உலகத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 5 இடங்கள்
உலகில் பார்க்க வேண்டிய முக்கியமான 5 இடங்களின் ஆன்மீக முக்கியத்துவத்தை சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

இறப்பதற்கு ஒரு கோவிலா? – அசர்பைஜான்

அசர்பைஜான் என்றால் நெருப்பின் நிலம் என்று அர்த்தம். அங்கு பல இடங்களில் பூமியின் அடியிலிருந்து இயற்கை எரிவாயு தானாகவே கசிந்து வெளிவருவதால், அவ்விடங்கள் எப்போதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நெருப்பு அணையாமல் எரிந்து வருகிறது. இயற்கையாக எரியும் இந்த நெருப்பை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த இந்து கோவில் 8500 வருடப் பழமையான ஒன்றாகும். இதை பலமுறை மீண்டும் கட்டியிருந்தாலும், முதலில் கட்டிய கோவில் 8500 வருடங்கள் பழமையானது.
அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவிற்கு (Baku) சற்றுத் தொலைவில் அமைந்துள்ள இந்த நெருப்புக் கோவிலில் (Fire Temple) நாம் இப்போது இருக்கிறோம். இந்த நெருப்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக எரிந்துகொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இப்போதைய இந்தியா ஆகியவை ஒன்றாக ஹிந்துஸ்தான் என்று இருந்தபோது, பண்டைய இந்துக்களுக்கு இது புனிதமான இடமாக இருந்தது. மத்திய ஆசியாவின் காசியைப் போல, மக்கள் பல இடங்களிலிருந்து வந்து சென்ற இடமாக இது இருந்தது. வாழ்வதற்காக இங்கு வந்தாலும், இறப்பதற்கும் மக்கள் இங்கு வந்தார்கள். ஏனென்றால், இந்த கலாச்சாரத்தில் நன்றாக வாழ்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நல்ல முறையில் இறப்பதும் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது.
இதுபோன்ற புனிதமான இடங்களுக்கு வந்து இறப்பதற்கான காரணம், மரணம் நல்ல முறையில் நடப்பதற்குத்தான். இன்றும் லட்சக்கணக்கான மக்கள் காசிக்கு இறப்பதற்காகப் போவது போல, இதுவும் அதற்கான ஒரு இடமாக இருந்தது. இந்த கலாச்சாரம் இப்போது குறைந்து போயிருந்தாலும், இன்றும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் நெருப்புக் கோவிலைப் பார்க்க வருகிறார்கள்.
பூமியின் தொப்புள் / நாபி – டெல்ஃபி

Subscribe
சுமார் 4200 வருடங்களுக்கு முன், இந்தியாவிலிருந்து சில யோகிகள் கிரீஸ் நாட்டிற்குச் சென்று குறிப்பிட்ட சில லிங்கங்களை நிறுவினர். இதுதான் பூமியின் தொப்புள் என்று அறியப்பட்டது. இந்த புகைப்படத்தை நான் 15 ஆண்டுகளுக்கு முன் எங்கேயோ பார்த்தேன். உடனே இது மணிப்பூரகச் சக்கரம் என்று எனக்குப் புரிந்துவிட்டது. "இதை யார் உருவாக்கினார்கள்? இது எங்கு இருக்கிறது?" என்று கேட்டதற்கு, “இது டெல்ஃபியில் இருக்கிறது” என்று சொன்னார்கள். அப்போது முதல் அங்கு போக வேண்டும் என்று விரும்பினேன். இங்கு வருவதற்கு 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. லிங்கங்கள் இருக்கும் இன்னும் பல இடங்களுக்குப் போயிருந்தோம்: 4200 - 4300 வருடப் பழமையான லிங்கங்கள். இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவற்றை அதன் இடத்திலிருந்து எடுத்து மியூசியங்களில் வைத்திருக்கின்றனர். ஆனால், அவை இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவற்றை அழிக்க முடியாது. அவற்றின் அழகே அதுதான். மிகவும் சக்திவாய்ந்த ஏதோ ஒன்று இங்கு இருந்திருக்கிறது. அந்த சக்தியின் தாக்கம் இன்றும் இந்த பூமியில் இருக்கிறது.
அவற்றில் ஒன்று 'தொப்புள்' (மணிபூரகம்) சக்கரம். மற்ற இரண்டும் துணைச் சக்கரங்களான மூலாதாரம் மற்றும் ஸ்வாதிஷ்டானம். இதை மிக அழகாக உருவாக்கியுள்ளனர். நாம் பைரவியை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம், ஆனால் ஒரே வடிவத்தில். இங்கே அதைக் கோவிலைப் போல உருவாக்கியுள்ளனர். இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், தென்னிந்தியாவில் இதே போன்ற சக்கரங்களை உருவாக்கும் கோவில்கள் இருக்கின்றன. மூன்று அல்லது ஏழு சக்கரங்களை ஒரே வடிவத்திற்குள் உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். ஆனால், இதுபோல தனித்தனியாக உருவாக்குவது மிகவும் எளிதானது.
கிராண்ட் கேன்யான் (Grand Canyon)

நாம் கிராண்ட் கேன்யானில் இருக்கிறோம். பல மில்லியன் வருடங்களாக உருவான இந்த பள்ளத்தாக்கு, இந்த இடத்தின் புவியியல் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஆய்வாளர்களின் கணிப்பின்படி, அந்த வரலாறு சுமார் 1.8 பில்லியன் வருடப் பழமையானது. இது அடிப்படையில் கொலராடோ ஆறு, பூமிக்குள் கிட்டத்தட்ட ஒரு மைல் ஆழம் வரை செதுக்கிச் சென்றதன் விளைவாக உருவானது.
ஆனால், ஒரு மில்லியன் வருடங்களாக பூமி எப்படிப்பட்ட மாற்றங்களைப் பார்த்திருக்கிறது என்பதற்கு உயிரோட்டமான சான்று இதோ இங்கு இருக்கிறது. இது அசாதாரணமான ஒன்று... கற்பனைக்கு எட்டாத ஒன்று! கிராண்ட் கேன்யான்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க முடியுமோ, அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. முதலில், என்னை ஈர்த்தது அந்த பாறைகள்தான் என்று நினைத்தேன். ஆனால், உண்மையில் என்னைத் தொட்டது இந்த இடம் முழுவதும்தான். அது மனிதர்களின் உயிர்த்தன்மையை மிகவும் நுணுக்கமாக உணர்கிறது. நாம் என்ன செய்கிறோம் என்பதையும் ஒரு வகையில் புரிந்துகொள்வது போலத் தெரிகிறது. இது உண்மையிலேயே அபாரமானது. இயற்கையின் சக்தி!
இந்த பரிமாணத்தை உணரும் திறன் கொண்ட அந்த பூர்வகுடியினர், “ஏதோ சக்தி எங்கள் மீது செயல்படுகிறது” என்று சொல்வது ஒரு வகையில் முற்றிலும் தவறல்ல. அவர்கள் இந்த பூமியின் உயிர்த்தன்மை பற்றித்தான் சொல்கிறார்கள். ஏதோ பேய்களின் செயல்கள் என்ற பொருளில் அல்ல. ஆனால், இங்கு அசாத்தியமான சக்தி ஓட்டம் இருக்கிறது. இயற்கையாகவே குறிப்பிட்ட அளவு சக்தி கொண்ட பல இடங்களும், இயற்கை அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், இங்கு மிகவும் முக்கியமான அம்சம், மனிதர்களின் உயிர்த்தன்மைக்கு இது பதிலளிக்கும் விதம்தான். இதை நம்பவே முடியவில்லை!
மேட்டோ டிபிலா (Mato Tipila)

வையோமிங்கின் புல்வெளியைக் கடந்து பயணித்தபோது, என் அனுபவத்தில் மிகவும் தனித்துவமாக இருந்தது மேட்டோ டிபிலாதான். மேட்டோ டிபிலா, விஷுத்தியின் ஒரு அசாதாரணமான வெளிப்பாடு. இது வெறும் விசித்திரமானது மட்டுமல்ல, இப்படி ஒன்று உருவானதே நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. அது எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அங்கு விஷுத்தியின் ஆற்றல் மிக வலிமையாக இருப்பதை உணர முடிகிறது. கைலாயம் தவிர, அதுபோன்ற எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை. தியானலிங்கம் இருக்கிறது. ஆனால், அதன் தன்மை வேறுபட்டது – அது மிகவும் சூட்சுமமானது. விஷுத்தியை இவ்வளவு வலிமையாக வெளிப்படுத்தும் இயற்கையான அமைப்பை நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை.
மேட்டோ டிபிலா, உங்கள் தொண்டைக்குழியில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரே ஒரு பரிமாணத்தில் மட்டுமே வெளிப்படுகிறது. அங்குள்ள பாறைகளில் பெரும்பாலானவை ஆறு முகங்களைக் கொண்ட வடிவத்தை எடுத்திருப்பது உண்மையிலேயே அபாரமானது. இது விஷுத்தியின் வெளிப்பாடுதான். இன்றும் அது அங்கு கம்பீரமாக நிற்கிறது, சிவபெருமானின் கழுத்தைப் போல. பார்ப்பதற்கு, தலையில்லாத ஒரு சிவனைப் போலவே அது தோற்றமளிக்கிறது.
வாழ்வின் இந்த பரிமாணம் மிக மிக அரிதான ஒன்று. உலகில் பல இடங்கள், வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைத் தூண்டிவிடுகின்றன. ஆனால் தொண்டை மையமான விஷுத்தி இவ்வளவு சக்திவாய்ந்ததாக வெளிப்படும் இடங்கள், ஒட்டுமொத்த உலகத்திலும் இரண்டு அல்லது மூன்று இடங்கள்தான் இருக்கக்கூடும். அந்த பரிமாணத்துடன் அது எதிரொலிக்கும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இயற்கையே அதை நிகழ்த்தியுள்ளது. இதுபோன்ற சக்தி அதிர்வுகளை உருவாக்க இந்தியாவில், நாமே பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், நாம் உருவாக்குபவை அளவில் சிறியவை. இங்கே, அது பிரம்மாண்டமான வடிவில் நிற்கிறது.
இப்படிப்பட்ட சக்திவாய்ந்த பரிமாணத்துடன் இணைவதற்கு, ஒருவர் அதன் அருகில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உலகின் எந்த இடத்திலிருந்தும், இந்த பரிமாணத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மானசரோவர்

இந்த ஏரியில் மிகப்பெரிய அளவில் செயல்கள் நிகழ்கின்றன. ஆனால், அந்த செயல்களின் தன்மைக்கும், இந்த பூமியில் நாம் 'உயிர்' என்று சொல்லும் தன்மைக்கும் சம்பந்தம் இல்லை. இது முற்றிலும் வேறுபட்டது. அதுவும் உயிர்தான். ஆனால், நாம் இதுவரை தெரிந்து வைத்திருப்பது போல அந்த உயிர்கள் இல்லை.
மானசரோவர் என்ற இடத்தை நான் ஒரு ஆன்மீகத் தலம் என்று சொல்ல மாட்டேன். ஆன்மீகம் என்பது மனிதர்கள் மனதிலிருந்து வந்த ஒன்று. அங்கே இருப்பவற்றை 'உயிர்கள்' என்று சொல்லலாமா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. அவற்றை உயிர்கள் என்று அழைப்பதா, பொருட்கள் என்று அழைப்பதா, உயிரினங்கள் என்று அழைப்பதா, அல்லது வேறு ஏதாவது என்று அழைப்பதா — எனக்குத் தெரியவில்லை. நமது அனுபவ எல்லைக்குள் வராத ஒன்றையோ, நிகழ்வுகளையோ குறிப்பிடுவதற்கு நம்மிடம் சொற்களே இல்லை. அவை, நாம் 'உயிர்' என்று அறிந்திருக்கும் எதற்கும் உட்பட்டவை அல்ல.
அதனால், இதை உண்மையில் ஒரு ஆன்மீகத் தலம் என்று சொல்ல முடியாது. ஆனால், எங்கிருந்தோ வந்த உயிர்கள், ஏதோ ஒரு காரணத்தால் இந்த இடத்தை விமான நிலையத்தைப் போலத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. அவை இடைவிடாமல் வந்து இறங்குகின்றன... மீண்டும் புறப்படுகின்றன... வந்து இறங்குகின்றன... புறப்படுகின்றன... அதுவும் நம்ப முடியாத வேகத்தில். இதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இதற்கு எந்த தர்க்கரீதியான விளக்கமும் இல்லை. இந்த பூமிக்குச் சொந்தமில்லாத உயிர்கள், ஏன் பல மில்லியன் வருடங்களாக இந்த பூமியில் உள்ள ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தையே பயன்படுத்துகின்றன? ஏன்? அதுவும் ஏன் இதே இடம்? ஏன் இவ்வளவு நீண்ட காலமாக?
மானசரோவரில் நிகழ்வதைப் பார்க்கும்போது, ஒரு ஊகமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த சக்திகளோ அல்லது இந்த உயிர்களோ மனிதர்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இது ஒரு கோட்பாடு. இன்னொரு கோட்பாடு என்னவென்றால், அவர்கள்... எதிர்கால மனிதனை உருவாக்கும் முயற்சியில் இருக்கக்கூடும்.
அல்லது, இந்த பூமியில் நிகழும் வாழ்க்கையில் பங்கேற்பதற்காக, தங்களுக்கென ஒரு மனித உடலை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சி செய்யும் ஒர்க் ஷாப்பாக (Workshop) இது இருக்கக்கூடும். கைலாஷ் ஏன் எப்போதும் பல மகத்தான மனிதர்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது என்றால், அவர்கள் தாங்கள் செய்த ஆன்மீகச் செயல்களை கைலாயத்தில் சேமித்து வைத்துப் பாதுகாக்கத் தேர்ந்தெடுத்தனர். சிவபெருமான் தொடங்கி, முதல் தீர்த்தங்கரர், மேலும் மகத்தான புத்த ஆசான்களில் இருவர் வரை, இவர்கள் அனைவரும் தங்கள் பணியை நிலைநிறுத்திப் பாதுகாப்பதற்கான இடமாக கைலாய மலையையே தேர்ந்தெடுத்தனர்.
தங்கள் செயல்களைப் பாதுகாத்து வைப்பது என்று நான் சொல்லும்போது, இதன் பொருள் என்னவென்றால், இந்த பூமியில் ஆயிரமாயிரம் வருடங்களாக வாழ்ந்த பெரும்பாலான ஞானிகளுக்கு, தாங்கள் செய்த செயல்களில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம்கூட அவர்களைச் சுற்றியிருக்கும் மக்களுடன் பகிந்துகொள்ள முடிந்தாலே அது மிகப்பெரிய அதிர்ஷ்டம். பெரும்பாலானவர்களுக்கு அதற்குக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் செய்த செயல்களை எப்போதுமே மனிதர்கள் அடிக்கடி வராத ஒரு இடத்தில் பதித்து வைக்கத் தேர்ந்தெடுத்தனர். அதேநேரத்தில், உண்மையாகவே தேடிச் செல்ல விரும்புபவர்களுக்கு அது அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், கைலாஷ் அப்படிப்பட்ட ஒரு இடம். அது முற்றிலும் அணுக முடியாத இடம் அல்ல. ஆனால், பலரின் முயற்சியைக் கைவிடச் செய்யும் அளவுக்குக் கடினமானது. இப்படிப்பட்ட இடங்கள் உலகில் பல உள்ளன. ஆனால், கைலாஷில் பதிக்கப்பட்டுள்ள ஆன்மீகச் செயல்களின் அளவும், அதன் வகைகளும் ஒப்பிட முடியாதவை. அந்த வகையில், கைலாஷ் தனித்துவமான இடமாக விளங்குகிறது.


