மஹாபாரதம் பகுதி 65: நான் எல்லாவற்றையும் மறக்கவும் மன்னிக்கவும் பழகிக்கொள்ள வேண்டுமா?
முன்பொரு சமயம் பாண்டவ சகோதரர்கள் நால்வரும் கானகத்தில் விஷமுற்ற குளத்தில் நீரருந்தி ஒருவர் பின் ஒருவராக உயிரிக்கிறார்கள். குளத்திற்கு காவலாக இருந்த ஒரு யட்சன் தனது கேள்விகளுக்கு பதிலளித்தால் யுதிஷ்டிரன் உயிர் தப்புவதோடு சகோதரர்களையும் மீட்கலாம் என்று சவால் விடுகிறான். சவாலை ஏற்ற யுதிஷ்டிரன் மன்னிக்கும் குணம் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் குறித்து சத்குருவிடம் விளக்கம் கேட்கிறார் ஒரு பங்கேற்பாளர். நல்லொழுக்கம் என்று போதனையோ தத்துவமோ பேசி சமாளிக்காமல், உண்மையில் மன்னிப்பது என்றால் என்ன என்பதை யதார்த்தமாக எடுத்துரைக்கிறார் சத்குரு.

கேள்வியாளர்: யுதிஷ்டிரன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பாண்டவ சகோதரர்கள் மீண்டும் உயிர் பெறவும் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மன்னிப்பது என்றால் என்ன என்பதற்கு, பகைமையை சகித்துக்கொள்வது என்று பதிலளிக்கிறான். ஆனால் ஒருவர் தொடர்ந்து உங்களுக்கு தவறிழைத்துக் கொண்டேயிருந்தால் நீங்கள் அவரை எப்படி மன்னிக்க முடியும்?
யட்சன்: உண்மையான மன்னிக்கும் குணம் என்பது?
யுதிஷ்டிரன்: யாரொருவரால் பகைமையை சகித்துக்கொள்ள முடிகிறதோ, அவர் உண்மையாக மன்னிப்பார்.
Subscribe
மன்னிப்பது என்றால் என்ன என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொருத்து இருக்கிறது. மன்னிப்பது என்றால் மறந்துவிடுவது என்று அர்த்தமல்ல. உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் இனிப்பான மற்றும் மிகவும் கசப்பான கணங்களை நீங்கள் எப்போதும் மறந்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். மன்னிப்பது என்றால் உங்களுக்குள் எந்த கசப்பையும் சுமக்காதிருப்பது, ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையை அழிக்கிறது. உங்களுக்கு அல்லது இன்னொருவருக்கு தீங்கிழைப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை நீங்கள் செய்ய வேண்டும். நான் இப்படி சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலைகள் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது, எப்படியும் நீங்கள் அதை செய்துவிடுவீர்கள். திடீரென்று யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் குழந்தைகளையும் மனைவியும் கத்தியால் வெட்டத் துவங்கினால், உங்கள் கையில் அகப்படுவதை கொண்டு அவரை தாக்குவீர்களா இல்லையா?
செயல் என்பது சூழ்நிலையைப் பொருத்து இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் என்று முன்னதாகவே முன்முடிவு எடுக்காதீர்கள். அப்படி செய்யும்போது இன்னொரு மனிதருக்கு தேவையான வாய்ப்பை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் இன்று ஏதோ ஒன்றை செய்தால் அதை நாம் ஒருவிதமாக கையாள்வோம், இன்னொருவர் நாளை அதே செயலை செய்தால் அப்போது அதை வேறுவிதமாக கையாள முடியும். வேறொருவர் நாளை மறுநாள் அதே செயலை செய்தால், அதை நாம் முற்றிலும் வித்தியாசமான முறையில் கையாளக் கூடும். அது சூழ்நிலையைப் பொறுத்து இருக்கிறது.
மன்னிப்பது என்றால் ஆத்திரமடைந்து நீங்கள் செயலில் இறங்கமாட்டீர்கள் - சூழ்நிலைக்கு என்ன தேவைப்படுகிறது என்று பார்த்து அதை செய்வீர்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், பகைமை என்ற ஒன்றே உங்கள் நெஞ்சில் இல்லாமல், என்ன தேவையாக இருந்தாலும் அதை செய்வீர்கள் - இதனால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை; எதையும் அடையப் போவதுமில்லை. என்ன தேவையோ அதை செய்கிறீர்கள் - மஹாபாரதத்தின் சாரம் இதுதான்; கிருஷ்ணரின் வழியும் இதுவே. மன்னிப்பது என்றால் நீங்கள் செய்ய வேண்டியதையே செய்யாமல் தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அப்படியென்றால் உங்களுக்கு என்ன நடந்தது என்பதையே மறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். மறப்பது என்றால் உங்களுக்கு ஞாபகத்திறன் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம் - அது நற்பண்பு அல்ல. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கசப்பான கணமும் உங்கள் ஞாபகத்தில் இருக்கிறது, ஆனால் துளியளவு கசப்பையும் நீங்கள் நெஞ்சில் சுமக்கவில்லை - உண்மையிலேயே மன்னிப்பது என்பது இதுதான்.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.