‘நம்பிக்கைதானே வாழ்க்கை’ என பலர் அடிக்கடி சொல்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனமோ எப்போதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன என்பதை சத்குரு இங்கே தெளிவுபடுத்துவதோடு, நம்பிக்கையின் பாதையில் நடையிடுவது எப்படிப்பட்ட சாத்தியத்தை வழங்கும் என்பதையும் உணர்த்துகிறார்.

சத்குரு:

இன்றைய உலகின் துரதிருஷ்டம் என்னவென்றால், மனிதர்கள் சமயம் என்பதை வரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நிரந்தரமானவர் இல்லை என்பதையும், இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டுவிட்டால், நீங்கள் நம்பிக்கையை உணரத் தொடங்குவீர்கள். ஏனெனில், ஒரு பக்தருக்கு செய்வதற்கான நிரல் முறைகள் ஏதுமில்லை. உங்களுக்கென்று ஒரு செயல்திட்டமும், கடவுளுக்கென வேறொரு செயல்திட்டமும் இருந்தால் இருவரும் எதிரெதிர் திசையில் போகிறீர்கள். ஆனால், எதிர்திசையில் போனாலும் கடவுளைச் சென்றடைய வேண்டுமென எதிர்பார்க்கும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது.

நம்பிக்கையின் பாதையில் நடையிட வேண்டுமென்றால், சிறு குழந்தையின் வெகுளியான மனோபாவம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

இன்று பலரும் நம்பிக்கை என்ற பெயரில் கடவுளுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள். “கடவுளே! இந்தத் திட்டத்தில் நான் பத்தாயிரம் ரூபாய்கள் முதலீடு செய்வேன். ஆனால், எனக்கு பத்து இலட்சம் ரூபாய்கள் கிடைக்க வேண்டும்” என்பது போன்ற ஒப்பந்தங்களை இட்டுக் கொள்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இத்தகைய ஒப்பந்தங்களை மனிதர்களுடன் மேற்கொண்டு பாருங்கள், உங்களைத் துரத்திவிடுவார்கள். ஆனால், உங்கள் கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருக்கிறார். இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.

ஏதோவொரு குழுவுடன் உங்களைப் பிணைத்து வைப்பதற்குப் பெயர் பக்தியல்ல. பெரும்பாலான பிரார்த்தனைகள் “அது குடுப்பா! இது குடுப்பா! காப்பாத்துப்பா!” என்பதாகத்தான் இருக்கின்றன. இவற்றின் அடிப்படை, ஒன்று அச்சம் அல்லது பேராசை. இது அடிப்படையான பிழைப்பு. உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளை தாங்களே பார்த்துக் கொள்கின்றன. ஆனால், இருப்பதிலேயே புத்திசாலியான பிறவியாக கருதப்படும் மனிதன், தான் பிழைப்பு நடத்த சொர்க்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறான்.

உங்களுக்கு நல்லபடியாக வாழ வேண்டுமென்றால் உடலையும் மனதையும் சரியாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும், வேறுவழியில்லை. இதற்காக நீங்கள் இடைவிடாமல் வானத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்.

இன்று பலரும் நம்பிக்கை என்றால் விசுவாசமாக இருப்பது பற்றிப் பேசுகிறார்கள். விசுவாசம் என்பது அடிமைகளுக்கும் முட்டாள்களுக்குமானது. உள்நோக்கம் கொண்டவர்கள்தான் விசுவாசம் பற்றிப் பேசுவார்கள். நம்பிக்கை என்பது உங்களை பிணைப்பதற்கான கருவியல்ல. உங்களை விடுவிப்பதற்கான கருவி.

நம்பிக்கையின் பாதையில் நடையிட வேண்டுமென்றால், சிறு குழந்தையின் வெகுளியான மனோபாவம் உங்களுக்கு இருக்க வேண்டும். “என்னைப் பின்பற்றுங்கள்” என ஏசுநாதர் சொன்னபோது அவரைப் பின் தொடர்ந்தவர்கள், அதிகாரத்தில் இருந்தவர்களோ மெத்தப் படித்தவர்களோ அல்ல. மீனவர்களும், விவசாயிகளும், எளிய மனிதர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். மற்றவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள். புறக்கணிக்க முடியாதவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். நம்பிக்கை என்பது கள்ளங்கபடம் அற்றவர்களுக்கான பாதை. உங்களுக்கு தர்க்கரீதியான மனமிருந்தால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் நம்பிக்கை பற்றிப் பேசுவது நேர விரயம்.

அப்படியானால், நம்பிக்கையின் பாதை இப்போது சரிப்படாதா என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படி சொல்லவில்லை. உங்களிடம் இப்போது என்ன இருக்கிறதோ அதை வைத்துத் தொடங்க வேண்டுமென்றுதான் சொல்கிறேன். மனிதனுக்கு இருப்பவை தலை, இதயம், உடல் மற்றும் கொஞ்சம் சக்திநிலை. உங்களுக்குத் தெரிந்த நான்கு உண்மைகள் இவை. மற்ற அம்சங்களை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம், அது உங்கள் விருப்பம். உங்கள் தன்மையின் உச்சத்தை அடைய நீங்கள் அறிவைப் பயன்படுத்தினால் அது ஞான யோகம் ஆகிறது. உங்கள் உணர்வுகளைப் பயன்படுத்தினால் அது பக்தியோகம் ஆகிறது. உங்கள் உடலையும் செயலையும் பயன்படுத்தினால் அது கர்மயோகம் ஆகிறது. உங்கள் உள்நிலை சக்தியைப் பயன்படுத்தினால் அது கிரியா யோகம் ஆகிறது. இவை நான்கு பாதைகள். இவையனைத்தையும் நீங்கள் ஒன்றாகத்தான் கையாள வேண்டும். இது கார் ஓட்டுவது போலத்தான். காரின் நான்கு சக்கரங்களும் ஒரே பாதையில் பயணம் போனால்தான் நீங்கள் நகர முடியும்.

நம் மரபில், வாழும் ஒரு குருவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதே இந்தக் கலவையை உங்களுக்கு அவர் சரியாகக் கலந்து தருவார் என்பதால்தான். ஒருவருக்கு குறிப்பிட்ட மார்க்கம் பயன்படுகிறதென்றால் அது மற்றவருக்கு பயனளிக்கும் என்று சொல்ல முடியாது. இந்த நான்கு அம்சங்களின் தனித்தன்மை வாய்ந்த கலவைதான் பயன்தரும்.

சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை. இதுவே உச்சநிலையை அடைவதற்கான அற்புதமான கருவி.

இன்று உலகின் பல பகுதிகளிலும் நம்பிக்கை என்ற சொல், மனிதர்களின் உணர்வுகளை தீவிரப்படுத்தப் பயன்படுகிறது. பலருக்கும் தீவிரமான உடல் என்றால் என்னவென்று தெரியாது. தீவிரமான சக்திநிலை என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், உணர்ச்சிகளை தீவிரப்படுத்துவது மிகவும் எளிது. மனம் ஆதிக்கம் செலுத்தும்போது உங்களுக்கு தேவையானவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் தரத் தொடங்குகிறீர்கள். இதுபோன்ற நிலைகளில் கடவுள் என்பவர் ஒரு காப்பீட்டுத் திட்டம் மட்டுமே. இதனால் பயன் கிடையாது.

பொதுவாகவே பக்தியின் பாதையில் நடப்பவர்களை மனிதர்கள் பைத்தியங்களாகத்தான் பார்த்தார்கள். இன்று பல நூறாண்டுகளுக்குப் பிறகு பரமஹம்சர்களையும் மீராக்களையும் வணங்குகிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்ந்தபோது அவர்களைப் பைத்தியங்களாக பார்த்தார்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நள்ளிரவில் உங்கள் தோட்டத்தில் குதித்து மரங்களையும் செடிகளையும் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தால் அவரை ஞானோதயம் அடைந்தவராகக் கருதுவீர்களா? பைத்தியம் என்று பேசுவீர்களா? உங்கள் மனைவி கடவுளை மணந்து கொண்டதாகக் கூறினால் அவர் தெய்வீகத்தன்மை அடைந்ததாக நினைப்பீர்களா? மனநோய் என்று நினைப்பீர்களா?

தாங்கள் எதன்மேல் பக்தி செலுத்துகிறார்களோ அதைத் தவிர எதுவும் முக்கியமில்லை என எண்ணுவதுதான் பக்தர்களின் இயல்பு.

சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை. இதுவே உச்சநிலையை அடைவதற்கான அற்புதமான கருவி. ஆனால், அதை ஒரு உண்மை என்று மட்டும் கருதினால் அது உங்கள் அடிப்படையை மாற்றாது. உங்களை ஓர் அடிப்படைவாதியாக மாற்றும். நம்பிக்கையைக் கொண்டு பல அற்புதமான விஷயங்களைச் செய்யலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த உலகில் எல்லாவற்றையும் ஏதேனும் ஒன்றின் பெயரில் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, எல்லாவற்றுக்கும் பெயர் சூட்டி அவரவரும் தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிராக மோதத் தொடங்கிவிட்டார்கள்.

நம்பிக் கொண்டிருப்பதற்கும் நம்பிக்கையை வாழ்வாகக் கொள்வதற்கும் உள்ள வேற்றுமையை உணர வேண்டும். நம்பிக்கை எதிர்பார்ப்பை வளர்க்கிறது. ஆனால், நம்பிக்கை உங்கள் இயல்பாக மாறும்போது ஒரே பாதையில் திடமாக செல்ல முடிகிறது. நம்புவது என்பது ஒரு செயலல்ல. நீங்கள் அந்தத் தன்மையாகவே மாறுவது. இது ஓர் உள்நிலை அனுபவம். இந்தப் பாதையில் செல்லும்போது, வளர்ச்சி என்பது அடிமேல் அடியெடுத்து வைக்க அவசியமின்றி ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும்.