மஹாபாரதம் பகுதி 54: தர்மத்தைக் கடைபிடித்து வாழ்வதே முழுமையானதா?
தர்மத்தைப் பின்பற்றுவதும் உண்மையாக இருப்பதும் ஒன்றுதானா? ஒருவரின் தர்மம் என்பது நிலையான விதிமுறைகளா அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுமா? தர்மத்தின் வழி நடப்பவர், அனைவரையும் அரவணைப்பராகவும் இருக்க வேண்டுமா? மஹாபாரதத்தின் அடிநாதமாக திகழும் தர்மம் பெரும்பாலான நேரங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. எது உண்மையான தர்மம், தர்ம வழியில் நடப்பது என்றால் என்ன என்பது பற்றி நமக்கு இங்கு ஆழமான, தெளிவான விளக்கம் தருகிறார் சத்குரு.
யுதிஷ்டிரன்: உண்மையின் உருவம்
கேள்வியாளர்: சத்குரு, யுதிஷ்டிரன் ஒரு அரசன் என்பதாலும், தெய்வீகத்தன்மையின் வடிவமாக இருப்பதாலும், மக்கள் அவனை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவன் வழி நடந்தார்கள் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால், நம்பவே முடியாத அளவுக்கு சில வினோதமான முடிவுகளை எடுத்த பிறகும் மக்கள் ஏன் யுதிஷ்டிரனுக்கு கீழ்படிந்து நடந்தார்கள்? அதுபோன்ற சமயங்களில் கிருஷ்ணர் ஏன் தலையிடவில்லை? அல்லது யுதிஷ்டிரன் ஏன் கிருஷ்ணரின் அறிவுரையை நாடவில்லை?
சத்குரு: அவையெல்லாம் வினோதமான முடிவுகள் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? இது யுதிஷ்டிரனைப் பற்றிய மிகத் தவறான ஒரு முடிவு. அவன் தர்மத்தைஅப்படியே முழுமையாக கடைப்பிடித்து வாழ்ந்தவன். யுதிஷ்டிரன் ஒரேயொரு பொய் கூட பேச விரும்பவில்லை; எந்த சூழ்நிலையிலும் தர்மத்தை மீற விரும்பவில்லை. அது மட்டுமல்ல, "இந்த அரச பதவியே எனக்கு வேண்டாம்" என்றும் கூறுகிறான்.
அதில் எந்த தவறும் இல்லை. என்ன நடந்தாலும் சரி, எப்படியாவது அரச பதவியை அடைந்தே தீருவேன் என்று எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்த பிறகு, இது எனக்கு வேண்டாம் என்று அவன் கூறியிருந்தால், அதை வினோதமானது, முட்டாள்தனம் என்று நீங்கள் தாராளமாக கூறலாம். ஆனால் யுதிஷ்டிரன், "எனக்கு அரச பதவி வேண்டாம்; நான் நேர்மையானவனாக, உண்மையானவனாக வாழ விரும்புகிறேன்" என்று கூறுகிறான். இவன் அற்புதமான மனிதனில்லையா?
யுதிஷ்டிரன் என்ற மனிதனில் தவறாக ஏதுமில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட செயலை செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அவன் சிக்கியிருப்பதால், ஒரு முட்டாளாக தோற்றமளிக்கிறான். ஏனென்றால், சூழ்நிலைகள் முன்நிர்ணயித்த ஒரு விசையால் செலுத்தப்படுவதோடு, அது எங்கே இட்டுச்செல்கிறது என்பதும் அவனுக்கு புரியவில்லை. அவன் வெறுமனே தர்மப்படி வாழும் ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறான், அதனால் அது சரியாக பொருந்திப் போகவில்லை. இதுதான் அவனது பிரச்சனை மொத்தமும். யுதிஷ்டிரன் வினோதமான முடிவுகளை எடுக்கவில்லை; அவன் எடுத்த முடிவுகள் அந்த நாட்களில் பெரிதும் மதிக்கப்பட்டது. இன்றும் கூட யாரோ ஒருவர், தான் மிகவும் மதிக்கும் ஒன்றை உங்களுக்கு வழங்கினால் நீங்கள் அவரை ஒரு குறிப்பிட்ட மதிப்போடும், மரியாதையோடும், போற்றுதலுக்கு உரியவராகவும் பார்ப்பீர்கள்தானே? எல்லோருமே அதேவிதமான மரியாதையோடும், உணர்வோடும் தான் யுதிஷ்டிரனை பார்த்தார்கள். எல்லோருக்குள்ளும் அவரவரது சுய கட்டாயங்கள் இருந்ததால் யுதிஷ்டிரனிடம் சீறினார்கள். ஆனால், பல வழிகளிலும் அவன் சரியானவன் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. நீதி நூல்களில் என்ன குறிப்பிடப்பட்டிருந்ததோ அதை தன்னால் முடிந்துவரையில் பின்பற்ற முயற்சி செய்தான்யு திஷ்டிரன்.
கிருஷ்ணரின் தர்மம்
கேள்வியாளர்: சத்குரு, துரியோதனனும் அர்ஜுனனும் பாரதப் போருக்கு உதவி கேட்டு கிருஷ்ணரை அணுகியபோது, தனது யாதவ படை வீரர்களை துரியோதனுக்கு அளித்தார் கிருஷ்ணர். பாரதப்போரில் துரியோதனின் படை நிச்சயமாக தோல்வியடையும் என்பதை நன்றாக அறிந்திருந்தும், தன்னையே நம்பியிருந்த தனது படைவீரர்களை துரியோதனனிடம் அனுப்பி வைத்தார் கிருஷ்ணர். ஒரு அரசராக கிருஷ்ணர் செய்தது தர்மமாகுமா?
Subscribe
சத்குரு: இந்த சூழ்நிலைக்கு எதை செய்தால் பொருத்தமாக இருக்குமோ, அதை செய்வதே கிருஷ்ணரின் தர்மம். தர்மம் என்பதை பழங்காலத்தை சேர்ந்த ஒரு சட்டமாகவும் பார்க்கலாம் அல்லது இன்றைய சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வதாகவும் பார்க்கலாம். ஒருவரைப் பற்றி முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த கதாபாத்திரங்கள் எல்லாமே உங்களுக்குள் இருக்கிறது, அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்து, உங்களுக்குள் எதை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் துரியோதனன், உங்களுக்குள் இருக்கும் அர்ஜுனன், உங்களுக்குள் இருக்கும் யுதிஷ்டிரன், உங்களுக்குள் இருக்கும் கர்ணன் அல்லது உங்களுக்குள் இருக்கும் கிருஷ்ணன் - யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு வழங்கிக்கொண்டே இருக்க முயற்சி
செய்யாதீர்கள். முட்டாளைப் போல தோன்றும் ஒருவர், இறுதியில் வெற்றியாளராக வரமுடியும். தீய சக்தியாக தோற்றமளிக்கும் ஒருவர், இறுதியில் தெய்வீகமாகவும் முடியும். யார் ஒருவர் மிகச் சரியானவராக தோன்றுகிறாரோ, அவர் எடுத்த முடிவுகள் அனைத்துமே தவறாக முடியக்கூடும்.
எதை அடைவதற்காக கிருஷ்ணர் இவ்வளவு முயற்சிகளையும் மேற்கொள்கிறார் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும் - தனது முயற்சிகளால் கிருஷ்ணர் எதையும் இழக்கப் போவதில்லை, எதையும் அடையப் போவதுமில்லை. அவருக்கென்று ஏற்கனவே ஒரு வளமான தேசம் இருக்கிறது; அவர் அங்கேயே ஆனந்தமாக வாழ்ந்திட முடியும். கிருஷ்ணர் தங்கள் சொத்து என்பதைப் போல பாண்டவர்கள் பேசுகையில் அவர்களிடம் கிருஷ்ணர், "நான் உங்களை எந்த அளவு நேசிக்கிறேனோ, அதே அளவு துரியோதனனையும் அவனது சகோதரர்களையும் நேசிக்கிறேன், ஆனால் இப்போது நான் உங்களுடன் நிற்கக் காரணம், நீங்கள் உண்மையானவர்களாக இருக்கிறீர்கள் என்பதால்தான். நீங்கள் எவ்வளவு காலம் உண்மையானவர்களாக இருக்கிறீர்களோ அதுவரை மட்டுமே நான் உங்களுடன் இருப்பேன். நான் கௌரவர்களை வெறுப்பதாலோ அல்லது உங்களை நேசிப்பதாலோ நான் உங்கள் பக்கம் நிற்கவில்லை" என்று நினைவூட்டுகிறார்.
இப்போது உங்களுக்கு இந்த கேள்வி வந்துவிடும், "கிருஷ்ணர்தானே அவர்களை உண்மையாக இருக்காதீர்கள்" என்று கூறுகிறார்? உண்மை என்பது வெறும் வார்த்தையில் இல்லை; உண்மை என்பது உயிரோட்டமானது. உதாரணமாக, கடந்த சில நாட்களில் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது, ஆனால் எந்த உயிர் சேதமும் இல்லை. அதிகபட்ச சேதாரம் ஏற்பட வேண்டும் என்பதற்காக எங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில்தான் அவர்கள் குண்டுவைக்க விரும்புவார்கள். அந்த வகையில் பார்த்தோமானால், இப்போது இங்கே நடந்து கொண்டிருக்கும் இந்த மஹாபாரத நிகழ்ச்சி அவர்கள் எதிர்பார்க்கும் சரியான ஒரு இலக்காக இருக்கிறது, ஏனென்றால் இங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் குழுமியிருக்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை அறிந்து, என்னிடம் அவர்கள், "இந்த ஆதியோகி ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கிறதா?" என்று கேட்டால், நான் என்ன பதிலளிப்பது? உண்மையைச் சொல்ல வேண்டுமா? உச்சபட்ச உண்மை என்பது, அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மையில் செயல்படுவது.
இங்கே கேள்வி என்னவென்றால், நீங்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்பவராக வாழ விரும்புகிறீர்களா அல்லது உங்களை மட்டும் தனித்துக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களா? இதுதான் கிருஷ்ணரின் தர்மம். உங்கள் நோக்கமும், உங்கள் செயல்களும் மிகப் பிரமாண்டமானதாக, அனைவருக்குமான நல்வாழ்வை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்றால் கிருஷ்ணர் உங்களுடன் இருக்கிறார். உங்கள் நோக்கமும் உங்கள் செயலும் உங்கள் தனிப்பட்ட நல்வாழ்வை மட்டுமே குறித்ததாக இருக்கிறது என்றால் அவர் உங்களுடன் இல்லை. இதைத்தான் கிருஷ்ணர் பாண்டவர்களிடம் கூறுகிறார். என்ன நடந்தாலும், அதை அனைவரையும்அ ரவணைத்து செல்லும் சாத்தியமாக மாற்ற முயற்சிக்கிறார் கிருஷ்ணர். அதில் யாரேனும் குறுக்கிட்டால், என்ன தேவையோ அதை செய்யவும் அவர் சித்தமாக இருக்கிறார்.
நீங்கள் எந்த விதமான ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுபவராக இருந்தாலும், ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது, எல்லோருமே அப்படித்தான் செய்வார்கள். உங்கள் நல்வாழ்வுக்கு தடையாக யாரோ ஒருவர் குறுக்கிட்டால், நீங்கள் அவர்களுடன் பேசிப் பார்ப்பீர்கள்; சமாதானம் செய்துகொள்ள விரும்புவீர்கள்; அவர்களை தடுக்க முயல்வீர்கள்; உங்களால் என்ன முடியுமோ அவை அனைத்தையும் செய்வீர்கள். இது எதுவுமே வேலை செய்யவில்லை, அவர்கள் தொடர்ந்து உங்கள் வழியில் குறுக்கிடுகிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அவர்களை அகற்றுவீர்கள். உண்மையை வெளிப்படையாக பேசுவதில் கிருஷ்ணருக்கு எந்த சங்கடமும் இல்லை. நீங்களும் அப்படித்தான் செய்வீர்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்ளப் போதுமான தைரியம் இப்போது உங்களிடம் இல்லை.
செயல்படுவது.
சற்றும் நம்பிக்கையே இல்லாத ஒரு சூழ்நிலையிலும் கூட, விராட தேசத்திலிருந்து ஹஸ்தினாபுரம் நோக்கி கிருஷ்ணர் பயணப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில் நானூறு, ஐநூறு கிலோ மீட்டர் தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால், உங்கள் நோக்கத்தின் மீது நீங்கள் தீர்மானமாக இருக்க வேண்டும் - நோக்கத்தில் உறுதி இல்லையென்றால் பயணத்தை உங்களால் பூர்த்திசெய்ய முடியாது. துரியோதனன் தெளிவாக, "ஒரு குண்டூசி முனையளவு நிலம்கூட தரமுடியாது" என்று கூறிய பின்பும், போர் நடப்பது உறுதி என்ற நிலையிலும், தனது உயிரை பணயம் வைத்து கிருஷ்ணர் அங்கே செல்கிறார்.
இதுவே கிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அவர்கள் கிருஷ்ணரை சிறை பிடித்திருப்பார்கள். துரியோதனனிடம் சிறைப்படுவதை விட கொல்லப்படுவதே மேல் என்று கருதப்பட்டது. அபாயம் என்று தெரிந்தும், துணிந்து கிருஷ்ணர் பொறுப்பை தன் கையில் எடுக்கிறார், நேரில் செல்கிறார், அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்துகிறார். கௌரவர்கள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும் தன்னால் இயன்றவரை சிறந்ததை செய்ய விரும்புகிறார். ஆனால் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும்போது, தான் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறிதும் சலனமின்றி செய்யத் தயாராக இருக்கிறார். மற்றவர்களுக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் என்ன நடக்க வேண்டுமோ, அதை பூர்த்திசெய்யத் தேவையான உறுதி அவர்களிடம் இல்லை, ஏனென்றால் அவர்களது எண்ணங்களும் உணர்ச்சிகளுமே அவர்களுக்கு பெரிதாக இருக்கிறது.
தொடரும்...
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.