மஹாபாரதம் பகுதி 15: ஹஸ்தினாபுரத்தில் கால்தடம் பதிக்கும் பாண்டவர்கள்
மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், தந்தையை இழந்த பாண்டவ சகோதரர்கள் ஹஸ்தினாபுரம் வருவதையும், அது துரியோதனனை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்குவதையும் பார்க்க இருக்கிறோம். மேலும், துரியோதனின் தாய்மாமனான சகுனி, குரு வம்சத்தை பழிவாங்க துடிப்பதற்கான பின்புலத்தையும், சகுனியின் ஆயுதமாகும் பகடைக்காய்களின் பிண்ணனியையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.
கானகத்தின் பிள்ளைகளாக வளரும் பாண்டவர்கள்
சத்குரு: பாண்டவ சகோதரர்கள் ஐவரும் கானகத்தில் நன்றாக வளர்ந்து வந்தனர். சரியான வழிகாட்டுதலுடன், கானகத்தின் நிலையற்ற சூழ்நிலைக்கு உட்படுவதே ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த கல்வி. முனிவர்களும், குருமார்களும் அவர்களின் கல்வியை கவனித்துக் கொண்டாலும், எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை அன்னை அவர்களுக்கு அறிவையும் பலத்தையும் ஊட்டினாள். உறுதியான உடலுடன், பொறுமையும், புத்திசாலித்தனமும் மிக்கவர்களாக, போர்க்கலைகளில் வல்லமையுள்ளவர்களாக ஐவரும் வளர்ந்தனர்.பாண்டுவின் விதியை முடித்த ஆசை
மோகத்துடன் தன் மனைவியரை தீண்டினால் மரணம் நிகழும் என்ற சாபத்தை பாண்டவர்களின் தந்தையான பாண்டு ஏற்கனவே அடைந்திருந்ததால் அவனது மனைவியர் வேறொரு உபாயம் மூலம் பிள்ளைகளை பெற்றதை நாம் முன்னமே பார்த்தோம். பதினாறு ஆண்டுகள் தன் மனைவியரை விட்டு விலகியிருந்த பாண்டு, முனிவர்களுடனும் சந்நியாசிகளுடனும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன் அறிவை விருத்தி செய்தவாறே பிரம்மச்சாரிய சாதனாவை மேற்கொண்டதில் ஆற்றல்மிக்க உயிராக மாறியிருந்தார். ஆனால், ஒருநாள் கானகத்தின் ஆளரவமற்ற ஒரு நதிக்கரையை அவர் அடைந்தபோது அவரது இரண்டாவது மனைவியான மாத்ரி அப்போதுதான் நதியில் குளித்துவிட்டு கரையேறியிருந்தார். மாத்ரியின் ஆடையற்ற உடல் பாண்டுவை தன்னிலை மறக்கச்செய்து இத்தனை ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த கட்டுப்பாட்டை தாண்டி அவள் வசம் ஈர்த்தது.
ஏற்கனவே பாண்டுவின் சாபம் பற்றி அறிந்திருந்த மாத்ரி கடுமையாக எதிர்த்து எச்சரித்தாலும், விதி மாத்ரியை நோக்கி பாண்டுவை இழுத்து அவளது கரங்களில் பாண்டுவின் உயிரற்ற உடலை கொடுத்தது. பயத்தில் உறைந்த மாத்ரி, தன் கணவனின் இறப்புக்கு தன் உடல் மீது கொண்ட ஆசையே காரணமானதை நினைத்து சுயபச்சாதாபத்திலும் விரக்தியிலும் வீறிட்டு கதறினாள். அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த குந்தி நடந்ததை பார்த்ததும் ஆவேசம் கொண்டாள். இரு மனைவியருக்குள்ளும் ஆண்டாண்டு காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் கொதித்து வெடிக்கத் துவங்கியது.
தன் குழந்தைகளின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்த குந்தி சற்று நேரத்திலேயே அமைதியானாள். குற்றவுணர்விலும், ஆற்றாமையிலும் தன் கணவனுக்கு துணையாக தானும் செல்லவேண்டும் என்று நம்பிய மாத்ரி, பாண்டுவின் இறுதி நெருப்பில் புகுந்துவிட முடிவெடுத்தாள். மாத்ரியின் திசையிலேயே தானும் தன் கணவனுடன் செல்ல வேண்டும் என்று சற்று நேரம் வெளியில் காட்டிக்கொண்டாலும், குந்தியின் இதயத்தில் உறையவைக்கும் உறுதி இருந்தது. ஒரு அரசியாக தான் செய்யவேண்டிய காரியங்களை கருமமே கண்ணாக செய்து முடித்தாள் குந்தி. தன் கணவனுடன் கானகம் வந்து பதினாறு ஆண்டுகளுக்கு சற்று அதிகமாகியிருந்த நிலையில், ரிஷிகள் துணையாக உடன் வர பஞ்ச பாண்டவர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் ஹஸ்தினாபுரம் நோக்கி குந்தி நடக்கத் துவங்கினாள்.
ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள்!
நீண்ட நாட்களாக தகவலே இல்லாமல் இருந்த தனது பங்காளிகள் குரு சாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை நோக்கி வரும் செய்தியை கேட்டதும், தானே வருங்கால அரசன் என்ற கனவிலேயே வளர்ந்திருந்த துரியோதனன் வெறுப்பிலும் பொறாமையிலும் மூழ்கினான். உலகைக் காணும் கண் பார்வையை பிறப்பிலேயே இழந்திருந்த திருதராஷ்டிரன், தன் மகன் மீது கண்மூடித்தனமான பாசமும் வைத்திருந்ததால் துரியோதனனின் விருப்பத்திற்கே எல்லாமும் நடந்தும் வந்தது. ஒருவகையில் அரசனாகவே வளர்ந்த தனக்கு திடீரென போட்டி முளைத்ததை ஏற்க முடியாத நிலையில், அவன் அரியணையில் அமரும் சட்டபூர்வமான உரிமையும் பெற்றிருப்பதாக தெரிவதை துரியோதனனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. தன் சகோதரர்களை தூண்டிவிடத் துவங்கினான். ஆனால் அவர்களோ துரியோதனனுடன் ஒப்பிடுகையில் தேசத்தை ஆளத்தேவையான நெருப்பற்றவர்களாக இருந்தார்கள். தன் நூறு உடன்பிறப்புகளில் இரண்டாவதாக பிறந்த துச்சாதனன் தனக்கு மிக ஏற்றவனாக இருப்பதை கண்டான் துரியோதன்.
Subscribe
பாண்டவர்கள் அரண்மனைக்கு வந்து சேரும் முன்பே இருவரும் கொதிக்கத் துவங்கினார்கள். அதிகாரப்பூர்வ அரசனாக இல்லாதபோதும் முடிசூடா மன்னனாக தங்களை ஆண்ட பாண்டுவின் மீது மக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். மக்களுக்கு செல்வவளம் ஏற்படுத்தி, நாட்டை விஸ்தரித்து, நிர்வாகத்தையும் சிறப்பாக நடத்தியிருந்தார் பாண்டு. தனக்குத்தானே விதித்துக்கொண்ட நாட்டை விட்டு வெளியேறும் தண்டனையை பதினாறு ஆண்டுகள் கடைப்பிடித்து இப்போது இறந்தும் போனார் என்பதும், இதுவரை தங்கள் கண்ணில் படாது வளர்ந்த அவரது பிள்ளைகளை முதன்முறையாக பார்க்கப்போகிறோம் என்பதும், மக்களிடம் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்திருந்தது. ஆர்வத்தினாலும் அன்பினாலும் மக்கள் பாண்டவர்களை காண காத்திருந்தனர். பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் நகரை அடைந்ததும் மக்கள் கோஷமிட்டனர். கானகத்தில் வளர்ந்த சகோதரர்கள் ஐவரும் வலிமை மிக்கவர்களாக, அரண்மனையில் வளர்ந்திருந்தால்கூட இவ்வளவு வலிமையானவர்களாக இருந்திருப்பார்களா எனும்படி வளர்ந்திருந்தனர். நூறு கௌரவ சகோதரர்கள், திருதராஷ்டிரன், காந்தாரி, பீஷ்மர், விதுரர் உட்பட மூத்தோர் அனைவருமே நகரின் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றனர். இளம் பிராயத்திலிருந்தே உலகை காண உதவியாக இருந்ததுடன் எப்போதுமே தன் மீது அக்கறை செலுத்திய தன் இளைய சகோதரன் பாண்டுவின் பிள்ளைகள் திரும்பி வந்தது திருதராஷ்டிரனுக்குள் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. தனது சகோதரனை நேசிப்பதாக நம்பிய திருதராஷ்டிரன், அவனது பிள்ளைகளுக்கு அரசாளும் உரிமை கிடைக்காது என்பது தெரிந்தபிறகு, தனக்குள் நடக்கும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாதவனாக இருந்தான்.
துரியோதனனிடம் அதிகரிக்கும் துவேஷம்
பாண்டவர்களும் குந்தியும் நகருக்குள் வரவேற்கப்பட்டார்கள். பாண்டுவிற்கு ஈமச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் உள்ளே நுழைந்ததும் விதியும் தன்னைத்தானே வெளிப்படுத்தத் துவங்கியது. அதிலும் இருப்பவர்களிலேயே பலசாலிகளாக இருந்த பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே அது நன்றாகவே வேலை செய்தது. ஆஜானுபாகுவான உருவத்துடன் இருந்த பீமனின் உடல் வலிமைக்கு சமமான பலத்துடன் துரியோதனனும் இருந்தான். தன் வாழ்நாளில் முதன்முறையாக அரண்மனை வாழ்க்கையை சந்தித்த பீமனுக்குள் உற்சாகம் கரைபுரண்டது. சுறுசுறுப்பும், தடாலடியான அணுகுமுறையும், அப்பாவித்தனமுமாக எல்லா பக்கமும் புகுந்து புறப்பட்டான் பீமன். அந்தந்த சூழ்நிலைகளில் யதார்த்தமாக நடப்பதையே நகைச்சுவையாக மாற்றி எல்லோரையும் கேலி செய்து சிரிக்க வைத்ததுடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கௌரவ சகோதரர்கள் அனைவரையும் -துரியோதனன் உட்பட- புரட்டி எடுக்கவும் தவறவில்லை பீமன்.
இருவருக்குமிடையேயான முதல் அதிகாரப்பூர்வ மோதலுக்கு மல்யுத்த களம் பொருத்தமாக அமைந்தது. தன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்று முழுமையாக நம்பினான் துரியோதனன். நூறு சகோதரர்களில் பலசாலியாக இருந்ததுடன், அதுவரையில் அவனது சம வயதுடைய பிள்ளைகளாலும் மல்யுத்த களத்தில் எதிர்த்து நிற்க முடியாதவனாக இருந்தான். பீமன் ஒவ்வொரு போட்டியாக வென்றுகொண்டே இருப்பதும், அனைவருக்கும் பிரியமானவனாக மாறி வருவதையும் பார்த்த துரியோதனன், பீமனை உரிய இடத்தில் வைக்க அரண்மனையில் அனைவர் முன்னிலையிலும் மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள அழைத்தான். மற்றவர்களின் கண்களில் இது நட்பு ரீதியான போட்டியாக தெரிந்தாலும், இருவரில் ஒருவர் மட்டுமே எஞ்சும்வரையான போட்டியாக அது இருந்தது. ஆனால் களத்தில் இறங்கியதுமே துரியோதனனை கீழே வீழ்த்தினான் பீமன். ஆடிப்போனான் துரியோதனன். தோல்வியடைந்த அவமானம் அதுவரை வெளிக்காட்டாமல் உள்ளேயே வைத்திருந்த வெறுப்பிலும் கோபத்திலும் எண்ணெய் ஊற்றி இனிமேலும் மறைக்கவோ அடக்கவோ முடியாதவாறு அனல் கக்கத் துவங்கியது.
பீமனின் உயிரை குறிவைத்து காய் நகர்த்தத் துவங்கினான் துரியோதனன். ஆலோசகர் என்று சொல்லிக்கொண்டு துரியோதனின் தாய்மாமன் சகுனி அரண்மனைக்குள் நுழைந்திருந்த நேரம் அது. சகுனி என்றாலே 'ஏமாற்று பேர்வழி' எனுமளவிற்கு இந்தியாவில் அந்த பெயருக்கே தனி புகழ் இருக்கிறது. காந்தாரியின் உடன்பிறந்த சகோதரன் சகுனி. காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் முடிந்த பிறகே பீஷ்மருக்கு காந்தாரி விதவையாகும் அம்சம் உடையவள் என்பது தெரியவருகிறது, மக்களிடமும் இதைப்பற்றி பேச்சு கிளம்புகிறது. திருமணமான மூன்று மாதத்திற்குள் தன் கணவனை இழந்துவிடுவாள் என்ற சாபத்தைப் போக்க காந்தாரிக்கும் ஒரு ஆட்டிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு, பிறகு அந்த ஆடு பலி கொடுக்கப்படுகிறது. இதை அறிந்த பீஷ்மர் குரு வம்சம் ஏமாற்றப்பட்டதற்கு தண்டனையாக காந்தாரியின் தந்தை மற்றும் அவளது சகோதரர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்தார். மிகச்சிறந்த கவனிப்பும் நடந்தது. விருந்தினர்கள் வெளியேற வேண்டும் என்றே நினைக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. அப்போதைய காலகட்டத்தின் தர்மப்படி, திருமணமாகி முதன்முறையாக மணமகள் வீட்டார் மணமகன் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு உணவு பரிமாறுவது நிறுத்தப்படும்வரை யாரும் திரும்பிச் செல்லக்கூடாது.
பழிவாங்குவதற்காகவே உயிர் பிழைத்திருக்கும் சகுனி
நாட்கள் செல்லச்செல்ல பரிமாறப்பட்ட உணவின் அளவு குறையத் துவங்கியது. அனைவரும் உடல் எடை குறைந்து வலுவிழக்கத் துவங்கினர். இன்றைய சொகுசு ஹோட்டல்களைப் போல பெரிய உணவு மேசையின் மீது பலவிதமான வடிவங்களில் தட்டுக்கள் பாத்திரங்கள் என அடுக்கியிருக்கும், ஆனால் அவற்றின் மூடியை அகற்றினால் தட்டில் குறைவான உணவு இருக்குமே அதே போலானது. இப்படிப்பட்ட கவனிப்பே அவர்களுக்கு கிடைத்தது. சில நாட்களிலேயே தந்தையும் அவரது பிள்ளைகளும் எலும்பும் தோலுமாக ஆனார்கள். சம்மந்தி வீட்டார் பட்டினி போட்டு கொல்லப் பார்க்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால், அவர்களுக்கு உணவு பரிமாறுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது, எனவே அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை - இதுவே அவர்களின் தர்மம்.
தங்களில் ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பது என்று முடிவு செய்தார்கள். தங்களை மென்மையாக கொல்பவர்களை பழிதீர்க்க தங்களில் அதிபுத்திசாலியாக இருந்த சகுனியை தேர்வு செய்து எல்லா உணவையும் சகுனிக்கே வழங்கிவிட்டு பட்டினி கிடந்தார்கள். பழிவாங்குவதற்கு இன்னும் அதிக பலம் கிடைக்க, சகோதரர்கள் ஒவ்வொருவரும் இறந்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை உண்ணுமாறு சகுனியை அவர்களின் தந்தை ஊக்குவித்தார் என்றும் சொல்லப்படுகிறது. சகுனியின் தந்தை இறந்தால், சொந்த மண்ணில் அவருக்கு கர்ம காரியங்களை செய்ய வேண்டியிருப்பதை காரணமாக வைத்து அப்போது சகுனி அங்கிருந்து வெளியேறிவிடலாம்.
எனவே சகுனி அங்கேயே அமர்ந்து தன் சகோதரர்களின் உடலை அறுத்து அவர்களின் கல்லீரல், சிறுநீரகம், இருதயம் என எல்லாவற்றையும் உண்டான். மரணப்படுக்கையில் இருந்த சகுனியின் தந்தை தனது அருகில் கிடந்த ஊன்றுகோலை எடுத்து ஓங்கி அடித்ததில் சகுனியின் கெண்டைக்கால் உடைந்தது. வலியில் கதறிய சகுனி "ஏன்?" என கேட்டான். "உன் சகோதரர்களின் உடலுறுப்புகள் உனக்கு உணவாக வழங்கப்பட்டது நீ உயிர் பிழைத்திருப்பதற்காக, உன் கெண்டைக்காலை உடைத்தது நீ விந்தியபடி நடக்கும்போது இதை மறந்துவிடமாட்டாய் என்பதற்காக. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நீ பழிதீர்க்கவே உயிரோடு இருக்கிறாய் என்பதை உனக்கு நினைவூட்டும்," என முடிந்தது சகுனியின் தந்தையின் விளக்கம். தந்தை இறந்த பிறகு குரு வம்சத்தை பூண்டோடு அழிப்பது மட்டுமே சகுனியின் ஒரே இலக்காக இருந்தது. ஆலோசகர் என்ற பெயரில் திரும்பிவந்த சகுனியை புத்திசாலி என நினைத்து துரியோதனன் பாராட்டி நட்பானான்.
இறப்பதற்கு முன் சகுனியை அழைத்த அவனது தந்தை, "நான் இறந்தபிறகு என் விரல்களை வெட்டி அதில் தாய கட்டை செய்து கொள். நான் என்னுடைய மந்திர சக்தியை பயன்படுத்தி அவை எப்போதும் நீ விரும்பும் எண்ணிக்கையிலேயே விழும்படி செய்கிறேன். தாயம் விளையாடுவதில் உன்னை யாராலும் வெல்ல முடியாது - இது உனக்கு ஒருநாள் கைகொடுத்து உதவும்" என்றார். எனவே தன் தந்தையின் விரல்களை வெட்டி அதில் தாயகட்டை செய்து கொண்டான் சகுனி. போர்வீரனைப்போன்ற உடல்வாகு இல்லை என்றாலும், பேராயுதமாக கையில் இருந்த இந்த பகடைக்காய்களை கொண்டு உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்று நம்பினான் சகுனி.
சகுனியும் துரியோதனனும் சேர்ந்தால்..
வெறுப்பும் பொறாமையும் நிறைந்திருந்த துரியோதனனுடன் இணக்கமாக நடந்து கொண்ட சகுனி அந்த குணங்களை தொடர்ந்து வளர்க்கவும் செய்தான். துரியோதனிடம் இயல்பில் தந்திர குணமில்லை, ஆனால் முன் கோபமிருந்தது. தன் மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் இயல்பை கொண்டிருந்தான் துரியோதனன். அதிலும் குறிப்பாக அவனது தந்தையிடம் துரியோதனன் அடிக்கடி அப்படி நடந்து கொள்வதைப் பார்த்த சகுனி, "துரியோதனா, கடவுள் மனிதனுக்கு பேசும் ஆற்றலை வழங்கியிருப்பது தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அல்ல, தன் மனதில் இருப்பதை மறைத்து வைத்துக் கொள்ளவே" என்றான். இப்படித்தான் இருந்தது சகுனியின் மனநிலை.
துரியோதனனின் மனதில் இருந்த விஷத்தை தொடர்ந்து வளர்த்த சகுனி அது அவனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவுவதை உறுதி செய்து கொண்டான். அதன் பின் துரியோதனனிடம், "உனக்கு எதிரி என ஒருவன் இருந்தால் அவனை கிள்ளுவதாலோ, அவனை திட்டுவதாலோ, எச்சிலை உமிழ்வதாலோ எந்த அர்த்தமும் இல்லை - அது அவனை இன்னும் வலிமையுள்ளவனாகவே மாற்றும். ஒரு முட்டாள்தான் இந்த வேலையை செய்வான். உனக்கு எதிரி என்று எப்போது ஒருவன் தெரிகிறானோ அப்போதே அவனை கொன்று விடு" என்றான். "என் பங்காளியை அரண்மனையில் வைத்து எப்படி என்னால் கொல்ல முடியும்?" என கேட்டான் துரியோதனன். பல திட்டங்களை எடுத்துக் கொடுத்தான் சகுனி.
தொடரும்...