தியானம் என்பதன் பொருள்

சத்குரு: தியானம் என்றால் உடல் மற்றும் மனதின் கட்டுப்பாடுகளைக் கடந்துசெல்வது என்பது பொருள். உடல் மற்றும் மனதின் எல்லைக்குட்பட்ட செயல்பாடுகளை நீங்கள் கடக்கும்போதுதான் உங்களுக்குள் இருக்கும் உயிரின் முழுமையான பரிமாணம் உங்களுக்கு வெளிப்படுகிறது.

உங்கள் உடல் நீங்கள் உண்ட உணவின் ஓர் உணவுக் குவியல்தான். உங்கள் மனம் நீங்கள் வெளியில் இருந்து சேகரித்துக்கொண்ட பதிவுகளின் குவியல்.

நீங்கள் உடலாக அடையாளம் கொள்ளும்போது, வாழ்க்கை குறித்த உங்களது ஒட்டுமொத்த புரிதலும் பிழைப்பு நோக்கி இருக்கும். நீங்கள் மனதாக அடையாளம் கொள்ளும்போது, உங்களது ஒட்டுமொத்த புரிதலும் சமூகம், மதம் மற்றும் குடும்பத்துக்கு அடிமைப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி உங்களால் பார்க்க முடியாது. உங்கள் மனதின் மாறுபாடுகளிலிருந்து நீங்கள் விடுபடும்போதுதான் உடல் மற்றும் மனம் கடந்திருக்கும் பரிமாணத்தை நீங்கள் அறிவீர்கள்.

இந்த உடலும், மனமும் உங்களுடையவை அல்ல. இவைகள் காலப்போக்கில் நீங்கள் சேகரித்துக்கொண்டவை. உங்கள் உடல் நீங்கள் உண்ட உணவின் ஓர் உணவுக் குவியல்தான். உங்கள் மனம் நீங்கள் வெளியில் இருந்து சேகரித்துக்கொண்ட பதிவுகளின் குவியல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் என்ன சேர்த்துவைத்துள்ளீர்களோ அது உங்களுடைய சொத்து. உங்களுக்கு ஒரு வீடு மற்றும் வங்கி இருப்பு உள்ளதைப்போல உங்களுக்கு ஒரு உடலும், மனமும் உள்ளது. ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு வங்கியில் நல்லதொரு சேமிப்பு, ஒரு நல்ல உடல் மற்றும் நல்லதொரு மனம் உங்களுக்குத் தேவை, ஆனால் இவை போதுமானதல்ல. இந்த விஷயங்களால் எந்த மனிதரும் ஒருபோதும் நிறைவடையமாட்டார். அவைகள் வாழ்க்கையை சௌகர்யமாகவும் எளிதாகவும் மட்டும்தான் அமைத்துக் கொடுக்கும். நம்மை ஓர் தலைமுறையாக நீங்கள் பார்த்தால், இதற்கு முன்பு எந்த ஒரு தலைமுறையும் கனவில்கூடக் காணமுடியாத வசதிகளும் சௌகரியங்களும் நமக்கு இப்போது உள்ளது. ஆனால் பூமியின் மிக ஆனந்தமான அல்லது அன்பான தலைமுறையாக நாம் இருக்கிறோம் என்று நம்மால் உரிமை கொண்டாடமுடியாது.

தியானம் – உடல் மற்றும் மனதைக் கடப்பதற்கான ஒரு அறிவியல்பூர்வமான கருவி

உங்கள் உடல் மற்றும் மனதின் கருவிகள், பிழைப்பிற்கு சரியானவை, ஆனால் அவை உங்களை நிறைவு செய்யாது. ஏனெனில் தற்போது இருப்பதைவிட, மேலும் அதிகமான ஏதோ ஒன்றைத் தேடுவதே ஒரு மனிதரின் தன்மையாக இருக்கிறது. நீங்கள் யார் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உலகம் என்பது என்ன என்று அறிந்துகொள்ளும் திறன் உள்ளவராக உங்களால் இருக்கமுடியுமா? உங்களது உடல் மற்றும் மனதின் எல்லைகளைக் கடந்தால் மட்டும்தான் நீங்கள் யார் என்னும் உண்மையான தன்மையை உணர முடியும். யோகாவும், தியானமும் இதற்கான அறிவியல்பூர்வமான கருவிகள்.

உடல் மற்றும் மனதின் கட்டுப்பாடுகளை நீங்கள் கடந்தாலன்றி, வெறுமனே சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது பிறகு ஒரு நாள் இறந்துபோவதால் மட்டும் உங்கள் வாழ்க்கை நிறைவடையாது. அந்த விஷயங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதுதான், ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் பூர்த்திசெய்திருந்தாலும், நமது வாழ்க்கையானது முழுமையானது அல்ல. இது ஏனென்றால், ஒரு மனிதரின் தன்மையானது விழிப்புணர்வின் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து இருக்கிறது. அது இதைக்காட்டிலும் அதிகமான ஏதோ ஒன்றைத் தேட வேண்டியுள்ளது, இல்லையென்றால் அது ஒருபோதும் திருப்தி அடையாது. அது எல்லையற்றதாக மாறவேண்டும் - தியானம் என்பது, நீங்கள் யார்? என்கிற எல்லையற்ற பரிமாணத்திற்குள் செல்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

கேள்வி: ஆனால் சத்குரு, யாகங்கள் அல்லது சடங்குகளைப் பயன்படுத்தி இந்த எல்லையில்லாத பரிமாணத்திற்குள் ஒருவரால் செல்லமுடியாதா? தியானம் மட்டும்தான் ஒரே வழியாக இருக்கிறதா?

சத்குரு: ஈஷாவில் நாம் தியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, சடங்கு செயல்முறைகளைக் குறைந்தபட்சமாக வைத்திருப்பது ஏனென்றால், தியானம் ஒரு பிரத்யேகமான வழிமுறையாக இருக்கிறது. முக்கியமாக, பிரத்யேகமான தன்மை நவீன சமூகத்தின் சாபமாக இருக்கிறது. அதிகமான மக்கள் நவீன கல்வியைப் பயில்வதால், மக்கள் அதிகமாக தனிப்பட்ட தன்மை உடையவர்களாகிறார்கள். ஒரு வீட்டில் இருவர் வசிக்க முடிவதில்லை – அப்படித்தான் அவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக, இன்றைக்கும்கூட தென்னிந்தியாவில், ஒரே வீட்டில் 400 பேருக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் குடும்பங்கள் இருக்கின்றன - மாமாக்கள் அத்தைமார், பாட்டிமார், தாத்தாக்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பமாக இருக்கின்றனர்.

ஒருவர் குடும்பத் தலைவராகச் செயல்பட, மற்ற அனைவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. குறைந்தபட்சம் 70 முதல் 80 குழந்தைகள் அந்த வீட்டில் வாழ்கிறார்கள், மேலும் அனேகமாக ஒரு குறிப்பிட்ட வயது வளரும்வரை இவர்களுக்கு தங்கள் பெற்றோர்கள் யார் என்றுகூட தெரியாது. ஏனென்றால், அந்த வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கும் 8 முதல் 10 பெண்மணிகள் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் 12-13 வயது அடையும்வரை அனேகமாகத் தங்களது பெற்றோர் யார் என்பதைக்கூட உண்மையில் அடையாளம் காண்பதில்லை. அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பள்ளிக்கூடம் சென்று, மனதில் ஒருவிதமான எண்ணத்தை உருவாக்கும் வரை, அதனுடன் அதிகமாக தொடர்பில் இருப்பதில்லை.

ஆனால் நவீனக் கல்வி பரவலாகியுள்ள நிலையில், பல பேர் இணைந்து வாழ்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இரண்டு மனிதர்கள் கூட ஒத்துப்போக முடிவதில்லை. இந்த நிலை மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமான நவீனக் கல்வியும் தனிப்பட்ட தன்மை பற்றியதாக உள்ளது, ஆனால் பிரபஞ்சம் முழுவதும் இணைத்துக்கொள்ளும் செயல்முறையில் நிகழ்கிறது.

தியானம் – தனிப்பட்ட நிலையிலிருந்து இணைத்துக்கொள்ளும் நிலைக்கு

ஒரு செயல்முறையாக தியானம் தனிப்பட்டதாக இருக்கிறது, பிறகு அது இணைத்துக்கொள்ளுதலை நோக்கி வழிநடத்துகிறது. ஆனால் நீங்கள் அதனைத் தொடங்கும்போது, நீங்கள் உங்களது கண்களை மூடி அமர்கிறீர்கள். ஆன்மீக செயல்முறையின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்கள் எப்போதும் மிகவும் தனிமைப்பட்டவர்களாக இருக்கின்றனர் – அவர்களால் எவருடனும் கலந்திருக்க முடிவதில்லை. அதுவே மக்களுக்குள் இருக்கும் பயங்களுக்குள் ஒன்றாக இருப்பதாக நான் எண்ணுகிறேன், "நான் ஆன்மீகப் பாதையில் சென்றால் சமூகத்துடன் என்னால் கலந்திருக்க முடியாமல் போகலாம்," ஏனென்றால் அடிப்படையில் அது தனிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.

தியான வழிமுறையை தவறாக பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் அது தனிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.

நாம் அந்தப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது ஏனென்றால், இன்றைய சமூகத்தில் இணைத்துக்கொள்ளும் செயல்முறைகள் சாத்தியமில்லை என்பதால்தான். நீங்கள் ஒரு சடங்கு செய்யவேண்டும் என்றால், அனைவரும் ஒருவர் என்பதைப் போல் அதில் பங்கேற்க வேண்டும். ஒரு சடங்கில் பங்கேற்பதற்கு, ஆழமானதொரு ஒருமை உணர்வு இருக்கவேண்டும். ஒரு சடங்கின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அது தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதமான ஒரு சூழல் இருந்தாலன்றி, மற்றும் அவர்கள் செய்யும் சடங்கைத் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் மக்கள் உங்களிடம் இருந்தால் தவிர, உங்களால் ஒரு சடங்கைச் செய்யமுடியாது. ஏனென்றால் ஒரு சடங்கை எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியும். தியான வழிமுறையை தவறாக பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் அது தனிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.

"நீயா நானா" அல்லது "எனக்கு எதிராக நீ" என்பது இருந்தால் நாம் சடங்குகள் செய்யமுடியாது. அங்கே ஒரு சடங்கு அசிங்கமான நிகழ்வாகிவிடுகிறது. இணைத்துக்கொள்ளும் சூழல் இருக்கும்போது, ஒரு சடங்கு மகத்தானதாக இருக்கிறது, ஆனால் ஒருசில சமூகத்தினரால் மட்டுமே உருவாக்க முடிகின்ற அப்படிப்பட்ட இணைத்துக்கொள்ளும் சூழலை, இன்றைய உலகத்தில் உருவாக்குவது மிகவும் கடினம். மற்றவை அனைத்தும் மிகுந்த தனிப்பட்ட தன்மை கொண்டதாக மாறிவிட்டது. அந்த வகையில், தியானம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

 

ஆசிரியர் குறிப்பு: தியானம் செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆர்வம், ஆனால் எங்கே துவங்குவது என்பது தெரியவில்லையா? ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு, கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு 50% சலுகையிலும் வழங்கப்படுகிறது. இன்றே பதிவுசெய்யுங்கள்!