கொல்லைப்புற இரகசியம் - பகுதி 13

உமையாள் பாட்டி இம்முறை பேசவிருப்பது உளுந்தைப் பற்றித்தான். உளுந்து எனும் பருப்புவகை நமக்கு நல்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

உரலில் வலக்கையால் மாவைத் தள்ள, இடக்கை ஆட்டுக்கல்லை சுழற்றிக்கொண்டிருந்தது. ஆம், அப்படி பக்குவமாக மாவாட்டிக்கொண்டிருந்தது உமையாள் பாட்டிதான்!

"என்ன பாட்டி... கரண்ட் இல்லையா இல்ல, கிரைண்டர் ரிப்பேரா?" பாட்டியிடம் கேட்டுக்கொண்டே அருகிலிருந்த மரப்பலகை இருக்கையை பாட்டியின் அருகில் போட்டு அமர்ந்தேன்.

"வாப்பா... வா! நீ வந்தது நல்லதா போச்சு. மாவ கொஞ்சம் வெளியில போகாம அப்படியே தள்ளிவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்யேன், கொஞ்சம் புண்ணியமா போகும்!" என்னிடம் உதவி கோரினாள் உமையாள் பாட்டி.

"சரி பாட்டி... நானும் இட்லி சாப்பிடணுமில்ல, அதனால நான் ஹெல்ப் பண்றேன்." கையை வாஷ் செய்துவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்தேன்.

"இது இட்லி மாவு இல்ல, உளுந்த வடைக்கான மாவு" பாட்டி சொல்லி சிரித்தாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"என்ன விசேஷம் பாட்டி! வடைகிடையெல்லாம் அமர்க்களப்படுது...?!"

"விசேஷமெல்லாம் ஒன்னுமில்ல, நான் அடிக்கடி உளுந்தங் களி கிண்டி சாப்பிடுவேன். இன்னிக்கு வடை மேல ஆச வந்திடுச்சு! இந்த உளுந்த நம்ம உணவுல சேத்துக்கறது அவசியமானது, அதான்! " பாட்டி பேசிக்கொண்டே மாவின் பதம் பார்த்துக்கொண்டாள்.

"ஓ உளுந்து அவ்வளவு முக்கியமானதா?!"

"பின்ன... உளுந்த அவ்வளவு சாதாரணமா நெனச்சிடாத! நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு. அதுமட்டுமில்லாம, பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து. அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்த உணவுல சேத்தா மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும். அப்புறம்... இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது இந்த உளுந்து."

"ஓ பாட்டி... பாட்டி...! நிறுத்துங்க மாவு நல்ல பதத்துக்கு வந்திருச்சு, எடுத்து சட்டியில அள்ளுங்க!

"ஆங்... சொல்ல மறந்துட்டேன்பா! உளுந்த வடை, உளுந்தங் கஞ்சி சாப்பிட்டு வந்தா உன்ன மாதிரி இளைத்த உடலெல்லாம் பயில்வான் மாதிரி ஆயிடலாம்!" பாட்டி கேலிப்பார்வை பார்த்தபடியே மாவினை சட்டியில் அள்ளினாள்.

நான் வடையை ருசிக்கும் ஆர்வத்தில் பாட்டியின் வடைக்காக காத்திருந்தேன்!

குறிப்புகள்:

  • உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
  • 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
  • வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் (External use) உதவும். (உளுந்து தைலம் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கும்)

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்