காணும் பொங்கல் சொல்லும் செய்தி (Kaanum Pongal in Tamil)
பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும்பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த .சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.
காணும் பொங்கல் (Kaanum Pongal in Tamil) என்றால் என்ன?
சத்குரு: வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு திறமை, சொத்து, புகழ் இருந்தாலும் நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை மற்றும் சுற்றிலுமிருக்கும் மக்களிடம் அன்பாகவும், ஈடுபாடாகவும் இல்லையென்றால் நமது வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்காது. காணும் பொங்கல் என்பது அனைவருக்குள்ளும் சமூக உணர்வைக் கொண்டுவருவதற்கானது. தனிமனித மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை, ஒற்றுமை பாராட்டுவது மிகவும் அவசியம். ஒற்றுமை இல்லாமற்போனால் சிறு சச்சரவுகள்கூட பெரும் கலவரத்துக்குக் காரணமாகின்றன. ஒற்றுமை இல்லாத சமூகம் ஒரு வெடிகுண்டைப் போன்றதுதான், எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கக்கூடும். ஆகவே மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக காணும் பொங்கல் போன்ற விழாக்கள் நமது கலாச்சாரத்தில் கொண்டாடப்படுகின்றன.ஒற்றுமை எவ்வளவு முக்கியம்?
இன்றைய நவீன சமூகங்களில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யார் என்பதே நமக்குத் தெரிவதில்லை. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால்கூட, காவல் துறைக்குத்தான் தகவல் செல்கிறது. இது மேற்கு நாடுகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் பரவிவருகிறது. இது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது. விவசாய சமூகங்கள் நிறைந்திருக்கும் நம்மிடையே, சுற்றிலுமிருப்பவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வது முக்கியமான ஒரு தன்மை. ஏனெனில் விவசாயத்தில் தனித்து செயல்படுவது இயலாது. விவசாயம் என்பது ஊர் கூடி செய்யப்படவேண்டியது. உழுவது, விதைப்பது, களை எடுப்பது போன்ற எல்லாக் கட்டங்களிலும் நிலம் வைத்திருப்பவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து செயல்படுகின்றனர்.
Subscribe
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நல்லவிதமாக வாழமுடியும் என்று நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். நம் கலாச்சாரத்தில் மக்கள் இதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, பிரத்யேகமாக ஒரு நாள் அனைவரும் இணைந்து விழா கொண்டாடவேண்டும் என்ற வழக்கம் இன்று வரை கிராமங்களில் இருந்து வருகிறது. இது மக்களிடையே இருக்கவேண்டிய மிக முக்கியமான தன்மை. இதை சற்று மறந்துவிட்டதால்தான், சமூகத்தில் நிகழும் சிறிய சச்சரவுகளுக்கு நீதிமன்றம் சென்று வழக்காடும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமுகமான தொடர்பு, பேச்சுவார்த்தை இருந்தாலே, எவ்வளவோ பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எப்பொழுதும் இந்தத் தொடர்பு, ஒற்றுமை, ஈடுபாடு சமூகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக காணும் பொங்கல் (Kaanum Pongal in Tamil) கொண்டாடப்படுகிறது.
உறவுகளை, நட்புகளை மையப்படுத்தி காணும் பொங்கல் அமைந்திருந்தாலும், காலத்தின் கட்டாயத்தினால் கல்வி, வேலைவாய்ப்பு கருதி உறவு வட்டங்களிலிருந்து பெரும்பாலும் நாம் விலகி இருக்கும் சூழலில் இருக்கிறோம். கிராமங்கள் நகரங்களுக்கு நகர்ந்துவரும் நிலையில், நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் தான் நமக்கு உறவாக இருக்கிறார்கள். அவர்களிடம் நல்லவிதமான தொடர்பு இல்லையென்றால் நாம் தனித்துவிடப்படுவோம். கணிணியுடனும், தொலைக்காட்சிப் பெட்டியுடனும் மட்டும்தான் தொடர்பில் இருக்கமுடியும். அவைகளை நாம் விரும்பாதபோது அணைத்துவிடலாம்.
ஆனால் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் எப்போதும் நம்முடனே வாழ்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், பொறுமையும் நமக்குள் வளர்கிறது.
ஒரு தனிமனிதர் நம் முன் வந்தால், அவர் யாராக இருந்தாலும் முக மலர்ச்சியுடன் பார்க்கக் கற்றுக்கொள்வதுதான் காணும் பொங்கல். அவர் ஆணாக, பெண்ணாக, குழந்தையாக இருந்தாலும் முக மலர்ச்சியுடன் கைகூப்பி வணங்கும் வழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.
தமிழ்க் கலாச்சாரத்துக்கு முக்கியமானது கோவில். அதை நம் மாநிலத்துக்கு குறியீடாக வைத்திருப்பது ஏனென்றால், ஊரெங்கும், வீதிதோறும் கோவில் எழுப்பவேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடன் வாழும் சகமனிதரை நாம் தெய்வீகத்துடன் அணுகுவதால், இந்த மாநிலமே ஒரு கோவிலாக இருக்கமுடியும் என்பதற்காகவே, கோவிலை குறியீடாக வைத்துள்ளோம்.
எல்லோரையும், எல்லாவற்றையும் வணங்குவது எதற்காக?
கோவிலில் கடவுளைக் கும்பிட்டுவிட்டு, வெளியில் வந்தால் கடவுளின் முகம் பார்க்க மறுத்தால், தமிழ்நாடு எப்படிக் கோவிலாக மாறும்? தமிழ்நாடே கோவிலாக மாறவேண்டுமென்றால், நாம் காண்பதையெல்லாம் தெய்வமாகப் பார்க்கவேண்டுமல்லவா? அனைத்துக்கும் ஒரே தெய்வீகம்தான் அடிப்படையாக இருக்கிறது. படைத்தலுக்கு மூலமானது எல்லா உயிர்களுக்குள்ளேயும் இருப்பதை உணர்ந்தால்தான் நீங்கள் மனிதனை வணங்க முடியும், மாடு மற்றும் கல்லையும்கூட வணங்கமுடியும். எல்லாவற்றுக்கு உள்ளேயும் அதே மூலம்தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்வதற்குத்தான் நாம் எல்லாவற்றையும் வணங்குகிறோம்.
நமக்கு முன்னால் விருப்பமானவர்கள் வந்தாலும், விரும்பாதவர்கள் வந்தாலும், கண்டதும் கைகூப்பி புன்னகைப்பது ஏனென்றால், வெளிப்பார்வைக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கலாம், ஆனால் ஆழமாக இருப்பதென்னவோ, அது அனைவருக்கும் உள்ளே இருப்பதும் ஒன்றுதான் என்பதை நாம் உணர்வதற்காக. எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும் உள்ளே இருப்பதும், கோவிலுக்கு உள்ளே இருப்பதும் ஒன்றுதான். எங்கெங்கும் அதேதான் செயல்படுகிறது, ஒவ்வொரு அணுவிலும் அதேதான் செயல்படுகிறது என்பதை உணர்வதற்காகவே எல்லாவற்றுக்கும், எல்லாருக்கும் வணக்கம் செய்கிறோம். உயிருக்கு மூலமானது எங்கும் இருக்கிறது. நீங்கள் விரும்பாதவர்களுக்கு உள்ளேயும் உயிருக்கு மூலமானது இருக்கிறது. அவரது செயலுடன், எண்ணத்துடன், உணர்ச்சியுடன் நமக்கு எதிர்ப்பு இருக்கிறது, ஆனால் அவருக்குள், உயிருக்கு மூலமாக இருக்கும் ஒன்றுடன் நமக்கு எதிர்ப்பு கிடையாது. ஏனெனில் நமக்குள் இருப்பதும், அவருக்குள் இருப்பதும் ஒன்றுதான். அவருக்குள் இருப்பதுடன் எதிர்ப்புணர்ச்சி உருவானால், நமது உயிருக்கே நாம் எதிரியாகிவிடுவோம்.
காணும் பொங்கல் அன்று இதைச் செய்யுங்கள்!
இந்த காணும் பொங்கல் நாளில், நமது உறவுகள், நட்புகள் மட்டுமல்ல நமக்கு அறிமுகம் இல்லாத அக்கம்பக்கத்தினர் மற்றும் நாம் விரும்பாதவர்களையும் தேடிச் சென்று, சிரித்து, ஆனந்தமாக வணங்கலாம். குறைந்தபட்சம் ஒரு ஐந்து குடும்பங்களுடன் தொடர்பு உருவாக்கினால் தமிழ் நாட்டில் ஒற்றுமை ஏற்படும். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமலேயே அவர் குறித்து நாம் கொண்டிருக்கும் நூறு முடிவுகளையும் ஒதுக்கிவிட்டு, முகம் மலர சிரிப்பதே பெரும் மாற்றத்தை நிகழ்த்தும். சமூகத்தில் ஒரு ஒற்றுமை ஏற்படும். உத்தராயண காலகட்டமானது, பூமித்தாய் வசந்தகாலத்திற்குள் வைக்கும் முதல் படி. நீங்களும் புதியதொரு வசந்தம் நோக்கி அடியெடுத்து வைத்திடுங்கள்! மரங்கள் பழைய இலைகளை உதிர்ப்பது போல, உங்களுள் உள்ள பழைய சுமைகளை உதிர்த்து, ஒரு புதிய உயிராய் ஆகிடுங்கள்!
Photo Credit: Tamil Nadu Logo from Wikimedia
தொடர்புடைய பதிவுகள்:
பொங்கல் கொண்டாட்டம்... நன்றியுணர்வின் திருவிழா!
பொங்கல் திருவிழா தமிழ் மக்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் நிறைவைக் குறிக்கும் போகிப் பண்டிகையின் நோக்கம், பொங்கல் விழா விவசாயிகளுக்கும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியத்துவம் பெறுவதன் காரணம் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை!
மாட்டுப் பொங்கல் விழா எதற்காக?
இது வரை நம் சிந்தனைக்கு எட்டாத, புதிய பார்வையில் சத்குரு எடுத்துக்கூறும் கருத்துக்கள் மாட்டுப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணரவைப்பதுடன், நம் வாழ்வில் எல்லா உயிர்களையும் நம்முடன் அரவணைத்துச் செல்லும், மறந்துபோன நம் பண்பாட்டை மீட்டெடுப்பதாகவும் உள்ளது.
போகி, பொங்கல்... ஏன் கொண்டாடுகிறோம்?
போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எறிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது?" இதற்கான விளக்கங்களும் சத்குருவின் வாழ்த்துக்களும் இங்கே...