மதமும், நம்பிக்கை முறைகளும்

சத்குரு: மனிதன் மதப்பற்று கொண்டவனாக மாறிய அந்தக் கணமே, எல்லா மோதல்களுக்கும் அது முற்றுப்புள்ளியாக இருந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, மதம் உலகத்தின் எல்லா இடங்களிலும் மோதலுக்கான மூலக் காரணமாக ஆகியுள்ளது. இந்த பூமியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக, அதிகபட்ச எண்ணிக்கையிலான உயிர்களை அது பலி கொண்டதோடு மட்டுமல்லாமல், அதிகபட்ச அளவுக்கான துன்பத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதற்குக் காரணம், முக்கியமாக மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை முறைகளிலிருந்து வருவதாக இருக்கிறது.

நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? நம்பிக்கை என்றால் "உங்களுக்கு தெரியாது" என்று அர்த்தம். உங்களுக்கு ஏதோ ஒன்று தெரிந்திருந்தால் அதை நீங்கள் நம்பவேண்டியதில்லை, அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு இரண்டு கரங்கள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா அல்லது உங்களுக்கு இரண்டு கரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கரங்களைக் காண்பதற்கு உங்களுக்கு கண்கள் இல்லையென்றாலும்கூட, அப்போதும் உங்களுக்கு இரண்டு கரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரிகிறது. கரங்களைப் பொருத்தவரை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள், ஆனால் கடவுளைப் பொருத்தவரை நீங்கள் நம்புகிறீர்கள் - ஏன்?

ஒருவர் தன்னுடைய இயல்பினால் அடையக்கூடிய முற்றிலும் பரவசமான நிலைக்கும், ஒருவரின் தற்போதைய நிலையற்ற தன்மைக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை மதம் நிரப்பியுள்ளது.

நம்பிக்கை எழுவது ஏனென்றால், உங்களுக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ளப் போதிய நேர்மை உங்களுக்கு இல்லை. கலாச்சாரரீதியான ஏதோ ஒன்றை அல்லது பொதுவாக உங்களுக்கு வசதியாக உள்ள ஏதோ ஒன்றை நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் கடவுள் உள்ளார் என்று நம்பினாலும் அல்லது கடவுள் இல்லை என்று நம்பினாலும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு சாராரும் ஒரே படகில்தான் பயணிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றை நீங்கள் நம்புகிறீர்கள்.

ஏதோ ஒன்றை நீங்கள் நம்பும் கணமே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறீர்கள். தெளிவில்லாத நம்பிக்கை ஒரு பேரழிவாகவே இருக்கிறது. இதைத்தான் இன்றைக்கு உலகில் நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். நம்பிக்கை முறைகள் மக்களை மகத்தான நம்பிக்கை உணர்வுடன் தொடர்ந்து செயல்படச் செய்கிறது என்பதுடன், தேவையான தெளிவு இல்லாத இந்த நம்பிக்கை, இந்த பூமியின் மீது ஒரு பெரும் பேரழிவாக இருக்கிறது. ஒரு மனிதனின் நம்பிக்கைக்கும், மற்றொரு மனிதனின் நம்பிக்கைக்கும் இடையில்தான் எப்போதும் உலகத்தில் மோதல் நிகழ்ந்து வந்திருக்கிறது. உங்களுடைய வழி சரியானது என்று நீங்கள் நம்பும் நிலையில், வேறு யாரோ ஒருவர் அவருடைய வழி சரியானது என்று நம்பும் அந்தக் கணமே நீங்கள் சண்டையிடுவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம்பிக்கை முறைகள் தோன்றுவது எதனாலென்றால், அதில் அவர்களுக்கு ஒருவிதமான வசதி இருக்கிறது. அது ஒரு ஆறுதலாக இருக்கிறது. தோற்றுப்போனவர்களுக்கும், அமைதியிழந்தவர்களுக்கும் மட்டும்தான் ஆறுதல் தேவைப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, ஒரு பெரும்பகுதியான மனித குலம் நீண்டகாலமாக இந்த நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், இப்போது வீட்டுக்கு வீடு சென்று ஆறுதலை விற்பனை செய்யவும் தேவையாக உள்ளது. அவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம், "வருத்தப்படாதீர்கள், கடவுள் உங்களோடு இருக்கிறார்," அவ்வளவுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. கடவுள் உங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது பிரச்சனை இல்லை; யாரோ ஒருவர் உங்களோடு இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். இது மக்களை பலரையும் நிலையாக வைத்திருக்கிறது; இல்லையெனில் அவர்கள் உடைந்துவிடுவார்கள்.

ஒருவர் தன்னுடைய இயல்பினால் அடையக்கூடிய முற்றிலும் பரவசமான நிலைக்கும், ஒருவரின் தற்போதைய நிலையற்ற தன்மைக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை மதம் நிரப்பியுள்ளது. நீங்கள் ஆறுதலை தேடுகின்றீர்கள் என்றால், அது கட்டாயம் தேவை. பெரும்பாலான மக்கள் ஆறுதலைத்தான் தேடுகிறார்கள், முக்தியை அல்ல. ஆறுதல் என்பது அமைதிப்படுத்தும் மருந்து போன்றது; அது உங்களைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. நமக்குத் தூங்கச் செல்ல வேண்டுமா அல்லது நம் வாழ்வில் புதிய சாத்தியங்களுடன் உயிர்ப்புடன் வர வேண்டுமா என்பதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசம்

எங்கேயோ, ஏதோ ஒரு கட்டத்தில், எல்லா மதங்களும் ஒரு ஆன்மீக முறையாகவே ஆரம்பித்தன. ஆனால் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவர்களது ஆவலில் அவைகள் அடிப்படையை இழந்துவிட்டன. திரிந்துபோன ஆன்மீகம்தான் - மதம் என்பது. ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் இப்போது புரிந்துகொள்வோம். நீங்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்று கூறும் கணத்திலேயே, நீங்களே உங்களை ஒரு நம்பிக்கையாளர் என்று கூறிக் கொள்கிறீர்கள். "நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன்" என்று நீங்கள் கூறும் கணத்தில் உங்களை நீங்கள் ஒரு தேடுபவராகக் கூறிக் கொள்கிறீர்கள். நம்பிக்கை கொள்வதற்கும் தேடுதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? உங்களுக்குத் தெரியாத ஒன்றைத்தான் உங்களால் தேட முடியும். அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், தேடுதலின் அடிப்படை என்னவென்றால், உங்கள் உயிரின் அடிப்படைத் தன்மையே உங்களுக்குத் தெரியவில்லை என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள். இந்தப் படைப்பின் மூலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், மேலும் நீங்கள் எங்கே செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அறிந்துகொள்ளும் தேடலில் நீங்கள் இருக்கிறீர்கள். "எனக்குத் தெரியாது" என்ற நிலையில் நீங்கள் இருக்கும்போது உங்களால் யாருடனும் சண்டையிட முடியாது.

ஆன்மீக செயல்முறையில் முதலும் முக்கியமான விஷயமும் என்னவென்றால், உங்களுக்கு நீங்களே முழு நேர்மையுடன் இருப்பது.

ஆன்மீக செயல்முறையில் முதலும் முக்கியமான விஷயமும் என்னவென்றால், உங்களுக்கு நீங்களே முழு நேர்மையுடன் இருப்பது. மேலும், "நான் என்ன அறிந்திருக்கிறேனோ, அது எனக்குத் தெரியும், நான் என்ன அறிந்திருக்கவில்லையோ, அது எனக்குத் தெரியாது,” என்பதை விருப்பத்துடன் பார்ப்பது. யார் என்ன கூறி இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல - கிருஷ்ணர், இயேசு, புத்தர் அல்லது வேறு யாரோ ஒருவர் அதைக் கூறியதாக இருக்கட்டும் - அவர்கள் உண்மையே கூறுவதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு மரியாதை அளிக்கக் கடமைப்பட்டிருந்தாலும், உங்களுக்குத் தெரியாது – அதை நீங்கள் உணர்ந்ததும் இல்லை, கண்டதும் இல்லை. உங்களுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது என்பதில் நீங்கள் ஏன் நேர்மையுடன் இருக்கக்கூடாது?

"எனக்குத் தெரியாது" என்பது மிகப்பெரிய ஒரு சாத்தியம். அறிதலுக்கான அடிப்படை அதுதான். உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் பார்க்கும்போதுதான் அறிந்துகொள்வதற்கான சாத்தியம் ஏற்படுகிறது. உங்களுக்கு வசதியான ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நீங்கள் அந்த சாத்தியத்தைக் கொன்றுவிடும் அந்தக் கணமே, அறிந்துகொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் அழித்துவிடுகிறீர்கள்.

ஆன்மீக செயல்முறை என்பது நீங்கள் மேலே பார்ப்பதாலோ, கீழே பார்ப்பதாலோ அல்லது சுற்றிலும் பார்ப்பதாலோ நிகழ்வதில்லை. நீங்கள் உள்முகமாகப் பார்க்கும் காரணத்தால் அது நிகழ்கிறது. உள்முகம் என்பது வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு அல்ல. உள்முகம் என்பது பரிமாணங்களற்றது. அந்த பரிமாணங்கள் இல்லாத ஒன்றை தனக்குள்ளேயே நேர்மையாக இருக்கும் ஒருவரால்தான் அணுகமுடியும். நான் உங்களை மற்றவரிடம் நேர்மையாக இருக்கச் சொல்லவில்லை - அதில் பல பிரச்சனைகள் இருக்கலாம். உங்களுடனேயே நீங்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி நான் பேசுகிறேன். இந்த ஒரு விஷயத்திற்கு நீங்கள் தகுதியானவர்தானே?

மதத்திலிருந்து பொறுப்புணர்வுக்கு

மனிதகுலத்தின் வரலாற்றிலேயே, இவ்வளவு எண்ணற்ற மனிதர்கள் தாங்களாகவே சிந்திப்பது என்பது இதுதான் முதல்முறை. கடந்த காலங்களில், உங்களது பாதிரியார்களும், பண்டிதர்களும், குருமார்களும் அல்லது வேதமும் உங்களுக்காகச் சிந்தனை செய்யும் நிலையே இருந்தது. உங்களுக்காக நீங்களே சிந்திப்பதற்கு நீங்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது உங்களுக்கென்று நீங்கள் சிந்தனை செய்ய முடியும். உங்களுக்கு நீங்களே சிந்திப்பது என்றால், ஏதோ ஒரு விஷயம் காரணரீதியாக சரியானதாக இருந்தால் தவிர, உங்களால் அதை விழுங்கமுடியாது. காரண அறிவுரீதியாக நீங்கள் சிந்திக்கத் தொடங்கும் கணத்திலேயே, உங்கள் மனதில் கேள்விகள் எழுந்துவிடும். ஆழ்ந்த புரிதலில் வெளிப்படும் மூன்று கேள்விகளை நீங்கள் கேட்டால், எல்லா வேதங்களும், மதங்களும், சொர்க்கங்களும் தரைமட்டமாகிவிடும்.

நெடுங்காலமாக, ஏதாவது ஒரு விஷயம் சரியாக நிகழ்ந்தால், அதற்கு நாம்தான் காரணம் என்று நாம் நினைத்து வந்திருக்கிறோம், ஆனால் ஏதோ ஒன்று தவறாகிவிட்டால், அதற்குக் கடவுள்தான் காரணம் என்று நினைக்கிறோம். இந்த சிந்தனைப்போக்கை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் நமக்குள் இருக்கிறது என்பதுடன், நமக்குத் தீர்வுகள் வேண்டுமென்றால், அது வேறெங்கும் இல்லை, நமக்குள் மட்டும்தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

முக்கியமாக இதன் பொருள் என்னவென்றால், மனிதகுலம் இப்போது மதத்திலிருந்து பொறுப்புணர்வுக்கு நகரத் தொடங்கியிருக்கிறது. மதத்திலிருந்து, பொறுப்புணர்வுக்கு உலகத்தை நகர்த்திச் செல்வதன் மூலம்தான் மனித ஆற்றல் முழுமையாக வெளிப்படும். இல்லையென்றால், ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்யும் எல்லா அபத்தங்களுக்கும் ஒரு சமாதானமும், இறைமையின் ஆதரவும் கிடைத்துவிடுகிறது.

மனித புத்திசாலித்தனத்தின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், இன்றைக்கு ஏதோ ஒரு முட்டாள்தனத்தை நீங்கள் செய்துவிட்டால், உங்கள் புத்திசாலித்தனம் இரவெல்லாம் உங்களைத் தொந்தரவு செய்யும் – “நான் ஏன் இதைச் செய்தேன்?” என்ற கேள்வி துளைத்தெடுக்கும். ஆனால், அது கடவுள் முத்திரை அல்லது வேத முத்திரை பெற்றதென்றால், நீங்கள் முட்டாள்தனமான விஷயங்களை மகத்தான நம்பிக்கையுடன் செய்துகொள்ள முடியும். இது மறைந்தொழிய வேண்டும். மனிதகுலத்தை நாம் மதத்திலிருந்து, மேலதிகப் பொறுப்புணர்வான செயல்பாட்டை நோக்கி நகர்த்தவேண்டியது அவசியம்.

 

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் மூலம் உங்கள் ஆன்மீகப் பாதையின் முதல் அடியை எடுத்து வையுங்கள். கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு பாதிக் கட்டணத்திலும் இது வழங்கப்படுகிறது. இப்போதே பதிவு செய்யுங்கள்!