திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் வாழ்க்கையில் ஏன் அவசியம்?
நெருங்கிவரும் பொங்கல் திருவிழாவையட்டி மக்கள் கூட்டம் கடைத்தெருக்களில் அதிகரித்திருப்பதை பார்க்கிறோம். புத்தாடைகள், பலகாரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற நிலையில் மட்டுமே நம் கொண்டாட்டங்கள் முடிந்துவிடுவதைச் சுட்டிக் காட்டி, நம் பாரம்பரிய கொண்டாட்டங்களின் தனித்துவங்கள் குறித்தும், அவற்றை எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் சத்குரு இங்கே எடுத்துரைக்கிறார்!
சத்குரு:
நம் கலாசாரத்தில் ஒரு காலத்தில் வருடம் 365 நாட்களும் விழாக்கள் நடந்தன. ஏனெனில், மனிதனுக்கு அப்போது கொண்டாட்டம் என்பது ஒரு தனிச் செயலாக இல்லை. செய்யும் செயலையே கொண்டாட்டமாகச் செய்தான்.
எனவே, இன்று உலை வைக்கிறோம் என்றால், அது ஒரு மாதிரியான விழா. நாளை விதைப்பது என்றால், அது இன்னொரு மாதிரியான விழா. களையெடுப்பது, இன்னொரு மாதிரியான விழா. இப்படி தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கொண்டாட்டமாகச் செய்து வந்தார்கள். ஆனால், அந்நிய ஆதிக்கம் இந்த நாட்டுக்கு வந்தவுடன் இந்தக் கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டன.
Subscribe
30, 40 வருடங்கள் முன்புகூட வருடத்தில் 40, 50 விழாக்கள் இருந்தன. இப்போதும் கிராமங்களில் ஒரு வருடத்தில் 20, 25 கொண்டாட்டங்கள் நடக்கின்றன. குறைந்தது மாதத்தில் 2 கொண்டாட்டங்களாவது இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். மனிதன் இப்போது வாழ்க்கை பற்றி கவனம் இல்லாமல், இன்னொரு மனிதனைப் பற்றிய கவனம் இல்லாமல், தன் உயிர்த்தன்மை பற்றிய கவனம் இல்லாமல், ஏதோ ஆசையில் தொடர்ந்து கடுமையாக வேலை செய்துகொண்டே இருக்கிறான். வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் இல்லையென்றால், நம் செயலில் உற்சாகம் இருக்காது. ஒரு கட்டத்தில் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்விகூட வந்துவிடும். உயிரின் அடிப்படையைக்கூட உணராததால்தான் இது போன்ற கேள்விகள் வருகின்றன.
நம் கலாசாரத்தில் கொண்டாட்டம் என்றால், அனைத்து மக்களுடன் பலவித ஈடுபாடுகளுடன் நடக்கும். இப்போது கொண்டாட்டம் என்றால் நமக்குள்ளேயே சாப்பிட்டுக்கொள்வது, பிறகு டி.வி பார்ப்பது என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஊரே சேர்ந்து கொண்டாடும். இப்போது வீட்டுக்குள்ளேயே கொண்டாடுகிறோம். வீட்டிலும் நாலு பேரில் இரண்டுபேர் ஏதோ காரணத்தில் அதில் ஈடுபட மாட்டார்கள்.
உயிருக்கு உற்சாகம் தரும் கொண்டாட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பொங்கல் நான்கு நாள் பண்டிகை. முதல் நாள் போகிப்பண்டிகை. போகி என்றால் பழையதை எரிப்பது. அப்படியென்றால், புதிய துணிமணிகள் எடுப்பது இல்லை. இந்த வருடத்தில் ஏதாவது கர்மாவாகச் சேர்த்து வைத்திருந்தோம் என்றால், அதை எரித்துவிட்டு ஒரு புதிய ஆரம்பம். ஒரு புதிய வாழ்க்கை. அந்த வாய்ப்புடன் பொங்கல் பண்டிகை ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் பொங்கல் திருவிழா. பொங்கல் என்றால், நாம் வளர்த்த தானியங்கள் பொங்கி வழிய வேண்டும். அதுதான் நோக்கம். அப்படி நடந்தாலே, நம் வாழ்க்கை செம்மையாகத்தானே இருக்கும்.
முன்பெல்லாம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால், ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று கேட்க மாட்டார்கள். ‘சாப்பிட்டீர்களா?’ என்றுதான் கேட்பார்கள். சாப்பிட்டுவிட்டால் பிறகென்ன பிரச்னை? எனவே, தானியங்கள் நமக்குக் கிடைக்க உதவி செய்த ஆடுமாடுகளை விட்டுவிட்டு எப்படி விழாகொண்டாடுவது? எனவே, அவர்களுக்காக அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். அவற்றைக் கட்டிப்போட்டுவிட்டு விழா கொண்டாட முடியுமா? எனவே அவற்றுக்கு அலங்காரம் செய்து ஒரு விழா. அடுத்தநாள் சமூகம் ஒன்று சேர்வதற்காக ஒரு விழா. அதுதான் கரிநாள்.
அதுபோன்ற கலாசாரத்தை நாம் திருப்பிக்கொண்டுவர வேண்டும். அதற்கு முன்னோடியாக ஈஷாவில் ஒவ்வொரு வருடமும் 5, 6 விழாக்களாவது வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடுவோம். அதன்பின் ஒவ்வொரு கிராமத்திலும் அது போன்று நடக்கவேண்டும். அருகிலுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் இன்று இங்கு வந்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் மேளம் இசைக்க வேண்டும். ஆட வேண்டும், செய்வீர்களா? இப்போதெல்லாம் உங்கள் சினிமா ஹீரோவே ஆடட்டும், பாடட்டும் என விட்டுவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கையிலும் கொஞ்சம் ஆட்டம், பாட்டம், மக்களுடன் கலந்துகொள்ளும்தன்மை வர வேண்டும். இப்படி இருந்தால் நமக்குநோய் கூட வராது. எந்த மனப் பாதிப்பும் வராது.
எனவே, அந்தக் கலாசாரத்தைத் திரும்பிக்கொண்டுவருவதில் நாம் உறுதியுடன் இருப்போம்!