"வெளிநாடுகளைப் போல, இந்தியப் பெருநகரங்களில் ஃபேஷன் ஷோக்கள் பெருகி வருகின்றன. இந்த நடைமுறை நம் நாட்டிற்குத் தேவைதானா?", "என் எதிர்காலம் அறிவது எப்படி?", "ஒரு குருவின் கடமை என்ன?" என்ற வெவ்வேறு விதமான கேள்விகளுக்கு சத்குரு தரும் பதில் இங்கே...

Question: ஃபேஷன் ஷோ நமது கலாச்சாரத்திற்கு வேண்டுமா?"

சத்குரு:

ஃபேஷன் ஷோ தேவைதானா என்பது கேள்வி இல்லை. ஃபேஷன் ஷோ தேவைதான். ஆனால் இப்படியல்ல. மேற்கத்திய நாடுகளில் நிகழும் வண்ணமே நாமும் அதை இங்கு நிகழ்த்த வேண்டும் என்பது முட்டாள்தனம். நம் கலாச்சாரத்திற்கு ஒத்துவருவது போல் நாம் வித்தியாசமாக செய்து கொள்ளலாம்.

அன்னியர்கள் இங்கு கால் வைப்பதற்கு முன்னால் நம் வீதிகளே ஃபேஷன் ஷோவாகத்தான் இருந்தது. இந்தியாவில் இருந்தது போல் விதவிதமான வண்ணமயமான ஆடை ரகங்கள் உலகில் வேறெங்கும் கிடையாது. இன்றும் கூட, மிக நுணுக்கமாக தயாரிக்கப்படும் ஆடை ரகங்கள் நம் நாட்டில் இருக்கிறது. வியாபார ரீதியாக விருத்தி செய்யாததாலும், மேற்கத்திய உடைகளை அச்சுப்பிசகாமல் பின்தொடர முற்பட்டதாலும், நமது நெசவுத் தொழிலும், ஆடை அலங்கார வேலைப்பாடுகளும் இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றை மீண்டும் புதுப்பித்தாலே, நமது பொருளாதார நிலையை அது முற்றிலுமாக மாற்றியமைத்து விடும். அந்த அளவிற்கு ஆடை ரகங்கள் இந்தியாவை அலங்கரித்து வந்தன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே நமது தேவைக்கேற்றபடி ஃபேஷன்ஷோ செய்து கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் நடப்பது போன்ற ஃபேஷன்ஷோ கட்டாயமாக நமக்குத் தேவையில்லை.

Question: சத்குரு, என் எதிர்காலத்தை அறிவது எப்படி?

சத்குரு:

உங்கள் வாழ்வின் கடைசி தினத்தன்று, நீங்கள் இறந்து விடுவீர்கள். இது தான் உங்கள் வாழ்க்கையின் கடைசிக் காட்சி. இதில் எந்த ஒளிவும் இல்லை. எந்த மர்முமும் இல்லை. கதையின் முடிவே தெரிந்த பிறகு, அடுத்த அத்தியாயத்தில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பற்றி அறிய ஆசை கொண்டீர்களே, இன்று என்பதைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு விட்டீர்களா? அதுவே இன்னும் பாக்கி இருக்கிறதே? அடுத்த கணத்தை விடுங்கள். இந்தக் கணம் பற்றியே நீங்கள் அறியாதது பல இருக்கும் போது, அடுத்தடுத்த நாட்களைப் பற்றி அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்தப் பிரபஞ்சத்திற்கு எப்படியும் வந்து விட்டீர்கள். வாழ்க்கையை நொடிக்கு நொடி அனுபவித்து உணருங்கள். நாளைக்கு என்ன நடந்தாலும், நரகத்திலேயே தள்ளப்பட்டாலும், என் நல்வாழ்வுக்கு நானே பொறுப்பு என்று உணர்ந்து, அதை எவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ள முடியுமோ, அவ்வளவு கண்ணியமாக எதிர்கொள்ளுங்கள்.

கடினமான விஷயங்களை ஏன் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்? அவை கடினம் என்பதல்ல உங்கள் பிரச்சினை. அவற்றை எதிர்கொள்கையில் நீங்கள் அனுபவிக்க நேரிடும் வேதனைகள் தானே உங்கள் பிரச்சினை? வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களை நீங்கள் பாதிப்பில்லாமல் கடந்து வர முடிந்தால், எவ்வளவு பெருமிதம் கொள்வீர்கள்? உங்களுக்கு உள்ளே அப்படி ஒரு தன்மை இருக்க வேண்டும்.

Question: ஒரு குருவின் கடமை என்ன?

சத்குரு:

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு குருவின் நோக்கம் அடிப்படையில் அழிப்பதுதான்.

உங்களின் இன்றைய நிலையை அழித்தால்தான், இன்னும் பெரிதான ஒன்றை அனுபவிக்க நீங்கள் தயாராவீர்கள். சிறைப்பட்டுக் கிடக்கும் உங்கள் தளைகளை அவர் அறுத்தால்தான், எல்லையற்ற தன்மையை நீங்கள் ருசிக்க முடியும். உங்கள் அகங்காரத்தைத் தொடர்ந்து சிதைத்தால்தான் சில உயரங்களை உங்களால் தொடமுடியும். உன்னத அனுபவங்களை நீங்கள் பெற்றிட, இப்படி உங்கள் அடிப்படைகளை அழிக்கும் நண்பரே உங்கள் குரு.

Allen's VISION@flickr.jpg