மஹாபாரதம் அனைத்து பகுதிகளும்

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, ஒரு மனிதர் வெற்றிகரமாக திகழ, திறமை, புத்திசாலித்தனம், அருள் மற்றும் அதிர்ஷ்டம் என நான்கு அம்சங்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதிர்ஷ்டம் என்பது அருளின் விளைவு தானே? புத்திசாலித்தனமும் அறிவும் ஒன்றுதானா?

பாண்டவர்களின் அருளுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் யார் பிரதிநிதி?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார், திரௌபதி அதிர்ஷ்டத்தின் உருவமாக இருக்கிறாள். மஹாபாரதத்தில் ஒரு அழகான உதாரணம் இருக்கிறது: திரௌபதியின் தகப்பனாரான துருபதன், கிருஷ்ணர் திரௌபதியை மனைவியாக மணமுடிக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால், ஒரு வழியில், கிருஷ்ணர் திரௌபதியை பாண்டவர்களுக்கு வழங்குகிறார். கிருஷ்ணரே இந்த அதிஅற்புத அழகான பெண்ணை திருமணம் செய்திருக்கலாம், அது அவரை இன்னும் பலமான அரசராக மாற்றியிருக்கும். பாஞ்சால தேசமும் துவாரகையும் இணைந்தால் அது மிகுந்த பலமான ராஜ்ஜியமாகி இருக்கும். ஆனால் அவர் வேறுவிதமாக முடிவெடுக்கிறார். எனவே கிருஷ்ணர் திரௌபதியை பாண்டவர்களுக்கு வழங்கும்போது, அது அவரது அருளும் அவர்களது அதிர்ஷ்டமும் ஆகிறது.

கர்மா என்பது நீங்கள் நினைக்கும் விதத்தில் இல்லை

அருளின் நிழலில் இருக்கும்போது, நீங்கள் அலட்சியமாக நடக்கமாட்டீர்கள். வாழ்க்கையில் அலட்சியமாக நடந்தால், நீங்கள் பேரழிவை நோக்கி செல்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் ஏதோ ஒன்றின் மீது காலை வைத்து துன்பத்தை ஏற்படுத்துவீர்கள். வேறு யாரோ ஒருவருக்கு துன்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் நீங்கள் பலனடைய முடியும் என்று நம்பினால், அது குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ளவும், உங்களால் தாங்கவும் முடியாத வழிகளில் நீங்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். யாராலும் இதிலிருந்து தப்ப முடியாது. கர்மா என்பது குற்றமும் தண்டனையும் என்பது போன்ற ஒரு கருத்து அல்ல, அதாவது நீங்கள் ஒரு குற்றம் செய்தால் வேறு யாரோ ஒருவர் வந்து தண்டனை கொடுப்பார்கள் என்பது போலல்ல. கர்மா என்பது நீங்கள் செய்த செயலிற்கான விளைவு. நீங்கள் ஒரு கல்லை மேலே வீசி எறிந்தால், புவிஈர்ப்புவிசை உங்களை ஒரு கல்லால் அடிக்க முயற்சிப்பதில்லை - நீங்கள் மேலே எறிந்த அதே கல்லே திரும்ப வந்து உங்கள் தலையில் விழுகிறது. அதுதான் கர்மா.

கர்மா என்பது குற்றமும் தண்டனையும் என்பது போன்ற ஒரு கருத்து அல்ல, அதாவது நீங்கள் ஒரு குற்றம் செய்தால் வேறு யாரோ ஒருவர் வந்து தண்டனை கொடுப்பார்கள் என்பது போலல்ல. கர்மா என்பது நீங்கள் செய்த செயலிற்கான விளைவு.

மக்கள் எப்போதுமே, "நான் இந்த கர்மாவை செய்தால், யாரோ என்னை தண்டிப்பார்கள்" என்று நினைக்கிறார்கள். வேறு யாரும் உங்களை தண்டிக்கத் தேவையில்லை - இதுதான் அதன் அழகு. உங்கள் செயல்களுக்கான விளைவைப் பற்றி அறியாமல் நீங்கள் வாழ்ந்தால் - இது புத்திசாலித்தனம் குறைவாகவும் அறிவு அதீதமாகவும் இருப்பதால் வருகிறது - உங்கள் வளர்ச்சி இந்த படைத்தலுடன் ஒரே சீராக, சுமூகமாக இருக்காது. அதுபோன்ற வளர்ச்சி அபாயகரமானது; நீங்கள் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக, மொத்த உலகமும் இந்த வழியில் செல்லவே முயல்கிறது.

ஆனால் நீங்கள் அருளின் நிழலில் இருந்தால், நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நாம் உங்களுக்கு கற்பிக்க வேண்டியதில்லை. எந்த பாசாங்கும் செய்யத் தேவையில்லை - நீங்கள் ஒரு குறிப்பிட்ட மென்மையோடு நடப்பீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் ஒரு குறிப்பிட்ட அக்கறை இருக்கும். அதோடு, உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் பொருந்தி, கூடி, கனிந்து வரும் வரை காத்திருக்கும் இயல்பான புத்திசாலித்தனம் உங்களுக்குள் இருக்கும்; நீங்கள் அதை கட்டாயப்படுத்த மாட்டீர்கள். அதிர்ஷ்டம் இயற்கையாக நிகழும்.

அறிவு ஏன் புத்திசாலித்தனம் இல்லை

அருளும் அதிர்ஷ்டமும் தனித்தனியானவையா? அப்படி இல்லை. உண்மையில் மூன்றுமே, புத்திசாலித்தனம் உட்பட, வெவ்வேறானவை அல்ல. உங்களிடம் புத்திசாலித்தனம் இல்லையென்றால் அருள் உங்கள் வழிக்கு வராது. அருளுக்கு அறிவு தேவையில்லை; அதற்கு முனைவர் பட்டம் தேவையில்லை, ஆனால் புத்திசாலித்தனம் தேவை. புத்திசாலித்தனம் என்றால் நீங்கள் படைத்தலோடு ஒத்திசைவாக இருப்பது. இதுவரை பள்ளிக்கே செல்லாமல் நிலத்தை உழுது கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்தனங்களை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர் உங்களை விடவும் மிக புத்திசாலியாக இருக்க முடியும், ஏனென்றால் அவர் இந்த படைத்தலோடு ஒத்திசைவாக இருக்கிறார். உதாரணமாக, நாளை ஒரு பெருவெள்ளம் வந்து உங்களுடைய கட்டிடங்களும் சௌகர்யங்களும் காணாமல் போய்விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு சூழ்நிலையில், படிப்பறிவற்ற விவசாயி உங்களைவிட மிக சிறப்பாகவே பிழைத்துக்கொள்வார். உங்களிடம் இருக்கும் எல்லாவிதமான கருவிகளையும் வைத்துக்கொண்டு அவரை ஒரு முட்டாள் போல தோற்றமளிக்க செய்வீர்கள். ஆனால் உங்கள் இருவரையும் ஒரு காட்டுக்குள் விட்டுவிட்டால், அவர் பிழைத்துக்கொள்வார்; நீங்கள் பீதியடைந்து பட்டினியால் இறப்பீர்கள்.

புத்திசாலித்தனம் என்பது ஏதோவொன்றை கற்பனை செய்துகொள்வதல்ல - புத்திசாலித்தனம் என்றால் நுகத்தடியில் பூட்டப்பட்ட எருது போல உங்களை நீங்களே ஒரு கட்டுக்குள் வைத்துக்கொண்டு இந்த படைத்தலுடன் ஒத்திசைவாக இருப்பது. தியானம் என்றாலும் இதுதான் அர்த்தம்; யோகா என்றாலும் இதுவே அர்த்தம்.

புத்திசாலித்தனம் என்பது ஏதோவொன்றை கற்பனை செய்துகொள்வதல்ல - புத்திசாலித்தனம் என்றால் நுகத்தடியில் பூட்டப்பட்ட எருது போல உங்களை நீங்களே ஒரு கட்டுக்குள் வைத்துக்கொண்டு இந்த படைத்தலுடன் ஒத்திசைவாக இருப்பது. தியானம் என்றாலும் இதுதான் அர்த்தம்; யோகா என்றாலும் இதுவே அர்த்தம். யோகா என்றால், உங்கள் செயல் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக இருக்கும் விதத்தில் இந்த படைத்தலுடன் உங்களை மிகச்சரியாக பொருந்தி பூட்டிக்கொள்வது. இது உங்கள் அறிவை பயன்படுத்தி செயல்படுவதல்ல, கூர்மையான புத்திசாலித்தனத்தில் செயலாற்றுவது. அந்த புத்திசாலித்தனம் உங்களுடையதல்ல - அது இந்த படைத்தல் மற்றும் படைத்தவனுடைய புத்திசாலித்தனம்.

தொடரும்...

மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.