தெபோனிதா:

நமஸ்காரம் சத்குரு. நீங்கள் சாலைகளில் பயணம் செய்வதை சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது மிகவும் அருமையான அனுபவமாக இருக்கிறது. அமெரிக்காவின் ஆன்மீக முகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. என்னுடைய அனுபவத்தில், பயணம் என் பார்வையை விரிவுபடுத்தப் பெரிதும் உதவியுள்ளது. அதனால் என் கேள்வி என்னவென்றால், பயணம் ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவ முடியுமா? மிக்க நன்றி.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமஸ்காரம், தெபோனிதா. பயணம் ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியுமா? அது ஒருவருக்கு தன்னுடைய வாழ்க்கையில் பயணம் என்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பொறுத்தது.

புது அனுபவத்தையும், பழக்கப்படாத சூழலையும் தரும் பயணமாக இருந்தால்...

ஒருவருக்கு பயணம் என்பது ஒரு விமான நிலையத்திலிருந்து இன்னொன்றுக்கும், ஒரு ஹோட்டல் அறையிலிருந்து மற்றொன்றுக்கும் போவதுதான் என்றால், அது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல கொஞ்சம் கடினமான முறையில் பயணம் செய்தால், பயணம் உங்கள் வீட்டின் சௌகரியங்களை உங்களிடமிருந்து எடுத்துவிடும்போது, உங்களுக்குப் பழகிப்போன வாழ்க்கை முறையை மாற்றும்போது, உங்களைச் சுற்றி நீங்கள் உருவாக்கிக்கொண்ட எளிய மற்றும் ஆடம்பரமான சுகங்களைப் பறிக்கும்போது, உங்கள் சொந்த நலனைப் பற்றி உங்களுக்கிருக்கும் அளவுக்கு மீறிய அக்கறையைக் குறைத்து, உங்களைப் பற்றி ஒரு பற்றற்ற தன்மையை உருவாக்கும்போது, அது நிச்சயமாக ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க வகையில் உதவும்.

அதனால், தெபோனிதா, நீங்கள் சாகசம் நிறைந்த பயணங்களை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். சௌகரியங்களைத் தேடி அல்ல, புதியவற்றைத் தெரிந்துகொள்ள, புது அனுபவங்களைப் பெற பயணம் செய்ய வேண்டும்.

எப்போதும் பழகிப்போன ஒரே இடத்திலும், தொடர்ந்து நான்கு சுவர்களுக்குள்ளும், தெரிந்த சூழல்களிலும் மட்டுமே வாழ்ந்து, எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்ற பிடிவாதமான மனநிலையை வளர்த்துக்கொண்டு இருக்கும்போது, அதை உடைத்தெறியும் விதத்தில் பயணம் அமைந்தால், அது ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

ஒரே இடத்தில் தேங்கிப்போக விடாமல்...

அதனால், தெபோனிதா, நீங்கள் சாகசம் நிறைந்த பயணங்களை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். சௌகரியங்களைத் தேடி அல்ல, புதியவற்றைத் தெரிந்துகொள்ள, புது அனுபவங்களைப் பெற பயணம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், பயணம் உங்கள் மீதான ஒரு பற்றற்ற தன்மையை உங்களுக்குள் உருவாக்க வேண்டும். எல்லாவற்றின் மீதும் தீவிர ஈடுபாடு, ஆனால் தங்கள் மீது பற்றற்ற தன்மை இருக்க வேண்டும். இதுதான் ஆன்மீகம்.

அந்த வகையில் பார்த்தால், உண்மைதான், அதனால் மக்களை பயணம் செய்ய ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் தங்கள் சௌகரியமான எல்லைகளை விட்டு வெளியே வரட்டும். இந்த உலகின் புதிய பகுதிகளுக்கும், புதிய அனுபவங்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ளட்டும். அவர்கள் இதுவரை அலட்சியப்படுத்திய எல்லா விஷயங்களும், கொஞ்ச காலத்திற்காவது உடைந்து போகட்டும். அது நிச்சயமாக ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும்.

ஏனென்றால், ஆன்மீகம் என்பது இதுதான்: நீங்கள் தொடர்ந்து புதிய தளத்தில் இருக்கிறீர்கள். அதாவது நீங்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள். பயணத்தில் இருக்கும்போது, ஒவ்வொரு அடியும் ஒரு புது தளமாக அமைய வேண்டும். எப்போதும் ஒரே இடத்தில் இருப்பது, தேங்கி நிற்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

உண்மையான பயணம் என்பது...

எனவே, பயணம் என்பதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் புதுப் புது தளத்தில் இருக்க விரும்புகிறீர்கள். உங்களுக்குப் பழக்கமில்லாத சூழ்நிலைகளைச் சந்தித்து அவற்றை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள். சௌகரியத்தைத் தேடி பயணம் செய்யாதீர்கள். உங்கள் வசதியான எல்லைகளைத் தாண்டியும், புதிய தளங்களைத் தேடியும் பயணம் செய்யுங்கள். பல வகையில், அதுதான் பயணத்தின் உண்மையான நோக்கம். அதுபோன்ற பயணத்தை மேற்கொண்டால், நிச்சயம் அது ஆன்மீக ரீதியாக மதிப்பான ஒன்றாக இருக்கும்.