கொல்லைப்புற இரகசியம் தொடர்

IPL மேட்ச் ஒருபுறமும் சித்திரைத் திருவிழா மறுபுறமும் பரபரப்பையும் கொண்டாட்டத்தையும் தந்துகொண்டிருக்க, திருவிழாவை முன்னிட்டு ஸ்வீட் கடைகளில் கூட்டமும் அலைமோதியது. வெகுநாட்கள் கழித்து உமையாள் பாட்டியைப் பார்க்க செல்வதாலும், திருவிழாக் காலமாக இருப்பதாலும் பாட்டிக்கு உயர்தர இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

அதிக பசி, அதிக தாகம், நாக்கு சிவந்து வெடிச்சுப் போறது, திடீர்னு எடை இழக்குறது, சோர்வு, தூக்கக் கலக்கமான மயக்கம், பார்வை குறைபாடு, அடிக்கடி சிறுநீர் கழிக்கறது, புண்கள் ஆறுறதுக்கு தாமதமாகுறது, மலம் வறண்டு வெளியேறுவதுல கடினமா இருக்கறது இதெல்லாம் சர்க்கரை வியாதியோட அறிகுறிகள்

முற்றத்தில் பாட்டி அர்த்தசித்தாசனத்தில் அமர்ந்தபடி இருக்க, பாட்டி யோகா தான் செய்கிறாரோ என்னவோ என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்தேன். பாட்டி மும்முரமாக டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன பாட்டி, அழகர் ஆத்துல இறங்குறதைப் பாக்கப் போகாம IPL மேட்ச் பாத்துட்டு இருக்கீங்க?" குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்த என்னை புன்னகையுடன் சைகையால் வரவேற்று அருகில் அமரச் சொன்னாள் பாட்டி.

ஆட்டத்தின் கடைசி ஓவர் என்பதால், பாட்டியின் முகத்தில் பரபரப்பு தெரிந்தது. கடைசி ஓவரில், தோனி அடித்த மூன்று சிக்ஸர்களால் CSK அணி வெற்றிபெற, நானும் பாட்டியும் HiFi செய்து கொண்டாடினோம்.

"இந்தாங்க பாட்டி ஸ்வீட் சாப்பிடுங்க!" என்று கொண்டாட்டத்தைப் பகிர்ந்துகொள்ள வாங்கிவந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்தேன்.

பாட்டி ஸ்வீட் பாக்ஸை வாங்கி அப்படியே வைத்துவிட்டு, அடுக்கறையில் தான் செய்து வைத்திருந்த கருப்பட்டி பணியாரத்தை எடுத்து வந்து தந்தாள். கருப்பட்டி பணியாரத்தின் சுவை நாவுக்கு விருந்தாக, நான்கைந்து பணியாரங்களை காலி செய்தேன். 

“ஏன் பாட்டி, அந்த ஸ்வீட் பாக்ஸை அப்படியே வச்சிட்டீங்க. அந்த ஸ்வீட்டையும் எடுங்க, டேஸ்ட் பார்ப்போம் என்று பாட்டியிடம் நான் சொல்ல,

"அஸ்காவுல (வெள்ளைச் சர்க்கரை) செஞ்ச மில்க் ஸ்வீட்ஸா? அதெல்லாம் நீயே சாப்பிடு.

என்னோட வயசுக்கு இந்த இனிப்பை எல்லாம் நான் சாப்பிடக்கூடாதுப்பா. இந்த வயசுலயும் நான் சர்க்கரை வியாதி இல்லாம இருக்கிறதுக்கு, இந்த மாதிரி இனிப்பெல்லாம் தவிர்த்துட்டு, கரும்புச் சர்க்கரை, கருப்பட்டி, தேன் மாதிரி இயற்கையான இனிப்புகள் கலந்த பலகாரங்களை சாப்பிட்டு வருவதும் ஒரு காரணம்ப்பா."

பாட்டி என்னிடம் ஸ்வீட் பாக்ஸை திருப்பிக் கொடுத்ததும், எனக்கு சர்க்கரை வியாதி குறித்து பாட்டியிடம் இன்னும் விளக்கமாக கேட்டறிய ஆவல் வந்தது.

“ஆமாம் பாட்டி, எங்க வீட்ல ஐம்பது வயசு தாண்டின எல்லாருக்கும் சர்க்கரை வியாதி இருக்குன்னு சொல்றாங்க. சர்க்கரை வியாதின்னா என்ன? அது எனக்கும் வராம தடுக்க, நான் என்ன பண்ணனும்? இதப்பத்தி கொஞ்சம் விவரமா சொல்லுங்க பாட்டி!"

"முன்னெல்லாம் வசதியான பணக்காரங்களுக்கு தான் இந்த நோய் வரும்ன்னு எங்க ஊர்ல பேசிக்குவாங்க. முன்ன ஊருல ஒருத்தருக்கோ ரெண்டு பேருக்கோ இருந்த இந்த வியாதி, இப்ப ஊரெல்லாம் பரவிக்கிடக்கு. அப்படின்னா எல்லாரும் பணக்காரங்களா மாறிட்டாங்களான்னு கேட்டா, அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! உடல் உழைப்ப குறைச்சிட்டு, சிறுதானியங்களை உணவில் சேர்க்கிறத மறந்துட்டு, பசி இருக்கும்போது சாப்பிடுவத தவிர்த்துட்டு, பசிக்காதபோது டிவி பார்த்துக்கிட்டே சாப்பிட்டு, ஜீரண மண்டலம் ஓய்வெடுக்குற இரவு நேரத்துல தாமதமா சாப்பிட்டு... இந்த மாதிரி முறையற்ற வாழ்க்கை முறையினால, இப்பல்லாம் சர்க்கரை வியாதிங்கறது ஒரு பெரிய சமூக வியாதியா மாறிப்போய் இருக்கு"

நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா, எனக்கும் சர்க்கரை வியாதி இருக்குதான்னு செக் பண்ணத் தோணுது பாட்டி. ஏன்னா இந்த மாதிரி முறையற்ற பழக்கவழக்கங்கள் என்கிட்டயும் இருக்குது.”

“ஆமாம்பா எதுக்கும் செக் பண்ணிக்கோ! காலையில காலிவயிறுல இருக்குறப்போ செக் பண்ணா இரத்த சர்க்கரை அளவு 70 mg /dL முதல் 100 mg/dL வரை இருந்தா, அது இயல்பான அளவு. சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு இரத்த சர்க்கரை அளவு 140 mg/dlக்கு குறைவா இருந்தா, அது இயல்பான அளவுதான்.

சர்க்கரை நோய் அறிகுறிகள் (Sugar Symptoms in Tamil)

அதிக பசி, அதிக தாகம், நாக்கு சிவந்து வெடிச்சுப் போறது, திடீர்னு எடை இழக்குறது, சோர்வு, தூக்கக் கலக்கமான மயக்கம், பார்வை குறைபாடு, அடிக்கடி சிறுநீர் கழிக்கறது, புண்கள் ஆறுறதுக்கு தாமதமாகுறது, மலம் வறண்டு வெளியேறுவதுல கடினமா இருக்கறது இதெல்லாம் சர்க்கரை வியாதியோட அறிகுறிகள்.

சர்க்கரை நோய் வகைகள்

வகை 1 நீரிழிவு நோய் (இன்சுலின் மொத்த பற்றாக்குறை):

டைப் 1 நீரிழிவுன்னு சொல்றது, இளம்பருவ நீரிழிவு அல்லது இன்சுலின் சார்ந்த நீரிழிவுன்னு சொல்லப்படுது. இது ஒரு நாள்பட்ட நிலை. இதுல கணையம் இன்சுலின கொஞ்சமா சுரக்கும் அல்லது உற்பத்தியே செய்யாது. சில சமயம் சர்க்கரை ரொம்ப அதிகமாவதும், குறைவதுமா மாறி மாறி இருக்கும்.

வகை 2 நீரிழிவு நோய் (இன்சுலின் எதிர்ப்பு):

டைப் 2 நீரிழிவு நோயில, உடல் இன்சுலின் சுரப்பை சரியா பயன்படுத்துறதில்ல. இது இன்சுலின் எதிர்ப்புன்னு அழைக்கப்படுது. முதல்ல கணையம் அதை ஈடுசெய்ய கூடுதல் இன்சுலினை உருவாக்குது. ஆனா காலப்போக்கில அத தக்கவைக்க முடியாது. சாதாரண இரத்த குளுக்கோஸைப் பராமரிக்க போதுமான அளவு இன்சுலினை உருவாக்க கணையத்தால முடியாமப் போகுது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள் (Diabetes diet in Tamil):

சர்க்கரை வியாதி உள்ளவங்கள்ல சைவ உணவு சாப்பிடுறவங்க, குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளா எடுத்துக்கணும். முழு தானியங்கள் சிறு தானியங்கள், கொட்டை வகைகள் மற்றும் விதைகள் , முழு பருப்பு வகைகள் , பச்சை இலைக் காய்கறிகள், இளநீர் போன்றவை.

அசைவ உணவு சாப்பிடும்போது முட்டை , மீன், தோல் நீக்கிய கோழி இறைச்சி, கடல் உணவுகள் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட மாவு, துரித உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (வெள்ளைச் சர்க்கரை), கிழங்குகள், பழங்கள் (அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ்), சோடியம் நிறைந்த உணவுகள் (அப்பளம், ஊறுகாய், மயோனைஸ், சிப்ஸ்), சிவப்பு இறைச்சி, கார்பனேட் செய்யப்பட்ட பானங்கள்...

இந்த மாதிரியான உணவுகளை எல்லாம் சர்க்கரை வியாதி உள்ளவங்க கண்டிப்பா தவிர்க்கணும்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஓகே பாட்டி, சில பேரு லோ-சுகர்னு சொல்லி பாக்கெட்ல ஆரஞ்சு மிட்டாய வச்சிட்டு இருக்காங்களே, அது என்ன பிரச்சனை பாட்டி?"

எனக்கிருந்த சந்தேகத்தையும் பாட்டியிடம் கேட்க, பாட்டி தொடர்ந்தாள்.

லோ சுகர்:

இதுல, உடல்ல குளுக்கோஸ் அளவு 70 mg /dl க்கும் குறைவா இருக்கும். இது அதிகமா டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும். பெரும்பாலும் அதிகமா இன்சுலின் எடுத்துக்கும் போது சர்க்கரை அளவு குறையுது.

சரியான நேரத்துல உணவு சாப்பிடாம இருக்கறது, சரியான நேரத்தில இன்சுலின் மாத்திரை உட்கொள்ளாதது, அதிக பணிச்சுமை, அதிகமான உடற்பயிற்சி, மன அழுத்தம், தூக்கமின்மை, பருவநிலை மாற்றம்னு இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுது.

குறை சர்க்கரை நிலையின் பொதுவான அறிகுறிகள்

இரத்த சர்க்கரை அளவு குறைவா இருக்கிறவங்களுக்கு கை, கால் நடுக்கம், வேர்க்கறது, உடல் சில்லிட்டுப் போறது, மயக்கம், உடல் தளர்வு, படபடப்பு, கூடுதல் பசி, மூச்சுத் திணறல், தலை வலி... இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை பண்ணிக்கணும்."

"சரி பாட்டி, நீரிழிவு நோய்க்கு யோகாவுல தீர்வு இருக்குதா?"

"யோகாவுல தீர்வு இருக்குதான்னு நான் சொல்றதை விட, சத்குருவே இதப்பத்தி பேசி இருக்காங்க! நாம சத்குருவோட கருத்துக்களை தெரிஞ்சுக்கிட்டு, நிச்சயமா இந்த நீரிழிவு நோயிலிருந்து வெளியே வந்துடலாம்!"

மருத்துவக் குறிப்புகள்:

Dr.S.சுஜாதா MD(S).,

ஆரோக்யா சித்தா மருத்துவமனை,

சேலம்.

நீரிழிவு நோய் குறித்து சத்குரு:

இன்றைக்கு உலகத்தில் மிகப்பெரிய ஒரு நோய் என்றால் சர்க்கரை நோய்தான். இன்றைக்கு மக்கள் அவர்களது ரத்தத்திலோ சிறுநீரிலோ இருக்கும் சர்க்கரை அளவை மட்டும் சோதனை செய்து, ஒரு முடிவுக்கு வருகிறார்கள். சர்க்கரை இருப்பது ஒரு குறிப்பிட்ட உறுப்பான கணையத்தை சார்ந்தது. அது ஒன்று இயங்காமல் போனது அல்லது சரியாக இயங்கவில்லை. ஆனால் யோகாவில் நாம் அப்படி பார்ப்பதில்லை. யோக முறையில் உங்கள் வியான பிராணம் சரியாக இயங்கவில்லை என்றால், அதனுடைய ஒரு விளைவு, சர்க்கரை நோய். அடிப்படையாக உடல் சீர்குலைந்து போகிறது. நீங்கள் வெறும் சர்க்கரையைப் பார்த்தால் சர்க்கரை அதிகமாக இருக்கலாம், ஆனால் அது விஷயம் இல்லை. முக்கியமானது என்னவென்றால், உடலில் பொதுவாக ஒரு சீர்குலைவு நடந்திருக்கிறது. 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 4 ஆற்றல்வாய்ந்த வழிகள்

#1 மண்ணுடன் தொடர்பில் இருப்பது

செருப்பு இல்லாமல் நடப்பது, Walking Barefoot

உங்களுக்கு வேறு எந்த சாதனாவும் இல்லை என்றால், பூமி அல்லது மண்ணுடன் தொடர்பில் இருப்பது ஒரு எளிய வழி. மண் செழிப்பதும் உடல் செழிப்பதும் தொடர்புடையது. நீங்கள் மண்ணோடு தொடர்பில் இருந்தால், நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்றால், கொஞ்சம் தோட்ட வேலையையாவது வெறும் கால் வெறும் கையோடு செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு கூட்டிற்குள் வாழ்கிறீர்கள். அப்படி இருந்தால் மண் குளியலாவது செய்யுங்கள். கொஞ்சம் மண்ணை எடுத்து உடல் முழுக்க பூசிக்கொள்ளுங்கள், அது காய்ந்துபோகும் வரை காத்திருங்கள். 30 - 40 நிமிடத்திற்கு பிறகு கழுவிவிடுங்கள். சில மாதங்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். சாதாரணமாக உங்கள் தோட்டத்தில் நடப்பதையாவது செருப்பு இல்லாமல் நடங்கள். அது உங்கள் வியானாவை ஓரளவு சீர்படுத்த முடியும்.

#2 உதவும் யோகப் பயிற்சிகள்

யோகா, Yoga, சூரிய நமஸ்காரம், Surya Namaskar

சில கிரியாக்கள் இருக்கிறது, அது உங்கள் உடலை சீர்படுத்துவதால், அது இயல்பாகவே சர்க்கரை அளவின் மீது தாக்கம் ஏற்படுத்தும். சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது சர்க்கரை நோய்க்கு நாங்கள் எந்த சிகிச்சையும் தரவில்லை. அவர்களுக்கு அவர்களது சக்தி அமைப்பையும் உடலையும் சீர்படுத்த சில எளிய செயல்முறைகளை கற்றுக்கொடுத்தோம். அதனால் அவர்கள் சர்க்கரை நோயில் இருந்து குணமாகிவிட்டார்கள்.

ஷாம்பவி மஹாமுத்ராவும் அதை செய்ய முடியும். உடலமைப்பு சீரடைந்ததும் சர்க்கரை நோய் நீங்குவதை கவனிப்பீர்கள். ஆனால் இன்னும் வேகமாக இன்னும் திறம்பட அதிலிருந்து வெளிவர நீங்கள் ஆறு வாரம் எங்களோடு இருந்தால் கிட்டத்தட்ட 70% பேர், ஆறு வாரத்திற்குள் உங்கள் சர்க்கரை நோய் காணாமல் போகும். விடாப்பிடியாக இனிப்பாக இருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் அதிக காலம் எடுக்கலாம். ஆனால் 70% மக்கள் அதிலிருந்து ஆறிலிருந்து எட்டு வாரங்களில் குணமாகிவிடுவார்கள்.

#3 சித்தாவும் ஆயுர்வேதமும்

சித்த வைத்தியம், ஆயுர்வேதம், Siddha, Ayurveda

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சித்தாவில் சக்திவாய்ந்த செயல்முறைகள் இருக்கிறது, அதை நாம் செய்யலாம். ஆனால் சித்தா கொஞ்சம் கசக்கும். உங்கள் சர்க்கரை நோய் உங்களை அவ்வளவாக தொந்தரவு செய்யவில்லை என்றால், அவ்வளவு கசப்பான மருந்தை நீங்கள் எடுக்கமாட்டீர்கள் என்றால், நாம் ஆயுர்வேதத்தை தேர்ந்தெடுப்போம். சித்த வைத்தியமும் ஓரளவு ஆயுர்வேதமும் முறையான உணவும் உடற்பயிற்சியும் கொண்டு, ஒருவரால் சுலபமாக இதை சரிசெய்ய முடியும்.

#4 சிறுதானிய உணவு

சிறுதானிய உணவு, கேழ்வரகு தோசை, Millet Food, Ragi Dosa

சிறுதானியங்களை சமைப்பதற்கு நேரம் எடுக்கும். அரிசியைவிட, சிறுதானியங்கள் வேக அதிக நேரம் எடுக்கும். ஆனால் அது இன்னும் அதிக பலன்களைத் தரும். இது மிக மெதுவாக சர்க்கரையை விடுவிக்கும். திடீரென்று சர்க்கரையை அது அதிகமாக்காது. சிறுதானியம் சாப்பிட்டால் அது சர்க்கரையை மிக மெதுவாக விடுவிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயால் கஷ்டப்பட்டாலோ, அவர்கள் உயிருக்கே சர்க்கரை நோயால் ஆபத்து இருந்தாலோ, ராகியும் மற்ற சிறுதானியங்களும் அற்புதமாக வேலை செய்யும்.

35 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி வாழ்வின் அங்கங்கள்தான். இதிலிருந்து முற்றிலும் விடுபடும் வழியைச் சொல்கிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்...

டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்:

வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். காபி தயாரிக்கும் ஆயத்தம் நடக்கிறது. அன்புடன் கேட்கிறார்கள்... ‘‘காபியில சுகர் சேர்க்கலாமா?"

சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்க்கைமுறையைச் சரியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற நாம், அது வருவதற்கு முன்பு நமது வாழ்க்கைமுறையைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த நோயைத் தடுக்க ஏன் தயாராக இல்லை?

40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள். ‘‘ஆமாமா, சுகர், பி.பி எல்லாம் இருக்கு. வேலை டென்ஷன் பாருங்க!’’ என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கென்று இப்போதெல்லாம் இனிப்புகளும் சாக்கலேட்டுகளும் பிரத்யேகமாகத் தயாராகின்றன. சர்க்கரை நோய் இப்போது இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட வர ஆரம்பித்துவிட்டது. சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்க்கைமுறையைச் சரியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற நாம், அது வருவதற்கு முன்பு நமது வாழ்க்கைமுறையைச் சரிபடுத்திக்கொண்டு அந்த நோயைத் தடுக்க ஏன் தயாராக இல்லை?

ரத்தத்தில் அதிக அளவில் குளுகோஸ் சேரும்போது, அதை நீரிழிவு நோய் என்கிறோம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால், இந்த நோய் வரக்கூடும். உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்கள்!

நீரிழிவு நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் எடை இழத்தல், அதிக சோர்வு, பார்வை மங்கல், அடிக்கடி நோய்க்கிருமிகள் தொற்றுவது, உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் ஆகியவை.

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

மேற்கண்ட நோய் அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சிலர் இந்த அறிகுறிகள் இல்லாமலேகூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் வராமல் தடுப்பதிலும் அல்லது வந்தபின் உடலைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து உடல் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது!

காரணங்கள்:

45 வயதைத் தாண்டுவது, அதிக உடல் எடை (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம் (140/90 அல்லது அதற்கும் மேல் இருப்பது), அதிகக் கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக இருக்கின்றன.

பல நோய்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் மன அழுத்தம் (stress) நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றியும் இந்த நோய் வரக்கூடிய காரணங்கள் பற்றித் தெரியாமல் இருப்பதுவும் அதிகமானோர் இந்த நோயைப் பெறக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும் இந்நோயை நாம் நிச்சயமாகத் தடுக்க முடியும்!

சர்க்கரை நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம்:

மேற்கண்ட காரணங்களில் பலவற்றை நாம் சரிசெய்து கொள்ள முடியும். நாம் உண்ணும் உணவில் கவனம் எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை இந்நோய் வராமல் தடுப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி கொழுப்பைக் கரைத்து சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

ஆங்கில மருத்துவம் இந்த நோயை, உடலில் உள்ள குறையாகவே பார்க்கிறது. எனவே உடற்குறைக்கான தீர்வுகளையே அம்மருத்துவம் நாடுகிறது.

ஆயுர்வேதத்தில், நீரிழிவு கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கபம் சம்பந்தப்பட்ட நோய்களில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஜீரண சக்தி குறைவாக இருக்கும்போது அதிக அளவிலான சர்க்கரை ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. ஆயுர்வேதாவில் மூலிகைச் சிகிச்சையாக மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். தினமும் மஞ்சள் எடுத்துக் கொள்வது சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மேலும் தினமும் வேப்ப உருண்டை சாப்பிடுவது இன்சுலின் சுரப்பதை அதிகமாக்குகிறது.

நோய்கள் பற்றிய யோகாவின் கருத்து

ஆஸ்த்மா, நீரிழிவு, ரத்த அழுத்தம், படபடப்பு போன்றவை ஆதிஜ வியாதிகள் என்றும் நோய்க்கிருமிகள் மற்றும் காயங்கள் ஆகியவை ஆனந்திஜ வியாதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனந்திஜ வியாதிகளுக்கு உடலளவில் சிகிச்சை தேவைப்படுகிறது.

ஆதிஜ வியாதிகளுக்கு உடலின் 5 அடுக்குகளில் ஒன்றான மனோமய கோஷாவில் ஏற்படும் பாதிப்பு அதாவது உணர்ச்சிகளால் ஏற்படும் மனப் பாதிப்புகளும் ஒரு காரணம். மனோமய கோஷாவில் ஏற்படும் பாதிப்புகள் சரியாகாதபோது, பிராணமய கோஷாவில் சமநிலையற்ற தன்மை ஏற்படுகிறது. அதன் காரணமாக வரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உடலில் நோய்களாக வருகின்றன. இந்த நோய்களுக்கு பலவகைக் காரணங்கள் இருப்பதால், உடலளவில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை தருவது முழுமையான பயனைத் தராது. யோகா வெளிப்படையாகவும் மற்றும் சூட்சுமமாகவும் வேலை செய்கிறது. யோகா உடலின் 5 அடுக்குகளையும் சமநிலைப்படுத்துவதால் முழு நலன் கிடைக்கிறது.

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் உடலின் இயல்பான தன்மையைத் தூண்டிவிடுவதுதான் யோகாவின் வழியாக இருக்கிறது!

யோகா எப்படி வேலை செய்கிறது?

தினமும் யோகப் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை குறைகின்றன. நோய் அறிகுறிகளும் வேகமாகக் குறைந்துவிடுகின்றன. மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்கிறது. மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாட்டில் முன்னேற்றம் கிடைக்கிறது.

மன அழுத்தம் குறைந்து மன அளவில் சமநிலை ஏற்படுவதால், ஒருவரின் நடத்தை நிலையிலும் மாற்றம் தெரிகிறது. ஆசனப் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளின்போது வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதால், கணையம் இன்சுலினை சுரப்பது அதிகமாகிறது. பயிற்சிகளின்போது தசைநார்கள் அதிக அளவில் குளுகோஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவையும் வேகமாகக் குறைகிறது.

கணையத்தின் சுரப்பு தானியங்கி நரம்பு மண்டலங்களால் நிர்வகிக்கப்படுகிறது. யோகப் பயிற்சிகள் தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமநிலைப்படுத்துவதால் நோயை நிர்வகிப்பது எளிதாகிறது.

உடலில் உள்ள 5 பிராண சக்திகளில் வியானப் பிராணாவும் ஒன்று. யோகப் பயிற்சிகள் காரணமாக வியானப் பிராணாவின் இயக்கம் சீராகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் காயம் ஏற்படும்போது இந்த சீரான இயக்கம் காரணமாக காயங்கள் விரைவில் குணமடைகின்றன!

நன்றி ஈஷாவுக்கு!

2005ல் என் 42 வயதில், எனக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. என் ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகமாக இருந்ததால், 2 விதமான மாத்திரை எடுக்க வேண்டியிருந்தது. எனக்கு மிகுந்த மன உளைச்சலை இது ஏற்படுத்தியது. பிறகு யோகா பற்றி கேள்விப்பட்டு ஈஷாவில் யோகப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அங்கு கற்றுத்தரப்பட்ட ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தேன். 2 வருடங்களில் என்னுடைய சர்க்கரை அளவு படிப்படியாகக் குறைந்து இப்போது நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்போது நான் ஒரு மாத்திரை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். என்னால் முன்பு போல் சுறுசுறுப்பாகவும் மன உளைச்சல் இல்லாமலும் என் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வர முடிகிறது!

- திரு. வசந்த், மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை