சத்குரு: பொதுவாக, இரண்டு சமகோண முக்கோணங்கள் இணைந்து உருவாக்கும் அறுங்கோண நட்சத்திர வடிவமாக, மையத்தில் ஒரு புள்ளியுடன் அனஹத சக்கரம் குறிப்பிடப்படுகிறது. மூன்று கீழ்நிலை சக்கரங்களும், மூன்று மேல்நிலை சக்கரங்களும் ஒரு குறிப்பிட்ட விதமாக இந்தப் புள்ளியில் எப்படி இணைகிறது என்பதன் குறியீடு இது. அனஹதா, தன்னிலேயே ஆறு தன்மைகளை கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள். பல கலாச்சாரங்களும் வெவ்வேறு வித்தியாசமான மறைபொருளுடன் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன.

ஆனால் முக்கியமாக, மேல்நோக்கி நகரும் முக்கோணம் மற்றும் கீழ்முகமான முக்கோணத்தின் இந்த சந்திப்பையே குறிக்கின்றன. அடிப்படையாக, ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு வழியில், தான் இருக்கும் நிலையில் இருந்து உயர்வதற்கு - உயர்வது குறித்த அவர்களின் புரிதல் என்னவாக இருந்தாலும் - முயற்சிக்கிறது என்பதையே மேல்நோக்கி நகரும் முக்கோணம் குறிக்கிறது.

உயர்வதற்கான இயற்கையான உந்துதல்

ஒரு சின்னஞ்சிறு புழு மரத்தின் மீது ஏறுவதற்கு விரும்பக்கூடும். ஒரு பறவை வானத்தில் உயரப் பறந்து விண்ணைத்தொட விரும்பலாம். ஒரு மனிதர், செல்வம், புகழ், அதிகாரம் உள்ளவராகவோ அல்லது ஞானமடையவும் விருப்பம் கொள்ளலாம். இவை அனைத்துமே உயர்வதற்கான முயற்சிகள்தான். இதுவே படைப்பின் இயல்பாக இருக்கிறது - ஒவ்வொரு உயிரும் அதன் முழுத்திறனிற்கு உயரவே முயற்சிக்கிறது. சிலர் அதை விழிப்புணர்வுடன் செய்கின்றனர், பெரும்பாலானவர்கள் விழிப்புணர்வற்ற நிலையில் செய்தாலும், ஒவ்வொருவரும் தமது நிலையில் இருந்து உயர்வதற்கே முயற்சிக்கின்றனர்.

உங்கள் எண்ணத்தில், பணத்திற்குப் பின்னால் ஓடும் அந்த மனிதன் சரியில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படி அல்ல, அவருக்குத் தென்பட்ட ஒரு படிக்கட்டின் வழியாக அவரும் உயர்வதற்கு முயற்சி செய்கிறார். இப்போதைக்கு அவருக்கு ஏணியாக இருப்பது பணம். உங்களுடைய ஏணியாக, சக்தி நிலை, உணர்தல் மற்றும் ஏதோ ஒன்றை நீங்கள் நினைக்கலாம். வேறு சிலர் உணர்ச்சியைத் தங்களது ஏணியாக நினைக்கலாம். வெவ்வேறு விதமான மக்களும் வெவ்வேறு விதமான வழிகளை யோசனை செய்யலாம் அல்லது உபயோகப்படுத்தலாம், ஆனால் ஒவ்வொரு உயிரும், மனிதராக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் படைப்பாக இருந்தாலும் உயர்வடைவதற்கே முயற்சிக்கிறது. இதுதான் வாழ்வின், படைப்பின் இயல்பு.

அனஹதா மிகப் பிரம்மாண்டமான ஒரு இடம், ஆனால் நீங்கள் அதற்கான தயார்நிலையில் இல்லையென்றால், அது மிகப் பயங்கரமாக மாற முடியும்.

உயர வேண்டும் என்ற இந்த விருப்பம் ஏற்படுவது ஏனென்றால், நீங்கள் பூமியோடு நிலைத்தன்மை கொண்டிருக்கிறீர்கள். அதாவது, ஒரே இடத்தில் நீங்கள் சிக்கிக்கொண்டு விட்டீர்கள். நீங்கள் இங்கே இருந்தால், உங்களால் அங்கே இருக்க முடியாது. ஒரே இடத்தில் நீங்கள் சிக்கிவிட்ட காரணத்தினால், மற்ற எல்லாத் திசைகளைக் காட்டிலும் உயரே செல்வது சிறந்தது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.

எங்கெங்கும் நிறைந்திருக்கும் மூலம்

எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பதாக எதை நாம் குறிப்பிடுகிறோமோ, அது ஒரு இடத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அது எல்லா பக்கமும் சென்று ஒவ்வொன்றிலும் கசிந்து பரவுகிறது. அதற்கு திசையும் இல்லை, இடமும் இல்லை. நீங்கள் ஒரே இடத்தில் தேங்கியிருந்தால் மட்டுமே, உங்களுக்குச் செல்வதற்கு என்று ஒரு திசை இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாமல் இருந்தால், நீங்கள் எங்கும் இருக்கிறீர்கள். எங்கும் செல்வதற்கில்லை எனும்போது, இருக்கும் இடத்திலேயே எல்லாவற்றிலும் கசிந்து பரவி ஊறி திளைக்கிறீர்கள்.

இந்த அடிப்படையை வைத்தே, யோகக் குறியீட்டுச் சொல்லானது இரண்டு முக்கோணங்களைப் பயன்படுத்தியுள்ளது. படைக்கப்பட்டுள்ளது மேல்நோக்கி நகர முயற்சிக்கிறது. படைத்தலுக்கு மூலமானது கீழே வருவதுமில்லை, மேலே செல்வதுமில்லை - அது எல்லாவற்றினுள்ளும் ஊடுறுவி கசிந்திருக்கிறது. அது காற்றைப்போல் இருக்கிறது என நாம் அழைக்கலாம் - காற்று உங்களது நாசித் துவாரங்களுக்குள் மட்டுமல்ல, உங்களின் காதுகள், தோலின் நுண்துவாரங்கள் மற்றும் நீங்கள் வாய் திறந்தால் அதனுள்ளும் நுழைகிறது. எங்கே செல்வது என்பதற்கான தேர்வு காற்றிடம் இல்லை - எங்கே இடம் இருந்தாலும், அது நுழையும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதைப்போலவே, படைப்பின் மூலம் என்று நாம் எதைக் கருதுகிறோமோ, அது எல்லா பக்கமும் நகர்கிறது என்பது ஒரு ஒப்புவமை மட்டுமே. ஆனால் இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும்போது, உங்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், "நல்ல" காற்று உங்களது சுவாசப்பாதை வழியே கீழாக உள் செல்கிறது, "கெட்ட" காற்று மேலேறி அதே பாதையின் வழியாக வெளியே வருகிறது. நமக்கு எது நன்மையோ, அந்த அளவுகோலின்படிதான் நல்லது என்பதை நாம் எப்போதும் வரையறை செய்துள்ளோம். பூமியிலுள்ள மற்ற உயிரினங்கள் நம்முடன் இந்த விஷயத்தில் ஒப்புக்கொள்ள மறுக்கலாம். இது ஒப்புவமையுடன் கூடிய ஒரு புரிதல்தான். உண்மையில், காற்று உங்களது நுண்துவாரங்கள் மூலமாகவும் உள்ளே செல்கிறது, ஆனால் சுவாசப்பாதை என்பது முதன்மையானதாக இருக்கிறது. உங்கள் சுவாசத்தை நீங்கள் மறுத்தால், இறந்துவிடுவீர்கள், ஆகவே இது நிச்சயம் தேவை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

சாத்தியங்களும், அபாயங்களும்

இந்த அடிப்படையில், படைக்கப்பட்டுள்ளது என்று நாம் எதை கருதுகிறோமோ, அதாவது நீங்கள், மேலே உயர மேற்கொள்ளும் முயற்சி - இதுதான் மேல்நோக்கி நகரும் முக்கோணம். படைத்தலுக்கு மூலமானது அல்லது தெய்வீகம் என்று நாம் எதைக் கருதுகிறோமோ, அது கீழ்முகமாக அமைந்துள்ள முக்கோணம். இரண்டு முக்கோணங்களும் பொருத்தமான ஒழுங்குடன் ஒன்றையொன்று ஊடறுத்து, ஒரு மையப் புள்ளியுடன் அறுங்கோண நட்சத்திர வடிவம் கொள்ளுமிடமே அனஹதா. இப்படி அறுங்கோண வடிவமாக இருப்பது, ஒரே இடத்தில் பல சாத்தியங்களை உள்ளடக்கியுள்ளதை குறிக்கிறது. இப்படி ஒரே இடத்தில் பல சாத்தியங்கள் இருக்குமேயானால், பெரும்பாலான மக்கள் எல்லா சாத்தியங்களையும் தவறவிட்டு விடுவார்கள். அங்கே மிக அதிகமான விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அவைகள் அனைத்துக்கும் மக்கள் கவனம் செலுத்தினால், அவர்கள் எதையும் உணராமலே போய்விடக்கூடும். ஆனால் அது அவர்களுக்கு எப்போதும் நன்றாகவே வேடிக்கை காட்டும்!

நீங்கள் அனஹதாவை அடைந்தால் அல்லது உங்களது சக்திநிலையானது அனஹதாவில் ஆதிக்கம் செலுத்தினால், இதுவரை உங்களால் கேட்க முடியாமல் இருந்த ஒலிகளை நீங்கள் கேட்கத் துவங்குவீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் - இன்றைய நாட்களில் மாணவர்கள் பலரும் படிப்பதற்கு விரும்பும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில், அவர்களுக்கான பாடங்களைத் தேர்வு செய்துகொள்ள அதிக சுதந்திரம் வழங்கப்படுகிறது. கற்பதில் முனைப்புடனும், தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகவும் அறிந்திருக்கும் மாணவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட விதமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட படிப்பைத் தேர்வு செய்கின்றனர். இதனைச் செய்வதற்கு, அந்த மாணவர் தெளிந்த மனதினராக இருக்க வேண்டும் அல்லது தான் என்ன செய்யவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு பாடப்பிரிவில் படித்திருந்து, பிறகு அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேறு ஏதோ ஒன்றை எடுத்துப் படிக்கின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு மற்றொன்றைச் செய்கின்றனர். நான்கு வருடங்கள் கழிந்த பிறகு, அப்போதும் தாங்கள் என்னதான் செய்ய விரும்புகிறோம் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இப்படி நிகழக் காரணம், அங்கே அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தெளிவு என்பது இல்லாதபோது, நீங்கள் எல்லாவற்றையும் தொட்டு பார்த்திருக்கலாம், ஆனால் உங்களால் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனால்தான் பூமியின் மீதுள்ள ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டமே அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டு இருக்கிறது.

அனஹதாவைப் பொறுத்தவரை, அங்கே தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் உள்ளன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர, நாம் எப்போதுமே அனஹதா சாதனாவில் சாதகர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்தே வந்திருக்கிறோம். ஏனென்றால், அங்கே மிக அதிகமான தெரிவுகளுடன், மிக அதிக அளவுக்குக் குழப்பங்களும் இருக்கின்றன. அனஹதா சாதனாவை மேற்கொள்வதற்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன: உணர்ச்சியில் இனிமை மற்றும் முழு உறுதியான காரண அறிவு. காரண அறிவு என்றால் கூர்மையாக பகுத்துணரும் விவேகம்; உண்மை எது - உண்மையல்லாதது எது என்பதையும், ஞாபகப்பதிவு எது - கற்பனை எது என்பதையும், அனுபவம் எது - மனோரீதியான கற்பனை எது என்பதையும், கூர்மையான விவேகத்தால்தான் பகுத்தறிய முடியும். இத்தகைய கூர் உணர்வு இல்லாமலிருந்தால், அனஹதா என்பது அணுகக்கூடிய இடமல்ல, ஏனென்றால் நீங்கள் கேட்கவும், பார்க்கவும் வாய்ப்புள்ள வழிகள் அப்படிப்பட்டதாக இருக்கிறது. எப்போதும் சமநிலை தவறாத நபர் கூட இங்கே சாமான்யமாக பித்துப்பிடித்தவராகிவிட முடியும். அந்தப் பாதையில் ஓரளவுக்கு உந்துதல் உள்ள யாரோ ஒருவர் எப்படியும் முழுமையாக கடந்துவிடுவார்.

அனஹதா - உரசிக் கொள்ளாத ஒலி

அனஹதா என்றால் எதிரொலியற்ற ஒரு ஒலி. அனஹதா அல்லது "உரசிக் கொள்ளாத ஒலி" என்று அழைக்கப்படுவது ஏனென்றால், அனஹதாவின் முதல் வெளிப்பாடாக ஒலிகள் எழுகிறது. உலகில் பெரும்பாலான ஒலிகள் ஏதோ ஒன்றுடன் மற்றொன்று உரசுவதால் நிகழ்கிறது. ஆனால் அனஹதாவில், எதுவும் உரசிக் கொள்ளாமலே ஒலி நிகழ்கிறது - நீங்கள் மௌனமாக அமர்ந்தாலே, எல்லாவிதமான ஒலிகளும் நிகழும் - அப்படிப்பட்ட நூற்றியெட்டு வித்தியாசமான ஒலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்தக் கலாச்சாரத்தில் வெவ்வேறு தெய்வீகத் திருவுருவங்கள் வெவ்வேறு ஒலிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "ஷிவா" என்று கூறினால், அது "டமரு" - உடுக்கையுடன் தொடர்புடையது. இத்தகைய கலாச்சார வெளிப்பாடுகளில் பரிச்சயம் இல்லாதவர்களுக்காக இதை தெளிவுபடுத்துகிறோம். டமரு என்பது, இரு சமபக்க முக்கோணங்கள் முனையில் சந்திக்கும் வடிவத்தில் இருக்கும் ஒரு இசைக்கருவி.

நீங்கள் அனஹதாவை அடைந்தால் அல்லது உங்களது சக்திநிலையானது அனஹதாவில் ஆதிக்கம் செலுத்தினால், இதுவரை உங்களால் கேட்க முடியாமல் இருந்த ஒலிகளை நீங்கள் கேட்கத் துவங்குவீர்கள். ஒரு மணியோசை, மத்தளம் அல்லது புல்லாங்குழல் போன்ற காற்றினால் இசைக்கப்படும் கருவியின் ஓசை - இதைப்போன்ற விஷயங்கள் நிகழத் தொடங்கலாம். பறவைகள், விலங்குகள், பூமி மற்றும் காற்றுவெளியின் மொழியை நீங்கள் கேட்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ தொடங்குவீர்கள். இப்படிப்பட்ட ஒலிகளைக் கேட்பது அனஹதாவினால் வருகிறது.

யோக அறிவியலில், தந்த்ரா யோகம் என்று அழைக்கப்படுகின்ற யோகப் பரிமாணம் ஒன்று உள்ளது. தந்த்ராவின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், யோகிகள் தங்களுக்கு வேண்டிய திருவுருவங்களை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர்

மற்றபடி, காதுகளில் ஏதோ ஓசைகளை கேட்பது என்பது, மனதளவில் சமநிலையற்ற தன்மையின் அறிகுறியாகவே கருதப்படுகிறது என்பதுடன், அது உண்மையும்கூட. ஏதோ ஒரு நிலையில் மனதளவில் சமன்பாட்டை இழந்தவர்கள், வேறு ஏதோ ஒரு நிலையில் பகுத்து உணரக்கூடியவர்களாக மாறக்கூடும். ஒரு இடப்பிறழ்வு மற்றொரு வழியை அவர்களுக்கு திறந்துவிடுகிறது, ஆனால் இந்த விதமான வாய்ப்பு உங்களுக்கு நல்லதல்ல. இப்போதுதான் நடக்கத் தொடங்கிய ஒரு குழந்தையை மாரத்தான் ஓட்டத்திற்கு அனுப்புவதைப் போன்றது இது - நிச்சயமாக, குழந்தை தனக்குத்தானே சேதம் ஏற்படுத்திக் கொள்ளும். எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, நீங்கள் அதற்கான முன்னேற்பாட்டுடன் தயார்நிலையில் இல்லாமல் இருந்தால், அது தீமையாக மாறிவிடுகிறது.

இதனால்தான் அனஹதாவிலிருந்து எழும் எந்த ஒலியையும் நீங்கள் கேட்பதற்கு முன்பாக, உங்களுடைய பகுத்துணர்வு படிகம் போல் தெள்ளத்தெளிவாக இருக்கவேண்டும் என்பதுடன், உங்கள் உணர்ச்சியும் இனிமையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் இனிமையான உணர்ச்சி எப்போதும் நிலையாக இல்லையென்றால், உங்களால் செய்ய முடியாத பல விஷயங்கள் இருக்கிறது; அப்போது உண்மையிலேயே நீங்கள் குறைபாடு உள்ளவர்தான். உணர்ச்சியின் இனிமை இல்லையென்றால், நீங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதையும் உங்களுக்கே மறுத்துக்கொள்கிறீர்கள், இந்த பூமியின் மீதுள்ள அனைத்தும் உட்பட. எது எப்படி இருந்தாலும், நீங்கள் இனிமையானவராக, உங்கள் உணர்ச்சி மீது ஆளுமை செலுத்துவதில் கைதேர்ந்தவராக இருந்தால் மட்டுமே, வித்தியாசமான பரிசோதனைகளுக்குள் செல்ல முடியும் என்பதுடன், நலமாகவும் இருக்க முடியும். இல்லையென்றால், நீங்கள் அனஹதாவுக்குள் பிரவேசித்துவிட்டு உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றைப் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ, நீங்கள் திகிலடைய நேரிடலாம்.

இது எப்படியென்றால், திகில் திரைப்படம் என்று சொல்கிறார்களே, அதை பார்ப்பதைப் போன்றது. அப்படிப்பட்ட படங்களின் சில பகுதிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவை பார்க்க பரிதாபமாகத்தான் உள்ளன. அவைகள் என்னை திகிலூட்டுவதில்லை. உதாரணமாக, ஒரு காட்சியில் கண்களிலிருந்து திடீரென்று இரத்தம் வரும். உடலில் எப்போதும் இரத்தம் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிறிதளவு கசிந்தால், அதில் அவ்வளவு திகிலடைவதற்கு என்ன இருக்கிறது? எங்கிருந்து கசிகிறது என்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இது திகிலூட்டுவதாக நம்பப்படுவதன் காரணம், மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் அவர்களது உடலில் இரத்தம் பாய்ந்து கொண்டிருப்பதைக் குறித்த உணர்வில்லாமல் இருக்கின்றனர். அதைப்போலவே, ஏதுமறியாத மக்களுக்கு, அனஹதாவைத் தொடுவது என்பதும், திடீரென்று உள்ளிருந்து ஏதோ ஒன்று நிகழ்வதும், உருவங்கள் மேலெழுவதும் - முற்றிலும் அச்சமளிப்பதாக இருக்க முடியும்.

உக்கிரமான திருவுருவங்களும் அனஹதாவும்

யோக அறிவியலில், தந்த்ரா யோகம் என்று அழைக்கப்படுகின்ற யோகப் பரிமாணம் ஒன்று உள்ளது. தந்த்ராவின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், யோகிகள் தங்களுக்கு வேண்டிய திருவுருவங்களை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர் - ஒரு குறிப்பிட்ட சக்தி வடிவத்தை உருவாக்கி அதற்கு உயிரூட்டுகிறார்கள். அந்த வடிவம் - அவன் அல்லது அவள் அல்லது வேறென்னவாகவும் இருக்கிறது - எந்நேரமும் யோகியுடனேயே நிழலாக இணைந்திருக்கிறது. இதனால்தான் அவருக்குத் துணை தேவைப்படுவதில்லை என்பதோடு அவர் மணம் செய்துகொள்வதும் இல்லை, ஏனென்றால் அவருடன் எப்போதும் கூட்டாளி உண்டு. பொதுவாக, பயங்கரமான தன்மைகளுடன் உள்ள பெண் வடிவங்களை இந்த யோகிகள் உருவாக்கினர்.

ராகினி, தாகினி, சின்னமஸ்தான், காளி - இவை அனைத்தும் பயங்கரமான பெண்தன்மையின் உருவாக்கங்கள், இந்த உருவங்களை நீங்கள் புகைப்படமாகவோ, சித்திரமாகவோ பார்த்திருக்கலாம். இந்த விதமான உருவங்களை அவர்கள் ஏன் உருவாக்கினார்கள் என்றால், அவைகள் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று யோகிகள் விரும்பினர். தனக்கு அடுத்திருப்பவரின் உருவ அழகினாலோ அல்லது வேறெதற்காகவும், தான் ஈர்க்கப்பட முடியாதவாறான உருவை அவர்கள் உருவாக்க விரும்பினர். மற்றொரு காரணம், உங்களிடம் ஒரு களிமண் உருண்டையைக் கொடுத்து, "ஆதியோகியின் உருவம் ஒன்றைச் செய்யுங்கள்" என்று நாம் கூறினால், உங்களுக்கே தெரியும், உங்கள் கைவண்ணத்தில் அது எப்படி உருமாறியிருக்கும் என்று - இது விருப்பத்தினால் அல்ல; உங்கள் விரல்களின் திறன் இப்படி இருக்கிறது, அவ்வளவுதான்.

காரணம் எதுவாகிலும், அவர்கள் இந்தவிதமான வடிவங்களையே உருவாக்கினார்கள். இந்த வடிவங்களை உருவாக்கிய யோகிகள் வெகு காலத்திற்கு முன்பே சென்றுவிட்டனர். இந்தத் திருவுருவங்களை உருவாக்கிய நோக்கம் பூர்த்தியடைந்ததும் அவர்கள் அவற்றை சுதந்திரமாக விடுவித்து விட்டனர். இத்தகைய உருவங்களில் பலவும் இன்னமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதுடன், இன்னமும் அவைகளை உபயோகித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்கின்றனர். உங்களுடைய அனஹதாவை நீங்கள் அடைந்தால், இந்த உருவங்கள் தமக்கான அழைப்பு மணி ஒலித்துவிட்டதாக எண்ணி, உங்களிடம் வர நேர்கிறது. அவ்விதம் அவைகள் வந்தால், நீங்கள் அவற்றுடன் விளையாட மாட்டீர்கள் - வெருண்டு மிரண்டு அச்சம் கொள்வீர்கள், ஏனென்றால் அவர்கள் பார்ப்பதற்கு உங்களைப்போல் இருப்பதில்லை.

ஒருவேளை, யாரோ ஒருவருக்கு மூக்கு இருப்பதற்குப் பதிலாக அங்கே இரண்டு துவாரங்கள் மட்டும் இருந்தால் - அவரைப் பார்ப்பதிலேயே நீங்கள் நடுங்கிவிடுவீர்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருக்கும்போது, நீங்கள் அனஹதாவுக்குள் செல்லக்கூடாது, ஏனென்றால் அது வித்தியாசமான பல சூட்சும உருவங்களை ஈர்க்கும். அனஹதா படைப்பாற்றலைப் பெற்றுள்ளது; இந்த நிலையில்தான் ஒரு மனிதரால் படைக்கமுடியும். இந்தப் பரிமாணத்தை நீங்கள் அடைந்துவிட்டால், அப்படிப்பட்ட உருவங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். கலை, இசை மற்றுமுள்ள பல விஷயங்களும் உங்களிடம் வந்தடைவதற்கு முன்னால், படைப்பின் சூட்சும உருவங்கள் உங்களிடம் வரும், ஏனென்றால் அவைகள்தான் பிரபஞ்சத்தில் மிக மிக இலேசான உருவங்கள் - அவைகள் குறைந்தபட்ச மந்தத்தன்மை கொண்டவை. காளி உங்களிடம் வருவாள். சிலர் காளியைப் பார்க்கவேண்டும் என்று தங்களது வாழ்க்கை முழுவதும் தவம் கிடக்கின்றனர், ஆனால் அவள் உங்கள் தூக்கத்தில் வந்தாலே, நாளைக்கு உங்கள் படுக்கையை நாங்கள் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்! பலபேருக்கு இது நிகழ்ந்துள்ளது, தங்களை மிகச் சரியானவர்கள் என்றும், வித்தியாசமான விஷயங்களை ஆய்ந்துணரப் போதிய தைரியம் கொண்டவர்கள் என்றும் நினைத்த மனிதர்கள் பலரும், மிகச் சிறிய அளவில் ஏதோ ஒன்று நிகழ்ந்தாலே, தங்களை தொலைத்துவிடுகிறார்கள். அவ்வளவுதான் அவர்கள் வாழ்க்கை.

நீங்கள் அனஹதாவில் இருந்து கிளம்பினால், இயல்பாகவே நீங்கள் விஷுக்தியை அடைவீர்கள். விஷுக்தி, மந்திர தந்திர மறைபொருள் ஆற்றலின் மையமாக இருக்கிறது. இந்தவிதமான மறைபொருளில் நீங்கள் வல்லமை பெற விரும்பினால், முதலில் உங்களைப்போலத் தோற்றமளிக்காத மற்றவிதமான உயிரினங்களுடன் நீங்கள் சமாதானமாகப் போகவேண்டும். உங்களைப்போலத் தோற்றமளிக்காத எவர் ஒருவரும் உங்களுக்கு வினோதமாக, அமானுஷ்யமாகத் தோன்றும். காளி, சின்னமஸ்தான், தாகினி, லங்கிணி போன்றவர்கள் வரத் துவங்குவார்கள். அது அற்புதமான ஒரு வாய்ப்பு, ஆனால் அதற்குத் தேவைப்படும் இனிமையான உணர்ச்சி மற்றும் பகுத்துணர்வின் கூர்மையை உங்களுக்குள் நல்லபடியாக வைத்திருக்கவில்லை என்றால், உங்கள் மனம் உடைந்து போகக்கூடிய அளவுக்கு, இது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கமுடியும்.

காலத்தின் இடர்ப்பாடு

அமானுஷ்யமான ஏதோ ஒன்று தினமும் அவர்களது கனவில் - நிதர்சனத்தில்கூட இல்லை - கனவில் தோன்றினாலே, பெரும்பாலான மக்கள் தங்கள் மனதை தொலைத்துவிடுவார்கள். ஏனென்றால் எப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு மனம் என்று பெரிதாக எதுவும் இல்லை. நான் இதைக் கேலி செய்வதற்காகக் கூறவில்லை. குறிப்பாக நவீனக் கல்வி முறைகள், மனித குலத்திற்கு மாபெரும் சீரழிவைச் செய்துள்ளன. மனித மனங்களின் திறனைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அவை மனப்பாடம் செய்யும் திறனை மட்டும் வேலை வாங்குகின்றன. நமது பொருளாதாரம் எனும் எந்திரத்தின் ஏதோ ஒரு இடத்தில் பொருந்தக்கூடிய ஒரு பாகத்தை உற்பத்தி செய்வதில்தான் நவீனக் கல்வி முறைகள் கவனம் செலுத்துகிறதே தவிர, மகத்தான மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் அவை ஈடுபடவில்லை. மகத்தான மனிதர்கள் மீது சமூகத்திற்கு ஆர்வமில்லை, ஏனென்றால் அவர்கள் சமூகத்தின் கற்பிதங்களை பின்பற்றாமல் போகலாம். அவர்கள் சமூகத்தின் சூழலுக்குள் பொருந்தாமலும் போகலாம். மகத்துவமான தன்மையின் அறிகுறியை வெளிப்படுத்திய பெரும்பாலானவர்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டதுதான், கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. ஏனென்றால், சாதாரணமான தன்மையை வெளிப்படுத்துபவர்கள் இருப்பதே சமூகத்திற்கு பாதுகாப்பானது, மகத்துவமான தன்மையானது, விஷயங்களை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடலாம்.

உணர்ச்சியின் இனிமை மற்றும் கூர்மையான காரண அறிவு - இந்த இரண்டையும் ஒருசேரக் கையாளும் அளவிற்கு மனித மனமானது இப்போது விசாலமாக மேம்படுத்தப் படுவதில்லை. பொதுவாக, ஓரளவுக்குக் கூர்மையான மனம் கொண்ட மனிதர்கள், தங்களுக்குள் கசந்துபோன உணர்ச்சி நிலையில் இருக்கிறார்கள். கூர்மையான மனமும், இனிமையான உணர்ச்சியும் ஒருங்கே உள்ளவர்கள் என ஒரு சிலரைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள். கூர்மையான மனம் இருந்தால், அதை கொண்டு பிறரை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். உணர்ச்சியில் இனிமை நிறைந்தவர்கள் முட்டாள்களாகக் கருதப்படுகின்றனர். இதுதான் உலக வழக்கம் என்றே சொல்லிவிடலாம்: நீங்கள் காரண அறிவில் கூர்மையானவராக இருந்தால், உணர்ச்சி நிலையில் இனிமையாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் உணர்ச்சி நிலையில் இனிமையானவர் என்றால், நீங்கள் ஒரு முட்டாளாகக் கருதப்படுகிறீர்கள். உலகத்தில் இந்தவிதமான ஒரு வகைப்படுத்துதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இது ஒரு நல்ல விஷயமே அல்ல. அனஹதா ஒரு அற்புதமான இடம். ஆனால், இன்றைய உலகில் மக்கள் தங்கள் மனதைக் கூர்மை படுத்திக்கொண்டு, தங்கள் உணர்ச்சியையும் இனிமையாக மாற்றிக்கொள்வது என்பது முயற்சிக்க வேண்டியதாகவே இருப்பதை காண்கிறோம்.

அனஹதா சாதனாவுக்கு சமநிலை தேவைப்படுகிறது

சில குறிப்பிட்ட மரபுகளில், அனஹதா செயல்படத் துவங்குவது என்பது உங்களுடைய இரண்டு பரிமாணங்களின் சந்திப்பாகக் கருதப்படுகிறது. இயல்பாகவே, அதிகம் தந்த்ரவயப்பட்ட மற்ற மரபுகள், அனஹதாவில் ஒரு மனிதர் அவரது தெய்வீக சக்தியைச் சந்திப்பதாகப் பார்க்கின்றன. அனஹதா மிகப் பிரம்மாண்டமான ஒரு இடம், ஆனால் நீங்கள் அதற்கான தயார்நிலையில் இல்லையென்றால், அது மிகப் பயங்கரமாக மாற முடியும். பிரபஞ்சத்தின் மையம் ஒரு பிரம்மாண்டமான இடமாகத்தான் இருக்கமுடியும், ஆனால் அந்த இடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் அங்கே செல்ல விரும்பினால் உங்களுடைய அனைத்து அம்சங்களும் அதற்கான தயார்நிலையில் இருக்கத் தேவைப்படுகிறது.