ஆணுக்குள் ஒளிந்திருக்கும் பெண்மை !
சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெண் தெய்வமான 'லிங்கபைரவி' பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் வியப்பூட்டும் பதில்கள் இந்த வாரப் பதிவில்...
சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 5
சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெண் தெய்வமான 'லிங்கபைரவி' பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் வியப்பூட்டும் பதில்கள் இந்த வாரப் பதிவில்...
சேகர்: லிங்கபைரவி கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கும் என்றும் பெண் தன்மைக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சொன்னீர்கள். அதைப்பற்றி மேலும் சொல்லுங்கள்...
சத்குரு: மனிதர்களின் புரிதல் தன்மை மிகவும் குறுகியது. அதற்குக் காரணமே அவர்கள் ஐம்புலன்களைக் கொண்டு ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். இருட்டு இருப்பதால்தான் வெளிச்சத்தையும் சாவு இருப்பதால்தான் வாழ்க்கையையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே ஐம்புலன்கள் உதவியுடன் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளும்போது இந்த உலகத்தை இரண்டாகப் பகுத்துப் பார்க்கிறீர்கள். இப்படிப் பகுத்துப் பார்க்காமல் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே மனித இனத்தையும் ஆண், பெண் அல்லது சிவன், சக்தி என்று இரண்டாகப் பிரித்திருக்கிறோம். எனவே நீங்கள் இக்கோவிலை பெண் சக்திக்கான கோவில் என்று சொல்லலாம்.
மேலும் கோவில் என்பது ஒரு உடல் போல் செயல்பட்டு ஒரு இடத்திற்கு சக்தியூட்டுகிறது. நமது கலாச்சாரத்தில் ஒரு இடத்தை சக்திப்படுத்துவதற்காகத்தான் கோவிலை அமைக்கிறோம். கோவில் என்பது உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு கடவுளிடம் சென்று வேண்டிக் கொள்வதல்ல. நமது கலாச்சாரத்தில் கோவில் என்பது எப்போதும் பிரார்த்தனைக்கான இடமாக இருந்ததில்லை. இந்தக் கோவில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்தியூட்டப்பட்டிருக்கிறது. பெண் தன்மைக்கான இந்தக் கோவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத் திருக்கோவில் ஆண் தன்மையைக் கொண்டது. அது வட்ட வடிவில் உள்ளது. ஏனெனில் ஆண் தன்மைக்கான வடிவம் அது.
லிங்கபைரவி சந்நிதியின் வடிவமைப்பு பல கணக்குகளை உள்ளடக்கியது. முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் 33 அடி நீளம் கொண்டது. மற்ற ஒவ்வொன்றுமே 11ன் மடங்காகத்தான் ஆக்கப்பட்டுள்ளது. பெண் தன்மையை உருவாக்குவதற்காக இப்படி குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய விஞ்ஞானமே இதில் அடங்கியுள்ளது. உங்கள் முதுகெலும்பு கூட 33 அம்சங்கள் அடங்கியதுதான். நாம் இப்போது அதைப்பற்றி மிக விரிவாகப் பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன்.
Subscribe
சேகர்: சரி, பெண்தன்மைக்காக அல்லது பெண் சக்திக்காக ஒரு கோவில் என்பது தேவையா?
சத்குரு: இப்போது ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக கவனிக்க முடியும். இந்த கிரகத்தில் பெண்மை மிகப் பெரும் அபாயத்தில் இருக்கிறது. ஆண்மை அல்லது பெண்மை எது ஆதிக்கம் செலுத்தினாலும் வாழ்க்கை அருவருப்பில்தான் போய் முடியும். ஆதிக்கம் செலுத்துவதால் வாழ்க்கையை உணர முடியாது. இணைத்துக் கொள்வதால் மட்டுமே வாழ்க்கையை உணர முடியும். எனவே இக்கோவில் மூலம் நாம் ஒரு சக்தி வளையத்தை உருவாக்குகிறோம். இங்கு வரும்போது மக்கள் பெண்மையின் மகத்தான சக்தியை உணர முடியும். பெண்மை சக்தி என்பது அச்சுறுத்தல் தன்மை கொண்டது.
நமது வாழ்க்கையில் பொருளாதாரம் அல்லது பிழைப்புத்தன்மை முக்கியமாக இருப்பதால்தான் ஆண் அல்லது ஆண் தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. நமது வாழ்க்கையில் அன்பு, கலை, இசை குறிப்பாக அழகுணர்ச்சி முக்கியமாக இருக்குமேயானால் பெண்தன்மை மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கும். இன்று நாம் அனைத்துப் பெண்களையும் மெதுவாக ஆண்களைப் போல் மாற்றி வருகிறோம். அவர்களையும் பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுத்துகிறோம். எனவே அவர்கள் தங்கள் இயல்புத் தன்மையில் இல்லாமல் நடமாடும் பொம்மை போல் ஆகி வருகிறார்கள். நாம் இங்கு உருவாக்கும் பெண் அச்சுறுத்துபவளாகவும் சக்தி மிக்கவளாகவும் இருப்பாள்.
சேகர்: அன்பு, கலை, அழகுணர்ச்சி ஆகிய இவை பெண்மை சக்தியின் அம்சங்களாகக் குறிப்பிட்டீர்கள். நான் சினிமா தயாரிப்பவன். இவை என்னிடமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அப்படியென்றால் என்னிடமும் பெண்தன்மைக்குரிய சக்திகள் இருக்கின்றனவா?
சத்குரு: ஆமாம், இருக்கிறது. ஒவ்வொரு ஆணிடமும் பெண்மையும் ஒவ்வொரு பெண்ணிடமும் ஆண்மையும் இருக்கிறது. உங்களிடம் பெண்மை இல்லாவிட்டால் எதையும் அழகு, அழகில்லை என்று பார்க்கமாட்டீர்கள், பயன்தரும், பயன்தராது என்றுதான் பார்ப்பீர்கள். இது ஆண்மையின் தன்மை.
சேகர்: அப்படியென்றால் எனக்குள் ஆண்மையும் பெண்மையும் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிராக இருக்காதா?
சத்குரு: இந்த இரண்டு சக்திகளும் படைப்பின் அடிப்படை. அவை ஏன் ஒன்றுக்கொன்று எதிராக இருக்க வேண்டும்? உயிர்த்தன்மையைப் பொறுத்தவரை அவை முழு இணக்கத்துடன்தான் இருக்கின்றன. மனிதனின் மனத்தில் மட்டும்தான் அவை எதிரெதிராய் இருக்கின்றன.
சேகர்: எனக்குப் பெண்மை சக்தியின் வலிமை பற்றி முழுமையாக சொல்லுங்கள். ஏனெனில், நமது கலாச்சாரம் பல பெண் தெய்வங்களையும், அவர்களின் மூர்க்கத்தனமான வலிமை பற்றியும் விரிவாகப் பேசுகின்றன.
சத்குரு: இந்தக் கலாச்சாரத்தில் நாம் உருவாக்கிய பெண் தெய்வங்கள் எல்லாமே காளி அல்லது பைரவிதான். இப்போது இவளும் ஒரு பைரவி. எல்லோருமே மூர்க்கத்தனமான சக்தி கொண்டவர்கள்தான். வெளிநாட்டிலிருந்து படை எடுத்து வந்தவர்கள் இந்த தெய்வங்களைக் கிண்டல் செய்து ஓ, உங்கள் பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்களா? என்று கேட்டிருக்கிறார்கள். உடனே நாம் நமது பெண்தன்மையைக் குடும்பப் பாங்காக மாற்றி சரஸ்வதி, லட்சுமி, ஆகியோரை உருவாக்கினோம். இவர்கள் மிகவும் மென்மையானவர்கள், குடும்பப் பெண் போன்றவர்கள். ஆனால் பைரவியை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாது. அவள் உங்கள் வீட்டில் தங்கமாட்டாள் என்று சொல்லவில்லை. அவளை உங்கள் வீட்டு எல்லைக்குள் மட்டும் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறேன். அவள் எல்லோரையும் தன்னோடு இணைத்துக் கொள்பவள். அதுதான் அவளுடைய இயல்பு. ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆண் எப்போதும் அடுத்தவரை வெற்றி கொள்ளவே நினைக்கிறான், பெண் எப்போதும் அடுத்துவரை சேர்த்துக் கொள்ளவே நினைக்கிறாள்.
தொடரும்…
அடுத்த வாரம்...
பிரதிஷ்டை செய்வது; 'லிங்கபைரவி' ஏன் நில மட்டத்திற்குக் கீழ் இருக்கிறாள், என்பன போன்ற சுவாரஸ்யமான பதிவாக அமையவிருக்கிறது அடுத்த வாரம்.