சத்குரு: சில வருடங்களுக்கு முன்னர் உலக பொருளாதார மாநாட்டிற்கு நான் சென்றிருந்தபோது அனைவரும் மிகுதியான மனச்சோர்வில் இருந்தனர். ஏனெனில் அப்போதுதான் உலகில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருந்தது. அங்கு உரையாற்றுவதற்கு அவர்கள் எனக்கு ஒரு தலைப்பை கொடுத்திருந்தனர்: "பொருளாதாரப் பின்னடைவும் மனச்சோர்வும்." அந்த அரங்கம் முழுக்க மக்கள் நிரம்பி இருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் மனச்சோர்வை எவ்வாறு வெல்வது என்பது பற்றி அறிய விருப்பமாக இருந்தனர். நான் கூறினேன், "பொருளாதார பின்னடைவு என்பதே மோசமான ஒன்றுதான். அதற்கும் மேலாக நீங்களும் மனச்சோர்வு அடையத் தேவையில்லை." நம் பொருளாதார அமைப்பை நாம் கட்டமைத்திருக்கும் விதம், மேலும் நம் பொருளாதார இயந்திரத்தை நாம் செயல்படுத்தி வரும் முறை, எவ்வாறெனில் வெற்றி பெறாவிட்டால் நாம் மனச்சோர்வு அடைகிறோம், வெற்றி பெற்றால் மீளாத் தண்டனைக்கு ஆளாகிறோம். எனவே நான் கூறினேன், "நீங்கள் மனச்சோர்வுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று.

இதே முறையில் நாம் செயல்பட்டுக்கொண்டே இருந்தால், அடுத்த இருபது முப்பது வருடங்களுக்குள் ஒரு பெரிய பேரழிவு நிகழப் போகிறது.

லிவிங் பிளானட் அறிக்கை கூறுவது யாதெனில், ஒரு சராசரி அமெரிக்க குடிமகன் வாழும் வாழ்க்கையை உலகில் உள்ள 700 கோடி மக்களும் வாழ வேண்டுமெனில் நமக்கு நான்கரை பூமிகள் தேவைப்படும். ஆனால் நம்மிடம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. உலகை சரிசெய்கிறோம் என்று நாம் மிக அதிகமான நேரத்தை செலவழித்துவிட்டோம். பொதுவாக சரிசெய்வது என்பதற்கு மேம்படுத்துவது என்று பொருள். ஆனால், நாம் சரிசெய்கிறோம் என்ற வகையில் அதை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றுவிட்டோம் - எந்த அளவு எனில், இதே முறையில் நாம் செயல்பட்டுக்கொண்டே இருந்தால், அடுத்த இருபது முப்பது வருடங்களுக்குள் ஒரு பெரிய பேரழிவு நிகழப் போகிறது.

குறைந்தபட்சம் இந்த வைரஸ் இடைநிறுத்த பொத்தானை அழுத்தியுள்ளது. அதனால் இந்த பொருளாதார இயந்திரத்தை சரிசெய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த பொருளாதார இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது நம்மால் அதை சரிசெய்ய முடியாது. ஆனால் அதை சரிசெய்ய இதுவே சரியான தருணம். மேலும் இந்த உலகை வேறு எவ்வாறு நாம் செயல்படுத்த முடியும் என்பதை உற்றுநோக்குவதற்கான தருணமும் இதுதான்.

விழிப்புணர்வான நுகர்வோர்

தற்போது உற்பத்தி அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எதற்காக இவ்வாறு அதிகரித்து வருகிறது? வளர்ச்சி மற்றும் செழிப்பு என்பதைப் பற்றிய அடிப்படை எண்ணத்தையே நாம் கட்டாயம் மறுஆய்வு செய்ய வேண்டும். செழிப்பு என்பதற்கு இன்னும் அதிகம், இன்னும் அதிகம் என்று அர்த்தமில்லை. வாழ்வதற்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது. முடிவில்லாமல் இன்னும் அதிகம், இன்னும் அதிகம் என்று நாம் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. நம்மிடம் இருப்பவற்றை வைத்து அனைவருக்குமான நல்வாழ்வை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி சமுதாயங்கள் சிந்திக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில், ஸ்மார்ட்போன்கள் வாங்கும் 40 சதவிகித மக்கள் அதை ஒரு வருடம் மட்டும்தான் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் 50 கோடி ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்கப்படாமல் இருக்கின்றன. அவை மக்களின் வீடுகளில் எங்கோ மூலையில் கிடக்கின்றன. ஏனெனில் அவர்கள் இப்போது புதிய மாடலை வாங்கிவிட்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலநிலை மாற்றங்கள் கட்டுக்குள் அடங்காமல் செல்லும்போது நாம் விழப் போகும் குழி இந்த வைரஸைக் காட்டிலும் மிக மோசமானதாக இருக்கும்.

ஒரு அலைபேசியை நீங்கள் வாங்கினால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதை நீங்கள் கட்டாயம் உபயோகிக்க வேண்டும் என்று நாம் ஏன் ஒரு சட்டத்தை இயற்றவில்லை? அல்லது அந்த அலைபேசி உடைந்துவிட்டால் அதை நீங்கள் ஒப்புவிக்க வேண்டும். அதைப்போலவே நீங்கள் ஒரு காரை வாங்கினால், அதை ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு குறிப்பிட்ட மைலேஜ் தூரம் கட்டாயம் உபயோகித்திருக்க வேண்டும். அதைப்போன்ற கட்டுப்பாடுகள் எக்கு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்களை தயாரிப்பதிலும் நாம் விதிக்க வேண்டும். இந்தத் துறைகளில் அடுத்த 25 வருடங்களுக்கு நாடுகள் தங்கள் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியாது. வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறிது விலக்கு கொடுக்கலாம். ஆனால் அந்த நாடுகள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பின்னர் அங்கு அவர்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நம் நுகரும் தன்மை பொறுப்பற்ற முறையில் கட்டுக்கடங்காமல் மேலும் மேலும் அதிகரிக்கும்.

ஒருகாலத்தில் அனைவருக்கும் ஆறு முதல் எட்டு குழந்தைகள் இருந்தனர். இன்று அனைவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்ற நிலைக்கு வந்துள்ளனர். பலர் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். குழந்தைகள் பற்றி நம்மால் இத்தகைய முடிவை எடுக்க முடியும்போது, அலைபேசி அல்லது கார் அல்லது மற்ற பிற பொருட்கள் குறித்து ஏன் எடுக்க முடியவில்லை? இப்போது நாம் இந்த முடிவை எடுக்காவிட்டால், அடுத்த 25 முதல் 30 வருடங்களுக்கு மட்டுமே இவ்வாறு நாம் மேலும் ஓடிக்கொண்டு இருப்போம். அதற்கு பிறகு இந்த வைரஸை விடவும் மிகவும் மோசமானதாக இருக்கும் ஒரு இடத்தை நாம் அடைவோம். காலநிலை மாற்றங்கள் கட்டுக்குள் அடங்காமல் செல்லும்போது நாம் விழப் போகும் குழி இந்த வைரஸைக் காட்டிலும் மிக மோசமானதாக இருக்கும்.

நிச்சயமாக மக்கள் இவ்வாறு கூறுவார்கள், "சத்குரு, நீங்கள் ஏற்கனவே காயமடைந்தவர்களை, மேலும் மோசமடைய செய்கிறீர்கள். எங்கள் தொழில்களை எவ்வாறு நிர்வகிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எவ்வாறு வேலைவாய்ப்பு அளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது நீங்கள் மேலும் சிராய்ப்பு ஏற்படும் வண்ணம் நாங்கள் கட்டாயம் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்." நான் அவ்வாறு செய்யவில்லை, இயற்கைதான் உங்களிடம் அவ்வாறு நடந்துகொள்கிறது. அதன் செய்தியை நாம் உற்று கவனிப்பது நமக்கு மிகவும் நல்லது.

கல்வியின் பரிணாமம்

தற்போது இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்வி முறை மனித சமூகங்களின் கடுமையான குறைபாடாக உள்ளது. இந்த குறைபாட்டினால்தான் மற்ற பிற பிரச்சனைகளும் உருவாக்கியுள்ளன. தற்போது மழலையர் பள்ளி முதற்கொண்டே மாணவர்களுக்கு "நீ முதலாம் மாணாக்கனாக வர வேண்டும்" என்று கூறப்பட்டு வருகிறது. இது அழிவுகரமான முறை. ஏனெனில் ஒரே ஒரு முதலாம் மாணாக்கன்தான் இருக்க முடியும் - அதுவும் நீங்கள். இதற்கு அர்த்தம் நீங்கள் தன்னைத்தானே உயர்வாக நினைக்கும் வெறித்தனமான ஆசை கொண்டவர் என்பதுதான். துரதிருஷ்டவசமாக இந்த அழிவுகரமான முறை எல்லா இடங்களிலும் நடந்தேறி வருகிறது. குறிப்பாக, இது பள்ளிகளில் உருவாகி, பின்னர் மிகப்பெரிய அளவில் உலகில் வெளிப்படுகிறது.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்த "வெகுஜன கல்வி" முறை மேற்கத்திய நாடுகளில் - அங்கு அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தொழில்மயமாக்கலுக்கு தீனிபோடும் வண்ணம் - உருவானது. அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித் தொகுப்பை அவர்கள் உருவாக்கினர். தனிநபரின் உணர்திறன், தனித்துவம், நுண்ணறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இது உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒரு வெகுஜன பயிற்சிமுறையை உருவாக்கினர். அதன்மூலம், ஒவ்வொரு மனிதரும் பொருளாதார செயல்பாட்டிற்கு ஏற்றவிதத்திலோ அல்லது பொருளாதார இயந்திரத்திற்கு உகந்த விதத்திலோ தயார் செய்யப்பட்டு வெளிவருகின்றனர்.

 

நான் பள்ளிக்கு செல்லும்போது ஏன் அனைவரும் கூடி ஒரு அறையில் அமர்ந்து ஒருவர் புத்தகம் வாசிப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அதனாலேயே நான் அங்கு மிக அரிதாகவே சென்றிருக்கின்றேன். என்னால் இந்த செயலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அதனால்தான் நான் எப்போதும் வெளியே தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். மக்களுக்கு கல்வி கற்பிக்க எத்தனை லட்ச சதுர அடியில் கட்டிடங்களை நாம் அமைத்துள்ளோம்? ஒரு காலத்தில் இது மிகவும் தேவை என்று நாம் நினைத்திருந்தோம். ஏனெனில் அப்போது நாம் பேரளவு உற்பத்தி என்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம் - அது தொழிலாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி. ஆனால் இன்றோ அறிவும் தகவலும் எல்லா இடங்களிலும் பெறக்கூடிய வகையில் இருக்கிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்று கருதுவதை நோக்கி அவர்கள் உழைக்கத் தேவையான ஊக்கத்தை அளிக்கும் ஒருவர்தான் உங்களுக்கு இப்போது தேவை.

கல்வி என்பது ஒரு வேலையை பெறுவது மட்டுமல்ல, அது ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கல்வி என்பது நம் தலையில் உள்ள தகவல்களின் குவியலாக இருக்கக்கூடாது. அது மனிதனின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக இருக்க வேண்டும். தற்போது ஒரு மனிதனாக வளர்ச்சி கொள்வது அவர் பார்வையை விரிவுபடுத்துவதாக அமையவில்லை. பெரும்பாலும் கல்வி என்பது தகவல்களை சேகரிப்பது, தேர்வில் தேர்ச்சி பெறுவது மற்றும் ஒரு வேலையை பெறுவது என்று ஆகிவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பொருளாதார நிலைமை இருந்த சூழலில் ஒரு வேலையைப் பெறுவதுதான் கல்வியின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்று பொருளாதார செழிப்பு வந்துவிட்ட சூழ்நிலையில் இந்த எண்ணம் மாற வேண்டும். கல்வி என்பது ஒரு வேலையை பெறுவது மட்டுமல்ல, அது ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

பத்து சதவிகிதம் அதிக விழிப்புணர்வான உலகம்

இப்போது நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன். ஒவ்வொரு நாளும் சுமார் எட்டாயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கின்றனர். தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்லும் 80 கோடி மக்களுக்கு உணவளிக்க ஒரு மாதத்துக்கு 970 முதல் 980 கோடி அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. அதே அளவு தொகையைத்தான் ஒவ்வொரு மாதமும் வீடியோ கேம்களுக்காக மக்கள் செலவழித்து வருகிறார்கள். மது, புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு உலகம் செலவழிக்கும் தொகை, உணவுக்கு செலவழிக்கும் தொகைக்கு சமமானது. உலகிலுள்ள மக்கள் உணவு இல்லாத காரணத்தினால் பட்டினியில் இருக்கவில்லை. அதற்கான காரணம், நாம் மனதளவில் சிதைந்து போய் இருப்பதினால்தான்.

நாம் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விதத்தில் ஒரு 10 சதவிகிதம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் இந்த கோவிட் நோய்த்தொற்றுக்கு பிந்தைய உலகம் ஒரு அற்புதமான உலகமாக இருக்கும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நாம் வளங்கள் நிறைந்துள்ளோம், தொழில்நுட்பங்களில் வளர்ந்துள்ளோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் திறன் மற்றும் அறிவியல் நிறைந்து, அறிவு நிறைந்துள்ளோம். இன்று உலகிலுள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் நாம் எதிர்கொள்ளும் வகையில் நமக்குத் தேவைப்படும் எல்லா தொழில்நுட்பங்கள், வளங்கள் மற்றும் திறன்கள் உள்ளன. மனித வரலாற்றில் முன்னெப்போதும் இன்று இருப்பது போன்ற திறனோடு மனிதர்கள் இருந்ததில்லை. இப்போது நம்மிடம் இல்லாத ஒன்று விழிப்புணர்வுதான். நாம் விழிப்புணர்வான மனித சமுதாயத்தையும், விழிப்புணர்வான உலகையும் உருவாக்க வேண்டும். நாம் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விதத்தில் ஒரு 10 சதவிகிதம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் இந்த கோவிட் நோய்த்தொற்றுக்கு பிந்தைய உலகம் ஒரு அற்புதமான உலகமாக இருக்கும். இத்தகைய ஒரு சாத்தியத்தை நோக்கி இந்த தலைமுறையினரான நாம் இருக்கிறோம் - அதை நடைமுறைப்படுத்துவோமா என்பதுதான் நமக்கு முன் இருக்கும் கேள்வி.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் மூலம் சவலான இந்நேரத்தை நன்மையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா செயள் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு பாதிக் கட்டணத்திலும் இது வழங்கப்படுகிறது.