பகவத் கீதை கற்றுக் கொடுக்கும் விலைமதிப்பற்ற பாடம்
பலனை எதிர்பார்க்காமல், செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதே கீதை உணர்த்தும் பாடம் என்கிறார் சத்குரு. இலக்கின் மீது மட்டுமே கவனத்தை வைப்பது, தற்போது செய்யும் செயலின் திறனைக் குறைத்துவிடும். அதனால், இலக்கை நோக்கிய கற்பனைகளைத் தவிர்த்து, நிகழ்கால செயலில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுங்கள். பகவத் கீதையின் சுவாரஸ்யமான மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ள, கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்!

கேள்வியாளர்:
பகவத் கீதையில், பலனை எதிர்பார்க்காமல் தொடர்ந்து கடமையைச் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். ஆனால், நடைமுறையில் பலன்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து உழைப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. பலன்களின் மீது பற்று வைக்காமல் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
சத்குரு:நான் எந்த வகையிலும், எந்தவொரு புனித நூலையும் ஆழமாக படித்தது இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நான் இன்னும் பகவத் கீதையைக்கூட வாசித்தது இல்லை. ஆனால், நமக்கு கிருஷ்ணரின் வாழ்க்கை தெரியும், அதாவது... மக்கள் கிருஷ்ணர் என்றவுடன் வெண்ணெய், கோபியர்கள், மற்றும் புல்லாங்குழல் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் அவருடைய பதினாறு வயது வரை மட்டுமே நடந்தன. பதினாறு வயதுக்குப் பின், அவர்... முழுமையான அர்ப்பணிப்புள்ள ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.
Subscribe
அரசியலும் ஆன்மீகமும்
அவர் அன்றைய அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டிருந்தார். ஏனென்றால், அதிகாரத்தை வைத்திருப்பவர்கள்... அவர்களின் உணர்வில், வாழ்க்கையைப் பற்றிய ஒரு விரிவான பார்வையை கொண்டிருக்க வேண்டும். என் குடும்பம், என் குழந்தைகள், என் கணவர், என் மனைவி என்றில்லாமல், அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அடையாளத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். பரந்த தன்மையுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது தான் நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்; இல்லையென்றால், அது ஊழலுக்கு வழிவகுக்கும். அதிகாரம் என்றாலே ஊழல் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அதிகாரம் ஊழலல்ல, குறுகிய அடையாளம் தான் ஊழல். அவர்கள் சரியான விஷயங்களை செய்வதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லா நேரமும் மிக மோசமான விஷயங்களை செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் அடையாளம் மிகவும் குறுகியதாக இருக்கிறது.
கிருஷ்ணர் இதை மாற்ற நினைத்தார். அவர் இதை தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார். அதை அடைவதற்காக மட்டுமே வேலை செய்தார். இப்படிப்பட்ட தீவிரம் மற்றும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் ஒருவர், பலன் கிடைக்காமல் போவதற்காக செயல் செய்யவில்லை. நிச்சயமாக பலன்களை பெற வேண்டும் என்று தான் வேலை செய்தார். பிரச்சனை என்னவென்றால், நீங்கள் கிருஷ்ணர் பேசியதை அரசரின் வேலைக்காரரின் வார்த்தைகள் மூலமாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். வேறு யாரும் உங்களுக்கு சொல்லவில்லை. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் மட்டுமே பேசினார். அர்ஜுனன் இதைப்பற்றி பேசவே இல்லை. இந்த நிகழ்விற்கு பின் அர்ஜுனன் 36 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆனால் கிருஷ்ணர் அவரிடம் சொன்ன ஒரு வார்த்தையை கூட அவர் ஒருபோதும் வெளியே சொல்லவில்லை. நீங்கள் எங்காவது அப்படி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் அரசராக இருந்தார். ஆனால் ஒருமுறை கூட “போர்க்களத்தில் கிருஷ்ணர் இதை என்னிடம் சொன்னார்” என்று எதையுமே சொன்னதில்லை. ஒருமுறை கூட சொன்னதில்லை. அதனால் நீங்கள் கேள்விப்பட்ட எல்லாமே அரசரின் வேலைக்காரரான சஞ்சயனிடம் இருந்து தான்.
சஞ்சயனின் வழியே நமக்கு கிடைத்த கீதை
நீங்கள் ஒரு அரசரின் வேலைக்காரருடைய குணாதிசயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவர் மிகவும் நம்பகமானவர். உங்கள் கணவரோ மனைவியோ அல்லது குழந்தைகளோ, அவர்கள் எதையோ பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை பற்றி உங்களிடம் சொல்லும்போது, அதில் கொஞ்சம் அவர்களுடைய சொந்த கற்பனைகளையும் சேர்த்து தான் சொல்வார்கள். இது மனித இயல்பு. அவர்களுடைய சொந்த அபிப்ராயங்கள், கருத்துகள், மற்ற விஷயங்கள் இயல்பாகவே அவர்கள் பேசுவதில் கலந்துவிடும். ஆனால் ஒரு அரசருடைய வேலைக்காரர் தன் சொந்த அபிப்ராயங்களை சேர்க்காமல் இருக்க பயிற்சி பெற்றிருந்தார். அப்படி அபிப்ராயங்களை சேர்த்தால் அவர் தலை துண்டிக்கப்பட்டுவிடும். எனவே, அவர் நடந்தவற்றை எவ்வித மாற்றமும் இன்றி, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மட்டுமே விவரிப்பார்.
சொல்லப்போனால், அவர் ஒரு பழங்கால டேப் ரெக்கார்டர் மாதிரி. பதிவு செய்து "அவர் இதைத்தான் சொல்கிறார்" என்று அப்படியே அரசருக்கு சொல்கிறார். ஆனால் அதற்கு பின்னணி எதுவும் கிடையாது. மிக ஆழமான பந்தம் இருக்கும் இரண்டு பேருக்கு மத்தியில் ஒரு விஷயம் பகிரப்படும்போது... இப்போது காதலர்கள் இரண்டு பேர் ஏதோ ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வேறு ஒருவர் அதை பார்க்கும்போது அவர்களுக்கிடையே ஏதோ வாக்குவாதம் என்று நினைக்கலாம், ஆனால் அவர்கள் தங்களுக்குள் அன்பைப் பரிமாறிக்கொண்டிருப்பார்கள். அதுபோல இது கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடக்கும் ஒருவித காதல் பரிமாற்றம். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். அதனால் அவர் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிலையில் பேசுகிறார்.
அரசருடைய வேலைக்காரர் அதை ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து, அதன் பின்னணி தெரியாமலே, அது என்னவென்று புரிந்துகொள்ளாமலே, அந்த அனுபவத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ளாமலே அதைப் பற்றி சொல்கிறார். இது இப்படி இருக்க, அடிப்படையான விஷயம் என்னவென்றால், நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய ஆசைப்பட்டாலும், உங்களுக்கென்று இலக்குகளை வைத்திருப்பீர்கள். எந்த மாதிரியான இலக்குகளை நிர்ணயிப்பீர்கள்? இப்போது நீங்கள் கல்லூரியில் இருக்கிறீர்கள். என்ன மாதிரியான இலக்கை நிர்ணயிப்பீர்கள்? உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றை, கொஞ்சம் மிகைப்படுத்தி, ஏதோ உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்கு போல நினைத்துக்கொள்வீர்கள்.
பொதுவாக மக்கள் இதை லட்சியம் என்று சொல்கிறார்கள். நான் இதை மலச்சிக்கல் என்று சொல்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையை மலச்சிக்கலைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக கையாள முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு இலக்கு இருக்கிறது என்றால், அந்த இலக்கு புத்தம் புதியதாக இருக்க முடியாது. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை மிகைப்படுத்தி சொல்வது தான் அது. உங்களுக்கு தெரியாத ஒரு இலக்கை பற்றி உங்களால் யோசித்து பார்க்க முடியுமா? அது எப்படி சாத்தியமாகும்? அவர் என்ன சொல்கிறார் என்றால் - நாம் ஒரு குறிப்பிட்ட திசையை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் அந்த செயலின் மீது அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் இலக்கு என்பது வெறும் கற்பனையான ஒன்றாக மட்டுமே இருக்கும். இப்போது ஒரு விஷயத்தை செய்யுங்கள். இந்த க்ஷணத்தில் எடுக்க வேண்டிய இந்த ஒரு மூச்சை மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த மூச்சுகளை மட்டும் எடுத்துப் பாருங்கள், பார்க்கலாம்.
பேட்டி எடுப்பவர்:என்னால் முடியாது
இலக்கு - செயல் - ஈடுபாடு
சத்குரு: இதைத்தான் அவர் சொல்கிறார். அவர் சொல்வது என்னவென்றால் “இந்த படியை சரியாக எடுத்து வைக்காமல், நீங்கள் இலக்கை பற்றி கற்பனை செய்கிறீர்கள். இதில் என்ன பயன் இருக்கிறது? யோக மரபில் இதை மிக எளிமையாக இப்படி சொல்வோம். 'உங்களுடைய ஒரு கண் இலக்கின் மீது மட்டுமே நிலைத்திருந்தால், பாதையைக் கண்டறிய உங்களிடம் ஒரே ஒரு கண்தான் இருக்கும்; அது திறமையற்ற செயல், அவ்வளவுதான். அவர் சொல்வது என்னவென்றால்... ஒரு போர்க்களத்தில் நீங்கள் திறமையின்றி இருந்தால், உங்களுக்கு சம்பள உயர்வோ பதவி உயர்வோ கிடைக்காமல் போகும் என்பதல்ல, இறந்தே போய்விடுவீர்கள். போர்க்களத்தில் திறமையின்றி இருந்தால் ஏதோ மதிப்பெண்களை இழந்துவிடுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது 'ஏ' கிரேடை இழந்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அன்று மாலை மண்ணுக்குள் புதைக்கப்படுவீர்கள்.
அர்ஜுனன், "இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு நான் எப்படி அரசனாவது?" என்று பேசிக்கொண்டிருந்ததால் அவரிடம் கிருஷ்ணர் சொல்கிறார், “நீ இன்னும் அரசனாகவில்லை. உன் முன் நிற்கும் இந்த நபர் மீது நீ சரியாக அம்பு எய்ய வேண்டும்... அப்படி செய்யவில்லை என்றால் நீ அரசனாவது இருக்கட்டும், இன்று இரவே இங்கு புதைக்கப்படுவாய்,” இதைத்தான் அவர் அர்ஜுனரிடம் சொல்ல முயற்சி செய்கிறார். இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?
அர்ப்பணிப்பு மிகுந்த தன்னார்வலர்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் பிசினஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்துகிறோம். போன வருடம் கூட 200 CEO-க்கள் கலந்து கொண்டனர். இந்த நவம்பரில் மீண்டும் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அவர்கள் எல்லோருமே ஈஷா ஃபவுண்டேஷனில் எல்லா செயல்களும் எப்படி தடையில்லாமல் நடக்கிறது என்று வியப்புடன் பார்க்கிறார்கள். பல்வேறு செயல்பாடுகள் - எல்லோரும் தன்னார்வலர்கள். தன்னார்வலர்கள் என்பதன் அர்த்தம் என்ன? அந்த வேலையை செய்ய யாருமே பயிற்சி பெற்றவர்கள் கிடையாது. மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள். ஆனால் அந்த வேலையை செய்வதற்கு எந்த பயிற்சியும் பெற்றவர்கள் இல்லை. அவர்களை வேலையில் இருந்து நீக்கவும் முடியாது, ஏனென்றால் அவர்கள் தன்னார்வலர்கள். நீங்கள் அவர்களை வேலைக்கென்று வைத்திருந்தால் அவர்களை வேலையை விட்டு நீக்க முடியும். அவர்களோ தன்னார்வலர்கள், எப்படி நீக்குவது? உங்களால் முடியாது. இதை எல்லாம் பார்த்துவிட்டு அவர்கள் என்னிடம் கேட்டார்கள், “சத்குரு, நாங்கள் IIT, IIM போன்ற இடங்களில் படித்து வந்த மிகச் சிறந்த ஆட்களை தேடித் தேடி வேலைக்கு எடுக்கிறோம். ஆனால், நீங்கள் வெறுமனே தன்னார்வலர்களை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் செய்கிறீர்கள். எங்கள் நிறுவனங்களை விட உங்கள் அமைப்பு மிகவும் சிறப்பாக இயங்குகிறதே, இது எப்படி? அதற்கு நான் சொன்னேன், "பாருங்கள், நீங்கள் எல்லோரும் உங்களுடைய இலக்கின் மீது மட்டுமே குறியாக இருக்கிறீர்கள். ஆனால் இங்கே நான் மக்களிடம், 'நீங்கள் செய்யும் செயலில் முழு பக்தியோடு ஈடுபடுங்கள். இந்த நொடியில் என்ன செய்கிறீர்களோ, அதை மிகச் சிறப்பாக செய்யுங்கள்' என்பதைத்தான் தொடர்ந்து ஆழமாக விதைத்து வந்திருக்கிறேன்."
அவர்களில் பலருக்கும் நான் அவர்களை எங்கு கூட்டிக்கொண்டு போகிறேன் என்று கூட தெரியாது. அவர்கள் ஏதோ ஒரு புராஜெக்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இலக்கு என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. நான் வேறொரு இலக்கு வைத்திருக்கிறேன். இப்போதே நான் அதை சொல்லிவிட்டால் அவர்கள் பயந்துவிடுவார்கள். ஏனென்றால் என்னுடைய இலக்கு அப்படிப்பட்டது. அவர்கள் முடியாது என்று பாதியிலேயே விட்டுவிடுவார்கள். இப்போது அவர்களுக்குள் நாங்கள் இதை பதிய வைத்திருக்கிறோம் - நீங்கள் இந்த புராசஸில் முழுமையாக ஈடுபடுங்கள், அவ்வளவுதான். முதலில் ஈடுபாட்டுடன் இருப்பதன் ஆனந்தத்தை உணருங்கள். நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் முழுமையான பக்தி இல்லை என்றால், வாழ்க்கையில் உங்களால் குறிப்பிடத்தக்க எந்த ஒன்றையும் செய்ய முடியாது. அது எதுவாக இருந்தாலும் கலை, இசை, ஆன்மீகம், அரசியல், தொழில் என எதை எடுத்துக்கொண்டாலும் அது பொருந்தும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அந்த செயலின் மீது பக்தி உணர்வு இல்லை என்றால், உங்களால் குறிப்பிடத்தக்க ஏதோ ஒன்றை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அதைத்தான் கிருஷ்ணரும் சொல்கிறார்.


