உள்ளடக்கம்
  1. நவராத்திரி என்றால் என்ன?
  2. நவராத்திரி சிறப்புகள் - இது பெண்தன்மையின் நேரம்
  3. எதற்காக நவராத்திரி விரதம்?
  4. தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடும் நவராத்திரி
  5. நவராத்திரி விளக்கம்
  6. நவராத்திரி - 9 நாட்கள், 3 தன்மைகள்
  7. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் முக்கியத்துவம் - தமஸ்
  8. நவராத்திரியின் மத்திய மூன்று நாட்களின் முக்கியத்துவம் - ரஜஸ்
  9. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களின் முக்கியத்துவம் - சத்வம்
  10. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் - ஆயுதபூஜை அல்லது மஹாநவமி
  11. நவராத்திரியைக் கொண்டாடும் முறை

நவராத்திரி என்றால் என்ன?

சத்குரு:

இந்த மனித உடலமைப்பையும், இது எவ்வாறு பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களோடு தொடர்பில் இருக்கிறது என்பதையும் ஆழமாக கவனித்து, அதில் இந்த கலாச்சாரம் தனது வேரை ஊன்றியிருக்கிறது. நமது திருவிழாக்களை நாம் எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் இது பிரதிபலிக்கிறது. நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண் தன்மையாக கருதப்படுகிறது. தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிக்கு, இது மிகச் சிறப்பான நேரம். ஒன்பதாவது நாள் நவமி என்று வழங்கப்படுகிறது. பௌர்ணமியை ஒட்டிய ஒன்றரை நாட்கள் சமநிலையான காலம். மீதமுள்ள 18 நாட்கள் இயற்கையிலேயே ஆண் தன்மையானதாக இருக்கிறது. மாதத்தின் பெண்மை மிளிரும் காலம் தேவியைப் பற்றியதாக இருக்கிறது. எனவேதான் இந்த கலாச்சாரத்தில், நவமி வரையிலான அனைத்து வழிபாடுகளும் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.

ஒரு வருடத்தில், பன்னிரண்டு முறை இந்த ஒன்பது நாள் காலகட்டம் இருக்கிறது.‌ இதில் ஒவ்வொன்றும் தெய்வீகப் பெண்தன்மையின் அல்லது தேவியின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபரை ஒட்டி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது, ஏனென்றால் இது கற்றலின்‌ தெய்வமான சாரதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனிதனால் பல செயல்களை செய்யமுடியும் என்றாலும், இந்த கலாச்சாரத்தில் கற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன - ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக்கொள்ள முடியாது.  மனிதனாக இருப்பதன் பெருமையே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான்.

நவராத்திரி சிறப்புகள் - பெண்தன்மையின் நேரம்

நவராத்திரி சிறப்புகள், Navarathri in Tamil

"ஆண் தன்மை" "பெண் தன்மை" என்று நாம் குறிப்பிடும்போது, பாலினம் பற்றி நாம் பேசவில்லை; இங்கு இருப்பில் உள்ள அடிப்படையான தன்மைகளை, எதிரெதிர் துருவங்களைப் பற்றியே நாம் பேசுகிறோம். பொருள்தன்மையான உலகம் எதிரெதிர் துருவங்களுக்கு இடையே மட்டுமே இருக்க முடியும் - இரவும் பகலும், இருளும் வெளிச்சமும், ஆண்தன்மையும் பெண்தன்மையும், ஆணும் பெண்ணும். ஆண் என்றும், பெண் என்றும் குறிப்பிடும்போது, அது ஆண்தன்மை மற்றும் பெண்தன்மையின் வெளிப்பாடே, தனியாக அவர்களுக்கென குணங்கள் ஏதுமில்லை.

உத்தராயணத்திற்கு பிறகு வரும் காலகட்டம் பெண்தன்மையின் நேரம். வருடத்தின் இந்த காலகட்டம் இயல்பாகவே பெண்தன்மைக்கு ஆதரவாக இருப்பதால், குறிப்பிட்ட சமூகங்கள் பெண்தன்மையை நிலைநிறுத்த விழிப்புணர்வாக செயலாற்றி உள்ளன, ஏனெனில் பெரிதாக ஊக்கமளிக்க தேவையில்லாமலேயே ஆண்தன்மை தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெண்தன்மைக்கு ஊக்கம் தேவை - இல்லையெனில் பெண்தன்மை பின்புலத்திற்கு சென்றுவிடும்.

பெண்தன்மை பின்புலத்திற்கு சென்றுவிட்ட எந்த ஒரு சமூகமாக இருந்தாலும், அவர்கள் கைப்பற்றுபவர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறினால், அவர்கள் வாழ்க்கையின் வெறும் கூடு மீது அமர்ந்திருப்பார்கள். உலகம் முழுவதையும் அவர்கள் வெற்றி கொண்டிருப்பார்கள், ஆனால் உலகம் பற்றிய எந்த ருசியும் தங்களிடம் இல்லை என்பதை காண்பார்கள். ஆண்தன்மையின் நிலை இப்படிதான் இருக்கிறது. உலக வாழ்வில் உச்சியை‌ அடைந்த பிறகு, சிகரத்தில் இருந்துக்கொண்டு துன்பமாக உணர்வார்கள்.

நவராத்திரி விரதம் இருப்பது எதற்கு?

நவராத்திரி விரதம், Navrathri Fasting

 உங்கள் இல்லம், கலாச்சாரம் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வாக பெண்தன்மையை கொண்டுவருவது மிக முக்கியமானது. நீங்கள் இதை முறையாக நடத்திக் கொள்வதற்கு ஏதுவாக இந்த பாரத கலாச்சாரம் பல செயல்முறைகள், சடங்குகள் மற்றும் பல கருவிகளை உருவாக்கியது. இது நவராத்திரி காலம் என்பது பற்றிய கவனம் உங்களுக்கு இல்லாமல் போகக்கூடும், எனவே இந்த ஒன்பது நாட்களும் மூன்று வேளையும் முழு உணவு உண்பதை தவிர்த்து, விரதம் இரு என்றார்கள்.‌ வயிற்றில் உணவு இருந்தால், இது என்ன நாள், கிழமை என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் உபவாசத்தில் இருந்தால், இந்த நாள் எப்படிப்பட்டது எனும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். இப்படியே ஒன்பதாவது நாளை அடைகையில், நீங்கள் மிகுந்த விழிப்புணர்வில் இருப்பீர்கள்! எனவே உங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும், உடலில் குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிகழவும் நீங்கள் உபவாசம் இருக்க வேண்டியிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடும் நவராத்திரி

நவராத்திரி என்பது வெவ்வேறு தேவிகளைப் பற்றியது. அதில் சிலர் மென்மையாக, அற்புதமானவளாக இருக்கிறார்கள். ஒரு சில தேவிகள் ஆக்ரோஷமாக, பயங்கரமாக அல்லது அச்சமூட்டும் விதத்திலும் இருக்கிறார்கள். உங்கள் தலையை துண்டித்தெறியும் பெண்ணையும் வணங்கும் ஒரே கலாச்சாரம் இதுதான். இது ஏனென்றால், ஒருவரின் புத்திசாலித்தனம், மேதமை, அறிவாற்றல் மற்றும் பிற திறன்களை நல்லொழுக்கத்தின் பலிபீடத்தில் மட்டும் ஒப்படைக்க நாம் விரும்பவில்லை. சமுதாயத்தை அணுகுவதற்கு உங்களுக்கு நல்லொழுக்கம் வாய்ப்பளிக்கும். உங்களிடம் நல்லொழுக்கம் இல்லையென்றால் சமுதாயம் உங்களை நிராகரிக்கும், ஆனால் வாழ்க்கை உங்களை நிராகரிக்காது. இந்த உலகில் நீங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால், எது நல்லது என்பதை உங்களிடம் அறிவுறுத்த இங்கே யாரும் இருக்கமாட்டார்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களை மனதில் கொண்டே நீங்கள் நல்லமுறையில் நடந்து கொள்கிறீர்கள், ஆனால் உயிர் என்ற அடிப்படையில் பார்த்தால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த மனிதன் ஒரு உயிராக, தனது முழு சாத்தியத்திற்கு மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் மலர்வதை குறித்ததாகவே இருக்கிறது, பத்தாவது நாளான விஜயதசமி. வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது. அதாவது, நீங்கள் மலர்ந்திருக்கிறீர்கள்!

நவராத்திரி விளக்கம்

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரும் பெண்தன்மையின் மூன்று பரிமாணங்களான பூமி, சூரியன் மற்றும் சந்திரனை அல்லது தமஸ் (செயலற்ற நிலை), ரஜஸ் (செயல், வேட்கை), சத்வ (அனைத்தையும் கடந்த நிலை, அறிவாற்றல், தூய்மை) குணங்களைக் குறிக்கிறார்கள்.

வலிமை அல்லது அதிகாரத்தை விரும்புபவர்கள், தாயாக திகழும் பூமி தேவி, துர்க்கை அல்லது காளி ரூபங்களை வணங்குகிறார்கள். செல்வவளம் அல்லது பொருள்தன்மையான பரிசுகளை அடையும் ஆசை, வேட்கை உள்ளவர்கள் லட்சுமி அல்லது சூரியனை வணங்குகிறார்கள். அறிவாற்றலை வேண்டுபவர்களும், நிலையற்ற இந்த உடலின் எல்லைகளை கடந்து செல்ல விரும்புபவர்கள் அல்லது கரைந்துபோக விரும்புபவர்கள் சரஸ்வதி அல்லது சந்திரனை வணங்குகிறார்கள்.

நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இந்த அடிப்படையான குணங்களைக் கொண்டே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.

இது வெறும் குறியீடு அல்ல, சக்தி நிலையிலும் இது உண்மையே. மனிதர்களாக நாம் இந்த பூமியிலிருந்து தோன்றினோம், செயல்படுகிறோம். சில காலத்துக்குப் பிறகு, நாம் மீண்டும் செயலற்றவர்களாகி பூமியின் மடியிலேயே விழுந்து விடுகிறோம். இது தனி மனிதர்களாக நமக்கு மட்டுமல்ல, விண்மீன் கூட்டத்திற்கும் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் இதுவே நிகழ்கிறது. செயலற்ற நிலையில் இருந்து துவங்கி, இந்த பிரபஞ்சம் முழு வேகத்தில் செயல்பட்டு, மெதுவாக மீண்டும் செயலற்ற நிலைக்கு திரும்புகிறது. இது இப்படி இருந்தாலும், இந்த சுழற்சியை உடைக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.

மனிதர்களின் பிழைப்பிற்கும், நல்வாழ்வுக்கும் தேவியின் முதல் இரண்டு பரிமாணங்கள் தேவை. இவை எல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான ஆர்வம் மூன்றாவது பரிமாணம். சரஸ்வதியை நீங்கள் உங்களிடம் அழைக்க வேண்டுமென்றால், உங்களிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் சரஸ்வதியை அணுகமுடியாது.

நவராத்திரி - ஒன்பது தினங்கள், மூன்று தன்மைகள்

இந்த மூன்று பரிமாணங்களும் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை. குறிப்பிட்ட அசைவற்ற தன்மை, ஆற்றல், துடிப்பான அதிர்வு என இந்த மூன்று தன்மைகளிடம் இருந்து விடுபட்டதாக ஒரு அணுவும் இல்லை. இந்த மூன்று தன்மைகளும் இல்லாமல் உங்களால் எதையும் பிடித்துவைக்க முடியாது, அது உடைந்துவிடும். வெறுமே சத்வ குணமாக இருந்தால், உங்களால் இங்கே ஒரு கணம்கூட இருக்க முடியாது - நீங்கள் போய்விடுவீர்கள். வெறுமே ரஜஸ் குணமாக இருந்தால், அது வேலை செய்யப்போவதில்லை. வெறுமே தமஸ் குணமாக இருந்தால், நீங்கள் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த மூன்று குணங்களும் எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த மூன்றையும் எந்த அளவுக்கு நீங்கள் கலக்கிறீர்கள் என்பது மட்டுமே கேள்வி.

தமஸ் - நவராத்திரியின் முதல் மூன்று தினங்களின் முக்கியத்துவம்

துர்க்கை, தமஸ் - நவராத்திரியின் முதல் மூன்று தினங்களின் முக்கியத்துவம்

நவராத்திரி திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் தமஸ் என்று வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் தேவி ஆக்ரோஷமாக, துர்க்கை அல்லது காளி ரூபத்தில் இருக்கிறாள். தமஸ் என்பது இந்த பூமியின் இயல்பு, இவளே பிறப்புக்கும் காரணமானவள். தாயின் கருவறையில் நாம்‌ குடியிருந்த காலமே தமஸ். இது கிட்டத்தட்ட செயலற்ற தூக்கநிலை, ஆனால் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே தமஸ் குணம் என்பது இந்த பூமியின் இயல்பாகவும் உங்கள் பிறப்பின் இயல்பாகவும் இருக்கிறது. நீங்கள் இந்த பூமியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த பூமி தேவியுடன் வெறுமே ஒன்றியிருப்பது எப்படி என்பதை மட்டும் நீங்கள் கற்றுக்கொண்டால் போதும். எப்படி இருந்தாலும் நீங்கள் இந்த பூமியின் ஒரு பாகம்தான். பூமி தேவி விரும்பும்போது, உங்களை வெளியே தூக்கி வீசுகிறாள்; விரும்பும்போது, மீண்டும் தனக்குள் உறிஞ்சிக்கொள்கிறாள்.

உங்கள் உடலின் நிலையற்ற இயல்பை உங்களுக்கு எப்போதும் நினைவூட்டிக் கொள்வது மிக முக்கியம். இப்போது, இந்த பூமியின் ஒரு சிறு மண் குவியலாக நீங்கள் இங்கே குதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பூமி எப்போது உங்களை மீண்டும் உறிஞ்சிக்கொள்ள விரும்புகிறதோ, அப்போது நீங்கள் மீண்டும் சிறு மண் குவியலாகிறீர்கள்.

இங்கே ஆசிரமத்தில் உள்ள மக்களிடம் நாம் எப்போதும் இப்படி சொல்வதுண்டு, நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்கள் விரல்கள் மண்ணோடு தொடர்பில் இருக்க வேண்டும். தோட்டத்தில் ஏதாவதொரு செயலில் ஈடுபடுங்கள். இது நீங்கள் நிலையற்றவர் என்ற உடல்ரீதியான ஞாபகப்பதிவை இயல்பாகவே உங்களில் ஏற்படுத்தும். உங்கள் உடலுக்கு, தான் நிலையில்லை என்பது தெரிந்துவிடும். ஒருவர் ஆன்மீகத் தேடலில் தம் கவனத்தை செலுத்துவதற்கு, உடல் இதை உணர்வது மிகவும் முக்கியம். இந்த உணர்தல் எவ்வளவு அவசரமாக நடக்கிறதோ, அந்தளவு ஆன்மீக உணர்வு வலுவடையும்.

ரஜஸ் - நவராத்திரியின் மத்திய மூன்று நாட்களின் முக்கியத்துவம்

லட்சுமி, ரஜஸ் - நவராத்திரியின் மத்திய மூன்று நாட்களின் முக்கியத்துவம்

குணம் வந்ததும், உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இருக்கும். நீங்கள் ஏதோவொன்றை செய்ய துவங்குகிறீர்கள், விழிப்புணர்வும் கவனமும் இல்லையென்றால், ரஜஸ் குணத்தின் இயல்பானது, ஏதோவொன்று நன்றாக நடக்கும் வரை எல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால் அங்கே ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ரஜஸ் நிலைமையை மிகமிக மோசமாக்கிவிடும்.

ரஜஸ் தன்மையுள்ள மனிதரிடம் அளவற்ற ஆற்றல் இருக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த ஆற்றலை முறைப்படுத்த வேண்டியது மட்டுமே. நீங்கள் ஈடுபடும் எந்தவொரு செயலும் உங்கள் விடுதலைக்கான செயல்முறையாகவோ அல்லது நீங்கள் அதிலேயே சிக்கிப்போகவோ முடியும். முழு விருப்பத்தோடு நீங்கள் எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், அந்த செயலே அழகாகவும் உங்களுக்குள் ஆனந்தத்தை உருவாக்குவதாகவும் இருக்கிறது. ஏதோவொரு காரணத்தினால் விருப்பமில்லாமல் நீங்கள் ஈடுபடும் எந்தவொரு செயலாக இருந்தாலும், அந்த செயல் உங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும், வெறுமே தரையைக் கூட்டுவதாக இருந்தாலும், உங்களை முழுமையாக கொடுத்து, முழு ஈடுபாட்டுடன் அந்த செயலில் ஈடுபடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.

நீங்கள் வேட்கையுடன் எதில் ஈடுபட்டிருந்தாலும், உங்களைப் பொறுத்தவரையில் அதைத்தவிர வேறு எதுவுமே இருக்காது. வேட்கை என்றால் அது வெறுமே "ஆண் - பெண்" பற்றியது என்றில்லை. வேட்கை‌ என்றால், ஏதோ ஒன்றின் மீது கட்டற்ற ஈடுபாடு. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - நீங்கள் பாடுவதில் மிகுந்த வேட்கையுடன் இருக்கலாம், நடனமாடுவது அல்லது வெறுமே நடப்பதில் கூட உங்களுக்கு வேட்கை இருக்கலாம். உங்களுடன்‌ இப்போது எது தொடர்பில் இருக்கிறதோ, அதனுடன் நீங்கள் ஆழமான வேட்கையுடன் இருக்கிறீர்கள். உங்கள் சுவாசம், நீங்கள் நடப்பது, வாழ்வது என எல்லாமே வேட்கையுடன் நடக்கும். நீங்கள் இங்கு உயிருடன் இருப்பதே, அனைத்துடனும் முழுமையான ஈடுபாட்டால்தான்.

 

சத்வ குணம் - நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள்

சரஸ்வதி, சத்வ குணம் - நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள்

தமஸ் குணத்தில் இருந்து சத்வ குணத்திற்கு நகர்வது என்றால், நீங்கள் இந்த உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி உடல்களை செம்மைப்படுத்தி மெருகூட்டுகிறீர்கள். அனைத்தையும் ஊடுருவும் விதத்தில் நீங்கள் செம்மைப்படுத்தும்போது, உங்களுக்குள்ளேயே இருக்கும் இந்த படைத்தலுக்கே மூலமானதை உங்களால் தவறவிட முடியாது. இப்போது, அது இருப்பதே தெரியாதவாறு மிக மங்கலாக இருக்கிறது. உங்கள் உடல் ஒரு சுவரைப்போல அனைத்தையும் தடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமான, இவ்வளவு மகத்தான - படைத்தலுக்கே மூலமானது - உங்களுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த சுவரால் அதை தடுக்கமுடியும். ஏனென்றால் அது அவ்வளவு தடிமனானது. இதை சரிசெய்து கொள்வதற்கான நேரம் இது. இல்லையென்றால் உங்களுக்கு அந்த சுவர் மட்டுமே தெரியும்; உள்ளே யார் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமலே இருக்கும்.

 

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் - ஆயுதபூஜை அல்லது மஹாநவமி

ஆயுதபூஜை, Ayudha Pooja

ஆயுதபூஜையின் மகத்துவம் பற்றி அறியுங்கள். இது வெறும் ஒரு சடங்காக மட்டுமல்லாமல் எவ்வாறு வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியமான கருவியுமாகிறது என்பதை விளக்குகிறார் சத்குரு.

நவராத்திரியைக் கொண்டாடும் முறை

சத்குரு: ஒரு கொண்டாட்டமான மனநிலையுடன் நவராத்திரியை‌ அணுகுவது தான் மிகச்சிறந்த வழி. இது எப்போதும் வாழ்க்கையின் ரகசியமாக இருக்கிறது: எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் ஆனால் முழு ஈடுபாட்டுடன் இருப்பது. பாரம்பரியமாக பெண் தெய்வங்களைப் போற்றும் வழிமுறையை கொண்டிருந்த கலாச்சாரங்கள் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்த இருப்பு பிரம்மாண்டமானது என்பதை தெரிந்து கொண்டிருந்தன. நீங்கள் இதை அனுபவிக்க முடியும், அழகைக் கொண்டாட முடியும், ஆனால் அதை புரிந்துகொள்ளவே முடியாது. வாழ்க்கை ஒரு புதிர், அது எப்போதுமே அப்படியே தான் இருக்கும். அடிப்படையான இந்த புரிதலை அடித்தளமாக கொண்டு நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி கொலு, Navarathri Golu, நவராத்திரி கொண்டாட்டம், Navarathri Celebrations

Garba dance, கர்பா நடனம், நவராத்திரி கொண்டாட்டம், Navarathri Celebrations

Carnatic music, கர்நாடக சங்கீதம், நவராத்திரி கொண்டாட்டம், Navarathri Celebrations

கிராமிய நடனம், Folk Dance, நவராத்திரி கொண்டாட்டம், Navarathri Celebrations

தொடர்புடைய பதிவுகள்: 

நவராத்திரியில் தேவியின் அருளைப் பெற நாம் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு 'சாதனா'வை சத்குரு இங்கே நமக்கு வழங்குகிறார். 

“திரிவேணி” - நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சத்குரு மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வழங்கும் ஒரு இசை அர்ப்பணிப்பு! 

தேவியின் நவராத்திரி விழாவின் ஒன்பது இரவுகளில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான 15 நவராத்திரி வாழ்த்துகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.