#1 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் – 4 மூலப்பொருட்களின் மூலிகைச் சாறு (சத்குருவின் பாட்டியிடமிருந்து காலத்தை விஞ்சி நிற்கும் செய்முறைக் குறிப்பு)

turmeric-honey-drink

சத்குரு: “உங்கள் சுற்றுப்புறத்தில் வைரஸ் தொற்றுகள் அல்லது குளிர் காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தால், நீங்கள் செய்யவேண்டிய ஒரு எளிய விஷயம் என்னவென்றால், வெந்நீரில் சிறிது தேன், சிறிது மஞ்சள், முடிந்தால் சிறிதளவு புதினா அல்லது கொத்துமல்லி கலந்து எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கலவையை நீங்கள் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் எடுத்துக்கொண்டால், சுவாசத் தொற்று ஏற்படாது. ஏனென்றால் எல்லாவிதமான தொற்றுகளும், சுவாசப் பாதைக்குள் செல்வதற்கு முதன்முதலில் உங்கள் தொண்டையில் தங்கியிருக்கின்றன. இளஞ்சூடான நீரில் தேன், மஞ்சள் மற்றும் புதினா அல்லது கொத்துமல்லி போன்றவற்றை அருந்தினால், அது உங்கள் ஜீரணப்பைக்குள் சென்று அங்கே பாதிப்பு ஏற்படுவதை பெருமளவுக்குக் குறைக்கிறது.

“இது பலனளிக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமான சான்று இல்லை என்று கூறும் மக்கள் மிக அதிகமாக இருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இது என் கொள்ளுப்பாட்டிக்கும், பாட்டிக்கும் மற்றும் எனக்கும் அற்புதமாக வேலை செய்தது. அதுவே எனக்குப் போதுமான சான்று. பல தலைமுறை மக்களுக்கும் இது அற்புதமாக செயல்பட்டுள்ளது.”

#2 நோயெதிர்ப்பு சக்தி பானம் – நிலவேம்பு கசாயம் – ஒரு சித்த மருத்துவக் கலவை

nilavembu-kudineer

சத்குரு: "யோக மையத்தைச் சுற்றிலுமுள்ள நமது பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து காவல்துறை மற்றும் மருத்துவத்துறையினருக்கும், இப்போது நிலவேம்பு கசாயத்தை நாம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இது மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தபோதும், தமிழ்நாடு முழுவதிலும் இதை நாங்கள் விநியோகம் செய்தோம். அப்போதும், அது பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது.”

சக்தி வாய்ந்த ஒன்பது மூலிகைகளின் சாறு கொண்டு தயாரிக்கப்படுகின்ற நிலவேம்பு கசாயம் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. எல்லாவிதமான வைரஸ் தொற்றுக்களை எதிர்ப்பதற்கும், தவிர்ப்பதற்கும் மற்றும் கையாள்வதற்கும் சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கசாயம் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சலைக் குறைக்கவும், உடல் வலி, மனச்சோர்வு மற்றும் தலைவலியிலிருந்து விடுபடவும் இதைப் பயன்படுத்த முடியும்.

மருத்துவ குணங்களைக் கொண்ட இயற்கை மூலிகைகளான நிலவேம்பு, கருமிளகு, வெண்சந்தனம், சுக்கு, வெட்டிவேர், புடலங்காய், கோரைகிழங்கு புல், விளாமிச்சை வேர் மற்றும் பற்படாகம் போன்றவற்றிலிருந்து இந்த மூலிகைக் கலவை தயாரிக்கப்படுகிறது.

இந்தப் பழமையான சித்த மருத்துவம் வைரஸ் தொற்றுகளைக் குணப்படுத்துவதற்கான நவீன கால ஆராய்ச்சியிலும்கூட இடம் வகிக்கிறது.

கோவிட்-19 எதிர்ப்புப் போராட்டத்தில் ஈஷா அறக்கட்டளையின் கிராமப்புற சமூக நலவாழ்வுப் பணியின் ஒரு பகுதியாக, அருகாமையில் இருக்கும் எல்லா கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கும் நிலவேம்பு கசாயம் தயாரித்து, விநியோகம் செய்யப்படுகிறது. இந்த முயற்சிக்கு மக்கள் எப்படி பிரதிபலிக்கின்றனர் என்பதைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு, இங்கே க்ளிக் செய்யவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிலவேம்பு கசாயம் ஈஷா யோக மையத்தின் உணவுத் திட்டத்தின் முக்கியமான ஒரு பாகமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பும், ஒரு நாளைக்கு இரண்டு முறை அனைவரும் அருந்துகின்றனர். உங்களுடைய உள்ளூர் சித்த மருந்துக் கடை அல்லது ஆயுர்வேத மருந்துக் கடையில் இந்த பானம் நிச்சயமாகக் கிடைக்கும். ஆன்லைன் ஈஷா ஷாப்பி மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

#3 நோயெதிர்ப்பு சக்தி பானம் – சுக்கு காபி

sukku-coffee

உடலுக்குக் கேடு விளைவிக்கும் எல்லாவிதமான கஃபெய்ன் பானங்களையும் தவிர்த்துவிட்டு புத்துணர்ச்சியூட்டும் அதிகாலை நேரத்திற்கு உரிய பானத்தை அனுபவியுங்கள். உணவு செரிமானத்துக்கு உதவுவது மற்றும் தொண்டைவலியை ஆற்றுவதிலிருந்து வாந்தி மயக்கம், மிகை உணவினால் சிரமப்படுதல் வரை எல்லா பொதுவான உடல் அசௌகரியங்களுக்கும் நிவாரணம் அளித்து பல ஆரோக்கிய பலன்களை வழங்கும் சுக்கு காபி, கஃபெய்ன் இல்லாத ஒரு சூடான பானம்.

அளவு: 4 நபர்களுக்கு (சிறிய தேநீர் கோப்பைகள்)

தேவையான பொருட்கள்:

இஞ்சி, இலேசாக நசுக்கியது: 2 இன்ச் நீளத் துண்டு

மல்லி விதைகள்: 4 தேக்கரண்டி

இனிப்புக்கு பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை:

நான்கு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் இஞ்சி மற்றும் மல்லி விதைகளைச் சேர்க்கவும்; தீயைக் குறைத்து வைத்து 3-4 நிமிடங்களுக்கு சூடாக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டவும்.

பனை வெல்லம் சேர்த்து, அது கரையும் வரை கலக்கவும். பிறகு சூடாகப் பரிமாறவும்!

#4 நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பானம் – Hot Lime

hot-lime-drink

தயாரிப்பதற்கு மிகவும் எளிதான, அதிகமான பலன் தரும், மூன்று பொருட்களாலான இந்த பானம், இதமானது மற்றும் ஆரோக்கியமானதும்கூட. பல தலைமுறைகளாக இந்த பானம் வழக்கத்தில் இருந்துவருகிறது என்பதுடன், இது அனைவரும் அறிந்த பாரம்பரிய சர்வரோக நிவாரணியாகவும் இருக்கிறது. தேன் உட்கொள்வது, குழந்தைகளின் கடும் இருமல் மற்றும் அடிக்கடி ஏற்படும் சுவாசத் தொற்றைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எலுமிச்சையில் அபரிமிதமான அளவு வைட்டமின் சி சத்து இருப்பதுடன் விரிவானதொரு ஆராய்ச்சியின்படி, தொற்றுகளை எதிர்க்கும் உடலின் ஆற்றலுக்கு உதவியாக வைட்டமின் சி சத்து, வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்கிறது.

இந்த பானம் தயாரிக்கும் முறை:

250 மிலி அளவு வெந்நீருடன், 1 முழு எலுமிச்சையின் சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டிகள் வெல்லம் அல்லது பனை வெல்லம்/ தேங்காய் சர்க்கரை சேர்க்கவும்.

நன்கு கலக்கி, சூடாக இருக்கும்போதே பருகவும். சீரான இடைவெளிகளில், ஒரு நாளைக்கு 3-5 முறைகள் அருந்துவது சிறப்பானது.

இத்தகைய சவாலான நேரங்களில், ஒரு சாதாரண வைரஸ் தொற்று, இறப்புக்குக் காரணமாகிவிட முடியும். நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதனால், இந்த நான்கு ஆரோக்கிய பானங்களும், கோவிட்-19 தொற்றிலிருந்து உங்களுக்குக் கூடுதலான ஒரு பாதுகாப்பு வளையத்தை வழங்கும் என்று நம்புகிறோம். இந்த பானங்களை அருந்துவதுடன் கூடுதலாக, ஆரோக்கியமாக வாழ்வது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்த மற்றுமொரு ஆர்வமூட்டும் கருத்தை சத்குரு பகிர்ந்துகொள்கிறார்:

சத்குரு: “ஆங்கிலவழி மருத்துவ முறை இதை எப்படிப் பார்க்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஆரோக்கியமாக இருப்பதற்கு, நீங்கள் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருப்பது மிகவும் முக்கியமானது என்று யோக முறையில் நாங்கள் எப்போதும் கருதுகிறோம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பதற்கு, உடலமைப்பில் சமநிலையையும். உற்சாகமான உணர்வையும் உருவாக்குவது மிக அத்தியாவசியமானது.”

ஆசிரியர் குறிப்பு: கொரோனா பாதுகாப்பு வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றுமுள்ள அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும், ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு வழங்கப்படுகிறது.

IYO-Blog-Mid-Banner