வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 1
உலகமெங்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மருத்துவர்களும், தன்னார்வலர்களும் மற்றும் காவல்துறையினரும் இடையறாமல் கடுமையாக உழைக்கின்றனர். ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள், கோவிட்-19 க்கு எதிரான போரின் முன்னணியில், கிராமங்களில் செயலாற்றி வருகின்றனர்.

இடர்ப்பாடுகள் அனைத்தையும் தகர்க்கும் தன்னார்வலர்கள்
கருணை மற்றும் மனோவலிமையை ஆயுதமாகக் கொண்டு, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய கிராம சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு, ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள், தடைகள் அனைத்தையும் தகர்த்துப் பணியாற்றுகின்றனர். விடியலின் முதல் கீற்றில் கண் விழித்து, தினமும் பல கிலோமீட்டர் தூரத்தையும், கடுமையான வெயிலில் நடந்தே செல்கின்றனர். கோயம்புத்தூரில் இருக்கும் வெவ்வேறு கிராமங்களுக்கு காற்றாய்க் கடுகி விரைந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யவும், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக விலகலின் நன்மைகளைப் பற்றி எடுத்துக்கூறியும் பணி செய்கின்றனர்.

கிராம தன்னார்வலர்கள்
ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் சுறுசுறுப்பும், தன்னலமற்ற முயற்சிகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் கிராம மக்களும் இணைவதற்கு ஊக்குவித்துள்ளது. நரசீபுரம் பஞ்சாயத்து பகுதியில், சமீபத்தில் கிராம மக்களும் பிரச்சாரத்திற்கு தன்னார்வத் தொண்டு செய்வதற்கு முன் வந்தனர். கிராம மக்களிடையே உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு அவர்கள் உதவுகின்றனர். ஈஷா தன்னார்வலர்களின் உறுதியளிக்கும் உத்வேகத்தின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கு முன், பசியின் பயமும், நிச்சயமில்லாத ஒரு எதிர்காலம் குறித்த கவலைகளும் வேகமாக மறைகின்றன.
வெள்ளிமலைப்பட்டினம் பஞ்சாயத்தின் கிராமங்களில், ஈஷா தன்னார்வலர் யஷ்வந்த்தின் ஓய்வில்லாத முயற்சிகள் கிராமத்தினருக்கு ஊக்கமளித்ததன் விளைவாக, 17 பேர் கொண்ட கிராம மக்கள் குழு ஒன்று, அங்கு வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் அவருக்கு ஆதரவளித்தது.
Subscribe

சிறார்கள் வழி காட்டுகின்றனர்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு சிறியவர்கள் அதிக ஒத்துழைப்புடனும், உள்வாங்குதலுடனும் இருப்பதால், ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்களுக்கு சிறார்கள் வலிமையான ஆதரவாளர்களாக உள்ளனர். சமூக விலகலைக் கடைபிடிப்பதிலிருந்து, அவ்வப்போது கைகளைக் கழுவுவது வரை, பெரும்பாலான கிராமங்களில் சிறுவர் சிறுமியர் தங்களது கள்ளமற்ற கீழ்ப்படிதல் மூலம், அவர்களின் மூத்தோர்களுக்கு தகுந்ததொரு உதாரணமாகத் திகழ்கின்றனர்.

நிலவேம்பு கஷாயம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசப்பான, மூலிகைத் தன்ணீராகிய நிலவேம்பு கஷாயம் விநியோகம், எல்லா கிராமங்களிலும் நீண்ட வரிசைகளில் பெரும் வரவேற்பு பெறுகிறது. அதனுடைய கசப்பு சவாலானதாக இருந்தாலும், பெரும்பாலான கிராமங்களில் மூலிகை கஷாயத்திற்கான வரிசையில் சிறார்களே முதலிடம் வகிக்கின்றனர்.
பேரூர் கிராமத்தில், நிலவேம்பு கஷாயத்தின் தினசரி விநியோகத்தைப் பெறுவதற்காக, ஒரு 5 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை இழுத்துக்கொண்டு தன்னார்வலரை அணுகினான். கசப்பான கஷாயத்தை எந்தப் புகாரும் இல்லாமல் அருந்திய சிறுவன், அவனது தங்கையிடம் சுவாமி சங்கல்பா கஷாயத்தைப் பருக வழங்கும்போது, சுவாமியிடம் மெல்லிய குரலில்,” அது கஷாயம் என்று கூறாதீர்கள், அவள் அதைப் பருகமாட்டாள். அது கருப்புத் தேனீர் என்று கூறுங்கள்,” என்றான். அந்த உபாயம் பலனளித்தது, சிறுமி அது தேனீர்தான் என்று எண்ணி நிலவேம்பு கஷாயத்தைக் குடித்துவிட்டாள். அதன் கசப்பு அவளது முகத்தைச் சுளிக்க வைத்தாலும், அதற்குள் அவளுடைய அண்ணன் வேகமாக இந்த மூலிகை மருந்தின் பலன்களைக் குறித்து விவரித்தவாறு தங்கையை அழைத்துச் சென்றான்.

சின்னஞ்சிறு வழிகாட்டி
நிலவேம்பு கஷாயத்தை விநியோகம் செய்யவும், கிராமத்தினரிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் வெள்ளியம்பட்டினம் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தை ஒரு தன்னார்வத்தொண்டர் அடைந்தபோது, ஒரு சிறிய பெண் தானாகவே வழிகாட்டியாக இருப்பதற்கு விருப்பத்துடன் இணைந்துகொண்டாள். ஆனால் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மூலிகைத் தண்ணீரை அந்த கிராமத்தின் பல வீடுகளுக்கும் விநியோகம் செய்வதற்கு அச்சிறுமி பொறுமையாக தன்னார்வலரை வழி நடத்தினாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவள் தன்னார்வலருக்கு உதவி செய்கையில், மிகவும் கவனமானதொரு அமைதி காத்தாள்.
ஆபத்சகாயர்களைக் காப்பாற்றுங்கள்
தன்னார்வத் தொண்டர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட சில கிராம மக்கள், நிவாரணச் செயல்பாடுகள் நிகழ்த்துவதற்காக நிழல் தரும் கட்டடங்கள் மற்றும் இடங்களை வழங்கியுள்ளனர்.
ஒரு நாள், காலை நேரக் கடும் வேலைக்கும், ஆவிசோரும் மதிய வெயிலில் வாட்டியெடுக்கும் நீண்ட நடைக்கும் பிறகு, சுவாமி தபஸ்நிதி சற்று ஆசுவாசம் கொள்வதற்காகவும், தனது நாட்குறிப்பில் நிவாரண செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் எழுதவும், ஒரு கிராமத்தில் நின்றார். மேற்கொண்டு அவரது நிவாரண செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு, சிறு பொழுது ஓய்வாக அமர்வதற்காக, சிறுமி ஒருத்தி அவரிடம் ஒரு நாற்காலியை வழங்கியபோது, அந்தச் செயல் சுவாமியை நெகிழச் செய்துவிட்டது.

இதயம் கனிந்த அனுபவம்
தாகமும், சோர்வுமாக இருந்த ஈஷா தன்னார்வலர்களுக்கு, இளநீர்களும், வாழைப்பழங்களும் விவசாயி ஒருவரால் வழங்கப்பட்ட அந்தத் தருணம், உண்மையிலேயே இனிமையான ஆச்சரியமான ஒன்றுதான். பிற்பாடு ஒரு தன்னார்வலர் கூறியது: “அவர் எங்களுக்கு அளித்த இளநீர்கள் மற்றும் வாழைப்பழங்களுக்கு எங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். எங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அவரது அன்பளிப்பு அது என்று வலியுறுத்திக்கூறினார். எங்கள் அனைவருக்கும் அது இதயம் குளிர வைத்த ஒரு அனுபவம்.”
மக்களது விழிப்புணர்வு
கிராம மக்கள் தங்களது ஆரம்ப நிலை தயக்கங்களை உதறிவிட்டு, ஈஷா தன்னார்வலர்களுக்கு நெருக்கமானவர்களாகி, ஆரோக்கியம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை விருப்பத்துடன் பின்பற்றியுள்ளனர். தன்னார்வலர் ஜெயகுமார் நரசீபுரத்தில், விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டுவதற்குச் சரியான இடங்களைத் தேடி அலைந்தபோது, கிராமத்தினர் அவரது உதவிக்கு வந்தனர். உள்ளூர் தன்னார்வலர்கள், அவரை கிராமத்தைச் சுற்றி அழைத்துச் சென்று, பார்வையில் படும்படியான சிறந்த இடங்களைச் சுட்டிக்காட்டினர்.