நாட்டு மாடுகள் இயற்கை விவசாயத்திற்கு ஏன் அவசியம்?
மாடுகள் கோ மாதாவாக போற்றப்படும் நம் தேசத்தில், தற்போது நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் பல அரிய இனங்கள் அழிந்துவருவதையும் பார்க்கிறோம். நாட்டு மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தில் நிறைந்துள்ள பலன்கள் பற்றி இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் கருத்துக்களை இந்தப்பதிவு விளக்குகிறது.
மாடுகள் கோ மாதாவாக போற்றப்படும் நம் தேசத்தில், தற்போது நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் பல அரிய இனங்கள் அழிந்துவருவதையும் பார்க்கிறோம். நாட்டு மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தில் நிறைந்துள்ள பலன்கள் பற்றி இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் கருத்துக்களை இந்தப்பதிவு விளக்குகிறது.
நமது கிராமப்புறங்களில் இன்றும் வீட்டு வாசலில் மாட்டுச் சாணம் கொண்டு மொழுகி கோலமிடும் வழக்கம் இருப்பதை பார்க்கலாம். இதற்குப் பின்னாலுள்ள அறிவியல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மாட்டுச் சாணம் கிருமி நாசினியாக செயல்படுவதை நம் முன்னோர் அறிந்து வைத்திருந்ததே இதற்கு காரணம். முன்காலத்தில் விவசாய உரமாக மாட்டுச் சாணங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இன்றோ இரசாயன உரங்களைப் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி வைத்துள்ளோம். இப்போது, ஈஷா விவசாய இயக்கம் திரு.சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை திருப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது!
Subscribe
பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையிலோ, நாட்டு மாடுகள் பெரும்பங்கை வகிக்கின்றன. மேலும், அவர் நாட்டு மாடுகள் குறித்து பலவித ஆராய்ச்சிகள் செய்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை விவசாய தொழிற்நுட்பத்தில் பாலேக்கர் அறிமுகப்படுத்தியுள்ள ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்ற ஊடகப் பொருட்களில் நாட்டுப் பசுஞ்சாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1 கிராம் நாட்டுப் பசுஞ்சாணத்தில் 300 முதல் 500 கோடி நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஊடகங்களை மண்ணில் பாய்ச்சியவுடன் நுண்ணுயிரிகள் மண்ணில் வேலை செய்யத் துவங்குகின்றன. அதன் வாசனையால் 15 அடி ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் மண்புழுக்கள் மண்ணின் மேல்வந்து, மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வழிசெய்கின்றன.
ஏன் வெளிநாட்டு மாடுகள் கூடாது?
வெளிநாட்டு மாடுகள் அதிக பால் தருவதாகக் கூறி நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டவை! இவற்றின் பாலளவு அதிகமாக இருந்தாலும் அதன் பாலின் செறிவு நாட்டு மாடுகளின் பாலின் செறிவைக் காட்டிலும் வெகுவாக குறைந்திருக்கும். அதேபோல் நாட்டு மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தில் நிறைந்துள்ள நுண்ணுயிர்களின் செறிவைக் காட்டிலும் வெளிநாட்டு மாடுகளில் வெகுவாக குறைந்திருக்கும். பாலேக்கர் அவர்கள் குறிப்பிடும்போது வெளிநாட்டு பசுவினங்களின் உடல் வடிவமைப்பே முற்றிலும் வேறு விதமானது என்று கூறுகிறார். அவற்றை அவர் பசுவாக ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறார்.
நாட்டு மாடுகளின் சாணம்... ஏன் சிறப்பு?
“நாட்டு மாடுகளின் குடலில் நோய் கிருமிகளை கட்டுப்படுத்தி (ஆண்ட்டிபயாட்டிக்) நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் தன்மை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குறிப்பாக நாட்டுப் பசு மாட்டு குடல்களில் பல கூட்டங்களாக காணப்படும் நுண்ணுயிர்கள் மிக மிக சுறுசுறுப்பாக இருப்பதோடு, பசுவின் உடல்நலத்திற்குத் தேவையான நோய்எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகிறது. இதில் லேக்டிக் அமிலம் மற்றும் லேக்டோ பேக்டிரியம் மிகவும் முக்கியமானதாகும். இவை மோசமான சூழலை எதிர்த்து வாழும் உயிராற்றல் பெற்றவை. இதுதான் நாட்டு மாட்டுக்குடலில் சிறப்பாகும்.” இப்படிக் கூறும் திரு.பாலேக்கர், காமதேனு பசுவில் 33 கோடி தேவர்கள் வாழ்கிறார்கள் எனச் சொல்லப்படுவது நுண்ணுயிர்களை குறிப்பிட்டுதான் எனச் சொல்கிறார்.
திரு.பாலேக்கர் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த கௌலெவ், லால் காந்தாரி, கீலார், டியோனி, டாங்கி, நிமாரி, கிர், தார்பார்க்கர், சாஹி வால், சிந்தி, அம்ருத் மஹால், கிருஷ்ண காதி மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் காணப்படும் பல பசுக்கள்-காளை- எருமை மாடுகளை மட்டுமல்லாது, மேலை நாட்டு மாடுகளிலும் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்திய நாட்டு பசுக்கள் மட்டுமே சிறந்தது என்ற முடிவிற்கு வந்துள்ளார். மண்ணின் ஊட்டச்சத்திற்காக, 30 ஏக்கர் நிலத்திற்கு ஒரே ஒரு நாட்டுப் பசுமாடு போதுமானது என்பதும் பாலேக்கர் அவர்களின் அனுபவம் சார்ந்த கூற்றாகும்.
ஈஷா விவசாய இயக்கம்
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமாக ‘ஈஷா விவசாய இயக்கம்’ தற்போது செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் பாலேக்கர் அவர்களின் ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை தமிழகத்தின் ஒவ்வொரு விவசாயிகளிடத்திலும் கொண்டு சேர்க்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வியக்கத்தின் தன்னார்வத் தொண்டர்களும் சில முன்னோடி விவசாயிகளும் இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த விழிப்புணர்வை மற்ற விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல துணைநிற்கிறார்கள். ஈஷா விவசாய இயக்கம் சார்பில் ஆங்காங்கே விவசாயிகளை ஒருங்கிணைத்து சந்திப்புக் கூட்டங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஈஷா பசுமைக் கரங்கள் விவசாய நிலங்களில் மரங்களை நட்டு, வேளாண் காடுகள் உருவாக்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வழங்கி விவசாயிகளுக்கு உறுதுணையாய் உள்ளது. மேலும், இயற்கை விவசாய தொழிற்நுட்பம் குறித்தும் ஆலோசனைகளையும் தன்னார்வத் தொண்டர்கள் வழங்கி வருகின்றனர். இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும், ஈஷா பசுமைக்கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளை குறைந்த விலையில் பெறுவதற்கும் 94425 90062 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்!