கொல்லைப்புற இரகசியம் தொடர்

மார்கழி மாதத்தின் குளிரும், மந்தத்தன்மையும் என்னை சோர்வடையச் செய்ய, "இன்னைக்கு லீவு போட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கலாமா?!" என மனதிற்குள் எனது சோம்பல் குரல் கேட்டது.

காலை உணவாக இட்லி, பூரி, ஃப்ரிஜ்ஜில் வைத்த புளித்த மாவிலிருந்து சுட்ட தோசை என அன்றாட காலை மெனு தான் இதற்கெல்லாம் ஒரு காரணமாக இருக்குமோ என ஒரு சந்தேக அலை எழும்பத் தொடங்கிய அந்த வேளையில், "அவற்றை விட்டால், பிறகு என்னதான் ப்ரேக் ஃபாஸ்ட் இருக்கிறது?" என்ற எதிர் கேள்வியும் உடனே மனதில் எழுந்தது.

அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் குறைவான கார்போஹைட்ரேட்டும் கொண்டுள்ள கருப்பு கவுனி அரிசி, சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான ஒரு வரப்பிரசாதம்

மார்கழி மாதம் அதிகாலையில் ஆற்றில் நீராடி, கோவிலுக்கு சென்று திரும்பிய உமையாள் பாட்டி என் வீட்டு வாசலை அடைந்தபோது, "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாள்" என்று திருப்பாவையை முணுமுணுத்துக் கொண்டே வர, எனக்கு அந்த ஆண்டாளே வீட்டிற்கு வருவது போல தெரிந்தது.

"என்னப்பா உங்க வீட்டுல இன்னைக்கு என்ன பிரேக்பாஸ்ட்? நான் இன்னைக்கு உங்க வீட்ல தான் காலை உணவு சாப்பிடணும்னு பிளான்ல வந்திருக்கேன்" என்று பாட்டி என்னிடம் கேட்டுக்கொண்டே, வீட்டின் கொல்லைப்புறத்திற்கு சென்று அவள் நட்டு வைத்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் சரியாக விடப்பட்டிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

பாட்டி எனக்காக கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த பிரசாத கூடையுடன் தனியே ஒரு தூக்குச்சட்டியும் இருந்ததைக் கவனித்தேன். தொட்டுப் பார்த்தால் தீக்குள் விரலை வைத்தாற்போல சூடாக இருக்க, பக்கத்திலிருந்து துணியை பிடித்து அதை திறந்து பார்க்க, மிளகு சீரகம் கலந்து கமகம என்று நல்ல வாசனையுடன் ஏதோ ஒரு கஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.

"எனக்கு தெரியும், உங்க வீட்டுல இன்னும் பிரேக்ஃபாஸ்ட் ரெடியாகி இருக்காதுன்னு தெரியும். அதான் இன்னைக்கு நான் உனக்காக கருப்பு கவுனி அரிசிக் கஞ்சி கொண்டு வந்திருக்கேன்" என்று பாட்டி சொல்லிக்கொண்டே கொல்லைப்புறத்தில் இருந்து உள்ளே வந்தாள்.

பாட்டி கொண்டு வந்திருந்த கோவில் பிரசாதத்துடன் கருப்பு கவுனி கஞ்சியையும் ருசி பார்த்தேன். பிரசாதத்தில் இருந்த தெய்வீகத் தன்மை சற்றும் குறையாமல் பாட்டி செய்த கஞ்சியிலும் இருந்ததை உணர முடிந்தது. இவ்வளவு சுவையான இந்த கருப்புக் கவுனி கஞ்சி ரெசிபியை பாட்டியிடம் இருந்து தெரிந்துகொள்ள ஆர்வமானேன்.

கஞ்சி பற்றி பாட்டியிடம் கேட்டபோது, கருப்புக் கவுனி அரிசியின் அற்புத பலன்களை எனக்கு முதலில் எடுத்துரைத்தாள்.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் (Karuppu Kavuni Arisi Benefits in Tamil)

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமது பாரம்பரிய அரிசிகளில் அற்புத சத்துகளும் பலன்களும் மிகுந்த கருப்புக் கவுனி அரிசி பற்றிய விழிப்புணர்வு சமீப காலங்களில் ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாட்டி, அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் குறைவான கார்போஹைட்ரேட்டும் கொண்டுள்ள கருப்பு கவுனி அரிசி, சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்பதை எடுத்துரைத்தார்.

நார்ச்சத்து அதிகம்:

"இதுல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால உடல் எடையைக் குறைக்க விரும்புறவங்களுக்கு நல்ல ஒரு சாய்ஸா இருக்கறதோட, மலச்சிக்கல் பிரச்சனை வராமலும், செரிமானப் பிரச்சனை ஏற்படாமலும் தடுக்கும். குடல் இயக்கத்துக்கு உதவுறதோட, வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு உதவுது.

ஆந்தோசயானின்:

அது மட்டும் இல்லாம, இதுல இருக்கற ஆந்தோசயானின் அப்படிங்கிற ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய் வராம தடுக்கறதா சொல்றாங்க.

கல்லீரல் நச்சுகள் நீங்க:

உடல் கழிவுகள் வெளியேற உதவுறதோட, கல்லீரல் நச்சுகள் நீங்கி ஆரோக்கியமா செயல்பட கருப்புக் கவுனி அரிசி உதவுது.

வைட்டமின் B மற்றும் C:

வைட்டமின் Bயும் Cயும் இதுல அதிகமா இருக்கறதால தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வராம தடுக்கும்.

நரம்புகள் பலமடைய:

நரம்புத் தளர்ச்சிய சரிசெஞ்சு, நரம்புகள் பலமடைய உதவுது.

கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற:

கருப்புக் கவுனி அரிசி கெட்ட கொழுப்புகள உடல்ல இருந்து வெளியேத்துறதால இதய பிரச்சனை வராம தடுக்குது.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை குறைய:

BPனு சொல்லப்படுற உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கறவங்க காலை வேளையில கஞ்சியா எடுத்துட்டு வரும்போது நல்ல பலன் இருக்கும்.”

முழுமூச்சாக கருப்புக் கவுனி அரிசியின் பலன்களை சொல்லி முடித்த உமையாள் பாட்டி, இறுதியில் என்னிடம் ஒரு Quiz கேள்வியும் கேட்டாள்.

"ஆமா, இந்த கருப்புக் கவுனி ஏன் கருப்பு நிறத்துல இருக்குன்னு தெரியுமா?"

"வெயில்ல வளர்றதால கருத்துப் போயிருக்கும் பாட்டி!" என்று ஒரு ஃப்லோவில் நான் சொன்னதும்,

"என்னவொரு புத்திசாலித்தனம்...!" வடிவேலு பாடி லாங்வேஜில் என்னை கலாய்த்தாள் பாட்டி.

ஆந்தோசயானின் எனும் ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் இருப்பதால் தான் கருப்பாக உள்ளது என்று அறிவியல் காரணத்தைக் கூறி, கருப்பாக இருக்கும் பொருட்கள் பிரபஞ்ச சக்தியை அதிகம் ஈர்க்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்பதால், கருப்புக் கவுனியில் இத்தனை நன்மைகள் உள்ளன என்ற ஒரு ஆன்மீக கருத்து உள்ளதாகவும் பாட்டி கூற, கருப்புக் கவுனியில் வேறு என்னென்ன பதார்த்தங்களை செய்ய முடியும் என்ற ரெசிபிகளையும் பாட்டியிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.

கருப்புக் கவுனி அரிசியை பொங்கலாகவும், லட்டு, பாயாசம் போன்ற இனிப்பு பதார்த்தமாகவும் செய்து சாப்பிட முடியும் என்ற போது, அபார ஊட்டச்சத்துகளுடன் அற்புத சுவையும் இணையும் கருப்புக் கவுனி ரெசிபிகளை என் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளாமல் எப்படி விடமுடியும்?!

மருத்துவக் குறிப்புகள்:

Dr.S.சுஜாதா MD(s).,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.