‘உழவே தலை' என்று கூறி வள்ளுவப் பெருந்தகை வேளாண்மையின் முக்கியத்துவத்தை சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், இன்று இரசாயன இடுபொருட்களின் செலவினால் விவசாயிகள் கடனாளி ஆவது தொடர்கதையாகி வருவதே நிதர்சனம். இயற்கை விவசாயத்தை முயன்றுபார்ப்பதில் பல்வேறு சந்தேகங்களும் தயக்கங்களும் விவசாய சமூகத்தில் நிலவுவதையும் பார்க்கமுடிகிறது. இயற்கை விவசாயத்தில் செலவே இல்லாமல் இலாபம் ஈட்டும் வெற்றிக் கதைகள், இடுப்பொருள் தயாரிப்பு, பூச்சி மேலாண்மை, கால்நடை மருத்துவம் என இயற்கை விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் தொடரின் முதல்பதிவு உங்களுக்காக!

இரசாயன முறையில் விவசாயம் செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை அதில் இருந்து மீட்டெடுத்து இயற்கை முறை விவசாயத்துக்கு மாற்றிய பெருமைக்குரியவர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

மண்ணுக்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் இரசாயன விவசாயத்தின் தீமைகளை உரக்க கூறிய அவர், இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்வதற்கும் பல வழிமுறைகளை கற்றுக்கொடுத்தார். அவரின் வழிமுறைகளையும் வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கரின் வழிமுறைகளையும் அடித்தளமாகக் கொண்டு வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது ‘ஈஷா விவசாய இயக்கம்’.

ஈஷா விவசாய இயக்கமும் நம்மாழ்வாரும்

தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஈஷா பசுமைக் கரங்கள்' திட்டத்தின் ஓர் அங்கமே ஈஷா விவசாய இயக்கம். 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பல்வேறு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, படிப்படியாக முன்னேறி தற்போது 3000 விவசாயிகளுடன் தமிழகத்தின் மிகப்பெரிய விவசாய இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதனுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்த நம்மாழ்வார் தன்னுடைய இறுதிகாலம் வரை இந்த விவசாய இயக்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவரின் மறைவுக்கு பிறகு சுபாஷ் பாலேக்கர் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 2015-ம் ஆண்டு ஈஷா விவசாய இயக்கம் நடத்திய ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்' குறித்த 8 நாள் பயிற்சி வகுப்பு விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் பயிற்சியில் இடுப்பொருட்கள் செலவே இல்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகளை சுபாஷ் பாலேக்கர் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தார். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500 விவசாயிகள் பயனடைந்தனர். இந்தப் பயிற்சி வகுப்புக்கு பிறகு விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்தில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற எங்கள் தன்னார்வலர்கள் அடங்கிய குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து முன்னோடி இயற்கை விவசாயிகளை கண்டறிந்தது.

துணையாகும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள்

அந்த முன்னோடி இயற்கை விவசாயிகளையே வேளாண் வல்லுநர்களாக மாற்றி வருகிறது ஈஷா விவசாய இயக்கம். இதற்காக நெல், தென்னை, வாழை, கரும்பு, காய்கறி, மிளகு என பயிர் வாரியாக அந்தந்த முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளுக்கே விவசாயிகளை குழுவாக வரவழைத்து நேரடி களப் பயிற்சி அளித்து வருகிறது. இதன்மூலம், ஒரு முன்னோடி விவசாயி தன்னுடைய அனுபவத்தில் பெற்ற பாரம்பரிய அறிவை பிற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும், ஒரு விவசாயிக்கு ஏராளமான விவசாயிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் தங்களுடைய மரபுச் சார்ந்த அனுபவ அறிவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

இதில் முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தில் புதிதாக கால் பதிக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஒரு பாலம் போல் செயல்படுகிறது எங்கள் விவசாய இயக்கம். இயற்கை விவசாயிகளே இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த விவசாய இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையம், திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சொந்தமாகவே இயற்கை விவசாயம் செய்துவருகிறது. முன்னோடி விவசாயிகளிடம் இருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அந்த நிலங்களில் வெவ்வேறு விதமான பயிர்கள் பரிசோதனை முறையில் நடப்படுகின்றன. அதில் நன்கு பலன்தரும் வழிமுறைகள் விவசாயிகளிடம் எடுத்து செல்லப்படுகின்றன. அவை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாதிரி பண்ணையாக உருவாக்கப்பட்டுள்ளன.

வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள்...

இயற்கை விவசாயத்தில் இடுப்பொருட்களுக்கு முக்கிய பங்குள்ளது. ஒரு இயற்கை விவசாயி தனது வயலுக்குத் தேவையான இடுப்பொருட்களை தானே தயாரிப்பதற்கு எங்கள் விவசாய இயக்கம் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து வருகிறது. வெவ்வேறு மாவட்டங்களுக்கு எங்கள் விவசாய குழுவினர் நேரடியாக சென்று இடுப்பொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கின்றனர். தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் இந்தப் பயிற்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்தப் பயிற்சியில் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மீன்அமிலம், மூங்கில் ஈயம், பழ ஈயம் (வளர்ச்சி ஊக்கிகள்), பத்திலை கசாயம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம், வேப்பங்கொட்டைக் கரைசல் (பூச்சிவிரட்டிகள்), தேமோர் கரைசல், அரப்புமோர் கரைசல் (செயல் ஊக்கிகள்) ஆகிய 12 வகையான இடுப்பொருட்களை எப்படி தயாரிப்பது என்பதை நேரடி செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு எளிய முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம் இந்தப் பயிற்சியை வழங்குகிறார். நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என பல விஷயங்களை விவசாயிகளுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். இயற்கை விவசாயம் செய்வதற்கு நாட்டு மாடுகள் வைத்திருப்பது அவசியம். ஆகவே, விவசாயிகள் நாட்டு மாடுகளை நோய் தாக்காமல் எப்படி பராமரிப்பது என்பது குறித்து கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி பயிற்சி அளிக்கிறார். இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் ஈஷா விவசாய இயக்கம் ஆலோசனை வழங்கி வருகிறது. அதனைப் பெற்று, விவசாயிகள் பயனடையலாம். (ஆலோசனைக்கு ishaagromovement@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்)

பயிர் வாரியாக முன்னோடி இயற்கை விவசாயிகளின் வெற்றி கதைகள், இடுப்பொருள் தயாரிப்பு, பூச்சி மேலாண்மை, கால்நடை மருத்துவம் என இயற்கை விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களை வரும் வாரங்களில் விரிவாக பார்ப்போம்.

நன்றி: தினந்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு : இந்த கட்டுரை தினந்தந்தி நாளிதழில் வெளியானது. ஈஷா விவசாய இய்யாக்கம் Facebook மற்றும் Youtube சேனல்லில் இணைந்திடுங்கள்.