சத்குரு: ஏறக்குறைய உலகின் ஒட்டுமொத்த மக்களும் இந்தியத் துணிகளை மட்டுமே அணிய விரும்பிய காலம் ஒன்று இருந்தது. ஏனெனில், இணையற்ற மிகச் சிறந்த துணி வகைகளை நாம் உற்பத்தி செய்து வந்தோம். இந்தியாவில் நெய்த துணிகள் உலகத்துக்கே ஆடை அணிவித்தது. உதாரணத்திற்கு, சிரியா மற்றும் எகிப்து நாடுகளின் தொன்மையான அகழ்விடங்களில் இதற்கான சான்றுகளை இன்னமும் நீங்கள் காணமுடியும். இன்றைக்கும்கூட, நெசவுத்துணி என்று வரும்போது, நிறைய துணிவகைகள் அலட்சியத்தினாலும், வேண்டுமென்றே அழிக்கும் நோக்கத்தினாலும் ஏற்கெனவே காணாமல் போய்விட்டன. இருப்பினும் இந்தக் கலாச்சாரத்தில் இருப்பது போன்ற இவ்வளவு எண்ணற்ற நெசவுமுறைகளும், இத்தனை விதமான சாயமேற்றும் முறைகளுடன் ஒரு துணி தயாரிப்பது என்பது பூமியின் வேறெந்த இடத்திலும் இல்லை

ஆனால் சுதந்திரத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே, பிரிட்டிஷ் அரசு மான்செஸ்டரில் உள்ள தங்கள் பருத்தி ஆலைகளை நிலைநிறுத்துவதற்காக, இந்தியாவில் நெசவுத்தொழிலை படிப்படியாகத் திட்டமிட்டு உடைத்து விட்டது. அறுபது ஆண்டுகளில், 1800 முதல் 1860 வரை இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 94% குறைந்துவிட்டது.1830ல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்களில் ஒருவர், "பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்தியாவின் சமவெளிகளை வெளுத்துக்கொண்டிருக்கின்றன," என்றார். ஏனென்றால், அப்போது லட்சக்கணக்கான நெசவாளர்கள் இறந்து விழுந்தனர்.

கைவினைப் பொருட்களின் கலை

அவ்வாறு கூறப்பட்ட நிலையில், இன்னமும் அந்த திறமைகள் நம்மிடம் இருக்கின்றன. இந்தியா 120-க்கும் அதிகமான தனித்துவமான நெசவு முறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு சமூகமும், குறிப்பிட்ட குடும்பங்களும்கூட தமக்கே உரிய பாணியில் நெசவு மற்றும் சாயமேற்றும் முறைகளைக் கொண்டிருக்கின்றன.

நான் பதினேழு வயது இருக்கும்போது சில நேரங்களில் எனது மாமாவின் வீட்டுக்குச் செல்வேன். அங்கு ஆயிரக்கணக்கான பட்டுப் புடவைகளை நெசவு செய்துகொண்டு இருப்பார்கள். ஆயிரக்கணக்கான நூலிழைகள் நுணுக்கமான வடிவியல் வடிவங்களாக நெய்யப்பட்டிருக்கும். அவர்கள் நெய்துகொண்டிருக்கும்போதே, தங்கள் மனதில் ஆயிரக்கணக்கான கணக்கீடுகள் செய்துகொண்டு இருப்பார்கள். நான் பார்த்து கொண்டிருக்கும் போதே, நூலிழைகள் என் கண் முன்னே பட்டுப் பூக்களாக மலரும் அற்புதம் நிகழும். அவர்களின் துல்லியம், கணிதம், கைத்திறன்கள் மற்றும் துணி நெய்தலுடன், அதில் வடிவமைப்புகளையும் கொண்டு வருவதில் இருக்கும் விழிப்புணர்வு நம்பமுடியாதது. அது உண்மையிலேயே அற்புதம்தான்.

மனிதரின் புத்தி கூர்மையும், மனிதக் கைகளும் இணைந்து ஈடுபடும்போது, அது உணவு சமைப்பதாக இருக்கட்டும் அல்லது துணி நெய்வதாக இருக்கட்டும், அதற்கென்று ஒரு வித்தியாசமான தன்மை இருக்கிறது. இது உங்களது உணர்ச்சிகளைப் பற்றியது மட்டும் அல்ல. ஒரு குறிப்பிட்ட அளவு கவனிப்பு, அக்கறை அல்லது ஒருமுகப்பட்ட கவனத்துடன் மனிதர்கள் செய்யும் செயல் என்னவாக இருந்தாலும், அதில் ஒரு வித்தியாசமான தரம் இருக்கிறது.

உடை நம் வசதிக்கானதா அல்லது மாறிவரும் ஃபேஷனுக்காகவா?

இன்று, யாரோ ஒருவர் என்னிடம் கூறிக்கொண்டிருந்தார், அதாவது இன்று இந்தியாவில் உள்ள எந்தப் பெருநகரத்து மக்களின் முழங்காலுக்குக் கீழே உள்ள புகைப்படங்களை எடுத்துப் பார்த்தாலும், அவர்களுள் அறுபது சதவிகிதத்துக்கும் அதிகமானோர் அமெரிக்க உழைப்பாளி வர்க்கத்தினரின் உடைகளாக இருக்கும் ப்ளூ ஜீன்சை, அந்த ஒரே நிறத்தில்தான் அணிந்துள்ளனர் என்றார். மேலும் வர்த்தக நிர்வாகம் செய்யும் மக்கள் நாற்பது டிகிரி சென்டிகிரேட் வெயிலில் கோட் சூட் மற்றும் டை அணிந்து கொள்கின்றனர். டை என்பது நமது சீதோஷ்ண நிலையைப் பொருத்தவரை, அது உங்கள் கழுத்தைச் சுற்றிய தூக்கு கயிற்றுக்கு ஒன்றும் குறைந்ததில்லை. நாம் அணியும் ஆடைகள் நாம் வாழும் சூழலுக்கு அதிகம் பொருந்துவதாகவும், நம்மை இயல்பாக இருப்பதற்கு அனுமதிப்பதாகவும் இருக்க வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்த வகையில், நீங்கள் அணியும் உடையானது இயற்கை இழையில் தயாரிக்கப்பட்டதாக இருப்பது முக்கியம். ஒரு மூன்று நாட்களுக்கு சணல், நார், அல்லது பருத்தி போன்ற இயற்கையான இழைகளால் நெய்யப்பட்ட ஆடைகளுக்கு மாறி, அது எப்படி இருக்கிறது என்று உணர்ந்து பாருங்கள். அதில் உங்களது உடல் இயல்பாகவே இலகுவாக இருக்கும்.

ஆனால், இன்றைய உலகில் 60% ஆடைகள் பாலிப்பைபரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு பத்து வருடத்தில் 98% பைபர் ஆடைகள் சிந்தடிக் எனப்படும் நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகளாக இருக்கும் என்று மதிப்பீடு செய்கிறார்கள். பேஷன் என்பது உலகின் மாசுபாட்டுக்கு இரண்டாவது மிகப்பெரிய காரணியாக உள்ளது. மைக்ரோ பாலி-ஃபைபர் நம் உடலின் உள்ளே செல்கிறது, நம் மண்ணையும் தண்ணீரையும் நஞ்சாக்கி, நம் உணவு சுழற்சியிலும் நுழைந்துவிட்டது. அதை நாம் உண்கிறோம், சுவாசிக்கிறோம் மற்றும் எவ்வளவோ பல வழிகளில் நுகர்கிறோம். இதைப் பற்றி நடத்தப்படும் ஆய்வுகள் பல்வேறு ஆரோக்கியக் கேடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில் பாலி-ஃபைபர் மற்றும் செயற்கை இழை ஆடைகள் புற்றுநோய்க் காரணிகளாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது நம் குழந்தைகளின் நல்வாழ்வையும் நிச்சயமாக பாதிக்கிறது. அமெரிக்காவில் நடந்த ஆய்வில் 90 சதவீத மக்களின் இரத்தத்தில் சிறிதளவேனும் பிளாஸ்டிக் கலந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது

பிளாஸ்டிக்கில் இருந்து இயற்கை பொருளுக்கு

நாம் இயற்கை இழைகள் மற்றும் நெசவுத் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கும் காலம் வந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாங்கள் செய்து வந்த தனித்துவமான நெசவு நுணுக்கங்களை, குடும்பங்கள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி வந்துள்ளன. ஆனால், இன்றைக்குக் கல்விமுறை எப்படி உள்ளது என்றால், ஒரு குழந்தை தறிக்குச் சென்று, தன் பெற்றோருடன் சேர்ந்து நெசவு முறையைக் கற்றால், அதனை நவீன சிந்தனையானது, குழந்தைத் தொழிலாளர் முறை என்கிறது. நெசவுத்துறையில் நிபுணத்துவம் பெற அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவம் முதற்கொண்டே அதில் மனதைச் செலுத்தவேண்டியுள்ளது. குழந்தைகளை பதினேழு வருடங்களுக்கு நீங்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அதன் பிறகு நெசவு கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது செயல்படாது.

வாரத்திற்கு ஒரு முறையாவது, தயவுசெய்து ஏதோ ஒரு இந்திய உடையை அணியுங்கள். இது உங்கள் ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் சூழலியல் நல்வாழ்வுக்கானது.

பழைய முறையிலான இந்தப் பள்ளித்திட்டத்தை மாற்றுவதற்கு நாம் தற்போது கொள்கை வரைவு ஒன்றை முன்மொழிந்து வருகிறோம். அதிர்ஷ்டவசமாக கடந்த 2018ல் அரசு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், இனி வரும் நாட்களில், பள்ளியில் ஐம்பது சதவிகிதம் நேரம் மட்டுமே ஏட்டுக்கல்வியில் கவனம் செலுத்தவேண்டும், மற்ற நேரங்களில் விளையாட்டு, கலை, இசை, கைவினை மற்றும் பல்வேறு விதமான செயல்முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், குழந்தைகள் இளவயதிலேயே கைத்தறிக் கலையைக் கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், பள்ளிச் சீருடைகளின் உருவாக்கத்தில் ஆரோக்கியமான இயற்கை இழைகளை எப்படிப் பயன்படுத்துவது என்றும் ஆய்ந்து வருகிறோம். கேரள மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் இதை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி உள்ளன. தனியார் பள்ளிகளிலும் இதை ஊக்குவிப்பதுடன், குழந்தைகள் அனைவரும், அவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இயற்கைப் பொருட்களில் தயாரிக்கப்படும் ஆடையை மட்டும்தான் அணிய வேண்டும் என்ற செய்தி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும், அரசுப் பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாடகைக் கார் ஓட்டுனர்கள் போன்றோரும் பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் இயற்கை இழையினாலான சீருடைகள் அணிவதைப் பரவலாக்கலாம்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட பேஷன் டிசைனர்கள் தர நிர்ணயம் செய்வதற்கும், இயற்கையான இழைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில், இந்த நாட்டில் இருக்கும் என்ணற்ற வியப்புக்குரிய நெசவாளர்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் இருக்கும்படியாகவே எனது உடைகளை அணிகிறேன். ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம் இந்தியாவின் வசதி படைத்த மக்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் அலமாரியில் இருக்கும் ஆடைகளில் குறைந்தபட்சம் இருபது சதவிகிதமாவது கைத்தறி ஆடைகள் – மக்களால் நெய்யப்பட்டதாக, இயந்திரங்களால் அல்ல -வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். வாரத்திற்கு ஒரு முறையாவது, தயவுசெய்து ஏதோ ஒரு இந்திய உடையை அணியுங்கள். இது உங்கள் ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் சூழலியல் நல்வாழ்வுக்கானது. அதேநேரத்தில், நெசவுத் தொழிலின் கலை மற்றும் கைத்திறனுக்குப் பின்னால் இருக்கும் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள்.

 

அமைதிக்கான ஆடை அலங்கார போட்டி

மகாத்மா காந்தியின் 150 வது நினைவு நாளை முன்னிட்டு, "அமைதிக்கான ஆடை அலங்காரம்" என்றழைக்கப்படும் புதியதொரு தொடக்கத்திற்கு, அமெரிக்காவின் முன்னணி ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் சிலரை ஒன்று திரட்டியுள்ளோம். இது, நாம் நடைமேடையில் நடந்துசெல்வதற்கான ஒரு நவ நாகரீகக் கண்காட்சி அல்ல. தோராயமாக பதினைந்து முதல் இருபது ஆடை அலங்கார நிபுணர்களிடம், இந்தியாவின் நெசவுத் துணிகளை நாம் காண்பிப்பதற்கான ஒரு இடம். சுமார் 110 வகையான நெசவுத் துணிகளை நாம் கொண்டுவந்துள்ளோம். இதன் மூலம் அவர்கள் துணிகளைப் பார்த்து, அவர்களது வடிவமைப்பில் இந்தத் துணியைப் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

நெசவாளர்களை நேரடியாக சந்தையுடன் இணைக்கவும் விரும்புகிறோம். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் அவர்களை இணையதள வியாபாரத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள், நெசவாளர்களிடமிருந்து உத்தரவாதமளிக்கப்பட்ட தரமான துணிகளையும், ஆடைகளையும் வாங்கிக்கொள்ளலாம்.

இதன் மூலம் விவசாயிகள் எப்படிப் பயன் பெறமுடியும் என்றும் வழிவகைகளை ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். உணவுப் பயிர்களில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உணவு அழிந்துபோகக்கூடியது என்பதால், விவசாயிகள் அதை உடனடியாக விற்பனை செய்யவேண்டும். ஆனால் அவர்களது 30% நிலத்தை இயற்கை இழைகள் வளர்ப்பதற்கானதாக மாற்றிவிட்டால், அது அவர்களது நிதி ஆதாரத்திற்கு பெரும் வரமாக இருக்கும்.

உலகத்திற்கே ஆடை அணி செய்வது

ஒரு காலத்தில் இந்தியா அதன் துணி வகைகளுக்குப் பிரபலமாக இருந்தபோதிலும், கடந்த ஓரிரண்டு நூற்றாண்டில், இந்தியாவின் துணிகளை இந்த உலகம் உண்மையில் கண்டதில்லை. அதை இந்த நாட்டுமக்களின் விழிப்புணர்விலும் மற்றும் உலகளவிலும் மீண்டும் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால் கைத்தறி நெசவை நாம் மீண்டும் கொண்டுவர முடிந்தால், அங்கு இருக்கும் அளவற்ற தேவையின் காரணமாக அதைச் செய்வதற்குப் போதுமான மக்கள் இருக்கமாட்டார்கள். நாம் சரியான விஷயங்களைச் செய்தால், அறிவுபூர்வமான, இயற்கையான வழியில் மீண்டும் ஒருமுறை உலகத்திற்கே ஆடை அணிவிக்கக்கூடிய நிலையில் நிச்சயமாக இருக்கிறது.