IYO-Blog-Mid-Banner

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது.

மலச்சிக்கல் (Constipation meaning in tamil)

ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது.

நபருக்கு நபர் குடலின் செயல்பாடுகள் மாறுபடும். வாழ்வில் எல்லோருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். இது சில காலம் நீடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும்.

நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு இரசாயனங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது. தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டவுடன், மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது.

மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்:

 • உணவுமுறையில் மாற்றம்
 • குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது
 • தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை
 • இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள்
 • உடல் உழைப்பின்மை
 • அதிக மனஅழுத்தம்
 • பிரயாணம்
 • மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது
 • பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.

மருத்துவக் காரணங்கள்:

 • பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது
 • தைராய்டு குறைவாகச் சுரப்பது
 • சர்க்கரை நோய்
 • பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.

எவ்வாறு விடுபடுவது:

 • வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள், life style changes

 • பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும்.

நார்ச்சத்துள்ள உணவுகள், Fiber rich food

 • நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

திரவ உணவுகள், Liquid food

 • தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

உடற்பயிற்சி, physical excercise

 • மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும்.

மலச்சிக்கல், Constipation in tamil, Malachikkal, Workload

 • எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும்.

தளர்வு நிலை, Relaxed state

மருந்துகள்:

இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும்.

ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்:

மலத்தில் இரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால் ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் - சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம். வயிற்றுப் புண், ரத்த நாளங்களின் கோளாறுகள் போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும். ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகளும் மலத்தைக் கறுப்பு நிறமாக்கும்.

ஆஸ்பிரின் மற்றும் புரூஃபன் போன்ற வலி மாத்திரைகளைத் தேவைக்கதிகமாக உட்கொண்டால் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ளவும்.

வயிற்றுப் போக்கு:

வயிற்றுப்போக்கு, Diarrhea

மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

வயிற்றுப் போக்கின் அறிகுறிகள்:

வயிற்றுப் போக்குடன், அதன் காரணியைப் பொறுத்து, வயிற்றில் வலி, அசௌகரியம், உப்புசம், குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, ஜுரமோ அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கோ நேரிடலாம்.

வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது?

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும் ஒட்டுண்ணிகளாலும் தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலில் உள்ள மற்ற நோய்களாலும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

தொற்றுநோய்க் கிருமிகள் உணவு மற்றும் தண்ணீர் மூலமாக நமது உடலுக்குள் செல்கிறது. சிலரால் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை ஜீரணிக்க முடியாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சில வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள், பெருங்குடலில் எரிச்சல் மற்றும் தொற்றால் ஏற்படும் வியாதிகள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு:

மேற்சொன்ன காரணங்களினால் குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். குறிப்பாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வறட்சி எளிதாக ஏற்பட்டு இறக்கவும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக நீர் அல்லது திரவங்கள் கொடுத்து வறட்சியைச் சரி செய்ய வேண்டும்.

வயிற்றுப் போக்கின்போது மலத்தில் ரத்தம் அல்லது சளி, கறுப்பான நிறத்தில் மலம், ஜுரம், அத்துடன் வாய், தோல், நாக்கு உலர்தல் போன்றவை இருந்தால் உடனே மருத்துவ உதவி தேவை.

நீர் வறட்சி (Dehydration)

நீர் வறட்சி, Dehydration

வயிற்றுப் போக்கின்போது மலத்துடன், நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே சரி செய்யாவிட்டால் இது ஆபத்தில் முடியலாம்.
 

வறட்சியின் அறிகுறிகள்:

 • தாகம்
 • சிறுநீர் கழித்தல் குறைவது, எரிச்சலுடன் சிறுநீர் கழிவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம்
 • உடல் உஷ்ணம்
 • சருமம் உலர்தல்
 • அசதி
 • தலைச் சுற்றல்

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

உலர்ந்த நாக்கு, உதடு மற்றும் சருமம், குழி விழுந்த கண்கள், கன்னம், காரணமின்றி அழுவது, அதிக ஜுரம், 3 மணி நேரங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காதது, அழும்பொழுது கண்ணீர் வராதது.

வறட்சியை எவ்வாறு தடுப்பது?

நீர் வறட்சி, drink water, Dehydration

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக இழந்த நீர் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்ளலாம். (ஒரு லிட்டர் சுத்தமான நீர் அல்லது காய்ச்சி ஆறிய நீர் + 1 டீஸ்பூன் உப்பு + 8 டீஸ்பூன் சர்க்கரை)

குடலில் ஏற்படும் நோய்கள்:

மலச்சிக்கல், Constipation in tamil, Malachikkal

கீழ்க்கண்டவை அனைத்தும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்படுத்தும்.
 

குடல் எரிவு வியாதிகள் (Inflammatory bowel disease)

இந்த வியாதி குடல் எங்கிலும் எரிச்சலால் புண் ஏற்படுத்தும். பொதுவாக இது 15 - 30 வயதுகளில் ஆரம்பமாகும். வயிற்று வலி மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும். இது தவிர தோலில் புண், மூட்டுவலி, எடை குறைவு, அசதி, இரத்த சோகை போன்றவை ஏற்படும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவை இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும்.

குடல் புற்றுநோய்:

மலம் கழித்தலில் மாற்றம், வயிற்றில் அசௌகரியம், ரத்தம் கலந்த மலம் போன்றவை குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இந்நோய் ஏற்படும். குடலில் எரிவு நோய்கள், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல், ஏற்கனவே குடும்பத்தாருக்கு குடல் புற்றுநோய் இருப்பது போன்றவை இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

இரிடபிள் பௌவல் சின்றோம் (Irritable bowel syndrome)

குடலின் செயல்பாடுகளை தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. சிலவகையான உணவு மற்றும் மனஅழுத்தத்திற்கு சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவு உண்டாக்கும். அதன் காரணமாக, வயிற்றில் வலி, மலம் கழித்த பிறகு வயிற்றுவலி குறைதல், உப்புசம், மலத்தில் சளி ஆகியவை ஏற்படும். நோய்க்கான காரணிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக உணவு, சாக்லேட், பால், காபி, டீ போன்ற உணவு வகைகள், சிலவகை மருந்துகள், உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் இவை அனைத்தும் இந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

மலச்சிக்கலுக்கு யோகா எப்படி உதவும்?, Yoga to relieve constipation

 • யோகா உடலை பலவகையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் செய்கிறது.
 • உடலை எப்போதும் தளர்வான நிலையில் இருக்கச் செய்வதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடலின் பல்வேறு செயல்கள் திறம்பட நடக்கிறது.
 • யோகா, குறிப்பாக, தானியங்கி மண்டலத்தை சமன் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலின் செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது சமனாக இருந்தாலே, குடலில் ஏற்படும் கோளாறுகள் குறைகின்றன.

ஜீரண மண்டலம், மலச்சிக்கல் தொடர்பான பிற பதிவுகள்:

1) ஜீரண மண்டலம் - பிரச்சனைகளும், தீர்வும்!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது. இத்தகைய மண்டலத்தின் முதல் பாதியில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிப் பார்ப்போம்.

2) உளுந்து உண்டால், வேண்டாம் மருந்து!

உமையாள் பாட்டி இம்முறை பேசவிருப்பது உளுந்தைப் பற்றித்தான். உளுந்து எனும் பருப்புவகை நமக்கு நல்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

3) ஆரோக்கிய வாழ்விற்கு வாழைப்பழங்கள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. என்னதான் கடைதோறும் வாழைத்தார்கள் தொங்கினாலும், எத்தனை பேர் தினமும் வாழைப் பழங்களை சாப்பிட நினைக்கிறோம்?! வாழைப்பழங்களில் உள்ள சத்துக்களையும் அதனைச் சாப்பிடுவதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த பதிவு.

4) எள் சாப்பிட்டு அள்ளலாம் ஆரோக்கியம்!

எள்ளின் மருத்துவ குணங்கள் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் வாங்க!

5) சோறு… எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது?

தமிழ்நாட்டின் பிரதான உணவான அரிசி சாதம் நல்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உமையாள் பாட்டி கூற அறியலாம் இங்கே! சோறு… எப்படி சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது…? தொடர்ந்து படித்தறியுங்கள்!