ஏற்றுக்கொள்வது எப்படி விடுதலை தருகிறது?
சமீபத்தில் குரு பௌர்ணமியைத் தொடர்ந்து நிகழ்ந்த "குருவின் மடியில்" சத்சங்கத்தில், ஏற்றுக்கொள்ளும் தன்மை எப்படி உயிரை நெகிழ்வாக நடக்கச் செய்கிறது என்று சத்குரு விளக்குகிறார். இருபத்து நான்கு மணிநேரத்திற்காவது முழுமையான ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருந்துபார்க்கச் சொல்லி நம்மை அழைக்கிறார். சவாலுக்கு நீங்கள் தயாரா?
உங்கள் மனதை நீங்கள் பார்த்தால், எதை 'நான்' என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதன் ஆளுமைத்தன்மையை நீங்கள் பார்த்தால், சாதாரணமாக எதை நீங்கள் உங்கள் ஆளுமைத்தன்மை என்று கூறுகிறீர்களோ, அது வெவ்வேறு நிலைகளிலான மலச்சிக்கல் போன்றது.
"எனக்கு இது பிடிக்காது. அதை சகித்துக்கொள்ள முடியாது. என்னால் இதை செய்யமுடியாது. அதை செய்யமுடியாது. எனக்கு இதுதான் பிடிக்கும். அது பிடிக்காது," - இப்படி பல நிலைகளிலான மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஏற்படுத்துவது எது? உடலளவில் மலச்சிக்கல் என்றால் குடலில் ஒரு பகுதி இறுகி சுருங்கிவிட்டது என்று அர்த்தம். இங்கே ஒருவரின் மனமும் உள்ளமும் சுருங்குவதால், உயிர் சுதந்திரமாக நடக்கமுடியாதபடி இறுக்கிப் பிடிக்கிறது.
உடல் மற்றும் மனதின் கருவிகளை மட்டுமே கொண்டு வாழ்க்கையை அனுபவித்துணரும் திறன் கொண்டிருப்பதால் இப்படி இறுகிப்போகிறது. உங்கள் உடலோ மனமோ ஏதோவொரு விதத்தில் இறுகுகிறது என்றால், வாழ்க்கையை அனுபவித்துணரும் உங்கள் திறனுக்கும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
Subscribe
இது பல விதங்களில் நடக்கிறது - எப்படியெல்லாம் இது நடக்கிறது என்று பார்த்தால் நீங்கள் வியந்துபோவீர்கள். உங்களில் பலர் இப்படிப்பட்ட விஷயங்களைத் தாண்டி வளர்ந்துவிட்டீர்கள் என்றே நினைக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு பத்து வயதாக இருந்தபோது, உங்கள் மாமா, உங்கள் தாய்மாமனைச் சொல்கிறேன். அப்போது உங்கள் மாமா ஏதோ சொன்னார் - அவர் உங்களை 'முட்டாள்' என்று சொல்லிவிட்டார். இப்போது உங்களுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது, ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்பு அவர் உங்களை முட்டாள் என்று திட்டியது இன்றும் உங்களை பாதிக்கிறது. அவர் முகத்தை பார்க்கும்போதெல்லாம், "இவர் என்னை முட்டாள் என்று சொன்னார்!" என்ற உணர்வே மேலோங்குகிறது. இப்படியே இது தொடர்கிறது.
உங்கள் ஆளுமைத்தன்மை எந்த அளவு இறுக்கமாக இருக்கிறதோ, அந்த அளவு உங்களுக்குள் கீறல்களையும் காயங்களையும் சுமந்து செல்கிறீர்கள். ஆறுவதற்கு இவை உடலின் காயங்களும் அல்ல. உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக்கொண்ட காயங்களாக இவை இருப்பதால், வாழ்க்கை அனுபவத்தின் பதக்கங்களாக இவற்றை சுமக்கிறீர்கள், அதனால் இவை உங்களை விட்டு விலகுவதில்லை. இதனால்தான், "எனக்கு இவரைப் பிடிக்கும். எனக்கு அவரைப் பிடிக்கும். எனக்கு இவர்மேல் பிரியம். எனக்கு அவர்மேல் வெறுப்பு. இவரை சகித்துக்கொள்ளவே முடியாது," - என்றெல்லாம் வந்தது.
அடுத்த இருபத்து நான்கு மணிநேரம், நீங்கள் இதைச் செய்யவேண்டும்: உங்கள் மாமா'க்கள், நண்பர்கள், எதிரிகள், அவர்கள், இவர்கள் என்று எவராக இருந்தாலும் - அவர்களிடம், "உங்களை ஏற்றுக்கொள்கிறேன், உங்களை நேசிக்கிறேன்" என்றெல்லாம் சொல்லவேண்டாம், அது தேவையில்லை. ஆனால் உங்களுக்குள் நீங்கள் எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். யாரோ ஏதோ சொன்னார்கள், யாரோ என்னவோ செய்தார்கள், யாரோ உங்கள் காலில் மிதித்துவிட்டார்கள், யாரோ உங்கள் தலைமேல் கால் வைத்துவிட்டார்கள், எல்லாவற்றையும் வெறும் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு - இது மிகவும் குறுகிய கால அளவு - வெறும் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திடுங்கள்.
உங்கள் மனதளவில் நடப்பவை, உணர்வளவில் நடப்பவை, உடலளவில் நடப்பவை, சமுதாயத்தில் நடப்பவை, மற்ற எல்லாநிலைகளிலும் நடப்பவை எதுவாயினும், எல்லாவற்றையும் உள்ளபடி அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். எவருடனும் எதுவும் செய்யத் தேவையில்லை, உங்களுக்குள் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்தால், வாழ்க்கை பிரம்மாண்டமாக விரியும்.
சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.