் ஒரு பகுதியாக மாறத் தயாராக இருக்கிறது என்பதே. இதையே நீங்கள் அன்பு என்கிறீர்கள். இதையே நீங்கள் பக்தி என்கிறீர்கள். ஆன்மீக வழிமுறையின் உச்சபட்ச இலக்கும் இதுவே ஆகும்.

அது காமமோ, வேட்கையோ, பக்தியோ அல்லது ஞானோதயமோ எதுவாக இருப்பினும், எல்லாமே ஒன்றுதான், அளவில் மட்டுமே வேறுபடுகின்றன, இரு மனிதர்களுக்கு இடையில் நிகழ்ந்தால், அதை மோகம் என்கிறோம். அதுவே பல மனிதர்களுடன் நடந்தால், அதை அன்பு என்கிறோம். அதுவே இன்னமும் பாகுபாடுமின்றி நிகழ்ந்தால், அதை கருணை என்று அழைக்கிறோம். அதுவே உங்களைச் சுற்றி ஒரு உருவம்கூட இல்லாமலும் நடந்தால் அது பக்தி எனப்படும். அதுவே அதன் உச்ச அளவில் நிகழ்ந்தால், அதை ஞானோதயம் என்கிறோம்.

உணவு உண்ணுதல், இருப்பின் ஒன்றும் தன்மைக்கு நிரூபணம் ஆகும். இந்த அழகான செயல்முறை ஒவ்வொரு நாளும் உங்கள் உணவு நேரத்தில் நடக்கிறது. தாவரமாகவோ, விதையாகவோ, விலங்காகவோ, மீன்களாகவோ, பறவையாகவோ இருந்த ஒன்று, ஒன்றிக் கலந்து மனிதனாக மாறுவது, இருப்பின் ஒன்றும் தன்மைக்கும், இருக்கும் அனைத்திலும் படைத்தவனின் கரங்கள் இருப்பதற்கும் தெளிவான நிரூபணமாகும்.

#3 கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்ணுங்கள்

யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், உங்களை நோக்கி வரும் எதையும் நீங்கள் பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முடியும். எப்போதும் உங்கள் வாழ்க்கையின் உயர்ந்த அம்சங்கள் வழியே அதை பெற்றுக்கொள்ள செய்வதே யோக மரபின் நோக்கமாகும். ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் இருக்கிறது என்றால் அங்கே உங்களை மாற்றும் சாத்தியக்கூறு உள்ள ஒரு தீவிர சக்தி உள்ளது என்று அர்த்தம். அந்த சக்தி எப்போதும் நீங்கள் பெறக்கூடியதிலேயே மேலான சாத்தியங்களின் வழியே உங்களை அடைய வேண்டும். நம் பிழைப்பை மேம்படுத்திக் கொள்வதில் நமக்கு நாட்டம் இல்லை, வாழ்வின் பிற பரிமாணங்களையே மேம்படுத்த விரும்புகிறோம். பிழைப்பு வாழ்வில் மிகவும் அவசியமானது, ஆனால் இன்னொருவரை விட மேலாய் பிழைப்பது வாழ்க்கையின் இலக்கு ஆகாது, அது வெறும் நேர விரயம். ஏனென்றால் நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் ஒன்றும் காலத்திற்கும் பிழைத்திருக்கப்போவது இல்லை.

உங்களின் தற்காப்பு உணர்வு, சுயபாதுகாப்பு இவை அனைத்தும், உங்களின் கீழ் மூன்று சக்கரங்களில் உள்ளன - மணிப்பூரகம், சுவாதிஷ்டானம் மற்றும் மூலாதாரம். இவற்றில் இருந்து விடுபட்டு கடந்து செல்ல வேண்டும் என்ற ஏக்கம் விஷுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார் இவற்றில் இருக்கிறது. அனஹதா இவை சந்திக்கும் புள்ளி.

அதனால் நீங்கள் எந்த இடத்தில் சக்தி மற்றும் ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் உட்காரும்போது சம்மணமிட்டு அமருங்கள், ஏனென்றால் அப்போதுதான் உடம்பின் கீழ்பகுதியை மூடமுடியும். நீங்கள் கால்கள் திறந்த நிலையில் ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்தீர்களானால் அது முழுவதும் வேறுவிதமான சக்திகளை உங்களை நோக்கி ஈர்க்கும், அது உங்களுக்கு பாதகமாகக்கூடும். உங்கள் உடம்பின் மேல்பகுதி - அனாஹதத்திற்கு மேலே - அந்த சூழலுக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

எப்போதெல்லாம் ஒரு சக்திவாய்ந்த வடிவத்தை காண்கிறீர்களோ அப்போது உங்கள் கால்களை மடக்கியிருத்தல் மிகவும் முக்கியம் ஆகும். உணவும் மிகவும் சக்திவாய்ந்த தன்மைதான். நீங்கள் மூன்று நாட்களுக்கு சாப்பிடாவிட்டால், நீங்கள் அதை புரிந்துகொள்வீர்கள். உணவு உங்கள் முன் வரும்போது உங்களின் கால்கள் மடங்கி இருப்பது என்பது முக்கியமான ஒன்று. நீங்கள் அதிக பசியாக இருந்து, உணவு உங்களின் முழு உடம்பிற்கும் வெளிப்படுத்தப்படுவது, உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் கால்கள் திறந்த நிலையில் உணவின் முன், பிரதிஷ்டை செய்த பொருட்களின் முன், அல்லது தன்னுள் சக்தியான சில மனிதர்கள் முன் உட்காரக் கூடாது, ஏனென்றால் அது தவறான சக்திகளை உங்கள் அமைப்பிற்குள் கொண்டுவந்துவிடும்.

#4 கைகளால் உண்ணுங்கள்

நீங்கள் உணவைத் தொடாதபோது, அது என்னவென்றும் உங்களுக்கு தெரியாது. ஒரு உணவு தொடுவதற்கே தகுதியுடையது இல்லை என்றால், அது எப்படி உண்பதற்கு தகுதி உள்ளதாகிறது என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் உங்கள் கைகளின் சுத்தம் முழுமையாக உங்கள் கைகளில்தான் உள்ளது, ஆனால் ஒரு ஸ்பூன் அல்லது ஃபோர்க்கின் தூய்மை உங்கள் கரங்களில் இருக்கிறது என்றில்லை. உங்களைத் தவிர வேறு யாரும் இந்த கைகளை பயன்படுத்துவதில்லை, அதனால் இவை எவ்வளவு தூய்மையாக இப்போது இருக்கின்றன என்று உங்களுக்கு உறுதியாக தெரியும். ஃபோர்க்கை பொருத்தவரை, அதை யார் பயன்படுத்தினார்கள், எப்படி பயன்படுத்தினார்கள், எதற்காக பயன்படுத்தினார்கள் என்பது தெரியாது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு டிஷ்யூவால் அதை துடைத்துவிட்டால், அது பார்ப்பதற்கு சுத்தமாகத் தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஃபோர்க்கை பயன்படுத்தும்போது, நீங்கள் உணவை உணர்வதில்லை. உணவு உங்கள் முன் வரும்போது, உணவின்மேல் உங்கள் கைகளை சில கணங்கள் வைத்து அது எப்படி இருக்கிறது என்று உணர்ந்துகொள்ள முயலுங்கள். ஏதோ ஒன்று என் தட்டில் வைக்கப்பட்டு, அதை நான் உணர்ந்து பார்த்தால், எதையும் ருசிக்காமலே எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று எனக்குத் தெரிந்துவிடும். என் கைகள்தான் உணவை அறிந்துகொள்வதில் முதல் நிலை.

#5 உங்கள் உணவை இருபத்து நான்கு முறை மெல்லவும்

"ஒரு கவள உணவை நீங்கள் உண்ணும்போது, அதை நீங்கள் இருபத்து நான்கு முறை மெல்ல வேண்டும்" என்று யோகாவில் நாம் சொல்கிறோம். இதன் பின்னால் நிறைய விஞ்ஞானம் இருக்கிறது, ஆனால் அடிப்படையாக, உங்கள் உணவு உங்கள் வாயிலேயே செரிக்கத் துவங்குவதோடு உங்கள் அமைப்பில் அது மந்தத் தன்மையை உண்டுபண்ணாது இருக்கிறது. நீங்கள் இருபத்து நான்கு முறை அதை மென்றால், அந்த உணவு குறித்த தகவல் உங்கள் அமைப்பில் நிலைநிறுத்தப்பட்டு உங்கள் உடம்பின் ஒவ்வொரு செல்லினாலும் உங்களுக்கு உகந்தது எது, எது உகந்ததல்ல என்று தீர்மானிக்க இயலும் - நாக்கின் அடிப்படையில் மட்டும் அல்ல, உங்கள் முழு அமைப்பிற்கும் எது பொருத்தமானது என்பதையும் தீர்மானிக்க இயலும். நீங்கள் இதை சில காலம் செய்து வந்தால், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் அதற்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதைக் கற்றுக்கொண்டுவிடும்.

#6 சாப்பிடும்போது பேசக்கூடாது!

நான் அமெரிக்காவுக்கு முதன்முதலில் வந்தபோதுதான், நான் எல்லா பொது இடங்களிலும் - குறிப்பாக பள்ளிகளிலும், நாங்கள் வகுப்பு நடத்தும் கோடை முகாம்களிலும் பார்த்தேன், யாராவது உணவு சாப்பிடும்போது மூச்சுத்திணறலால் அவதிப்பட்டால் என்ன செய்யவேண்டும் என்ற வழிமுறைகளுடன் அறிவிப்புப் பலகைகள் இருந்தன. ஏன் ஒருவருக்கு சாப்பிடும்போது மூச்சுத் திணற வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. யாராவது நீச்சல்குளத்தில் மூழ்கினால், ஏனெனில் நாம் மீன்கள் போல வடிவமைக்கப்படவில்லை - நாம் நீந்த கற்றுக்கொள்ள வேண்டும். யாரொருவர் நன்றாக நீந்த கற்றுக்கொள்ளவில்லையோ அவர் நீரில் மூழ்கி மூச்சுத் திணற வாய்ப்புள்ளது. ஆனால் சாப்பிடும்போது ஏன் மூச்சுத் திணற வேண்டும்? இதன் மூலக்காரணம் என்னவென்றால், அவர்கள் உண்ணும்போது அதிகம் பேசுகிறார்கள். இவ்வளவு எளிமையான ஒன்றை நாம் உணரவில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் உணவை நன்றாக சுவைக்க வேண்டும், உண்ணும்போது பேசாமல் உண்ணவேண்டும்.

குழந்தைகள் ஒரே சமயத்தில் சாப்பிடவும் பேசவும் விரும்பினால், அவர்களுக்கு முதலாவதாக நாம் கற்றுக்கொடுப்பதே, "ஷ்ஷ், சாப்பிடும்போது பேசக்கூடாது" என்பது தான். ஏனென்றால் பேச்சு வெளியே வரவேண்டும், உணவு உள்ளே போகவேண்டும் - எப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது? நான் பேச வேண்டுமென்றால், ஏதோவொன்று என் வாயிலிருந்து வெளியே வரவேண்டும். நான் சாப்பிட வேண்டும் என்றால், ஏதோ ஒன்று உள்ளே செல்லவேண்டும். கண்டிப்பாக, நான் இவ்விரண்டையும் ஒரே சமயத்தில் செய்ய இயலாது. இவ்விரண்டையும் ஒரே சமயத்தில் முயற்சித்தால், அசம்பாவிதங்கள் நிகழவும் வாய்ப்புண்டு.

எப்போது சாப்பிடுவது?

உணவு, சாப்பாடு, Food in Tamil

#1 சாப்பிடும் முன் இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்

சாப்பிடவேண்டும் என்று தோணும்போது உடனே சாப்பிடாமல் இருப்பது சாதனாவின் ஒரு பகுதி. இதனால் உணவு மற்றும் வேறெதற்குமான கட்டாய மனப்போக்கை தவிர்க்க இயலும். உணவு என்பது மிக அடிப்படையான ஒன்று. இதைப் பொறுத்து வாழ்க்கையின் பல அம்சங்கள் மனதில் கட்டாயங்களாகின்றன.

ஆசிரமத்தில் பலர் இந்த சித்திரவதையை அனுபவித்திருப்பீர்கள்: உணவு உண்ணும் நேரத்தில், நீங்கள் உண்மையாகவே பசியுடன் உணவுக் கூடத்திற்கு வருகிறீர்கள். உங்கள் முன் உணவு இருக்கிறது, அதை அப்படியே விழுங்கிவிட விரும்புகிறீர்கள். ஆனால் மக்கள் கண்களை மூடிக்கொண்டு கைகளை குவித்து உள்ளெழுச்சி பாடலுக்குத் தயாராகிறார்கள். நோக்கம் என்னவென்றால், நீங்கள் மிகுந்த பசியுடன் இருக்கிறீர்கள், ஆனாலும் இரண்டு நிமிடங்கள் காத்திருக்கிறீர்கள். எதைப்பற்றி எல்லாம் ஒரு கட்டாய மனப்போக்கு வந்துவிட்டதோ அதிலெல்லாம் முயன்று பாருங்கள் - வெறும் இரண்டு நிமிடங்கள் காத்திருங்கள், அது உங்களைக் கொன்றுவிடாது. அது உங்களை மிகவும் வலிமையுள்ளவராக ஆக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கௌதம புத்தர் எந்த அளவுக்கு சொல்கிறார் என்றால், "உங்களுக்கு மிகவும் பசியாக இருக்கும்போது, அந்த உணவு உங்களுக்கு அவசியம் தேவையாக இருக்கும்போது, நீங்கள் உங்கள் உணவை வேறு யாருக்காவது விட்டுக்கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் மேலும் வலிமையுள்ளவர் ஆவீர்கள்" என்றார். நான் அவ்வளவு தூரம் செல்லவில்லை. நான் சொல்வதெல்லாம், "இரண்டே நிமிடங்கள் காத்திருங்கள்" என்றுதான் - இது நிச்சயம் உங்களை மேலும் வலிமையுள்ளவராக்கும்.

உங்கள் உடம்பிலுள்ள அந்த கட்டாய மனப்பாங்கை அகற்றுவது அத்தியாவசியமானது. உங்களின் உடலும் மனமும் ஒரு கலவை. எல்லாவிதமான பழைய பதிவுகளும் சேர்ந்து கட்டாயங்களுடன் கூடிய மனப்போக்கை உருவாக்கியுள்ளன. அதன்படி சென்றால், நீங்கள் பரிணாம வளர்ச்சியடைய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக அர்த்தம். நீங்கள் அந்த ஒரு பாங்கிலேயே வாழ்வதில் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். நீங்கள் அந்தப் போக்கை உடைத்து, புதிய சாத்தியங்களை ஆராய விரும்பவில்லை.

உணவு என்பது மிகவும் அடிப்படையானது மற்றும் எளிமையானது, இந்த அம்சத்தை எப்படிக் கையாளுகிறீர்கள் என்பது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தும். இது இன்னும் அதிக விழிப்புணர்வான செய்கைகளுக்கான ஒரு பயணம், உங்களுக்குள் ஏற்கனவே உள்ள, உங்களை உள்ளிருந்து ஆட்சி செய்யும் தகவலிடமிருந்து மெதுவாக விலகி நிற்பதற்கு.

#2 செரிமானம் முக்கியமானது - உங்கள் வயதுக்கும் செயல்களுக்கும் ஏற்ற உணவு உண்ணவும்

நீங்கள் உங்கள் உடல் மற்றும் மனம் என்று குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட நினைவக குவிப்பு. இந்த நினைவாற்றலால்தான் - அல்லது தகவல் என்று சொல்லலாம் - இந்த உடல் அதன் வடிவத்தை எடுத்துள்ளது. நாம் உண்ணும் உணவு இந்த உடலாக உருமாறுகிறது, நினைவாற்றலைப் பொறுத்து. நான் ஒரு மாம்பழத்தை உண்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த மாம்பழம் என்னுள்ளே சென்று ஒரு ஆண் ஆகிறது. ஒரு பெண் மாம்பழத்தை உண்டால், இதே மாம்பழம் அவளுள் சென்று பெண் ஆகிறது. ஒரு பசு மாம்பழத்தை உண்டால், பசுவினுள் சென்று பசுவாகிறது. எதனால், இந்த மாம்பழம் என்னுள் சென்று ஆண் ஆகிறது, பெண்ணாகவோ பசுவாகவோ அல்லாமல்? இது முக்கியமாக நினைவகம், என் அமைப்பில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான நினைவகம்தான் காரணம்.

நான் மாம்பழம் சாப்பிட்டால், ஏன் ஒரு பகுதி என் தோலாகிறது, மேலும் அது அதே தோல் நிறமாக எப்படி ஆகிறது? திடீரென்று ஒரு மாம்பழ நிற வடு உங்கள் கைகளில் காணப்படவில்லை. ஏனென்றால் ஒரு வலிமையான நினைவுத்திறன் கட்டமைப்பு இருக்கிறது, நான் உள்ளே எது போட்டாலும், இந்த நினைவுத்திறன் இந்த ஆளாக மட்டும் ஆவதை உறுதிசெய்கிறது, வேறு ஒரு ஆளாக இல்லை.

உங்களுக்கு வயதாக ஆக, உடம்பினுடைய இந்த உணவை ஒருங்கிணைக்கும் திறனானது குறையத்துவங்குகின்றது. ஏனென்றால் உங்கள் மரபணு நினைவுத்திறன் மற்றும் பரிணாம நினைவுத்திறன் ஆகியவற்றில் நீங்கள் உட்கொள்வதை மாற்றும் திறன் குறைந்துவிடுகிறது. நீங்கள் ஆரோக்கியமாகவும், உண்பதை எல்லாம் செரிக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்கலாம். ஆனால் உடல் மாம்பழத்தை மனிதனாக மாற்றும் அதே உள்ளுரத்துடன் இருக்காது. செரிமானம் நடக்கும், ஆனால் ஒரு உயிரை மற்றொரு உயிராக உருமாற்றம் செய்வது அவ்வளவாக நடக்காது, ஏனென்றால் நினைவுத்திறன் சக்தியை இழந்துகொண்டு இருக்கிறது.

நீங்கள் முப்பத்து ஐந்து வயதுக்கும் மேற்பட்டவர் என்றால் - நீங்கள் அதீத உடல் உழைப்பு உள்ள நபராகவோ அல்லது ஏதேனும் மருத்துவப் பிரச்சனை உள்ளவராகவோ இல்லாதவரை - ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு நிச்சயமாக உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த வேகக்குறைவிற்கு உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும், ஆனால் நீங்கள் எப்படி உண்கிறீர்கள், என்ன உண்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருந்தால், நீங்கள் அதை இன்னும் புத்திசாலித்தனமாக நிர்வகித்துக் கொள்ளலாம். நீங்கள் அதிக உணவு உண்டால், நீங்கள் அமைப்பில் தேவையற்ற பளுவை ஏற்றுகிறீர்கள். உங்களுக்கு அவ்வளவு உணவு தேவையில்லை, ஏனென்றால் உங்களின் உயர வளர்ச்சி முற்றிலும் முடிந்துவிட்டது. நீங்கள் சிறிது பசியாக அல்லது சோர்வாக உணர்ந்தால், ஒரு பழம் இடையில் எடுத்துக்கொண்டால் பூர்த்தியாகிவிடும். நீங்கள் இதைக் கடைப்பிடிக்க முடிந்தால், நீங்கள் நலமாக வாழ்வீர்கள். பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் உங்களுக்கு அனுகூலமாகும், அதோடு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

#3 ஒரு நாளுக்கு இரு ஆகாரங்கள் மேலும் இடையில் எந்த சிற்றுண்டியும் இல்லை

வயிற்றுப் பையில் செரிமான செயல்முறை நடக்கும்போது, ​​செல்லுலார் அளவில் உடலின் சுத்திகரிப்பு கிட்டத்தட்ட நிறுத்தப்படும். எனவே நீங்கள் நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், செல்கள் நீண்ட காலத்திற்கு அசுத்தங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன, இது கொஞ்ச காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது. குடலிலிருந்து கழிவை வெளியேற்றும் செயல்முறை கூட திறமையாக நடக்காது, ஏனெனில் கழிவுப் பொருட்கள் ஒரே நேரத்தில் அல்லாமல் வெவ்வேறு நேரங்களில் பெருங்குடலுக்கு வந்துகொண்டே இருக்கும்.

பெருங்குடல் சுத்தமாக இல்லை என்றால், நீங்கள் பிரச்சனைகளை கேட்டு வாங்கிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யோகாவில், அசுத்தமான பெருங்குடலும் உளவியல் தொந்தரவுகளும் நேரடி தொடர்புடையவை என்று கூறுகிறோம். பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால் மனதை நிலையாக வைத்துக்கொள்ள முடியாது.

ஆயுர்வேதம் மற்றும் சித்தா போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில், நோயாளியின் நோய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் முதலில் செய்ய விரும்புவது உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பது தான், ஏனெனில் உங்களது பெரும்பாலான பிரச்சனைகள் அசுத்தமான பெருங்குடலின் காரணமாக இருக்கலாம். இன்று மக்கள் சாப்பிடும் விதத்தில், பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் மட்டும் பெரிதாக சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் (வழக்கமாக நாம் ஆசிரமத்தில் செய்வது போல்) அல்லது நீங்கள் அதிக செயல்பாட்டில் இருந்தால், இடையில் ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாம். இப்படி செய்தால், உங்கள் பெருங்குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும். யோகமுறையில், ஒரு உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அது முடியாவிட்டால், குறைந்தது ஐந்து மணி நேர இடைவெளியாவது அவசியம். அதைவிடக் குறைவாக இருந்தால் உங்களுக்கு நீங்களே பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

#4 உடலும் மனமும் காலி வயிற்றிலேயே நன்றாக செயல்படும்

நாள் முழுவதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வயிற்றில் உணவு இருக்கும்போது உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்பதையும், வயிறு காலியாக இருக்கும்போது உடல் எப்படி உணர்கிறது என்பதையும் கவனித்துப் பார்த்தால், உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது தான் உங்களின் உடல் மற்றும் மூளை திறம்பட உழைக்கிறது என்பதைப் பார்க்க முடியும். உங்களின் ஜீரண மண்டலம் உணவு செயல்முறையில் இருந்துகொண்டே இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி அதை நோக்கி இயற்கையாகவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது, இதனால் உங்கள் உடலும் மனமும் அதன் உச்சத்தில் இயங்காது.

உங்களுடைய முழுத் திறனுக்கு நீங்கள் செயல்பட விரும்பினால், கவனமாக 1.5 - 2 மணி நேரத்திற்குள், உங்கள் வயிறு காலியாகி உணவு பொருட்கள் குடலுக்குள் நகர்ந்துவிட வேண்டும், அத்தகைய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அந்தக் கட்டத்திலிருந்து உடல் அதிகப்படியாக சக்தியை உபயோகிக்காது. பன்னிரண்டு முதல் பதினெட்டு மணி நேரத்திற்குள் உணவு ஜீரண மண்டலத்தை விட்டு முழுவதுமாக வெளியேறிவிட வேண்டும். இதைத்தான் யோகா வலியுறுத்துகிறது. இந்த எளிய விழிப்புணர்வை நீங்கள் கடைப்பிடித்தால், நீங்கள் மேம்பட்ட சக்தியையும், சுறுசுறுப்பு மற்றும் விழிப்புத்தன்மையையும் உணர்வீர்கள். வாழ்வில் நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும், இவைதான் வெற்றிக்கான மூலப்பொருட்கள். 

ஆன்மீக செயல்முறையின் ஒரு நிலை என்னவென்றால், உங்கள் உடலிலும் மனதிலும் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைவைக் கொண்டுவருவது. நான் சொல்வது என்னவென்றால், உங்களது உடல் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட வழியில் ஒருங்கிணைக்கப்படாவிட்டால், அது தளர்ந்துவிட்டால், அதனால் எதையும் உணர முடியாமல் போய்விடும். அளப்பரிய தன்மைகள் நிகழ்ந்தாலும், நீங்கள் அதை உணராமல் போய்விடுவீர்கள். யோகிகள் அல்லது சாதனா செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவதற்கும், இடையில் எதுவும் சாப்பிடாததற்கும் காரணம், அவர்கள் உடலை எதற்கும் வெளிப்படுத்த விரும்பாததுதான். காற்று மற்றும் நீர் தவிர எந்த வெளிப்புற கூறுகளும் உடலுக்குள் அடிக்கடி நுழையக்கூடாது, ஏனெனில் இது உணர்திறனைப் பொறுத்தமட்டில் உடலமைப்பின் ஒருங்கிணைவைத் தளர்த்திவிடும். உணர்திறன் என்பது நீங்கள் யார் என்பதன் வெளிப்புற அடுக்கு. நீங்கள் உங்களை மிகவும் உணர்திறன் கொண்டவராக வைத்திருக்க விரும்பினால், உங்கள் உடலை, உங்கள் வழியில் வரும் எதற்கும் எல்லாவற்றிற்கும் வெளிப்படுத்தாமல் இருப்பது முக்கியம். நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும்தான், ஆனால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கக் கூடாது.

#5 இரவு உணவு மற்றும் உறக்க நேரம்

இரவு உணவுக்குப் பிறகு, படுக்கைக்கு செல்வதற்கு முன் மூன்று மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை லேசான உடல் செயல்பாடுகள் இருந்தால் - எளிமையான நடைப்பயிற்சி போன்றவை - உங்கள் உடலமைப்பு பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றில் உணவுடன் நீங்கள் படுக்கைக்குச் சென்றால், அது உடலமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவிலான மந்தநிலையை உருவாக்குகிறது. உடலியல் ரீதியாக, இந்த மந்தநிலை மரணத்தை நோக்கி முடுக்கிவிடுவது போன்றது. மரணம் என்பது உச்சக்கட்ட சடத்துவம்.

மற்றொரு பரிமாணம் என்னவென்றால், நீங்கள் வயிறு நிறைய உணவோடு படுக்கைக்கு சென்றால், அது அடிவயிற்றில் உள்ள மற்ற உறுப்புகளின் மீது அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுவும் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அந்த காரணத்திற்காகவும், நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன், நீங்கள் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியம். நீங்கள் வெவ்வேறு நிலைகளில் திரும்பிப் படுக்கும்போது, வயிறு எந்த நிலையிலும் மற்ற உறுப்புகளின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது.

#6 ஏகாதசியின்போது உண்ணா நோன்பு

எப்போதாவது ஒருமுறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது, ஆனால் நீங்கள் வலுக்கட்டாயமாக உணவைத் தவிர்த்தால், அது உங்கள் உடலமைப்பில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், நீங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயாராக வேண்டும், அப்போது நீங்கள் உணவு இல்லாமல் சிரமமின்றி இருக்க முடியும். செரிமானம் சிறப்பாக இல்லாத சந்திர மாதத்தின் சில நாட்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். பௌர்ணமி மற்றும் அமாவாசைக்குப் பிறகு வரும் பதினொன்றாவது நாள், ஏகாதசி என்று அழைக்கப்படும். மாதத்தின் இந்த இரண்டு நாட்களில், லேசான உணவை மட்டும் சாப்பிடுவது அல்லது முழு விரதம் இருப்பது சிறந்தது. ஏகாதசி உங்கள் உடலமைப்புக்குள் ஊறிப்போனது. உங்களால் உண்ணாவிரதம் இருக்க முடிந்தால், தயவுசெய்து செய்யுங்கள். உங்களுக்கு அது சாத்தியமில்லை என்றால், பழங்களைச் சாப்பிடுங்கள்.

எதை சாப்பிட வேண்டும்?

 பழங்கள், Fruits

#1 உங்களை சுறுசுறுப்பாகவும் உயிர்ப்புடனும் இருக்கச் செய்யும் உணவுகளை உண்ணுங்கள்

உங்கள் உடல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் வெவ்வேறு விதமாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட உணவு உங்களுக்குள் செல்ல வேண்டுமா இல்லையா என்ற முடிவு நாளுக்கு நாள் மாறுகிறது. நீங்கள் உணவை உணர்ந்து பார்த்தால், இந்த நாளில் அது உங்களுக்குள் செல்ல வேண்டுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். தேவையான விழிப்புணர்வைக் கொண்டுவந்தால், மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும், இந்த முறை என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று எந்தவொரு பரிந்துரைகளும் இல்லை. சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிச்சயமாக ஒரு தீவிரமான பிரச்சனை தான், ஆனால் உண்மையான நீண்ட கால சவால் மக்களை இறைச்சி உண்பதிலிருந்து விலக வைப்பது. அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 200 பவுண்டுகள் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. மேலும் 3 டிரில்லியன் டாலர்கள் சுகாதாரப் பராமரிப்புக்காக செலவிடப்படுகின்றன - பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அமெரிக்காவின் சுகாதாரத்திற்கான செலவீனங்கள் அதிகம்.

இது பிழைப்புக்கான ஒரு வன்மமிக்க வழி, மேலும் இது உங்கள் உடலமைப்பின் மீது மிகவும் கடுமை காட்டுகிறது. நோய் என்பது வன்முறையின் முதல் நிலை. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருக்க முடியாது, ஏனென்றால் உங்கள் உடல் ஒரு நிலையான போரில் உள்ளது. சில வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது வெளியில் இருந்து வரும் வேறு ஏதாவது ஒன்றுடன் சண்டையிடுவது ஒன்று. ஆனால் ஒரு நாள்பட்ட நோய் ஒரு உள்நாட்டுப் போர் போன்றது. வெளி எதிரி இல்லாமல், உங்கள் உடலமைப்பிற்குள் நீங்களே ஒரு போரை உருவாக்கிவிட்டீர்கள்.

நாட்பட்ட நோய்களால் அதிகப்படியான மக்கள் இறக்கின்றனர், ஆனால் அதற்கும் மேலாக, அவர்கள் உயிருடன் இருக்கும்போதும், அவர்களால் நன்றாக வாழ முடிவதில்லை. துரதிருஷ்டவசமாக, உலகத்தின் வளமான நாடான ஒன்றில் தான் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. இது ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் நடக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை இந்திய நகரங்களிலும் பார்க்கிறோம். அமெரிக்கா இதில் முன்னோடியாக இருக்கலாம். ஆனால் செல்வச் செழிப்பு வந்துவிட்டால், நாம் நம் புத்தி அனைத்தையும் இழந்துவிடுகிறோம் என்ற செய்தியையும் இது தெரிவிக்கிறது. அமெரிக்கா தன்னைத் திருத்திக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் அவர்கள் எதைச் செய்தாலும், ஏதோ சில காரணங்களால் உலகின் பிற பகுதிகளும் அதை அப்படியே செய்கின்றன.

#2 அளவின்றி உண்ணுதல்

முறையின்றி உண்ணுதல் மற்றும் பொருந்தாத உணவுகளை உண்ணுதல் ஆகியவை இரண்டு பெரிய அம்சங்கள். நாம் உணவை "தயார்செய்யும்" விதம் வன்முறையானது, மேலும் இந்த உடலெனும் சட்டகத்தில் நாம் சுமக்க வேண்டியதை விட அதிகமாக சுமந்தால், அது ஒருவகையில் மண் அரிப்புக்கு சமம். நீங்கள் எத்தனை பவுண்டுகளை உதிர்த்தாலும் அவை வானத்திற்கு செல்லாது - அது மீண்டும் பூமிக்குச் செல்கிறது. மண் அரிப்பைத் தடுத்திடுங்கள்!

நாம் விரும்புவதைச் சுமந்து செல்ல அனுமதிக்கப்படுகிறோம், ஆனால் நமக்கு வசதியான அளவைத் தாண்டி அல்ல. அப்படி இருப்பதன் வலி என்னவென்றால், இந்த நிலையில் இருக்கும் பெரும்பாலான மக்கள் லேசாக, சுறுசுறுப்பாக, உண்மையில் உயிருடன் இருப்பதன் அர்த்தத்தை மறந்துவிட்டார்கள். இது மருத்துவ அம்சங்கள் மற்றும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. மிகப்பெரிய பிரச்சனையே உயிருடன் இருந்தும் முழுமையாக வாழ்க்கையை வாழ முடியாதவர்களின் எண்ணிக்கைதான்.

#3 சமைத்தவுடன் சாப்பிடுங்கள்

ஒவ்வொரு சில வருடங்களுக்கும், எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கோட்பாடுகள் மேலெழும்புகின்றன, மேலும் அதை அப்படியே நம்பிப் பின்பற்றுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். உணவை நாம் மதமாக்கக் கூடாது. இது நீங்களோ அல்லது வேறு யாரோ எதை நம்புகிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. இது அறிவுடைமையோடு சாப்பிடுவது பற்றியது.

முதலில் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அடிப்படையில் உணவு என்பது ஒரு எரிபொருள். நீங்கள் உங்கள் காரில் எரிபொருள் நிரப்ப விரும்பினால், நீங்கள் எரிவாயு நிலையத்திற்கு சென்று, உகந்த செயல்திறனை அடைய, இந்த குறிப்பிட்ட இயந்திரத்திற்கு பொருத்தமான எரிபொருளைத் தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் உங்கள் காரில் மண்ணெண்ணெய் ஊற்றலாம், அது உண்மையில் ஓடும், ஆனால் அது புகையலாம் மற்றும் சிக்கல் ஏற்படலாம், மேலும் நீங்கள் விரும்பியபடி வேகப்படுத்த முடியாமல் போகலாம். உணவுத் தேர்வுகளில் பெரும்பாலானோரின் நிலைமை இதுதான். பொருத்தமான எரிபொருளைத் தேர்வுசெய்ய, நீங்கள் எந்த வகையான இயந்திரம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் நல்வாழ்விலும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நலனிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் உண்ணும் உணவு அப்போது தயாரான உணவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். யோகக் கலாச்சாரத்தில், சமைத்த உணவை, சமைத்ததில் இருந்து 1.5 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடுகிறோம். அதற்கு மேல் நேரமாகிவிட்டால், அந்த உணவு மந்தமாகிவிடும். மந்தத் தன்மையை உருவாக்கும் உணவை சாப்பிட்டால் உங்கள் உற்சாகத்தை முழுமையாக இழந்துவிடுவீர்கள். நீங்கள் உண்ணும் உணவு வகைக்கும், உங்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவிற்கும் ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. பொதுவாக, மருத்துவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் ஒவ்வொருவரும் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் ஒவ்வொரு இரவும் எட்டு மணி நேரம் தூங்கினால், உங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூங்கிக் கழித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

எட்டு மணிநேரம் தூங்குவது எப்படி என்றும், அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் சந்திக்க நேரும் பின்விளைவுகள் குறித்தும் பலரும் பக்கம் பக்கமாய் புத்தகங்கள் எழுதித் தள்ளுகிறார்கள். இப்போதெல்லாம் நான் கொஞ்சம் சோம்பலால் நான்கு மணி நேரம் தூங்குகின்றேன். ஆனால் முன்பெல்லாம், கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் தூங்குவேன், அப்படியும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனவே உடலுக்குத் தேவை ஓய்வுதான், தூக்கம் அல்ல. நீங்கள் எத்தகைய எரிபொருளை உங்கள் அமைப்பிற்குள் போடுகிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதை நிர்ணயிக்கும் முக்கிய காரணி ஆகும். நீங்கள் தவறான எரிபொருளை காரில் போட்டால், அதற்கு அதிக பராமரிப்பு தேவைப்படும், அதேபோல, நீங்கள் தவறான உணவுகளை உங்கள் உடலுக்குக் கொடுத்தால், அதற்கு அதிக தூக்கம் தேவைப்படும்.

#4 பரிணாம வளர்ச்சியில் உங்களிடம் இருந்து தொலைவில் உள்ளவற்றை உண்ணுங்கள்

உங்கள் உடல் என்பது நீங்கள் உண்ட உணவை உருமாற்றம் செய்து ஒருங்கிணைத்து வைக்கப்பட்ட குவியலே ஆகும். நீங்கள் உண்ணும் உணவு என்னவாக மாற்றப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு நுண்ணறிவு, நினைவாற்றல் மற்றும் மரபணு குறியீடு உங்கள் உடலில் உள்ளது. உதாரணமாக, ஒரு ஆப்பிள் யார் சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து, ஒரு பெண்ணாகவோ, ஒரு ஆணாகவோ அல்லது ஒரு பசுவின் உடலின் ஒரு பகுதியாகவோ மாறுகிறது.

உயிரின் பரிணாம வளர்ச்சியில், ​​​​ஒரு உயிரினம் கடத்திச் செல்லும் தகவல் மற்றும் நினைவிருப்புகளும் போகப்போக மிகவும் சிக்கலானவையாகின்றன. யோகப் பாரம்பரியத்தில், மரபணு ரீதியாக உங்களிடமிருந்து வெகுதொலைவில் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று எப்போதும் கூறப்படுகின்றது. அந்த வகையில் பார்த்தால், தாவர உயிர்கள் நம்மை விட்டு வெகுதொலைவில் உள்ளன. நீங்கள் அசைவ உணவு உண்டாக வேண்டும் என்றால், மீன் சாப்பிடும்படி நாங்கள் அறிவுறுத்தினோம், ஏனென்றால் விலங்குகளில், இது ஒரு மனிதனிடமிருந்து பரிணாம ரீதியில் வெகுதொலைவில் உள்ளது, இந்த கிரகத்தின் முதல் விலங்கு உயிரினம் தண்ணீரில் உருவாகியதாகக் கருதப்படுவதால், முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம் அல்லது மீனாக உள்ளது.

உண்பதற்கு சிறந்தது இறைச்சிதான் என்று ஒரு நூற்றாண்டு காலமாய் கூறிவந்த, மேற்கத்திய மருத்துவர்கள் மெல்ல மெல்ல வேறு ஒரு கருத்துக்கு மாறுகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான இதய நோய்களுக்கு மாட்டிறைச்சியே முக்கிய காரணம் என்று சில காலமாக அவர்கள் கூறி வருகின்றனர். மேலும் கடந்த சில வருடங்களாக இறைச்சி உண்பதால் புற்றுநோய் உருவாகக்கூடும் என்றும் கூறி வருகின்றனர். யோகக் கலாச்சாரத்தில், சிக்கலான மரபணுக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், உங்கள் உடலமைப்பு ஏதோ ஒரு வழியில் சிதைந்துவிடும் என்று பத்தாயிரம் ஆண்டுகளாக நாங்கள் உங்களுக்கு சொல்லி வருகிறோம். இதை ஏதோ நாம் மில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சிகள் செய்து சொல்லவில்லை, ஆனால் நாம் உணவை உண்ணும்போது நமது உடலமைப்பில் நிகழ்வனவற்றைக் கவனித்து அறிகின்றோம். நீங்கள் போதிய கவனம் செலுத்தினால், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

ஆகையால், உணவை ஏதோ ஒரு மதமாக ஆக்காதீர்கள். பிழைப்புக்கே பிரச்சனை என்றால் என்ன கிடைக்கிறதோ அதை உண்ணுங்கள். எப்போது வாழ்க்கை சௌகரியமாகிறதோ, அப்போது நமக்குத் தேவையானதை தேர்வு செய்ய முடியும். தேர்ந்தெடுத்து உண்ணும் வாய்ப்பிருந்தால், உடலமைப்புக்கு உகந்ததை கவனமாக தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். எந்த உணவு உங்களை விழிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயலூக்கத்துடனும் வைக்கிறதோ அதுவே உங்கள் உடம்புக்கு உகந்த எரிபொருள் ஆகும். இதை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். ஒருநாள் வெறும் பழங்களை உண்ணுங்கள். மற்றொரு நாள் வெறும் காய்கறிகளை உண்ணுங்கள், மற்றும் ஒருநாள் காய்கறிகளை சமைத்து உண்ணுங்கள்; பிறகு மீனை உண்ணுங்கள், மாமிசம் உண்ணுங்கள் - எல்லாவற்றையும் செய்து பாருங்கள். எந்த வகை உணவுடன் நீங்கள் அதிக அளவு சக்தியாகவும் சுறுசுறுப்பாகவும் உணர்கிறீர்களோ, தயவுசெய்து அதை உண்ணுங்கள், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

#5 செரிமானம் செய்தல்!

நீங்கள் ஒரு பழத்தை சாப்பிட்டால், 1.5 முதல் மூன்று மணி நேரத்திற்குள், அது முழுமையாக ஜீரணமாகிவிடும். சமைத்த காய்கறிகளை சாப்பிட்டால், அவை ஜீரணமாக பன்னிரண்டு முதல் பதினைந்து மணி நேரம் ஆகும். நீங்கள் சமைத்த தானியங்கள் மற்றும் பிற உணவுகளை சாப்பிட்டால், இருபத்து நான்கு முதல் முப்பது மணி நேரம் ஆகும். நீங்கள் சமைத்த இறைச்சியை சாப்பிட்டால், அது நாற்பத்தெட்டு முதல் ஐம்பத்து இரண்டு மணி நேரம் ஆகும். நீங்கள் சமைக்காத இறைச்சியை சாப்பிட்டால், அது ஜீரணிக்க எழுபத்திரண்டு மணி நேரம் ஆகும். உணவு இவ்வளவு நீண்ட காலத்திற்கு உடலுக்குள் இருக்கும்போது, ​​அது அழுகிப்போவதோடு தேவையற்ற அளவு பாக்டீரியாக்களை உருவாக்கும். இத்தகைய உணவு தேர்வுகளால், உங்கள் உடலமைப்புக்கு சேதத்தை விளைவித்துவிட்டு இப்போது உங்கள் உடலுக்குத் தேவை மருந்துகள் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆரோக்கியமாக வாழ்வது பற்றி கவனமில்லை. உங்களுக்கு மருந்துப் பொருட்களுக்கான தேவை வந்ததே உங்கள் உடலுக்குள் நீங்கள் விஷத்தை உருவாக்கத் துவங்கியதால் தான்.

உங்கள் உடலுக்கு நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள் என்பது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உதாரணமாக – சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு எத்தனால் பெட்ரோலை அவர்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது, ​​“இது இன்ஜினை துருப்பிடிக்க செய்துவிடும், அதனால் என் காரில் எத்தனாலைப் போட விரும்பவில்லை” என்றேன். அதை கூற நீங்கள் ஏதோ புத்திசாலித்தனமான விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை - இதற்கு பொது அறிவு போதும். இப்போது, ​​பன்னிரண்டு வருடங்கள் பயன்பாட்டிற்குப் பிறகு, அது இயந்திரத்தின் அரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் இறுதியாக ஒப்புக்கொள்கிறார்கள். விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் எதிலும் கவனம் செலுத்துவதில்லை. எல்லாவற்றிற்கும், அவர்களுக்கு ஒரு பரிந்துரை சீட்டு தேவையிருக்கிறது.

நீங்கள் நீண்ட காலமாக தவறான உணவு வகைகளை உட்கொண்டிருந்தால், நீங்கள் எதையும் கவனிக்க முடியாத அளவுக்கு உங்கள் உடல் மிகவும் மந்தமானதாகவும், கடினமானதாகவும் மாறியிருக்கலாம். அப்படியிருந்தால் உண்ணாவிரதம் உங்களுக்கு ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். தங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனிக்க கற்றுக்கொடுக்க வேண்டிய நேரம் இது. உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் - இப்போது நன்றாக வேலை செய்கிறதா இல்லையா? தெரிந்துகொள்ள இது ஒரு எளிய வழி.

#6 உள்ளூர் உணவை உண்ணுங்கள்

கேள்வி: நமஸ்காரம் சத்குரு, ஒருவரின் உடலுக்கும் அவர் வாழும் இடத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஒருவர் வளரும் இடம் அவரை பாதிக்கிறதா? அதனால் தான் உள்ளூர் உணவை சாப்பிடச் சொல்கிறார்களா?

சத்குரு: 

மனித உடல் கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் நிச்சயமாக அவனது வசிப்பிடத்தின் தாக்கம் இருக்கிறது. மற்ற எல்லா உயிர்களுக்கும் கூட இது பொருந்தும். தென்னிந்தியாவில் மிகவும் சௌகரியமாக இருக்கும் தாவர மற்றும் விலங்கு உயிர்கள், நியூயார்க் மாநிலத்தை சுற்றி அல்லது உலகின் அந்த பகுதியில் எங்கிருந்தாலும் பட்டுப்போய்விடும், ஏனென்றால் இங்கு உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேறுவிதமாக உள்ளது. இது காலநிலை மற்றும் சூரிய ஒளி அல்லது குளிரின் அளவு காரணமாகவோ மட்டுமே அல்ல. அவையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன தான் என்றாலும், ஒரு உயிர் ஏன் ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்பதற்கு அதன் இருப்பிடம் காரணமாக உள்ளது.

நீங்கள் உண்ணும் உணவு, யோகாவின் பரிந்துரைப்படி உங்களால் ஒரு நாளில் நடக்கமுடியும் தொலைவிற்குள் இருந்து வந்திருக்க வேண்டும், ஒருநாளில் உங்களால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அந்த ஒரு ஆரத்திலிருந்து வந்த உணவைத்தான் நீங்கள் உண்ணவேண்டும். நீங்கள் உங்களிடமிருந்து தொலைவில் வளர்வனவற்றை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் நீங்கள் சுமக்கும் இந்த உடம்பு இந்த பூமியின் சிறு துண்டு. நீங்கள் வசிக்கும் அந்த இடத்தில் இருந்து வரும் உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால், உங்கள் உடலுக்கும் பூமிக்கும் ஒரு தொடர்ச்சியான பரிமாற்றம் நிகழ்கிறது. இன்றும் கூட நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் நிலையில், உங்கள் உடலும், நீங்கள் அமர்ந்திருக்கும் பூமியின் இந்தப் பகுதியும் இடைவிடாத ஆழ்ந்த தொடர்பில் இருக்கின்றன.

இதனாலேயே பூமியுடன் தொடர்பில் இருப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் இன்றியமையாததாகும். யோகா மையத்தில், நாங்கள் எப்போதும் ஆரோக்கியம் இல்லாத மக்களை தோட்டத்தில் வேலை செய்யச் சொல்கிறோம், இதனால் அவர்கள் மண்ணுடன் தொடர்பில் இருப்பார்கள். இன்றைய நவீன ஸ்பாக்களில், இந்த பூமியுடன் தொடர்பில் இருப்பது என்பது மண் குளியலாக சுருங்கியுள்ளது. பரவாயில்லை, நீங்கள் எப்படியேனும் ஒருவிதத்தில் தொடர்பில் இருக்க வேண்டும். நீங்கள் அதை எவ்வாறு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, மண் குளியல் மூலமோ, தோட்டத்தில் வேலை செய்தோ, தரையில் படுத்தோ, அல்லது வேறு என்ன செய்தாலும் - அடிப்படையில் நீங்கள் மண்ணோடு தொடர்புகொள்ளவே முயற்சிக்கிறீர்கள்.

#7 நல்வாழ்வுக்காக உண்ணுங்கள்

உணவு என்பது ஒரு பரிவர்த்தனை. நிலத்தில் இருந்ததை நீங்கள் உங்கள் உடம்புக்குள் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தால் உடல் சிறப்பாக செயல்படும். நீங்கள் ஒரு சிறிய நிலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், சொந்தமாக உணவை வளர்த்து அதை உண்ணுங்கள். ஒரு மாத காலத்திற்குள், உங்கள் உடலின் ஆரோக்கியத்தில் ஒரு கவனிக்கத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள். நாம் வாழும் பூமியுடன் தொடர்பில் இருந்துகொண்டு, நீங்கள் வாழும் பகுதியிலிருந்து வரும் உணவை உண்டால், இந்த கிரகத்தில் புற்றுநோயின் தாக்கத்தை ஐம்பது சதவிகிதம் குறைக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இப்போது, நான் காலை உணவிற்கு சென்றால், அந்த உணவு நியூசிலாந்திலிருந்தோ, வியட்நாமிலிருந்தோ அல்லது தெரியும் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம், யாருக்குத் தெரியும். நம்மால் பொருட்களை வேண்டுமிடத்திற்குக் கொண்டுசெல்ல முடிகிறது. மேலும் உலகையே உங்களுக்கு விற்கக்கூடிய பல்பொருள் அங்காடிகள் வந்துவிட்டன. ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் இன்பத்திற்காக செய்யப்படுகின்றன, நல வாழ்விற்காக அல்ல.

#8 காலங்களுக்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்

இந்தியாவில் உணவுகள் கோடை காலத்தில் ஒருவிதமாக சமைக்கப்படுகின்றன, மழைக்காலத்தில் வேறுவிதமாகவும், குளிர்காலத்தில் இன்னொரு விதமாகவும், அப்போது கிடைக்கும் காய்கறிகளைப் பொறுத்தும், எது உடலுக்கு ஏற்றது என்பதைப் பொறுத்தும் உணவுகள் சமைக்கப்படுகின்றன. அந்த ஒரு தெளிவோடு உடலின் தேவைக்கேற்பவும், நாம் வாழும் காலநிலை அல்லது தட்பவெப்பநிலைக்கு ஏற்பவும் உண்பது நல்லது.

உதாரணமாக, ​​எள், கோதுமை போன்ற சில உணவுகள் உடலில் வெப்பத்தை உண்டாக்கும். டிசம்பர் மாதம் வரும்போது, காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால் தோல் பொதுவாக உடைந்துவிடும், ஈரப்பதமூட்டும் கிரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம் பாரம்பரியத்தில் இல்லை. அதனால் அனைவரும் தினமும் எள் சாப்பிட்டு வந்தனர். இது உடலை சூடாகவும், சருமத்தை சுத்தமாகவும் வைத்திருக்கும். உடலில் அதிக வெப்பம் இருப்பதால் உங்கள் தோல் உடையாமல் பார்த்துக்கொள்ளும். கோடையில் உடல் சூடாக இருப்பதால் குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ணலாம். உதாரணமாக, தமிழ்நாட்டில், அவர்கள் கம்பு தானியம் சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் உடலால் காலநிலைக்கு ஏற்றமாதிரி தன்னை தகவமைத்துக்கொள்ள முடிந்தது.

#9 தாவரங்கள் சார்ந்த உணவுப்பழக்கம்

ஒரு உயிர்த்தன்மை மிக்க உணவில் நாம் உயிர்வாழத் தேவையான அனைத்தும் உள்ளது. நீங்கள் ஒரு உயிர்தன்மை மிக்க உணவை உட்கொண்டால், உங்கள் உடலமைப்பில் இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு ஆரோக்கியத்தை உணர்வீர்கள். ஆனால் ஒரு உணவை சமைக்கும்போது அதிலுள்ள உயிர்தன்மையை அழித்துவிடுகிறோம். இந்த அழிவு செயலுக்குப்பின் வரும் உணவை உண்பது நம் உடலுக்கு அதே அளவு உயிர்சக்தியைக் கொடுக்காது.

#10 பழ உணவு கட்டுப்பாடு

ஜீரணம் என்றால் ஜடராக்னி - செரிமான நெருப்பு. இந்த நெருப்பு மிகவும் திறம்பட எரிய வேண்டும் என்றால், பழம் தான் அதற்கு மிகவும் உகந்தது. துரதிர்ஷ்டவசமாக, பலர் சோம்பலையும் மந்தத் தன்மையையும் ரசிக்கத் துவங்கிவிட்டார்கள். வாழ்க்கை இன்னும் அவர்களைத் தொடாததனால், அவர்களில் ஒரு பகுதி இறந்ததை அவர்கள் ரசிக்கிறார்கள். தூக்கம், போதை, அளவுக்கு மீறிய உணவு மற்றும் வெறுமனே படுத்திருப்பது ஆகியவை உயிரோட்டத்துடனும், சுறுசுறுப்பாகவும், செயல் ஊக்கத்தோடும் இருப்பதை விட நன்றாக இருப்பது போல் இருக்கிறது. அத்தகைய நபருக்கு மட்டுமே பழம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஏனென்றால் அது உங்களை விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். உங்களால் ஒரு அதீத மகிழ்ச்சி, போதை மற்றும் ஆழ்ந்த இன்பத்தை மேம்பட்ட விழிப்புணர்வு நிலைகளின் மூலமும் அனுபவித்து அறிய முடியும்.

#11 பல தானிய உணவு கட்டுப்பாடு

இன்று, கிட்டத்தட்ட 80 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயை நோக்கிச் செல்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான ஒரு காரணம், பெரும்பாலான இந்தியர்கள் ஒற்றை தானிய உணவை மட்டுமே சாப்பிடுகிறார்கள். மக்கள் அரிசி அல்லது கோதுமையை மட்டுமே உண்கின்றனர். இது நிச்சயமாக உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஒருவர் தன் வாழ்வில் பல தானிய உணவுமுறையைக் கொண்டுவருவது முக்கியம்.

நமது பாரம்பரியத்தில், மக்கள் எப்போதும் நிறைய பயறுகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் பல வகையான தானியங்களை உண்டு வந்துள்ளனர். ஆனால் மெல்ல மெல்ல அவையெல்லாம் காணாமல் போய்விட்டன, இன்று தென்னிந்தியர்களின் தட்டில் பார்த்தால், அதிக அளவு சாப்பாடும் காய்கறிகள் கொஞ்சமாகவும் இருக்கும். இது ஒரு பெரிய பிரச்சனை. கடந்த இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளில் நடந்த முழு கார்போஹைட்ரேட் உணவு முறை மாற்றத்தை இப்போது பழைய முறைக்கு திரும்ப மாற்ற வேண்டும், ஏனெனில் ஒரு நபரின் நீண்ட கால ஆரோக்கியம், அவர்கள் நிறைய கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற உணவுகளை குறைவாக சாப்பிட்டால், அதிக பாதிப்பு ஏற்படும். இது மக்களின் மனதில் நிகழ வேண்டிய அடிப்படைக் கருத்தியல் மாற்றம். உணவில் பெரும்பான்மையானதாக அரிசி இருக்கக்கூடாது, மற்றவை அனைத்தும் இருக்க வேண்டும். அரிசி உங்கள் விருப்பம் - நீங்கள் சாப்பிட வேண்டுமா இல்லையா என்பதை உங்கள் பசியின் அளவைப் பொறுத்து முடிவு செய்யுங்கள்.

#12 பயணம் செய்யும்போது சரியாக உண்பது

குறிப்பாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளில் இருப்பவர்கள் எப்போதும் நமக்கு உகந்த உணவு வகைகளை மட்டுமே உண்ண முடிவதில்லை. உங்கள் உடலைக் கொஞ்சம் மந்தமானதாக மாற்றும் ஏதாவது ஒன்றை நீங்கள் சாப்பிட நேர்ந்தால் - அதாவது உடலில் என்ன நடக்கிறது என்பதை உணரும் திறன் உடையவராக நீங்கள் இருந்தால் - நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான், அடுத்த வேளை உணவை பாதியாக குறைப்பது அல்லது தவிர்த்து விடுவதுதான். உடல் மீண்டும் விழித்தெழுவதற்கு அவ்வளவுதான் தேவை.

பயணம் நிச்சயமாக அசதியை ஏற்படுத்தும், ஆனால் நீங்கள் ஒரு விமானத்தில் பயணிக்கும்போது முடிந்தவரை குறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் அதைக் குறைக்கலாம். நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால், ஒரு பழம் சாப்பிடுங்கள் அல்லது நிறைய தண்ணீர் மட்டும் குடிக்கலாம். பசியின் செயல்நுட்பமானது வயிற்றின் சுவர்மீது வேலை செய்யும் சில அமிலங்களை உள்ளடக்கியது, இது சாப்பிடும் தேவையை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டால், அமிலங்கள் நீர்த்துப்போய் பசி குறைந்துவிடுகிறது.

ஆசிரியர் குறிப்பு: 

“ஈஷா ருசி” என்ற புத்தகத்திலிருந்து பலவிதமான ஆரோக்கியமான மற்றும் சுவையான ரெசிபிகளுடன் யோக வழியில் உண்ணக் கற்றுக்கொள்ளுங்கள் - இப்போது ஈஷா டவுன்லோட்ஸ் மற்றும் அமேசானில் கிடைக்கிறது.