நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி? எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்? (Nilavembu Kashayam in Tamil)

வார்டன் என்றால் அடிப்போம் என்று சொல்லி வடிவேலுவை அடிக்கும் அந்த காமெடி சீனைப் போல, நம்மவர்கள் வைரஸ் என்றாலே நிலவேம்பு கசாயம் குடிப்போம் என்று நிலவேம்பு எனும் பிரம்மாஸ்திரத்தைக் கையிலெடுக்கிறார்கள். நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை, அதை எப்படி குடிக்க வேண்டும், எப்போது குடிக்கக் கூடாது? என்பது பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer
 
IYO-Blog-Mid-Banner

கொல்லைப்புற இரகசியம் தொடர்

உலகமே வைரஸுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டாங்களான்னு கேட்டுட்டு இருக்கும்போது, தமிழ்நாட்டுல நிலவேம்பு கசாயம் மறுபடியும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தது.

டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்குடிக்கும் நோய்கள் பற்றிய பயத்தை போக்க நம்மிடமிருக்கும் அற்புத அஸ்திரமாக நிலவேம்பு கசாயத்தை நாம் பயன்படுத்துகிறோம்.

நிலவேம்பு குடிநீர் பற்றி தெரிஞ்சுக்கணும்னா உமையாள் பாட்டியை விட்டால் எனக்கு ஆள் ஏது?!

நிலவேம்புக் குடிநீர்ல, நிலவேம்பு மட்டும் இல்ல, நிலவேம்பு அதில ஒரு மூலப்பொருளா மட்டும்தான் இருக்குது. அதுகூட மேலும் பல மூலிகைகள் சேர்க்கப்படுது.

ஒரு நாள் முழு ஊரடங்குன்னு சொன்னப்பவே “ஒரு நாள் முழுசாவா?!” என ஷாக் ஆன எனக்கு, ஒரு மண்டலத்தைக் கடந்து போய்க்கொண்டிருப்பது எத்தகைய நிலை என்று எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்த தெருவில் இருக்கும் உமையாள் பாட்டியின் வீட்டில் போய் பொழுதைக் கழிக்கப் போகிறேன் என்று போலீசிடம் சொன்னால், நூதன தண்டனை எனச் சொல்லி என்னை கொரோனா வேனில் ஏற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில், பாராசிட்டமால் மாத்திரை வாங்கப் போகிறேன் என பொய் சொல்லிவிட்டு பாட்டியின் வீட்டை அடைந்தேன்.

பக்கத்து வீட்டு அக்காமார்களுடன் பாட்டியும் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார் என நினைத்தபடி வீட்டிற்குள் நுழைந்த என்னை, செல்ஃபோனில் லூடோ கேம் விளையாடிக்கொண்டிருந்த பாட்டி கவனிப்பதாய் இல்லை.

சமூக விலகலை கடைபிடித்தபடி தள்ளி நின்று பாட்டியை நமஸ்காரம் செய்தேன். ஒருவழியாக கேமை முடித்துவிட்டு என் பக்கம் திரும்பினார் பாட்டி. “பாட்டி நீங்க டெய்லி காலையில கிராமத்துல உள்ள எல்லாருக்கும் நிலவேம்பு கசாயம் தர்றதா கேள்விப்பட்டேன். நிலவேம்பு கசாயம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க” என்று ஆரம்பித்தேன்.

கொளைநோய் பரவும் காலத்தில் தன்னார்வ நிறுவனங்கள்கூட மோர் பந்தல், சர்பத் பந்தல் போல ஒரு சிறிய கொட்டகை அமைத்து, இலவசமாக நிலவேம்புக் குடிநீரை வழங்கி அதை ஒரு திருவிழாவாக்கி விடுகின்றனர். எனவே நிலவேம்பு பற்றி தெரிந்துகொள்ள எனக்கு இயல்பாகவே ஆர்வம் வந்தது.

நிலவேம்பு கசாயம் - சில உண்மைகள்!

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

“நிலவேம்புக் குடிநீர்ல, நிலவேம்பு மட்டும் இல்ல, நிலவேம்பு அதில ஒரு மூலப்பொருளா மட்டும்தான் இருக்குது. அதுகூட மேலும் பல மூலிகைகள் சேர்க்கப்படுது. சில பேர் அங்கங்க வழங்கும் நிலவேம்பு குடிநீர் முறையா தயாரிக்கப்படுகிறதாங்கறத நாம் பார்க்கணும். மக்கள் கிட்ட ஒரு விஷயம் பிரபலமாகும்போது, அதுகூட போலிகள் உருவாவதும் சாதாரணமாகிப்போச்சு!

நிலவேம்பு தயாரிக்குற முறை, அத எப்படி குடிக்கணும், எப்ப குடிக்கக் கூடாதுனு சொல்றேன் கேளு” பாட்டி சொல்லத் துவங்கினாள்.

“சொல்லுங்க பாட்டி… அதுக்காகத் தான் வெய்ட்டிங்” என்றபடி நானும் ஆர்வமானேன்.

“அந்த காலத்துல பரவுன விஷக் காய்ச்சல்னு சொல்லப்பட்ட பெயர் தெரியாத காய்ச்சலுக்கெல்லாம் நம்ம பாரம்பரிய முறையில கசாயமா செஞ்சு கொடுக்கப்பட்டதுதான் இந்த 'நிலவேம்புக் குடிநீர்'.

நிலவேம்புக் குடிநீர் பத்தி 'சித்த வைத்திய திரட்டு' என்ற நூல்ல விரிவா பதிவு செய்யப்பட்டிருக்கு.

அதுபடி தேவையான பொருளும் தயாரிக்கும் முறையும் இதுதான்.

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

தேவையான மூலப்பொருள்கள்

நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு – இந்த 9 மூலிகைகளத்தான் நிலவேம்பு குடிநீர் தயாரிக்க நாம பயன்படுத்துறோம்.

தயாரிக்கும் முறை (Nilavembu Kashayam Preparation in Tamil)

இந்த மூலப்பொருள்கள ஒவ்வொன்னையும் சம அளவு எடுத்துக்கணும்.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் கூட 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்கா வத்தும் வரைக்கும் கொதிக்க வைக்கணும். அப்புறமா ஆற வச்சு வடிகட்டினா நிலவேம்புக் குடிநீர் தயாராகிடும்.

உதாரணத்துக்கு, 5 கிராம் மூலிகைகள்கூட 200 மில்லி தண்ணி சேர்த்து, அது 50 மில்லியா வத்திய பிறகு அதை ஆற வச்சு குடிக்கலாம்.

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

நிலவேம்புக் குடிநீர, இளஞ்சூடாக குடிப்பதுதான் நல்லது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள்ள குடிச்சிடணும். நேரம் போகப் போக, அதோட வீரியம் குறைஞ்சிடும். அதேபோல, நேத்து தயார் செஞ்ச நிலவேம்புக் குடிநீர, அடுத்த நாள்வரைக்கும் வச்சி குடிக்கறத தவிர்க்கணும். ஃபிரிஜ்ல வச்சு குடிக்கற தப்ப செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன்.

எப்போது, எவ்வளவு குடிக்கலாம்?

காலையிலயும் இரவும் உணவுக்கு முன்னாடி இரண்டு வேள நிலவேம்பு குடிநீர குடிக்கலாம்.

ஒருத்தரோட வயசப் பொருத்து நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம். குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மருத்துவரோட ஆலோசனைய பெற்று குடிக்கணும்.

2 முதல் 5 வயசுள்ள குழந்தைக ஒருநாளைக்கு 5 மி.லி, 5 முதல் 8 வயசுள்ள குழந்தைக ஒருநாளைக்கு 10 மி.லி, 8 முதல் 12 வயசுள்ள பசங்க 20 மி.லி, 12 முதல் 15 வயசுள்ள பசங்க 30 மி.லி, 15 வயசுக்கு மேல உள்ள பெரியவங்க 50 மி.லி வரை குடிக்கலாம்.

நிலவேம்புக் குடிநீர, எப்பவுமே சாப்பாட்டுக்கு முன்ன குடிச்சாதான் நல்லது. அப்பதான் அத முழுசா உடம்பு கிரகிக்க முடியும்.”

உமையாள் பாட்டி நிலவேம்பு பற்றி சொலிக்கொண்டே இருக்க, லாக்டவுனை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பாகும் மஹாபாரதம் சீரியலுக்கான நேரம் வந்துவிட்டது. பாட்டி சீரியலில் மூழ்கி விடுவதற்கு முன் பாட்டி செய்து வைத்திருந்த நிலவேம்பு குடிநீரை பார்சல் செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

தரமான நிலவேம்பு குடிநீரைக் குடியுங்கள்

நிலவேம்புக குடிநீர் சரியாகவும் தரமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. கடைகளில் விற்கப்படும் நிலவேம்புப் பொடி அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? அதில் என்னென்ன மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையெல்லாம் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. மேலும், நிலவேம்புக் குடிநீர் அரசு மருத்துமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஈஷாவில் நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

ஈஷா யோக மையத்தில் தங்கியிருக்கும் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் அனைவருக்கும் காலை மற்றும் மாலை உணவிற்கு முன்னதாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில், ஈஷா தன்னார்வலர்கள் தாங்களாகவே முறையாக நிலவேம்பு குடிநீரை தயாரித்து, கோவையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக தினமும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ குறிப்பு: டாக்டர்.S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.