கேள்வி: சத்குரு, நமஸ்காரம். ஒரு இறந்த உடலை நாம் எரிக்கும்போது, இந்தியாவில் நாம் எப்போதும் சாம்பலை கங்கை அல்லது அருகாமையில் இருக்கும் ஒரு ஆற்றில் கரைக்கிறோம். இதற்கு ஏதாவது முக்கியத்துவம் உள்ளதா?

அஸ்தி ஏன் ஆற்றில் கரைக்கப்படுகிறது?

சத்குரு: உங்களுக்கு மிகவும் நெருக்கமான யாரோ ஒருவர் இறந்துவிட்டால், அவர் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும், உங்கள் மனம் தந்திரங்கள் செய்யத் தொடங்கும். “ஒருவேளை அவர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார், இப்போது அவர் எழுந்து உட்காரப்போகிறார், அவர் சாம்பலிலிருந்து திரும்பி வந்துவிடுவார்”, என்றெல்லாம் கூறலாம். ஆனால் நீங்கள் சாம்பலை ஆற்றில் தூவிவிடும்பொழுது, அது முடிந்துவிட்டது என்று நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், மற்றும் இறந்தவர்களுக்கும்கூட, மரணத்தின் ஒரு ஆழமான ஏற்றுக்கொள்ளுதல் நிகழ்கிறது.

எல்லாம் முடிந்துவிட்டது என்று அந்த உயிருக்குப் புரியவைப்பதற்கான ஒவ்வொரு சாத்தியமான விஷயமும் செய்யப்படுகிறது.

இறப்புக்குப் பிறகு நாற்பது நாட்கள் வரை, உயிரானது உடலை முழுமையாக விட்டுச்செல்வதற்கு இன்னமும் அவகாசம் தேவைப்படுகிறது. நீங்கள் உடலை எரித்துவிட்டாலும், சாம்பல் அல்லது அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் போன்று அவர்களுக்குச் சொந்தமான ஏதோவொன்று, உடலின் குறிப்பிட்ட மூலக்கூறுகளை அது தேடிக்கொண்டிருக்கும். இதனால்தான் இந்து குடும்பங்களில், ஒரு நபர் இறக்கும் கணமே, அந்த நபர் பயன்படுத்திய ஆடைகள், குறிப்பாக இறந்தவரது உடலைத் தொட்டுக்கொண்டிருந்த ஆடைகள், அதாவது உள்ளாடைகள், எரிக்கப்படுகின்றன. இது ஏனென்றால், உயிரானது உடலின் மூலக்கூறுகளை இன்னமும் தேடுகிறது, அது வியர்வையாக இருக்கலாம், உடலின் வாசனையாக இருக்கலாம், ஏனெனில் அது முடிந்துவிட்டது என்ற உணர்தல் இன்னமும் வந்திருக்கவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் சாம்பலை ஒரு இடத்தில் வைத்தால், உயிருக்கு அதைத் தேடும் ஒரு உந்துதல் இருக்கிறது. ஆகவே சாம்பலானது ஆற்றில் விடப்படும்பொழுது, அது நீரில் பரவி, மூழ்கடிக்கப்படுகிறது. அந்த வழியில், அது காணப்பட முடியாது. எல்லாம் முடிந்துவிட்டது என்று அந்த உயிருக்குப் புரியவைப்பதற்கான ஒவ்வொரு சாத்தியமான விஷயமும் செய்யப்படுகிறது.

ருனாணுபந்தம்: பிணைப்பை உடைப்பது

மற்றொரு அம்சம் என்னவென்றால், நீங்கள் யாரோ ஒருவரைத் தொடும்போதெல்லாம் – அது இரத்த உறவுகள் அல்லது பாலுறவுகள் காரணமாக இருக்கலாம், அல்லது நீங்கள் ஒருவரது கைகளை வெறுமனே பிடித்தாலோ அல்லது உடைகளைப் பரிமாறிக்கொண்டாலோ – இந்த இரண்டு உடல்களும் ருனாணுபந்தத்தை, ஒருவிதமான பொதுத்தன்மையை உருவாக்கும். உடலளவில் ஒரு ஒத்தத்தன்மை நிகழ்கிறது. யாரோ ஒருவர் இறந்துவிடும்பொழுது, பாரம்பரியமாக, நீங்கள் ருனாணுபந்தத்தை எப்படி முற்றிலுமாக இல்லாமல் செய்வது என்று பார்க்கிறீர்கள். சாம்பலை கங்கையிலோ அல்லது கடலிலோ கரைப்பதன் நோக்கம் என்னவென்றால், கூடுமானவரை பரவலாக அதனைத் தூவிவிடுவதால், பிரிந்து சென்றுவிட்ட ஒருவருடன் நீங்கள் ருனாணுபந்தத்தை உருவாக்குவதில்லை.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொடர்வதற்கு, இந்த ருனாணுபந்தத்தை நீங்கள் முறையாக உடைக்கவேண்டும். இல்லையென்றால், நவீன சமூகங்களில் நிகழ்ந்து கொண்டிருப்பதைப்போல், அது உங்களது உடலளவிலான மற்றும் மனதளவிலான கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும். அது எந்தவிதத்தில் உங்களது உடல் மற்றும் மனதின் கட்டமைப்பை பலவீனமாக்குகிறது என்றால், இரண்டு நபர்களுக்கிடையே நிகழ்ந்த எல்லா அழகான விஷயங்களையும் நெஞ்சாரப் போற்றுவதற்கு பதில், அதனால் நீங்கள் துன்பமடைவீர்கள். அது ஒருவிதமாக வாழ்வின் சீரழிவுக்குக்கூட வழிநடத்தக்கூடும்.

இதனைத் தவிர்ப்பதற்கு, நாம் உடல்ரீதியான ஞாபகத்தைத்தான் அழிக்க முற்படுகிறோம் – மனதளவிலான ஞாபகத்தை அல்ல. மனரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான ஞாபகத்தை நீங்கள் இழக்கக்கூடாது. உங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த யாரோ ஒருவர் – நீங்கள் அவர்களை ஏன் மறக்கவேண்டும்? அந்த உறவை நீங்கள் என்றென்றைக்கும் போற்றிப் பாதுகாக்கவேண்டும். ஆனால் உடல்ரீதியான ஞாபகத்தை நாம் அழித்துவிட விரும்புகிறோம்.

மாந்திரீக விஷமத்தனம்

நாம் ஏன் சாம்பலை பரப்பிவிடுவதற்கு விரும்புகிறோம் என்பதற்கான மற்றொரு காரணம் உள்ளது. மரணத்துக்குப் பிறகு அந்த நபரின் இயல்புகள் சாம்பலில் தங்கியிருக்கின்றன. நீங்கள் உடலை எரித்தாலும், ஒரு தடயவியல் ஆய்வகத்தில், டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் சாம்பலிலிருந்து குறிப்பிட்ட நபரை அடையாளம் காண்பது சாத்தியம். உதாரணத்துக்கு, ஒரு கலசத்தில் நீங்கள் சாம்பலை வைத்தால், அந்த உயிர் அங்கேயே சுற்றி வந்துகொண்டிருக்கலாம்! இந்தக் காரணத்தினால்தான், மாந்திரீகம் செய்பவர்கள், சடங்குகளுக்காக சாம்பலைச் சேகரிப்பதற்காக எரியூட்டும் மயானத்தில் காத்திருக்கின்றனர் – அந்த உயிரை அவர்கள் ஈர்ப்பதற்கு விரும்புகின்றனர். அவர்கள் சூனியம் செய்ய விரும்புவதுடன், வித்தியாசமான ஒரு வழியில்  பயன்படுத்துவதற்காக அந்த உயிரை கைப்பற்றுகின்றனர்.

உங்களது அன்புக்குரிய யாரோ ஒருவர் இறக்கும்பொழுது, அவர்களது சாம்பல் தவறான கைகளில் கிடைத்துவிடாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள விரும்புகிறீர்கள். உங்களது முன்னோர் அல்லது உறவினர் ஒரு நீண்ட காலத்துக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதை அல்லது சூனியத்திற்கு இலக்காவதை நீங்கள் விரும்புவதில்லை. சாம்பலை நீங்கள் ஆற்றில் கரைக்கும்பொழுது, அதை யாராலும் எடுக்கமுடியாது. அதைப் பரவச் செய்வதற்கான மற்றொரு வழி, காற்று வீசிக்கொண்டிருக்கும் ஒரு மலைக்குச் சென்று, சாம்பலை காற்றில் வீசுவதால், அது எல்லா இடங்களிலும் பரவுகிறது. ஒரு சிறிய கைப்பிடி அளவு சாம்பலைக்கூட ஒருவராலும் எடுக்க முடியக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

ஆசிரியர் குறிப்பு: காயாந்த ஸ்தானம் என்பது ஈஷாவின் தகன சேவை. பண்டைய பாரம்பரியங்களையும், இறப்புச் சடங்குகளையும் ஆற்றல்மிகுந்த சக்தி அடிப்படையில் மீட்டெடுத்து, ஒரு வியாபார முயற்சியாக இருப்பதைவிட, சேவை நோக்கத்தில் நடத்தப்படுகிறது. மேலும் அதிகமான மக்களுக்கு இந்த சேவைகளை வழங்குவதற்கு உதவி செய்யுமாறு உங்கள் ஆதரவையும், பங்களிப்புகளையும் நாங்கள் வேண்டுகிறோம்.

காயாந்த ஸ்தானம் பற்றி மேலும் அறிந்திடுங்கள்!