சத்குருவின் பொங்கல் வாழ்த்து 2021

சத்குரு: இயற்கை விவசாயத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் நெற்பயிரைப் பாருங்கள். என்னை விட உயரமாக இருக்கிறது. இந்த நெல் மட்டுமல்ல மற்ற எல்லாவிதமான பயிர்களையும் நாம் இயற்கை விவசாயத்தில் கொண்டு வரவேண்டும். இதுதான் நம் முன்னேற்றத்திற்கும், நம் ஆரோக்கியத்துக்கும், நம் ஜனத் தொகையின் தெம்பிற்கும் மிக மிக முக்கியமானது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகள்!

நாம் மறந்துவிடக்கூடாத ஒன்று என்னவென்றால், பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயம் மட்டுமல்ல. பொங்கல் என்றால், நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாள் என்று வைத்திருக்கிறோம். முக்கியமாக இது நம் விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்தவொரு நாளில், படித்தவர்கள், இளைஞர்கள் என நீங்கள் அனைவருமே கிராமத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

உணவைக் கொடுக்கும் மண்ணுக்கு, மண்ணிலிருந்து உணவை உருவாக்கும் விவசாயிக்கு, அதைப் பக்குவமாகச் சமைத்துப் பரிமாறும் தாய்க்கு, இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மாடுகள், சுற்றுச்சூழல், மற்றும் சூரியனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும்.

நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்றாலும், இதுபோன்று இயற்கை விவசாயம் எப்படி செய்வது என்பதை நமது ஈஷா விவசாய இயக்கம் மூலமாக உங்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். நீங்கள் நாடு முழுவதும், தமிழ்நாடு முழுவதும் சென்று விவசாயிகளுக்கு ஒரு கிராமத்தில் பத்து பேருக்கு கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், ஒரு பெரிய புரட்சி நடந்துடும். அது மட்டுமல்ல, நாம் சாப்பிடும் அன்னம் நமது உயிருக்கு உதவியாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் மருத்துவரிடம் கேட்டால், நீங்கள் சாப்பிடுகின்ற அன்னத்தினால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது, இன்னொரு நோய் விட்டதென்று சொல்கிறார்கள். இதை நாம் மாற்ற வேண்டும்.

இந்த உறுதியை தமிழ்மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் இந்த உறுதியை மேற்கொள்ள வேண்டும். என்னவென்றால், நமது தமிழ்நாட்டில் நாம் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு உணவினை சத்தானவையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம் மண்ணை சத்தானதாக வைத்திருக்க வேண்டும். இயற்கையை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றால், இந்த இயற்கை விவசாயம் மிகவும் தேவையானது. அதுமட்டுமல்ல பொருளாதாரத்தில் உழவர்க்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்தவொரு பொங்கல் தினத்தில், நாம் எல்லோருமே இந்த உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்! இதோ பாருங்கள்… நெல் எப்படி எனக்கும் மேலாக உயரமாக வளர்ந்துள்ளதென்று! (சிரிக்கிறார்).

தைப்பொங்கல் (Pongal 2021)

பொங்கல் திருவிழா, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழ் மக்கள் இல்லங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பொங்கல் திருவிழா ஈஷாவில் 15 ஜனவரி 2021அன்று ஆதியோகி முன்னிலையில் கொண்டாடப்பட உள்ளது. கேளிக்கையும், குதூகலமும் நிறைந்த இந்நாளில், திறந்தவெளியில் அதியோகியின் முன்னிலையில் பொங்கலிடுதல் மற்றும் மாலையில் கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவுடன் சிறப்பு தரிசனமும் நடைபெறும்.

பொங்கலுக்கு (Pongal Festival in Tamil) முன் போகி எதற்கு?

கேள்வி: போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்?

போகி பண்டிகை என்பது 'மார்கழி' மாதம் முடிந்து 'தை' மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.

முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது.

முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது அவசியமல்லவா? எனவேதான் போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

ஒரு ஞானியின் பார்வையில் பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள் என்பது நம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது. இது பாரத தேசம் முழுவதிலும் சங்கராந்தி அல்லது மகர சங்கராந்தி எனப்படுகிறது. எங்கெல்லாம் விவசாய சமூகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

மதி நிறைக்கும் மார்கழித்திங்கள்

பொங்கல் முக்கியத்துவம் பெறுவது ஏனென்றால், இது பயிர் அறுவடை செய்யும் தருணம். அதாவது நமது சாதனைக்கு, நாம் மேற்கொண்ட சிரமங்களுக்கு, ஒரு பலன் கிடைக்கின்ற நேரம். விவசாயப் பெருமக்களுக்கு மட்டுமல்லாமல், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கும்கூட இது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் காலகட்டத்தை நாம் “கைவல்யபாதை”, என்று கூறுவோம். மகாபாரதத்தில் பீஷ்மர் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருந்து, தை மாதம் பிறந்தபிறகே உயிர் துறக்கக் காத்திருந்தார். பூமிக்கிரகத்துக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பில், மார்கழி மாதத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. இதற்கு உத்தராயண புண்ணியகாலம் என்பது பெயர்.

மார்கழி மாதத்தில், பூமிப்பந்தின் வடபாதியில் சூரியக்கதிரின் தாக்கம் குறைவாக இருக்கிறது. இதனால் உயிர்சக்தி குறைகிறது. இந்த நேரத்தில், சுமாராக டிசம்பர் பதினான்கிலிருந்து, ஜனவரி பதினான்கு வரைக்கும் சூரியனுடைய ஈர்ப்பு நம் உடலின் கீழ்நோக்கி செயல்படுகிறது. சூரியசக்தி குறைந்துபோவதால் ஒரு விதைகூட முழுமையாக வளராது. திருமணம் நிகழ்த்துவதற்கும் கருத்தரிப்புக்கும் உகந்த காலம் இது அல்ல என்பது இந்தக் கலாச்சாரத்தின் வழக்கமாக உள்ளது.. இந்த நேரத்தில் நாம் நமக்குள் ஒரு உறுதியான நிலை, ஒரு சம நிலை உருவாக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களும், குடும்ப சூழலில் இருப்பவர்களும்கூட விரதம் அனுஷ்டிப்பது வழக்கத்தில் இருந்துவருகிறது.

சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழா

மார்கழி மாதம் முடிந்ததும், சூரியனுடைய பயணம் நம்மை நோக்கி வருகிறது. நாம் ஒரு வளமான காலத்திற்குச் செல்கிறோம். சூரியனுடைய சக்தி இல்லாமல் நாம் இங்கே வாழமுடியாது. பயிரும், உயிரும் தழைப்பது சூரியனால் என்ற காரணத்தால் நாம் சூரியனை எதிர்பார்க்கிறோம், வரவேற்கிறோம். இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கள், செடி, மரம், புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதன் அனைத்தும் சூரியசக்தியில் இயங்குகின்றன.

மார்கழி இறுதி நாளன்று போகித் திருநாளன்று தேவையற்ற எல்லாத் துணிகளை எரிப்பது என்பது ஒரு சம்பிரதாயம். முக்கியமாக வீட்டிலிருந்து சந்ததி உருவாக்கும் பெண்களின் ஆரோக்கியம் கருதி, சுகாதாரம் காரணமாக கடந்த ஒரு வருடமாகப் பயன்படுத்திய ஆடைகளை எரித்துவிட்டு, புதிய துவக்கமாக வேறு துணிகளை வாங்குவார்கள். நமது வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள், மனத்தாங்கல்கள் எல்லாவற்றையும் மறந்து புதிதாகத் துவங்குவது இதன் நோக்கம். இல்லையென்றால் வாழ்க்கையே சுமையாகிவிடும். பழைய ஆடைகள் தவிர கோபங்கள், பொறாமை, வெறுப்பு அனைத்தையும் எரித்துவிட்டு புதிய வாழ்வின் துவக்கமாக இது பார்க்கப்படுகிறது. நம் உயிருக்கு மூலமான சக்தியாக இருக்கும் சூரியன் கதிர்த்திருப்பத்தால் மீண்டும் வந்துவிட்டதால், சூரியனுக்காக ஒரு கொண்டாட்டம் நிகழ்த்துவது சூரியபொங்கல் எனப்படுகிறது.

சூரியனுடைய சக்தியை எந்த அளவுக்கு ஒரு மனிதர் தனக்குள் இணைத்துக்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உயிர் வளர்கிறது. ஆகவே முதலில் சூரியனுக்கு அர்ப்பணிப்பு செய்யவேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்கிறது. அதனால் அரிசி, பருப்பு இணைந்த பொங்கல் உணவை அர்ப்பணிக்கிறோம். உணவு என்பது உயிருக்கு அடிப்படையானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், உணவு எல்லா இடங்களிலும் கிடைப்பதால், பெரும்பாலானவர்களும் அதை ஒரு அங்காடிப்பொருளாக என்ணுகின்றனர். மூன்று நாட்களுக்கு உணவு கிடைக்கவில்லையென்றால், உணவு என்பது உயிர் என்று புரிகிறது. பொங்கலை வெறும் உணவாகப் பார்க்காமல் உயிருக்கு மூலமானது என்று புரிந்திருப்பதால், அனைத்துக்கும் சக்தி அளிக்கும் சூரியனுக்கு அதை அர்ப்பணிக்கிறோம்.

கொண்டாட்டமே வாழ்வின் அர்த்தம்

நமது தேசத்தில் ஒரு காலத்தில் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் ஏதோ ஒரு கொண்டாட்டம் இருந்தது. நமக்கு தினசரி கொண்டாட்டம்தான். வார இறுதி நாட்களில் மட்டும் கொண்டாட்டம், தினசரி அலுப்பூட்டும் பணி என்ற கருத்து மேற்குலக நாடுகளுக்கு உரித்தானது. தினசரி நாம் செய்யும் செயலில் உற்சாகம், கொண்டாட்டம் இல்லாமல் வெறும் பிழைப்புக்காக மட்டும் செயல்பட்டால், வாழ்க்கையில் பாதிப்புதான் ஏற்படும். வாழ்வே ஒரு பெரும் சுமையாக இருக்கும். செயலில் ஆனந்தமும், உற்சாகமும் இல்லையென்றால், வாழ்க்கை பரிசு வழங்காது, உடலில் நோயும், நரகமும்தான் உருவாகும். உங்களுக்கு வரவில்லையென்றால், நீங்கள் மற்றவர்களுக்கு உருவாக்கிவிடுவீர்கள். கொண்டாட்டம் இல்லாத ஒரு வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

மனிதனாகப் பிறந்து, இவ்வளவு புத்திசாலித்தனத்தை இயற்கை வழங்கியிருப்பதை உணர்ந்து, இதைத் தாண்டி ஏதோ ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், மனிதன் வெறும் உணவுக்காகவே வாழ்ந்தால், அதற்கு ஒரு மண்புழுவாகப் பிறந்திருக்கலாம். விவசாயிக்காவது உபயோகமாக இருந்திருக்கும். ஆகவே செய்யும் செயலில் சந்தோஷமும், கொண்டாட்டமும் இணைந்திருப்பது நமது பாரம்பரியத்தில் வழக்கமாக இருக்கிறது. இந்த நாட்டில் மண்ணில் ஏர் பூட்டுவதற்கு, விதைப்பதற்கு, களை எடுப்பதற்கு, அறுவடைக்கு என எல்லாவற்றுக்கும் ஒரு கொண்டாட்டம் உண்டு. கொண்டாட்டம் என்பது, ஆனந்தமாக, உற்சாகமாக செயல்படுவதற்கான ஒரு வழி.

தைப் பொங்கலும் விவசாயிகளும்!

விவசாயிகளை நினைவுகூர்வது, பொங்கல் கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம். நமது நாட்டில் சுமார் எழுபது சதவிகித மக்கள் விவசாயத்தில் இருக்கின்றனர். நாம் செவ்வாய்க் கிரகம் சென்றிருக்கலாம், தகவல் தொழில் நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியிருக்கலாம், ஆனால் அனைத்தையும்விட மகத்தான சாதனை என்னவென்றால், நூற்றி இருபது கோடி மக்களுக்குத் தேவையான உணவை விவசாய சமூகம் உற்பத்தி செய்து வருகிறது. இது சாதாரண செயல் அல்ல. ஆனால் அது குறித்து நமக்குக் கவனமில்லை. கிராமங்களில் அறிவியல்ரீதியான வசதி, நவீன அடிப்படைக் கட்டமைப்புகள், சேமிப்புக்கிடங்கு என்று எதுவும் பெரிய அளவில் இல்லாத நிலையிலும், விசாயிகளின் திறமையினால் மட்டும் இந்த சாதனை நிகழ்ந்து வருகிறது. மக்கள் பலரும் இதை உணராமல் இருக்கின்றனர். நாம் வாழ்ந்திருப்பதற்குக் காரணம், வேறெந்த பொருளாதரமோ அல்லது பங்குச் சந்தையோ கிடையாது. பெரிய அளவில் எந்த அமைப்பும் இல்லாமல், ஆனால் ஒரு தனிப்பட்ட விவசாயியின் சிரமத்தினால், அவருடைய செயலினால்தான் நாடு இந்த அளவுக்கு முன்னேற்றமாக இருக்கிறது. நாம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்திருக்கலாம். ஆனால் உணவு பற்றாக்குறை சூழல் இதுவரை நம் நாட்டில் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் கிராமங்களில் இருக்கும் நமது விவசாயிகள்.

நகரவாசிகளான நாம் அனைவரும் வருடத்தில் ஒரு நாளாவது விவசாயிகளை நினைவுகூர்ந்து, அவர்களது சாதனைக்குத் தலைவணங்கவேண்டும். தினமும் நமக்கு முன்னால் உணவு வரும்போது, முதலில் நாம் விவசாயியை வணங்கவேண்டும். நாம் யாராக இருந்தாலும் உணவைத்தான் சாப்பிடுகிறோம். இதற்கு ஒரு நன்றியும் கவனமும் அளிப்பது நமது பண்பாடு. உணவைக் கொடுக்கும் மண்ணுக்கு, மண்ணிலிருந்து உணவை உருவாக்கும் விவசாயிக்கு, அதைப் பக்குவமாகச் சமைத்துப் பரிமாறும் தாய்க்கு, இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மாடுகள், சுற்றுச்சூழல், மற்றும் சூரியனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். இந்தப் பொங்கல் திருநாள் மட்டுமில்லாமல், வருடத்தின் ஒவ்வொரு நாளும், ஒரு கணமேனும் நமக்குள் இந்த நன்றி உணர்வைக் கொண்டுவந்தால், நமது வாழ்க்கையின் அடிப்படையையே நாம் மாற்றிக்கொள்ள முடியும். இந்த பொங்கல் விழாவின் அடிப்படை, அதற்குப் பின்னாலிருக்கும் ஒரு மகத்தான புரிதல், ஒரு தத்துவம் உலக மக்கள் அனைவரையும் சென்றடைவதை நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாட்டுப் பொங்கல்

பொங்கல் விழாவின்போது மனிதர்கள் தங்களுக்கு மட்டும் பொங்கல் கொண்டாடவில்லை. தை மாதம் 2ம் நாளில், மாடாக உழைத்த விவசாயிகள் மாட்டுக்கும் பொங்கல் வைக்கிறார்கள். நம் கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பசு தாயாகவே மதிக்கப்படுகிறது. அதனால், அதற்கு பூஜை செய்து அன்னம் ஊட்டுகிறார்கள். பொட்டு வைத்து மாலை அணிவிக்கிறார்கள். காளையும் அதற்கு ஈடான மரியாதையைப் பெறுகிறது. மாடு என்பது சக்தியாக, தாயாக, பயிர்த் தொழிலுக்கு ஆதாரமாகப் பயன்படுவதால், மாடுகளே ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டது. இன்றும் நாளையும்கூட அவ்வாறே விளங்கும்.

காணும் பொங்கல்

கேள்வி: நமது அண்டை அயலார் உற்றார் உறவினருடன் கூடிப் பழகி மகிழ்வதற்கென்று ஒரு விழாவாக காணும் பொங்கல் பார்க்கப்படுகிறது. காணும் பொங்கலை இப்படிக் கொண்டாடுவதற்கு என்ன காரணம்?

சத்குரு: சமூகத்தில் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்காக கலாச்சாரத்தில் இந்த மாதிரி ஒரு தன்மையை வைத்துள்ளார்கள். இது மிக மிக தேவையானது. அதிலும் குறிப்பாக, ஒரு விவசாய சமூகத்தில் இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், தனியாக இருந்து யாரும் விவசாயம் செய்ய முடியாது. அந்த காலத்தில், நாம் விதை விதைக்க வேண்டுமென்றால், பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து விதைப்பார்கள். அவர்களுக்காக நாம் சென்று விதைப்போம். இப்படி ஒரு ஒத்துழைப்பு இருந்தது. ஒரு ஒற்றுமை இருந்தால் தான் நல்லபடியாக வாழமுடியும் என்று உணர்ந்திருந்ததால், இந்த காணும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பொங்கல் செய்வது எப்படி? (Pongal Recipe in Tamil)

இனிக்கும் கரும்புகளும் தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலும் தான் பொங்கல் விழாவின் ஸ்பெஷல்! அதிலும் அந்த சர்க்கரைப் பொங்கலை புத்தம் புதிய அரிசிசியுடன் வெல்லம், நெய், பால் போன்றவற்றை சேர்த்து அதிகாலையில் வீட்டு வாசலில் வைத்து, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டு சூரியனுக்கு படைப்பார்கள். மேலும், பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவையை சொல்லவும் வேண்டுமா?!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)

பால் - 3/4 லிட்டர்

முந்திரி - 10

உலர் திராட்சை - 10

வெல்லம் - 750 கிராம் அல்லது இனிப்பு சுவையை விரும்புபவர்கள் 1 கிலோ அளவுக்கு சேர்க்கலாம். (பொடி செய்து கொள்ளவும்)

நெய் - 150 கிராம்

பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியும் , பாசிப்பருப்பும் தண்ணீரில் கழுவி ஊற வைத்து, பின் ஊற வைத்த தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.

பால் கலந்த தண்ணீர் நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு ஊற வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்

அரிசி வெந்ததும் பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.

வெல்லம் கரைந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!

குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.

 

பொங்கல் கொண்டாட்டப் புகைப்படங்கள் (Pongal Images)

பொங்கல், Pongal Festival in Tamil, தைப்பொங்கல், Pongal 2021

 

தொடர்புடைய பதிவுகள்:

 போகி, பொங்கல்... ஏன் கொண்டாடுகிறோம்?

போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எறிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது?" இதற்கான விளக்கங்களும் சத்குருவின் வாழ்த்துக்களும் இங்கே...

மாட்டுப் பொங்கல் விழா எதற்காக?

இது வரை நம் சிந்தனைக்கு எட்டாத, புதிய பார்வையில் சத்குரு எடுத்துக்கூறும் கருத்துக்கள் மாட்டுப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணரவைப்பதுடன், நம் வாழ்வில் எல்லா உயிர்களையும் நம்முடன் அரவணைத்துச் செல்லும், மறந்துபோன நம் பண்பாட்டை மீட்டெடுப்பதாகவும் உள்ளது.

நாட்டு மாடுகள் இயற்கை விவசாயத்திற்கு ஏன் அவசியம்?

மாடுகள் கோ மாதாவாக போற்றப்படும் நம் தேசத்தில், தற்போது நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் பல அரிய இனங்கள் அழிந்துவருவதையும் பார்க்கிறோம். நாட்டு மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தில் நிறைந்துள்ள பலன்கள் பற்றி இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் கருத்துக்களை இந்தப்பதிவு விளக்குகிறது.

காணும் பொங்கல் சொல்லும் செய்தி

பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும்பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த .சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.