ஆரோக்கிய வாழ்விற்கு வாழைப்பழங்கள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. என்னதான் கடைதோறும் வாழைத்தார்கள் தொங்கினாலும், எத்தனை பேர் தினமும் வாழைப் பழங்களை சாப்பிட நினைக்கிறோம்?! வாழைப்பழங்களில் உள்ள சத்துக்களையும் அதனைச் சாப்பிடுவதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த பதிவு.
 

நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 11

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. என்னதான் கடைதோறும் வாழைத்தார்கள் தொங்கினாலும், எத்தனை பேர் தினமும் வாழைப் பழங்களை சாப்பிட நினைக்கிறோம்?! வாழைப்பழங்களில் உள்ள சத்துக்களையும் அதனைச் சாப்பிடுவதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த பதிவு.

உலகிலேயே மிகவும் பிரபலமான அதிக அளவில் மக்களால் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம்தான்! மலைப்பிரதேசங்களிலும். சமதரைகளிலும் வளரும் வாழைமரம் தனது பூ, காய், கனி, தண்டு என அனைத்து விதத்திலும் உணவாகப் பயன்படுவது நம் நாட்டில் மட்டும்தான்.

இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சக்தி, ஒன்றரை மணி நேரம் உடலுழைத்து வேலை செய்ய போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடம்பு சோர்வாக இருக்கிறதா? மனதில் அழுத்தம் ஏற்பட்டது போன்ற உணர்வா? இரண்டு வாழைப்பழங்களை உரித்து வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு விடும். எதனால்? வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், க்ளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை இருப்பதால், உண்டவுடன் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சக்தி, ஒன்றரை மணி நேரம் உடலுழைத்து வேலை செய்ய போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் விளையாட்டு வீரர்கள் வாழைப்பழத்தைத் தங்கள் கைவசம் எப்போதும் வைத்திருப்பார்கள்.

வாழையின் மருத்துவ பலன்கள்:

  • இது நம் உடலில் தோன்றக்கூடிய பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.
  • இதில் உள்ள நார்ச்சத்து, பெரும்பாலானோர் அவதிப்படும் மலச்சிக்கல் தொந்தரவிலிருந்து விடுதலை அளிக்கிறது.
  • உடலில் நல்ல இரத்த ஓட்டம் அமைய 'ஹீமோக்ளோபின்' உற்பத்தியை அதிகரித்து, உடலில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
  • பொட்டாசியம் சத்து அதிகமாக, அதே சமயத்தில் உப்பு சத்து குறைவாக வாழைப்பழத்தில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இப்பழம் மிக ஏற்ற உணவாகும்.
  • இதே பொட்டாசியம் சத்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் இப்பழம் எப்படி உதவியாயிருக்கிறது? வாழைப் பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒரு வகை புரதம் உடலில் சேரும்போது 'செரடோனின்' என்ற பொருளாக மாறுகிறது. இதுவே உடலை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிக அளவு வேலை பளு உள்ளவர்களுக்கு, உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இந்த நிலை ஏற்படாமலிருக்க அவ்வப்போது ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதோடு வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, நரம்புகளுக்குத் தளர்ச்சி அடையாமல் தெம்பூட்டுகிறது.

நம் ஊரில் மதிய உணவு, இரவு உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம். வயிற்றிற்கு, குடலுக்கு இதமாக உள்ள இப்பழம் வயிற்றில் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. எளிமையாகப் பயிரிடப்பட்டு, எல்லா இடங்களிலும், வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழம் விலையும் மலிவாகவே உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்தவரின் உதவியை நாட வேண்டாம் என்று. தினம் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டால், நோயே உங்களை அண்டாதே!

அடுத்த வாரம்...

அன்னாசி பழங்களின் மருத்துவ குணங்களையும் அவற்றில் நிறைந்துள்ள சத்துக்களையும் பற்றி அறிந்துகொள்ள காத்திருங்கள்!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1