மாட்டுப் பொங்கல் விழா எதற்காக? (Mattu Pongal in Tamil)
இது வரை நம் சிந்தனைக்கு எட்டாத, புதிய பார்வையில் சத்குரு எடுத்துக்கூறும் கருத்துக்கள் மாட்டுப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணரவைப்பதுடன், நம் வாழ்வில் எல்லா உயிர்களையும் நம்முடன் அரவணைத்துச் செல்லும், மறந்துபோன நம் பண்பாட்டை மீட்டெடுப்பதாகவும் உள்ளது.
கால்நடைகள் பண்பாட்டு அடையாளங்கள்
சத்குரு: நமது வாழ்க்கையில் பலவிதமான செயல்களை நாம் செய்கிறோம். எல்லாச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் உணவு, ஒரு சாமான்யமான விஷயம் அல்ல. உணவு கிடைக்காமல் இருக்கும்போது, அதுதான் கடவுள். உயிருக்கு அடிப்படையானது உணவு என்பதை மறந்துவிட்டு, அது நாவின் ருசிக்கானது என்றே இன்றைக்கு எண்ணுகின்றனர். நமக்கான உணவு தயாரிக்கப்படுவது சமையலறையில் அல்ல, அது வயலில், தோட்டத்தில், காட்டில் உருவாகிறது.உணவு தயாரிக்கும் செயலாகிய விவசாயம் பன்னிரண்டாயிரம் வருடங்களாக தென்னிந்தியாவின் கலாச்சாரமாக இருந்துவருகிறது. பூமியின் ஏனைய பகுதி மக்கள் விவசாயத்தின் அரிச்சுவடியே அறிந்திராமல் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடிய காலங்களில், இங்கே விவசாயம் செழித்துக் கிடந்தது.
விவசாயத்துக்கும், விலங்கைக் கொன்று உணவாக்குவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், விலங்கைக் கொன்றால் நமக்கு மட்டும்தான் உணவு கிடைக்கிறது, அதனுடைய உயிர் பறிபோகிறது. விவசாயம் என்பது, நமக்கு உணவு கிடைக்கும் அதே வேளையில் விலங்குக்கும் உணவு கிடைக்கிறது. மற்றொரு உயிர் மீதான ஒரு மதிப்பு, இந்த மனப்பக்குவம்தான் பூமியில் சகல உயிர்களும் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எதற்காக? (Mattu Pongal in Tamil)
விவசாயத்தில் மனிதனுடன் இணைந்து மாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. காலப்போக்கில் இதனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பணம் கொடுத்தால் உணவு வருவதற்கு முன், மற்றொரு ஜீவன் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சாப்பிடுகிறோம். இந்த உணர்வை மக்களுக்குள் கொண்டுவருவதற்காவே நம் கலாச்சாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் விழாவை போன்ற வழக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
மாடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றிலும் உயிரினங்கள் இல்லையென்றால் மனித இனம் இங்கே பிழைத்திருக்க முடியாது. மேலும் நாம் விவசாய கலாச்சாரமாக வளர்ந்திருப்பதால், மாட்டுக்கும், நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. நமது வயலில் உழைப்பதும், நமக்குப் பால் தருவதும் மாடுதான். நம்மை ஈன்ற தாய்க்கு அடுத்து, இரத்தத்தைப் பாலாக்கி நம் உயிர் வளர்த்ததால், மாடு தாய்க்கு சமமானது. குழந்தைகளிடம், பால் கொடுக்கும் மாடு தாய்க்கு ஒப்பானது என்று அறிவுறுத்துவது நமது பண்பாடு.. அதனால் மாட்டுடன் ஒரு ஆழமான பிணைப்பு உருவாகிறது.
Subscribe
மாடு வளர்ப்பவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மாடு கண்ணீர் விடுகிறது. இந்த விதமான மனித உணர்வு இருப்பதனாலும், தாயாக நமக்கு பால் தருவதாலும், அதை வெட்டக்கூடாது, அப்படிச் செய்வது கொலை செய்வதற்கு ஈடானது என்று மக்கள் மனதில் பதியச்செய்துள்ளனர். ஆழமான அறிவியல் உண்மைகளை எளிமையான கதைகள் மூலம் இந்தக் கலாச்சாரம் வெளிப்படுத்தியது. எல்லா வகையிலும் மிகச் சிறந்த பாரம்பரியமான நமது பண்பாட்டின் அடையாளமாக விவசாயம் மற்றும் கால் நடைகள் பார்க்கப்பட்டது. அதனால் மாட்டுக்காக ஒரு விழா காலந்தோறும் நடைபெறுகிறது.
அனைத்துயிர்களின் வாழ்வுரிமை காப்போம்
நம் நாட்டிலும், ஒட்டுமொத்த உலகத்திலும் இந்த விழாவின் அடிப்படை மற்றும் அதன் மகத்துவம் குறித்து மக்கள் மனங்களில் நாம் பதிக்கவேண்டும். ஒவ்வொரு உயிருக்கும் இங்கு வாழ்வதற்கு அதிகாரம் உள்ளது. அனைத்து உயிர்களுக்கும் பூமியில் பங்குண்டு. இது புரியவில்லையென்றால் நாம் பூமியை அழித்துவிடுவோம்.
பூச்சி, புழு என்று எவற்றை நீங்கள் அற்பமாக எண்ணுகிறீர்களோ, அவைகள் அழிந்துவிட்டால், பன்னிரண்டிலிருந்து, பதினைந்து வருடங்களுக்குள் உலகமே அழிந்துவிடும். புழு இனம் இல்லாமற்போனால் ஆறிலிருந்து எட்டு வருடங்களுக்குள் உலகம் சர்வ நாசம் அடையும். பிறகு, ஒரு உயிரினம்கூட இங்கு வாழமுடியாது. நம் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் அனைத்தும் இல்லாமல்போனால், மூன்று வாரங்கள்கூட நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாது.
மனித புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருவதையே அறிவியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. இதனால் மற்ற உயிரினங்கள் அழிந்து போவது மட்டுமில்லாமல், நமது உயிரும் தழைக்காது. உதாரணத்துக்கு, விவசாயத்துக்கு இன்றியமையாத ஆடு மாடுகளைப் புறக்கணித்துவிட்டால் மண்ணுக்கான இயற்கை உரம் நமக்கு எப்படிக் கிடைக்கும்? இயந்திரங்கள் மாடுகளைவிட அதிகம் செயல்படலாம். ஆனால் மண்ணுக்கு வளம் பெருக்கும் சாணம் கிடைக்காது, கார்பண்டை ஆக்சைட், மொனாக்சைட்தான் கிடைக்கிறது. கால்நடைகள் இல்லாமல் விவசாயம் செய்வது என்பது நகைப்புக்குரியதுதான். மண்ணின் வளம் காப்பதற்கும் ,பின் வரும் தலைமுறையினருக்கு செழிப்பான மண்ணை விட்டுச் செல்வதற்கும் ஆடு, மாடுகள், அதன் கழிவுகள் தேவை.
பன்னிரண்டாயிரம் வருட பாரம்பரியமான விவசாயத்தில், காப்பாற்றி வந்த மண்ணை, ஒரே தலைமுறையில் பாலைவனமாக்கிவிடாமல் இருக்கவேண்டும். நாம் மண்ணை, தாய்மண் என்று குறிப்பிடுகிறோம். இந்தத் தாய்மண்ணைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை என்றால் உயிர் எப்படிப் பிறக்கும், உயிர் எப்படி உறுதியாக இருக்கும்? அதற்காக இந்த மாட்டுப்பொங்கல். மாடுகளைப் போற்றி வளர்த்துக் கொண்டாடும் நம் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில், நீங்கள் எங்கிருந்தாலும், இந்த நாளில் ஒரு இரண்டு நிமிடம் ஒரு மாட்டினிடத்தில் ஒரு சிறு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் தேவையானது.
விழாக்கள் கலாச்சாரத்தின் வேர்கள்
நமது சூழ்நிலைக்கு, சுற்றுச்சூழலுக்கு, நமது கலாச்சாரத்துக்கு, நம் மன நிலைக்கு, நமது உணர்வு நிலைக்கு உகந்த விஷயங்களுக்கு நாம் புத்துயிரூட்டவேண்டும். ஆயிரம் வருட பழமையை மாறாமல் செய்யத்தேவையில்லை. ஆனால் இந்தத் தருணத்துக்கு நமக்கு ஏற்றதுபோல் மீண்டும் நம் வாழ்க்கையில் அவற்றைக் கொண்டுவந்தால்தான் நமக்கான வேர் பாதுகாக்கப்படும். மனிதனுடைய மன நிலையும், உயிர்சக்தியும், சமநிலையில் இருப்பதற்கு ஆழமான ஆன்மீக அனுபவம் அல்லது ஆழமான கலாச்சாரத்தின் வேர் நமக்குள் ஊன்றியிருக்கவேண்டும். இரண்டும் இல்லாத நிலையில் மனதில் சமநிலை இல்லாமல் தடுமாற நேரிடும். இந்த விழாக்கள் சமநிலைக்கான சிறு கருவிகளாக இருக்கின்றன. நமது வாழ்வின் நோக்கத்துக்கு இது மிகவும் உபயோகமான கருவி. கலாச்சாரத்தின் வேர் ஆழமாக ஊன்றினால்தான், மனிதருக்குள் சமநிலை ஏற்படமுடியும்.
பைரவா - சத்குருவின் கலைப்படைப்பு
சத்குருவின் இந்த தனித்துவமான கலைப்படைப்பு ஈஷா யோகா மையத்தின் மகிமை வாய்ந்த பைரவா என்னும் காளையின் நினைவாக உருவாக்கப்பட்டது.
பைரவா காளையுடன் சத்குரு
மாட்டுப் பொங்கல் புகைப்படங்கள் (Mattu Pongal Images)
மாட்டுப் பொங்கல் கலை வடிவங்கள்
தொடர்புடைய பதிவுகள்:
பொங்கல் கொண்டாட்டம்... நன்றியுணர்வின் திருவிழா!
பொங்கல் திருவிழா தமிழ் மக்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் நிறைவைக் குறிக்கும் போகிப் பண்டிகையின் நோக்கம், பொங்கல் விழா விவசாயிகளுக்கும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியத்துவம் பெறுவதன் காரணம் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை!
போகி, பொங்கல்... ஏன் கொண்டாடுகிறோம்?
போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எறிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது?" இதற்கான விளக்கங்களும் சத்குருவின் வாழ்த்துக்களும் இங்கே...
காணும் பொங்கல் சொல்லும் செய்தி
பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும்பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த .சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.
நாட்டு மாடுகள் இயற்கை விவசாயத்திற்கு ஏன் அவசியம்?
மாடுகள் கோ மாதாவாக போற்றப்படும் நம் தேசத்தில், தற்போது நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் பல அரிய இனங்கள் அழிந்துவருவதையும் பார்க்கிறோம். நாட்டு மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தில் நிறைந்துள்ள பலன்கள் பற்றி இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் கருத்துக்களை இந்தப்பதிவு விளக்குகிறது.
Photo Credit: GoDakshin @ flickr