உள்ளடக்கம்

எய்ட்ஸ் என்றால் என்ன? (AIDS in Tamil)

சத்குரு: எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்பது ஒரு நோயல்ல. நோயை எதிர்க்கும் சக்தியில்லாமல் போய்விடுவது. நோய் எதிர்ப்பு சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. சிலருக்கு ஏதோ ஒன்றை சாப்பிட்டாலே நோய் வருகிறது. இன்னும் சிலருக்கு அவர்கள் எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும் எதுவும் ஆவதில்லை. ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியென்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது.

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள்

எய்ட்ஸ் நோய் முற்கால பாவ பலனா?

மனம், Mind

கேள்வி: என்னுடைய பெயர் செந்தில்குமார். நான் எச்.ஐ.வி./எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகின்றன. பலவகையான கொடிய நோய்களும், எச்.ஐ.வி./எய்ட்ஸ், இப்போது அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கின்றன.

இதற்கும், ஆன்மீகத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? இது முற்கால பாவ பலன்களா அல்லது பிற்கால பாவ பலன்களா?

சத்குரு: பொருள்தன்மையென்பது கல்லில் இருந்தாலும், மண்ணிலிருந்தாலும், செடியிலிருந்தாலும், விலங்கிலிருந்தாலும் அல்லது இந்த உடலிலிருந்தாலும், அது எப்போதுமே காரணம் - விளைவு என்ற அடிப்படையில்தான் நடந்திருக்கிறது. நம்முடைய புரிந்துகொள்கிற தன்மை எப்படி இருக்கிறதென்றால் விளைவை மட்டுமே நம்மால் பார்க்கமுடிகிறது. அதற்குக் காரணம் என்னவென்று பார்க்கும் தன்மை நம்மிடம் இல்லை. நம் குழந்தைப் பருவத்திலிருந்தே, நமக்கு இது சரி, இது தவறு என்று சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். எப்போது, இது தவறு, இதைப் பார்க்கக்கூடாது, இதை நினைக்கக்கூடாது, இதை செய்யக் கூடாதென்று சொல்லிவிட்டார்களோ, அதைப் பார்க்காமல், நினைக்காமல், செய்யாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் மனதின் போக்கு அப்படித்தான். நீங்கள் எது வேண்டாமென்று சொல்கிறீர்களோ, மனதில் அதுதான் மிகத் தீவிரமாக நடக்கிறது.

எதை மாற்ற இயலாதோ, அதில் நம் சக்தியை செலவு செய்வது பயனில்லாத வேலை. எதை நம்மால் மாற்ற இயலுமோ, அதில்தான் சக்தியை செலவிட வேண்டும்.

இதற்கு ஒரு கதையை உதாரணமாகக் கூறமுடியும். ஒருவருக்கு அதிசயமான சக்திகளைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. தண்ணீரின் மேல் நடக்க வேண்டும்; தீயின் மீது உட்கார வேண்டும் என்றெல்லாம் ஆசை வந்தது. அவருக்கு மற்றவர்கள் செய்யாததை, தான் செய்ய வேண்டும் என்ற ஆர்வம். எனவே, குருமார்களைத் தேடி அவர் சென்றாலும், யாரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை. பின்பு ஒருவர், “நீங்கள் இந்தியாவில் தேடிப் பயனில்லை, சைனாவிலுள்ள திபெத்தில் ஒரு பௌத்த முனிவர் இருக்கிறார். அவரிடம் எல்லாவிதமான அதிசய சக்திகளும் இருக்கிறது. எனவே நீங்கள் அங்கே செல்லுங்கள்” என்று கூறினார். இவரும் நடந்தே சென்றுவிட்டார். இமயமலைகளை நடந்தே கடப்பது சாதாரண விஷயமல்ல. அவருடைய ஆர்வத்தினால் நடந்தே போய்விட்டார். அங்கே பௌத்த ஆசிரமத்திற்குச்சென்றார்.

அங்கிருந்த பௌத்த முனிவர் இவரைப் பார்த்து, "அதிசயமான சக்தியை வைத்து நீ என்ன செய்ய முடியும்? மூன்று நாட்கள் தண்ணீரில் நடந்த பின்பு, படகிருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். உங்கள் ஊரில் சென்று தண்ணீரின் மேல் நடந்தால், முதல் மூன்று நாட்கள் பெரிய கூட்டம் சேரும். அதன் பின்பு ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் ஒரு தியானம் சொல்லித் தருகிறேன். இதைச் செய்தால் முழுமையான வாழ்க்கை வாழமுடியும்" என்று கூறினார். இவரோ, எனக்கு தியானம் வேண்டாம், தியானம் கற்றுக்கொள்வதற்கு இங்கு நான் வரவேண்டியதில்லை. எங்கள் நாட்டிலேயே தியானம் பற்றி எல்லாமே தெரியும் என்று நினைத்து, “எனக்கு அதிசயமான சக்திதான் வேண்டும் என்று கேட்டார்.

பலவிதமாக சொல்லிப் பார்த்தும் இவர் கேட்காததால், பௌத்த குரு,
காலையில் 4 மணிக்கு ஆற்றிலே குளித்துவிட்டு வந்தால் அதிசயமான சக்திக்குத் தேவையான மந்திரங்களெல்லாம் கற்றுத் தருவதாகக் கூறினார். இவரும் ஆற்றில் குளித்துவிட்டு வந்தார். குளிரில் உடல், பாதி நீலமாக மாறியிருந்தது; எலும்புகளெல்லாம் நடுங்கின. ஆனாலும் உறுதியாக வந்து குருவின் முன்னர் உட்கார்ந்தார். ஏனெனில், அதிசய சக்தியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

பௌத்த முனிவர் இவருடைய உறுதியைப் பார்த்து, “இது பெரிய பிரச்சினையல்ல, அடிப்படையான 3 மந்திரங்களை சொல்லித் தருகிறேன். இந்த 3 மந்திரத்தை 3 தடவை உச்சரித்தால் எல்லா அதிசயமான சக்தியும் வந்துவிடும் என்று கூறினார். அந்த மந்திரம் என்னவென்றால்,

“புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி"

இந்த மந்திரத்தை மூன்று தடவை உச்சரித்தால், அதிசயமான சக்தியெல்லாம்
வந்துவிடும் என்றும், ஆனால் இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது குரங்கை நினைக்க வேண்டாமென்றும் கூறினார். “அவ்வளவுதானா?” என்று இவர் கேட்டார். “அவ்வளவுதான், நீ போகலாம்என்று பௌத்த முனிவர் கூறிவிட்டார்.

இவர், மிகவும் ஆனந்தமாக வெளியே வந்தார். வந்தவர், “என்னைப்போய் குரங்கை நினைக்க வேண்டாமென இந்த முட்டாள் முனி சொல்கிறான், என்னுடைய கலாச்சாரம் இவனுக்கு எப்படித் தெரியும்? நான் பிராமணன். நான் எதற்காக குரங்கை நினைக்கப் போகிறேன், குரங்கை நினைத்துக்கொள்ள நான் ஒன்றும் வேடனல்ல. நான் ஏதாவது வேத, உபநிஷதங்களை நினைத்துக் கொள்வேன். எதற்காக குரங்கை நினைக்கிறேன். நான் குரங்கைப் பார்த்தே 10 வருடங்களாகிவிட்டனவே!” இப்படியாக குரங்கை நினைத்துக்கொண்டே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்தார். பின்பு, கங்கையாற்றிலே குளித்தால் பாவமெல்லாம் போய்விடுமென்று அங்கே வந்தார்.

ஆற்றிலே குளித்துவிட்டு ‘புத்தம்’ என்று ஆரம்பித்தவுடனே மனதில் குரங்கு வந்துவிட்டது. தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால் ‘பு’ என்றாலே குரங்கு வந்தது. ஒரு வாரம் மிகவும் முயற்சிசெய்தும் பலனில்லை. எதுவும் செய்யாமலே மனதில் குரங்கு வந்தது. உட்கார்ந்தாலும், நின்றாலும், தூங்கினாலும், மனம் முழுவதும் குரங்குதான் இருந்தது. எனவே, அவர் திரும்பவும் நடந்து சென்று, பௌத்த முனிவரிடம், “எனக்கு அதிசயமான சக்தியெல்லாம் வேண்டாம். குரங்கிலிருந்து விடுதலை கொடுத்தாலே
போதும் என்றார்.

இப்போது, உங்கள் மனம் எப்படியிருக்கிறது என்றால், நீங்கள் எதை வேண்டாமென்று சொல்கிறீர்களோ, அதுதான் அதில் நடக்கிறது. ஒரு சோதனையாக, நீங்கள் அடுத்த 10 நொடிகளுக்கு குரங்கை நினைக்கக் கூடாதென்றால், உங்களால் நினைக்காமல் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட நிலையிலுள்ள மனதிற்கு சமூகத்தில், இது நல்லது, இது கெட்டது, இதை நினைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எதை வேண்டாமென்று சொன்னார்களோ, அதைத்தான் மனம் நாடுகிறது. வேறு
எதிலேயும் கவனம் போவதில்லை. ஏனென்றால், நினைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால், நினைக்காமலிருக்க முடியவில்லை.

காரணம் - விளைவு என்பது எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஏதோவொரு ஜென்மத்தில் செய்ததால், எனக்கு நோய் வந்தது என்பதல்ல. நாம் பிறந்த நாளிலிருந்து, என்ன சாப்பிட்டோம், என்ன படித்தோம், என்ன செய்தோம், எப்படிப்பட்ட சூழலில் இருந்தோம், எப்படிப்பட்ட மனிதர்களுடன் இருந்தோம் இவையெல்லாமே சேர்ந்துதான் இப்போது ஒருவிதமான மனிதனாக இங்கே இருக்கிறோம்.

கர்மவினையென்றால் செயல். பிறந்த நாளிலிருந்து செய்த செயல்களை வைத்துத்தான், நாம் இப்போது இப்படி இருக்கிறோம். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு நோய் வந்துவிட்டது. தெரியாமலிருப்பதும் ஒரு கர்மவினைதான். புரிந்துகொள்வது ஒரு கர்மவினையென்றால், புரியாமலிருப்பதும் ஒரு கர்மவினைதான். ஒன்று புரிந்திருப்பதால் பயன் வருகிறது; மற்றொன்று புரியாததால் பாதிப்பு வருகிறது. இரண்டுமே கர்மவினை தான்.

அப்படிப் பார்த்தால், ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்த நோய் வந்ததென்றால், 6 வருடங்களுக்கு முன்னால் ஏதோவொரு கர்மவினை இருந்திருக்க வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ செய்த ஏதோவொரு கர்மவினை இருக்கிறது. எனினும், அதற்காக இப்போது நம் வாழ்க்கையை அழித்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இப்போது என்ன செய்கிறோம்; இந்த ஷணத்தில் என்ன கர்மவினையை ஏற்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது.

முதலில் தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்டோம். ஆனால், இப்போது நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் பாதிப்பு கொடுக்கும் கர்மவினையைச் செய்யமாட்டீர்கள். விழிப்புணர்வு இல்லாமல், பாதிப்பு வருகிற கர்மவினையைச் செய்துவிட்டோம். விழிப்புணர்வுடன் இருந்தால், பாதிப்பு கொடுக்கிற கர்மவினையைச் செய்யமாட்டோம். பழைய கர்மவினையால், இப்போது எந்த பயனுமில்லை. ஆனால், நாளைய வாழ்க்கையை எப்படி வைத்துக்கொள்ளப் போகிறோம் என்பதுதான் இப்போது நமக்கு மிக முக்கியமானது. வாழ்வில் இதுவரை நடந்தவற்றைக் கொண்டு நம்மால் சில  விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். நடந்து முடிந்ததை நம்மால் மாற்றமுடியாது. எனினும் நடந்து முடிந்தவற்றைக் கொண்டு நாம் விழிப்புணர்வாக, ‘இப்படிச் செய்ததால் இப்படியாகிவிட்டது, எனவே, இப்போது என்ன செய்ய வேண்டும்’ என்று பார்க்க முடிந்தால், நடந்தது நமக்கொரு பாடமாக இருக்க முடியும். நடந்து முடிந்ததை நினைத்துக்கொண்டே இருந்தால், அதற்கு முடிவேயில்லை.

எதை மாற்ற இயலாதோ, அதில் நம் சக்தியை செலவு செய்வது பயனில்லாத வேலை. எதை நம்மால் மாற்ற இயலுமோ, அதில்தான் சக்தியை செலவிட வேண்டும். எது நம் கையில் உள்ளதோ அதைப் பயன்படுத்தாமல் கையில் இல்லாதவற்றிலேயே கவனம் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாட்டில் இது ஒரு பெரிய பிரச்சினை. நம் முன்னால் இருப்பதை, கையிலிருப்பதை, நம்மால் எதை மாற்ற முடியுமோ, எதை உருவாக்க முடியுமோ, அதை உருவாக்கமாட்டோம். ஆனால், கடவுள் என்ன செய்யவேண்டும் என்று, தினமும் அவருக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

உலகத்தை எப்படி நடத்த வேண்டுமென்று கடவுளுக்குத் தெரியாதா? நீங்கள் கடவுளை விட்டுவிடுங்கள், அவருடைய வேலையை அவர் செய்து கொள்வார். உங்கள் வேலையை நீங்கள் ஒழுங்காகச் செய்யவேண்டும். நாம், மனிதனாக இருந்து என்ன செய்யமுடியுமோ, அதை ஒழுங்காகச் செய்யவேண்டும். கடவுள் சரியாக வேலை செய்கிறாரா, இல்லையா என்பது உங்களுக்குத் தேவையில்லை. அவர் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நீங்கள் கூறுவதைக் கடவுள் கேட்கமாட்டார். ஆனால் நீங்களாவது, நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நீங்கள், நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால், ஆனந்தமாக இருப்பீர்களா? இல்லையா? ஆனந்தமாகத்தானே இருப்பீர்கள்.

எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் சத்குரு

பிரார்த்தனை, Prayer

கேள்வி: என் பெயர் பாப்பாத்தி. நான் கோவை மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு 41 வயதாகிறது. எனக்கு எச்.ஐ.வி. இருக்கிறது என்று தெரிந்து 4, 5 வருடங்களாகின்றன. எனக்கு ஒரு பெண்ணும், பையனும் இருக்கிறார்கள். பெண்ணிற்கு திருமணமாகிவிட்டது. எனக்கு எச்.ஐ.வி./எய்ட்ஸ் இருக்கிறதென்று தெரிந்த பின் ஒரு வருடகாலம் வெளியே வராமல் இருந்தேன். நான் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்ளுமாறு மிக நன்றியோடு கேட்டுக் கொள்கிறேன்.

சத்குரு: நாம், அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம்முடைய
வாழ்க்கையில் எதை கடவுள் தன்மை என்று கூறுகிறோம் என்பதைப் பார்க்கவேண்டும். எந்தவிதமான கடவுள் நம்பிக்கை வைத்திருந்தாலும் சரி, கடவுள்தன்மை நம் மனதில் எப்படி உருவானது என்பதைப் பார்க்க வேண்டும். நாம் பிறந்த பிறகு, நம்மைச் சுற்றி படைப்புகள் அனைத்தையும் காணும்போது, இவை எல்லாவற்றையும் யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. சுற்றியுள்ளவர்கள் இவற்றை உருவாக்கியதாகத் தெரியவில்லை. நிச்சயமாக இவற்றை உருவாக்கியவர் வேறு எங்கோ இருக்கவேண்டும். அடிப்படையில், இந்தப் படைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய சக்தி எதுவோ, அதற்கு ‘கடவுள்’ என்று பெயரிட்டோம். ஒவ்வொரு கலாச்சாரத்திலும், ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், ஒவ்வொரு உருவம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, தேவையிருந்தால் நாம் வேண்டிக்கொள்ளலாம்.

நாம் முன்னரே பார்த்ததுபோல இந்த உடலென்னும் படைப்பின் மூலமானது நமக்குள் இருந்துதான் செயல்பட்டிருக்கிறது. அப்படியானால், நீங்கள் எதை ‘கடவுள்’ என்று கூறுகிறீர்களோ அவன் நமக்குள்ளும் இருக்கிறான். கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாக சொல்லிவிட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருந்தால், நமக்குள்ளும் இருப்பான், அல்லவா? இங்கேயே இருப்பவனிடம் நாம் வேண்டிக்கொள்ளத் தேவையில்லை. அவனிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். கடவுள் வெகுதூரத்தில் இருந்தால் வேண்டிக்கொள்ளலாம். இங்கேயே இருக்கும்போது வேண்டிக்கொள்ளும் அவசியம் ஏதுமில்லை. ஆனால் தொடர்பில்லாமல் இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினை.

படைத்தலுக்கு எது மூலமோ, அதனுடன் தொடர்பிருந்தால் தன்னம்பிக்கை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. படைத்தவனுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. அப்படியில்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்போது, படைத்தவன் என்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அது நமக்குள்ளேயே செயல்பட்டிருக்கும்போது, அதனுடன் எப்படி தொடர்பு வைத்துக்கொள்வது? அதற்குத் தேவையான கருவி என்ன? என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அந்தத் தொடர்பு வந்துவிட்டால் நாம் வேண்டிக்கொள்ள ஒன்றுமில்லை. நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளத் தேவையான கருவி மற்றும் உதவியை உங்களுக்குச் செய்யவே நாம் இங்கே இருக்கிறோம்.

வெளியில் சொல்லத் தயங்கும் நிலையை மாற்றுவது எப்படி?

எய்ட்ஸ் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, HIV Test

கேள்வி: நான் கடந்த 7 வருடங்களாக எச்.ஐ.வி. யோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட சிலர், தங்களுக்கு நோயிருப்பது தெரிந்தும் கூட, மருத்துவர்களை நாடியோ, சோதனைச்சாலைக்குச் சென்றோ பரிசோதனை செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். அப்படிச் சோதனை செய்து தனக்கு எச்.ஐ.வி./எய்ட்ஸ் இருந்தால், அதை சொல்லவும் தயங்குகிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான வழியை கூறினால் நன்றாக இருக்கும்.

சத்குரு: தனக்கொரு நோய் வரும்போது, அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வமிருக்கிறது. ஆனால், சமூக எதிர்ப்பினால், இந்தவொரு குறிப்பிட்ட நோயை மற்றவர்களிடம் சொல்லவே தயங்குகிறார்கள். நோயை மட்டுமல்ல, அந்த நோய் எப்படி வந்தது என்கிற கேள்வியையும் சந்திக்க வேண்டியுள்ளதால் சமூகத்திற்கு பயப்பட வேண்டியுள்ளது. சமூகத்தில், நாம் மனிதனின் அடிப்படைத் தன்மைக்கே எதிர்ப்பான சூழலை உருவாக்கி வைத்துள்ளோம். ஒரேநாளில், இந்த எதிர்ப்பை எடுத்துவிட முடியாது. பல காலங்களாக, இது இப்படி இருக்கிறது.

நோயை மட்டுமல்ல, அந்த நோய் எப்படி வந்தது என்கிற கேள்வியையும் சந்திக்க வேண்டியுள்ளதால் சமூகத்திற்கு பயப்பட வேண்டியுள்ளது.

தேவையான கல்வியறிவு இருந்தும் மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதில்லை. அவர்கள் பிரச்சினை இல்லையென்று மருத்துவ நிவாரணம் பெறாமல் இருந்துவிட்டால் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். அது மட்டுமல்ல, ‘எனக்கு ஒன்றுமில்லை, நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களால் மேலும் 10 பேருக்கு நோய் பரவிட வாய்ப்புள்ளது. நோயாளியின் உயிரும், பிற உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவருக்கு ஒரு உறுதுணையான சூழ்நிலையை உருவாக்கினால்தான் முடியும். எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும், அவரது உயிர் அவருக்கு மதிப்பானதுதான். சமூகத்தில் மிகுந்த எதிர்ப்பு இருப்பதால் அவர் மருத்துவ உதவி பெறாமல் இருக்கிறார். எனவே, தான் இறந்தாலும் கூட பரவாயில்லை, தன் நிலை வெளியே யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.

எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தனியாக ஒரு சமூகம் உருவாக்கலாம் என்பது சரியாகத் தோன்றவில்லை என்றாலும், ஆரம்ப காலகட்டங்களில் அப்படியொரு நிலை தேவைதான் என்று நினைக்கிறேன். இது அவர்களைத் தனியாகப் பிரித்து வைப்பதற்காக அல்ல. ஆனால், ஏதோ ஓரிடத்தில், நோய் தொடர்பான எந்தவொரு முத்திரையுமில்லாமல், ஒதுக்கிவைக்கும் சூழ்நிலை இல்லாமல், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தன்னால் வாழமுடியும் என்று உணரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியாக வேண்டும். தேவையான மருத்துவ உதவிகளோடும், அவர் வாழ்வதற்குத் தேவையான தொழிற்பயிற்சிகளோடும் ஓரிடத்தில் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை ஆரம்ப காலகட்டங்களில் உருவாக்கிட வேண்டுமென நினைக்கிறேன்.

ஏனென்றால், மொத்த சமுதாயத்தையும் மாற்றுவதென்பது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ நடக்கக்கூடிய காரியமில்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகமாக ஓரிடத்தில் இருந்தாலும், இந்நோய் இல்லாதவர்களும் அவர்களுடன் சேர்ந்து வாழமுடியும். விவரம் தெரிந்தவர்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் அந்த சமுதாயத்துடன் சேர்ந்து இருக்க முடியும். ஏனென்றால், இந்த நோய், காற்றிலோ, தண்ணீரிலோ பரவாது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்களுக்கு எந்த பயமுமில்லை.

ஆனால் சாதாரண மக்கள், கண்ணால் பார்த்தாலே தனக்கு நோய் வந்துவிடும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதுபோன்ற தவறான அபிப்பிராயம் தற்போது உள்ளது. எனவே, ஆரம்ப காலகட்டங்களில் பலவீனமாக இருக்கும்போது, அதாவது ஒரு சிறியசெடி இருந்தால், முதலில் சில காலம் அதை பக்குவமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய செடியை நட்டுவைத்துவிட்டு மறந்துவிட்டால் அது தாக்குப்பிடிக்காது. ஆனால் அது மரமாகிவிட்டால், அப்போது தாக்குப் பிடித்துக்கொள்ளும். அதேபோல, இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது பலவீனமாக இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கென்று, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை, அதாவது எதிர்ப்பில்லாத சூழ்நிலையை உருவாக்காவிட்டால், அவருடைய மனநிலை மற்றும் உணர்வுநிலை மிகவும் பாதிப்பாகிவிடும். இந்த நோயின் பாதிப்பைவிட, இந்த சமூகத்தின் எதிர்ப்பென்பது அதிக பாதிப்பினை உருவாக்கக்கூடியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கவனித்துப் பார்த்தால், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டவர்கள் 20, 25 வருடங்கள் கூட வாழ்ந்திருக்கிறார்கள். எல்லோரும் குறிப்பிட்ட காலம்தான் வாழப்போகிறோம். ஒரு 5 வருடங்கள் வேண்டுமானால் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். சிறிது கவனம் செலுத்தினால், இந்த நோயைத் தாண்டிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சமூகச்சூழலில் இதற்காக செய்யவேண்டிய வேலை அதிகமாய் உள்ளது.

இப்போது, எச்.ஐ.வி. நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முக்கியமான ஒன்றுதான். எனினும், நம்முடைய நாட்டில், சமூகத்திலுள்ள எதிர்ப்பை அகற்றுவதே பெரிய வேலையாக இருக்கிறது. உடம்பிலுள்ள நோயைவிட, பெரிய நோய் சமூகத்தில் இருக்கிறது. அதை அகற்றுவதுதான் பெரிய வேலை. அது, ஒரேநாளில் அகற்றக் கூடிய நோயல்ல. உடல் நோய் போய்விட்டாலும், சமூகத்திலிருக்கும் நோயை அகற்ற வேண்டியது அவசியம். எனவே ஆரம்பத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களுடைய மனநிலையில் சக்தியும் புத்துணர்வும் வருகிறவரை, அவருடைய குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்கிறவரை, ஒரு சுகமான சூழ்நிலையில் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் நோக்கம்.

மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் நிலையை மாற்றுவது எப்படி? 

மருத்துவர் மற்றும் நோயாளி, Doctor and Patient

கேள்வி: என்னுடைய பெயர் சந்தானதேவி. பெரிய மருத்துவமனைகளிலிருந்து சிறிய மருத்துவமனைகள்வரை, எச்.ஐ.வி. ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மருத்துவம் கிடைப்பது இல்லை. பிரசவ காலத்திலோ, அறுவை சிகிச்சையின்போதோ உயிரே போகிற சூழ்நிலையாக இருந்தாலும், எச்.ஐ.வி. சோதனையின்  மூலமாக, எச்.ஐ.வி. நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இந்நிலை காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் ஏற்கனவே பல உயிர்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலம் செல்லச்செல்ல, இன்னும் அதிகமான உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இந்த மருத்துவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சத்குரு: எந்த மருத்துவமனையிலும், எந்த மருத்துவருக்கும் அப்படிச் செய்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதற்கு சட்டத்தின் துணையுமிருக்கிறது. ஆனால், அப்படி நடந்தால் அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவர்களிடமே எதிர்ப்பு இருந்ததென்றால், சமூகத்திலிருக்கிற எதிர்ப்பை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். மருத்துவர்களே பயப்பட்டால் மற்ற மக்களிடமுள்ள எதிர்ப்பு அதிகமாகிவிடும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு, மிக மிக முக்கியமானதொரு பொறுப்பிருக்கிறது. என்னவென்றால், தொட்டாலே இந்த நோய் பரவாது என்பதை அவர்கள்தான் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். மருத்துமனைகளில் இப்படி நடந்தால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினைச் செய்யலாம்.

வாழச் சென்ற பெண்களை, நோயிருந்தால்
ஏற்றுக்கொள்வதில்லையே…

எய்ட்ஸ் குறியீடு, AIDS Symbol

கேள்வி: நான், கோயம்புத்தூர் மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பிலிருந்து வந்திருக்கிறேன். இப்போது 4 வருடங்களாக எச்.ஐ.வி. யுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கும், என் கணவருக்கும் உண்டான எச்.ஐ.வி. நிலைமை தெரிந்தவுடன், என் கணவரை அவருடைய வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் என்னை ஏற்கவில்லை. அவர்களுடைய மகனை நோயிருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்; ஆனால் வாழச் சென்ற பெண்களை, நோயிருந்தால் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த சூழ்நிலையில், என் மாதிரியான பெண்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுகிறீர்கள்?

சத்குரு: இந்த நிலைமை, பெண்களுக்கு எச்.ஐ.வி. யினால் மட்டும் வரவில்லை. பெண்களுக்கு பிறந்தநாளிலிருந்தே இந்த நிலைமை வந்துவிட்டது. கருவிலிருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தால், கருவிலேயே அழித்துவிட வேண்டுமென்கிற நோக்கம் பலரிடம் இருக்கிறது. எச்.ஐ.வி. வந்ததால் மட்டும் இந்த நிலைமை என்பதல்ல. எச்.ஐ.வி. வந்ததால், இந்த நிலைமை சிறிது அதிகமாக இருக்கலாம். இது, சமூகத்தில் இருக்கும் மிக ஆழமான பிரச்சினை. இதில் மாற்றம் கொண்டு வருவதற்குப் பல செயல்கள் நடந்திருக்கின்றன. ஆனால் போதுமான அளவிற்கு செயல்கள் நடக்கவில்லை. ஒவ்வொரு பிரச்சினைக்கும், ஒரு புரட்சி ஆரம்பித்தால் அதனால் எந்த மாற்றமும் நிகழாது. அடிப்படையில், அனைவருக்கும் கல்வி தேவை. ஒரு பெண் குழந்தைக்கு, கல்வியென்பது மிகவும் முக்கியமானது. இந்த வாய்ப்பினை அனைவருக்கும் உருவாக்குவதற்காக, நாம் இப்போது கிராமங்களில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு ’ஈஷா வித்யா’ என்ற கல்வியமைப்பை ஆரம்பித்திருக்கிறோம்.

இதுபோன்ற பிரச்சினைகள் ஒருநாளில் வளர்ந்துவிடவில்லை. இது 1000 வருடங்களாக இருந்து வரும் பிரச்சினை.

இது எச்.ஐ.வி. ஆல் வந்த பிரச்சினையல்ல. எப்போதுமே இந்தப் பிரச்சினை இருந்து கொண்டேதான் இருக்கிறது. சாதாரணமாகவே உங்களுடைய மாமியார், உங்கள் கணவரை ஏற்றுக்கொள்வதைப் போல உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். இப்போது, இந்த நோயும் வந்துவிட்டதால் இன்னும் சிறிது அதிகமாக உங்களை துன்பப்படுத்துகிறார்கள். இந்த அடிப்படையான பிரச்சினை தீரவேண்டுமானால், பெண்களுக்கு கல்வியறிவை அளித்து, அதன்மூலம் அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நின்று வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும். இல்லாவிட்டால், நாம் எவ்வளவு பேசினாலும், அது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்.

நம் நாட்டில், பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசுவது பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், செயல் எதுவும் நடக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு செய்தியைப் படித்தேன். அதாவது, பெங்களூரூ மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 10 பெண்களை எரிக்கிறார்களாம். இது எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இப்படியெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெங்களூர் மாவட்டத்தில், மாதத்தில் 10 பெண்கள் எரிக்கப்படுகிறார்கள் என்பது நம்பமுடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளது. பெண்ணாகப் பிறந்தாலே, உங்களுக்கு இதுபோல நேரத்தான் செய்கிறது. இதனால், பெண்களின் எண்ணிக்கை இந்த நாட்டில் குறைந்துகொண்டே செல்கிறது. இது, எதிர்காலத்தில், ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக மாறிவிடக்கூடும்.

கிராமத்திலுள்ள பெண்களுக்கு கல்வியளிக்க வேண்டும் என்றால், அவர்களை  10 வது (SSLC) படிக்க வைக்க வேண்டும் என்பதல்ல, கையெழுத்துப் போடத் தெரிவதற்காக படிக்கவைக்க வேண்டும் என்பதல்ல. கல்வியென்பது, தன் சொந்தக் கால்களால் நின்று, எங்கே வேண்டுமானாலும் போய் வாழமுடியும் என்ற நிலையை உருவாக்குவது. அப்படி உருவாக்கவில்லையென்றால், இப்போதுள்ள சூழ்நிலையை மாற்றமுடியாது. இதற்காக, நாம் பல முயற்சிகள் செய்திருக்கிறோம். ஒரு அமைப்பின் முயற்சி இதற்குப் போதாது. இதற்குப் பலவிதமாக, எல்லா நிலைகளிலிருந்தும் முயற்சி நடந்தாக வேண்டும். அரசாங்கத்திலும் பல முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இருப்பினும் அது போதுமான அளவிற்கு இல்லை. நம்முடைய மக்கள்தொகைக்குத் தேவையான அளவிற்கு தீர்வு கொண்டுவர நம்மால் இயலவில்லை.

இது ஆண், இது பெண் என்று நாம் பிரித்ததே பெரிய தவறு. மனிதரென்று பார்க்காமல், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஷணத்திலும் பிரித்துப் பார்க்க எந்தத் தேவையுமில்லை. வீட்டிற்குள்ளும், தெருவிலும், எங்கே சென்றாலும் பிரிவு என்பது இருக்கிறது. ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதற்கான தேவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. ஆணை ஒரு நிலையிலும், பெண்ணை ஒரு நிலையிலும் வளர்த்திருக்கிறோம். எல்லாவற்றிலும் இவர்கள் இருவரும் தனித்தனி இனம் என்பது போல மனதில் உறுதிப்படுத்திவிட்டோம். இது உங்கள் வீட்டில் நீங்கள் உருவாக்கி வளர்த்த பிரச்சினை. உங்கள் வீட்டிற்குள் இருக்கும் பிரச்சினையை, வேறு யார் வந்து களைவது? வீட்டிற்குள் இருக்கும் பிரச்சினையை, அரசாங்கமோ, அரசு சாரா நிறுவனங்களோ, அல்லது நானோ களைய முடியாது.

குழந்தைகளை வளர்ப்போரின் மனநிலை மாறவேண்டும். அந்த மனநிலை மாறுவது, ஒருநாளில் நடக்கக்கூடிய காரியமில்லை. சில வீடுகளில் பெண்களை எரிக்கிறார்களே, அதுபோன்ற சூழ்நிலைகளில், பாதிக்கப்படும் பெண்களை வெளியில் கொண்டுவர பலரின் உறுதுணை இருக்கும். ஆனால் பொதுவாக மற்றவர்களின் வீட்டிலுள்ள சூழ்நிலையை மாற்றுவதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் சென்று பேசி சரிப்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. உங்களுடைய கணவர்தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டும். அவருக்கும் நோயிருக்கிறது, உங்களுக்கும் இருக்கிறது. ‘எனக்கிருக்கும் பிரச்சினைதானே அவளுக்கும் இருக்கிறது. என்னால்தானே அவளுக்கும் வந்தது’ என்பதை உணர்ந்து அவர் பொறுப்பெடுக்காவிட்டால், குடும்பச் சூழ்நிலையை வேறு யாராலும் மாற்றமுடியாது.

உடலிலும், மனதிலும் உறுதியை ஏற்படுத்த ஒரு வழி

யோகா, Yoga

கேள்வி: என் பெயர் மீனாட்சி. எனக்கு திருமணம் முடிந்து, குழந்தை பிறந்த
ஐந்து மாதங்களில், என் கணவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது.
அதனால் ஏற்பட்ட தற்கொலை எண்ணத்தை, குழந்தையின் அழுகுரல்
கேட்டுத்தான் மாற்றிக் கொண்டோம். அதன் பின்பு ஆறு மாதங்களுக்குள் என்
கணவர் இறந்துவிட்டார். இந்த சமுதாயத்தில், என்னை எந்தவொரு நல்ல
காரியத்திலும் முன் நிறுத்தவில்லை. இதுபோன்ற சூழ்நிலை அநேக
பெண்களுக்கு இருக்கின்றது. இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சத்குரு: இது சாதாரண சூழ்நிலையென நாம் கருதவில்லை. ஆனால், மிக முக்கியமானது என்னவென்றால், தற்போது இப்படி நிகழ்ந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மனிதனால் செய்ய முடிகிற ஒரே ஒரு காரியம், இப்போதுள்ள சூழ்நிலைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பது மட்டுமே. ஏன் இப்படியெல்லாம் நிகழ்ந்துவிட்டது என்று பார்ப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு சமூக சூழ்நிலைகளிலிருந்து வந்திருந்தாலும், ஏதோவொரு வகையில் அவர்களுடைய உள்சூழ்நிலை ஒரேவிதமாகத்தான் இருக்கிறது. இவர்களுக்கு, சமூகத்தில் ஒருவகையான தனிப்பட்ட தீங்கு நடந்திருக்கிறது. எப்போதெல்லாம் தீங்கு நேர்கிறதோ, அது எச்.ஐ.வி. மூலமாகவோ, விபத்து மூலமாகவோ, வேறு நோய்கள் மூலமாகவோ அல்லது பெருந்துன்பங்கள் மூலமாகவோ, எந்தவிதமாக இருந்தாலும், அது எதனால் நிகழ்ந்தது என்பது முக்கியமல்ல. எப்போதெல்லாம், ஒரு மனிதன் அவனது வாழ்வில் துன்பத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அப்போது அவன் சில சவால்களையும், மிரட்டல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்போது, அவன் செய்யவேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், தன்னிடம் புத்துணர்வையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு, அதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்வதுதான்.

மனித சமூகம், இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறது. தீவிரவாதமாகவோ, போராகவோ, வறட்சியாகவோ, சுனாமியாகவோ அல்லது வேறுவிதமாகவோ இந்தத் துன்பமானது மனிதனுடைய வாழ்க்கையைத் தொட முடியும். ஆனால், ஒரு விஷயம் என்னவென்றால், இப்படித் துன்பம் வரும்போது அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து, இத்தகைய சூழ்நிலைகளிலிருந்து அருகிலிருப்பவர்கள் வெளிவர உதவ வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்டபோது, தேசத்திலுள்ள மக்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்டினர். ஆனால், எச்.ஐ.வி./எய்ட்ஸ் என்கிற பாதிப்பு வந்தபோது மக்கள் அதே வேகத்தோடு உதவிக்கரம் நீட்ட முன் வரவில்லை.

ஒருவன், தன் உள்நிலையில் உறுதியாவதற்கு அவனுக்கு அறிவுரை தேவையில்லை. ஆனால், ஒரு மனிதன் தன் உடலையும், மனதையும் உறுதியாக வைத்துக்கொள்வதற்குத் தேவையான கருவிகளும், வழிமுறைகளும் கொடுக்கப்பட வேண்டும். இதைத்தான் ‘யோகா’ என்றும் ‘உள்நிலை பொறியியல்’ என்றும் ‘ஈஷா யோகா’ என்ற பெயரிலும் அளிக்க முற்படுகிறோம். உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் உறுதிப்படுத்துவதன் மூலம், உங்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு ஏற்ற தெம்பையும், தைரியத்தையும் தரும் வழிமுறையை ‘யோகா’ அளிக்கும்.

உங்களால், வாழ்க்கையில், தற்போது நடந்துவிட்டதை எடுத்துவிட முடியாது. ஆனால், உங்களுக்குள் ஏற்படுகிற கொந்தளிப்புகளை எடுத்துவிட முடியும். ஒரு மனிதனால் என்ன செய்ய முடியமென்றால், ஒன்று பாதிப்பான சூழ்நிலையிலிருந்து உறுதியாக வெளிவர முடியும் அல்லது உடைந்துபோக முடியும். இது நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு. ஆனால், அநேக மக்களுக்கு இந்த உறுதியும், செயல் திறமையும் இருப்பதில்லை.

இப்போது, உங்களுக்குள் நீங்கள் விதைத்திருக்கும் இந்த சூழ்நிலை, இன்னொருவருடைய போதனையால் நீங்கிவிடக்கூடிய ஒன்றல்ல. எனவே போதனை கொடுப்பதற்காக நான் வரவில்லை. உங்கள் மனநிலையில், உடல்நிலையில், உறுதியை ஏற்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இங்கே இருக்கிறோம்.

புறக்கணிப்பால் வரும் தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி?

ஒதுக்கப்படுதல், புறக்கணிப்பு, Ignoring, Rejection

கேள்வி: நான், என் முதல் பிரசவத்திற்குச் சென்றபோது எனக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிய வந்தது. நான் மேலும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டேன். இரண்டும் ஆண் குழந்தைகள். அதன் பின்பு என் கணவர் எச்.ஐ.வி. யால் இறந்துவிட்டார். அவர் இறந்தவுடன், என் குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்து, என்னை வீட்டை விட்டு  ஒதுக்கி விட்டார்கள். எனவே, நான் எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட ஒருவரை மறுமணம் செய்து கொண்டேன். நான் என் குழந்தைகளைப் பார்த்து 8 வருடங்கள் ஆகின்றன. என்னைப்போல் பல பெண்கள் வீட்டைவிட்டு புறக்கணிக்கப்படுவதால், எங்களுக்குத் தற்கொலை எண்ணம் வருகிறது. நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

சத்குரு: ஒரு தாயிடம், உங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு சமாதானமாக இருங்கள் என்று கூறமுடியாது. ஆனால் சட்டப்படி குழந்தைகள் உங்களிடம்தான் இருக்க வேண்டும். உங்கள் பொருளாதாரப் பிரச்சினையின் காரணமாக உங்கள் குழந்தைகளை அங்கே விட்டிருந்தால், அது வேறுவிஷயம். ஆனால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சக்தி உங்களுக்கு இருந்தால், அவர்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு வழிசெய்ய இயலும். அதில் எந்தக் கஷ்டமுமில்லை.

மற்றவர்கள் எதைச் சொன்னாலும், உங்கள் குழந்தைகள் வயதிற்கு வரும்வரை சட்டப்படி உங்களிடம்தான் இருக்கவேண்டும். அதற்காக நம்மால் தேவையான உதவிகளைச் செய்ய முடியும். அது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால், குழந்தைகளை உங்களிடம் அழைத்து வந்த பிறகு நீங்களும் இறந்துவிட்டால், குழந்தைகளின் கதி என்னவாகும் என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். இது, நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். நாம்  இருக்கும்போது, நம்முடைய குழந்தைகள் எங்கேயிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்கிற உணர்வு நமக்குத் தேவை.

இப்போது, இவற்றையெல்லாம் தாங்க முடியாமல் தற்கொலை எண்ணம் வந்துவிடுகிறது. தற்கொலை எண்ணம் ஏன் வருகிறதென்றால், எப்போது ஒருவருக்கு வாழ்க்கை நினைத்த விதமாக நடக்கவில்லையோ, அப்போதெல்லாமே இந்த உணர்வு அவருக்கு வருகிறது. உங்களுக்குப் பிரியமானவர்கள், உங்களை விட்டுப் பிரிந்துவிட்டாலோ, இறந்துவிட்டாலோ, தற்கொலை எண்ணம் வருகிறது. ஏனெனில், தற்கொலை செய்துவிட்டால் எல்லாத் துன்பங்களும் முடிந்துவிடுமென்று நாம் நினைக்கிறோம். நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உயிர் நம்மால் உருவாக்கப்படவில்லை. அதனால் நாம் அதை எடுக்க முடியும் என்ற எண்ணத்தையும் அகற்றிவிட வேண்டும். நம்மால் எதை உருவாக்க முடியுமோ, அதைத்தான் எடுக்கவும் முடியும். நம்மால் உருவாக்க முடியாததை எடுப்பதற்கு நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லை.

ஏதோவொரு பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பினால் வளரமுடியும். அல்லது உடைந்துபோக முடியும். இந்த வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருக்கிறது. பாதிப்பு வந்தால் அதை உபயோகப்படுத்தி வளர்ச்சியடையலாம், அல்லது உடைந்து போகலாம். உடைந்து போகிறபோது, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற உணர்வு வருகிறது.

சுமார் 150 வருடங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் ஒரு ராஜா இருந்தார். சீனாவிலிருந்து வந்த விருந்தாளி ஒருவர், 4 பீங்கான் பாத்திரங்களை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவை அழகாக இருந்ததால், ராஜாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதுபோன்ற பீங்கான் பாத்திரங்கள் எங்கேயும் இல்லை. மிகவும் அழகாக இருக்கின்றன என அவற்றை பாதுகாப்பாக வைத்திருந்தார். ஒருநாள் ராஜா வீட்டில் வேலை செய்கின்ற வேலைக்காரன், இந்த பீங்கான் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது, ஒரு பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

இவ்வளவு அழகான பாத்திரத்தை உடைத்துவிட்டானே என்று ராஜாவிற்கு கோபம். அதனால் அவர், அந்த வேலைக்காரனுக்கு மரண தண்டனை விதித்தார். மறுநாள், அவனை சபைக்குக் கொண்டு வந்தார்கள். தண்டனையை ஏற்றுக்கொள்ளும் முன்பு, கடைசியாக ஏதாவது ஆசையிருந்தால் கூறும்படி அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்கு அந்த பீங்கான் பாத்திரத்தால் உயிர் போகும் நிலை வந்துவிட்டது. எனவே, நான் அந்த அழகான பாத்திரங்களை இன்னுமொரு தடவை பார்க்கவேண்டும்” என்று கூறினான். “அந்த 3 பாத்திரங்களையும் கண்ணால் ஒருமுறை பார்த்துவிட்டு சமாதானமாக சாகிறேன்” என்று கூறினான். அந்த 3 பாத்திரங்களும் கொண்டுவந்து அவன் முன்னால் வைக்கப்பட்டன. அந்த வேலைக்காரன், மிக நெருக்கமாக சென்று பார்த்துவிட்டு, மெதுவாகக் கையிலெடுத்து, மூன்றையும் ஒரே தடவையில் கீழே போட்டு உடைத்தான்.

ராஜாவிற்கு கோபம் இன்னும் அதிகரித்தது. “ஒரு பாத்திரத்தை உடைத்ததால்தான் நான் உனக்கு மரணதண்டனை கொடுத்தேன். இப்போது நீ இந்த மூன்றையும் உடைத்துவிட்டாயே, ஏன் இப்படிச் செய்தாய்?” என்று வேலைக்காரனிடம் கேட்டார். அதற்கு அவன், “ஒரு பீங்கான் பாத்திரத்தால் என் உயிர் போய்விட்டது. இந்த மூன்று பாத்திரங்களும் இருந்தால், ஏதோவொரு நாள், இன்னும் 3 வேலைக்காரர்களுடைய உயிரும் போய்விடும். அதற்குப் பதிலாக, நானே உடைத்துவிட்டால் அவர்களாவது காப்பாற்றப்படுவார்கள்; எப்படியும் என்னுடைய உயிர் போகத்தானே போகிறது” என்று கூறினான்.

எனவே, எந்தவிதமான சூழ்நிலை நமக்கு வந்திருந்தாலும் அதையே நம் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி வாழமுடியும். இதை நமக்காகவும் உருவாக்கமுடியும், 100 பேருக்காகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், இப்போது இந்த நோய் உங்களை ஆட்கொண்டுவிட்டதால், யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால், இந்த பாதிப்பையே ஒரு உரமாகப் பயன்படுத்தி நல்ல மலராக மலரமுடியும். எப்படியும் ஒரு நாள் நானும் சாகப்போகிறேன், நீங்களும் சாகப் போகிறீர்கள். இதில் மாற்றமில்லை. ஆனால், இந்த நோய் வந்துவிட்டதால், மரணம் எப்போது வரப்போகிறதென நமக்கு ஓரளவு புரிந்துவிட்டது. இந்நோய் வராதவர்களுக்கு, மரணம் எப்போது என்று புரியவில்லை. மற்றவர்கள் நாளையேகூட இறந்துவிடலாம். இன்றுகூட இறந்துவிடலாம். அல்லது 100 வருடங்களுக்குப் பிறகு இறக்கக்கூடும். இந்நோய் வந்ததால், தோராயமாக எப்போது இறக்கப்போகிறோம் என்று ஓரளவு புரிந்துவிட்டது, அவ்வளவுதான்.

நமக்கு வந்திருக்கிற பாதிப்பைப் பயன்படுத்தி, ஒரு நல்ல மலராக நாம் மலர வேண்டும். யோகத்தில், எப்போதுமே தாமரைப் பூவை ஒரு அடையாளமாகப் பயன்படுத்துகிறோம். ஏனெனில், சேறு எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே தான் தாமரைப்பூ நன்றாக வளர்கிறது. பார்க்க சேறு அசிங்கமாக இருக்கிறது; மலர், அழகாக வாசனையாக இருக்கிறது. ஆனால், இந்த சேறுதான் ஒரு பூவாக மாறிவிட்டது. நாம், சேற்றைப் பார்த்து அதைப் பிடிக்காமல் ஓடிப் போய்விடலாம். அல்லது எல்லா இடங்களிலும் சேறுதானே இருக்கிறது என்று நாமும் சேறாக மாறிக்கொள்ளலாம் அல்லது அந்த சேற்றையே உபயோகப்படுத்தி, நாம் ஒரு அழகான மலராகவும் மலர முடியும். இந்த வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எந்தவிதமான சூழலில் இருந்தாலும் அவனுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பை உபயோகப்படுத்துவதற்குத் தேவையான உதவி மற்றும் கருவியை யோகத்தின் மூலமாக நிச்சயமாக உருவாக்கிக் கொடுக்க முடியும்.

மரண பயத்தைத் தவிர்ப்பது எப்படி?

மரண பயம், Fear of Death

கேள்வி: என் பெயர் விமலா. எச்.ஐ.வி. ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னால் இரவு நேரங்களில் தூங்கவே முடியவில்லை. ஏனென்றால், எனக்கு எச்.ஐ.வி. இருப்பதால், மரணம் வந்துவிடுமோ என்ற பயம் வருகிறது. இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

சத்குரு: ஒவ்வொரு மனிதனுக்கும், உயிர்ப்பாதுகாப்பு என்பது மிகவும் ஆழமான உணர்வு. எச்.ஐ.வி./எய்ட்ஸ் ஆல் மட்டுமே நமக்கு இந்த பயமிருக்கிறது என்பதல்ல. அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த எச்.ஐ.வி./எய்ட்ஸ் ஆல் நமக்கு மரணபயம் வந்துவிட்டது. மற்றவர்களெல்லாம் தற்போது அதை மறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், ஏதோ தாங்கள் 10,000 வருடங்கள் வாழப்போவதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாத்தியமில்லை. அனைவருக்குமே மரணம் காத்துக்கொண்டு இருக்கிறது.

நம்முடைய மனதை சுகமாக வைத்திருந்தால், நிச்சயமாக
நம்முடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரும் மாற்றத்தினைக் கொண்டுவர
வாய்ப்பிருக்கிறது.

ரோட்டிலே கால் வைத்தால், வீட்டிற்குத் திரும்பி வருவார்களா, இல்லையா என்று யாருக்கும் தெரியாது. இப்போது, நோய் வந்ததால் நம்முடைய மனதில் மரணபயமே ஓடிக்கொண்டிருக்கிறது. நம் உடலுக்கும், மனதிற்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. ஒரு கயிற்றை உங்கள்மேல் வீசி பாம்பென்று சொன்னால், நீங்கள் கயிற்றை பாம்பென்றே நினைத்துக்கொள்கிறீர்கள். பாம்பு உங்கள் மேல் விழவில்லை என்றாலும், நீங்கள் பாம்பென்று நினைத்துக்கொண்டீர்கள். பாம்பென்று ஒரு ஷணம் நினைத்தாலே நம் உடலெல்லாம் நடுங்குகிறது. இதயம் அடித்துக் கொள்கிறது, நமக்கு இரத்த அழுத்தம் வந்துவிடுகிறது, ஏதேதோ நடக்கிறது. நம் மேல் பாம்பு விழவுமில்லை, கடிக்கவுமில்லை. எதற்காக கயிறு விழுந்ததற்கே இப்படி ஆகிவிட்டதென்றால், நாம் நம் மனதில் வேறு ஏதோ நினைத்துவிட்டோம்.

எனவே, மனதில் எது நடந்தாலும், உடலிலும் அது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. மனதில் நடக்கும் எண்ண அலைகளுக்கேற்ப உடலில் ஒரு இரசாயன மாற்றம் எப்போதுமே நடந்திருக்கிறது. எனவே நம் மனதில் இத்தகைய எண்ண அலைகளை உருவாக்கினால், நமக்கு நோயெல்லாம் வரத் தேவையில்லை, நோய் வராமலேயே உயிர் போய்விடும். நமக்கு எச்.ஐ.வி./எய்ட்ஸ் வரவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் மரண பயத்துடன் இருந்தாலே உயிர் போய்விடும். வெளியிலிருந்து, நமக்கு நோய் வரவேண்டிய தேவையில்லை. மனதிற்கும் உடம்பிற்கும் இத்தகைய தொடர்பு எப்போதும் இருக்கிறது. அப்படியென்றால் நம்முடைய மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்?

உடலில் வருகிற பாதிப்பு வெளியிலிருந்து வந்த ஒன்று. ஆனால், மனதில் வருகிற பாதிப்பு நாம் உருவாக்குகிற ஒன்று. ஏற்கனவே, நமக்கு உடலில் ஒரு பாதிப்பு இருக்கிறது. மனதிலும் பாதிப்பை உருவாக்க வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். வெளியிலிருந்து வந்த பாதிப்பிலிருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள இயலவில்லை. ஆனால், நாமே உருவாக்குகிற பாதிப்பை நம்மால் தவிர்த்துவிட முடியும். இந்த நோய், ஏதோவொரு கிருமியாலோ அல்லது வேறு எதனாலோ நமக்கு வந்துவிட்டது. அது நாம் சொல்வதைக் கேட்காது. நம் உடலில் புகுந்த அந்த நோய் அதன்போக்கில் நமக்குள் ஏதோ பாதிப்பை உருவாக்கத்தான் செய்யும். ஆனால், நம் மனம் நாம் சொல்வதைக் கேட்கவேண்டும், அல்லவா? நம்முடைய மனம் நாம் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், நமக்கு வேறு எதிரி தேவையில்லை. எச்.ஐ.வி. என்றெல்லாம் எதுவும் தேவையில்லை. எப்போது, உங்கள் மனம் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையோ அப்போது அழிவுதான்.

எந்தவொரு கருவியாக இருந்தாலும், அது நாம் நினைத்தது போலவும், சொல்வது போலவும் செய்கிறபோதுதான் அது உபயோகமான கருவி. நாம் சொல்லும் விதமாக நடந்துகொள்ளவில்லை எனில், அது ஆபத்தான கருவி. இந்த மைக்ரோஃபோன் நான் பேசுவதை, சிறிது அதிகமான சத்தத்தோடு அனைவரும் கேட்குமாறு செய்கிறது. அப்படியில்லாமல், நான் ஏதோவொன்று கூறினால், அந்த மைக்ரோஃபோன் வேறு ஏதோ ஒன்று சொல்கிறதென்றால், இது உபயோகமான கருவியா?

உங்கள் மனம் எதைச் செய்யவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைத்தான் உங்கள் மனம் செய்யவேண்டும். நீங்கள் கூறுவதை மற்றவர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால், உங்கள் மனமாவது, நீங்கள் சொல்வதைச் செய்யவேண்டும், இல்லையா? உங்களுடைய மனம் நீங்கள் சொல்கிறபடி நடப்பதாக இருந்தால், உங்கள் மனதை பதற்றமாக, பயமாக வைத்துக்கொள்வீர்களா? அல்லது ஆனந்தமாக வைத்துக்கொள்வீர்களா? ஆனந்தமாகத்தானே வைத்துக்கொள்வீர்கள்! மனம் ஆனந்தமாக இருக்குமேயானால், உடல் நிச்சயமாக ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.

எனக்கு துன்பமாக, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் தேவையற்றது. அடிப்படையான பிரச்சினை என்னவென்றால், உங்கள் மனம் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்பதுதான். இந்த உலகில் யாருமே நீங்கள் சொல்வதை முழுமையாகக் கேட்கமாட்டார்கள். உங்கள் கணவனோ, மனைவியோ, குழந்தையோ நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். உங்கள் வீட்டு நாய்கூட நீங்கள் சொன்னதைக் கேட்காது. அதன் விருப்பப்படி, அது ஏதேதோ செய்து கொள்கிறது. ஒருவராவது, நீங்கள் சொல்கிறபடி 100% கேட்டு நடக்கிறார்களா? கேட்க மாட்டார்கள். ஆனால் உங்கள் மனமாவது நீங்கள் சொல்வதைக் கேட்கவேண்டும், இல்லையா? உங்கள் மனமே நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், வேறு யார் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்? உங்கள் மனதை, சொல்வதைக் கேட்கும்படி செய்துவிட்டால், எது நடந்தாலும், வெளிச்சூழ்நிலை எப்படியிருந்தாலும், உடல்நிலை எப்படியிருந்தாலும், நம் மனதை நிச்சயமாக ஆனந்தமாகத்தான் வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட திறனை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ நாம் எங்கே செல்ல நினைக்கிறோமோ, அங்கே சென்றால்தான் அது நமக்கு உபயோகமானது. ஆனால், இங்கே போக ஓட்டினால் அது அங்கே போகிறதென்றால், அப்படிப்பட்ட வாகனத்தில் செல்வது பாதுகாப்பானதல்ல. நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டுமென நினைத்தால் உங்கள் மனம் பதற்றமாக இருக்கிறது; நீங்கள் உறங்க நினைத்தால், உங்கள் மனதில் பயம் வருகிறது. நீங்கள் நினைத்தவிதமாக இல்லாமல் மனம் வேறுவிதமாக போகிறது.

நினைத்தவிதமாக மனம் நடக்க நாம் அதில் கவனம் செலுத்தியாக வேண்டும். யாருக்கும், எதுவும், தானாக வருவதில்லை. சிறிது கவனம் செலுத்தினால், அந்தத் திறமையை நிச்சயம் சம்பாதிக்க முடியும். இதைத்தான் நாம் தியானமென்று சொல்கிறோம். தியானம் என்றால் நம்முடைய மனம் நாம் சொன்ன விதமாக நடப்பது. எப்போது, உங்கள் மனம் நீங்கள் சொல்லும்விதமாக நடக்கிறதோ, அப்போது தேவையில்லாத பாதிப்பு, பதற்றம், பயம் போன்றவற்றை உருவாக்கமாட்டீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் பாதிப்புகளை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். வெளியில் பலவிதமான பாதிப்புகள் உள்ளன, உங்கள் உடலிலும் பாதிப்பு உள்ளது, உங்கள் மனதிலும் பாதிப்பை உருவாக்க தேவை ஏதுமில்லை. நம்முடைய மனதை சுகமாக வைத்திருந்தால், நிச்சயமாக நம்முடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரும் மாற்றத்தினைக் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது. இந்த சூழ்நிலை மலர ‘தியானம்’ என்கிற தன்மையை நம் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும்.

எச்.ஐ.வி - ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம்?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, Child with AIDS

கேள்வி: என்னுடைய பெயர் பாக்கியலட்சுமி. நான் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வருகிறேன். என் கணவர் எச்.ஐ.வி. - ஆல் இறந்துவிட்டார். இப்போது 9 வருடங்களாக நான் எச்.ஐ.வி. யுடன் வாழ்கிறேன். 14 வயதில் எட்டாவது படிக்கும் ஒரு பெண் இருக்கிறாள். பெரியவர்களாகிய எங்களுக்கே எப்படி வாழப்போகிறோம், குழந்தைகளை எப்படி கரைசேர்க்கப் போகிறோமென்று மலைப்பாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம், கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சத்குரு: சமீபத்தில், நாம் மிக முக்கியமான, சில உலகளாவிய தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள், எச்.ஐ.வி. - ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முழுமையான அளவில் மருந்தும், தடுப்பு மருந்தும் கண்டுபிடித்துவிடுவோம் என்று கூறினாலும், இதுவரை எந்தவொரு முழுமையான வளர்ச்சியும் அவர்களுடைய கண்டுபிடிப்பில் இல்லை. தற்போது, இந்நோய்க்கு கூட்டு மருந்து சிகிச்சை முறைகளை உபயோகப்படுத்துகிறார்கள். அப்படி முழுமையாக மருந்துகளைக் கலந்து உபயோகப்படுத்துவது மிகப் பயனுள்ளதாகவும், எச்.ஐ.வி. - ஆல் பாதிக்கப்பட்ட அநேக மக்கள் சாதாரண மக்களைப் போல் நன்றாக வாழ ஏதுவாக இருப்பதாகவும் தெரிகிறது.

எனவே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு மருத்துவம்தான். அதில் முன்னேற்றம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இதிலுள்ள சவால் என்னவென்றால், மற்ற நாடுகளில் தற்போது பயன்படுத்துகிற மருந்தைப்போல இந்தியாவில் தயாரிக்க வேண்டுமென்றால், ஒருமாதத்திற்கான மருந்தின் விலை 900 ரூபாய். மருந்தின் விலைதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஒவ்வொருமாதமும், மருந்திற்கான செலவு 1000 ரூபாயாகிறது. இந்த விலை, சாதாரண மக்களுக்கு மிக அதிகமான, மிகக் கடினமான ஒன்றாகும். ஆனால், மிகத் துரிதமாக, ஆராய்ச்சிகளும், வளர்ச்சியும் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், ஓரிரு வருடங்களில் மருந்தின் விலை குறைந்து போக வாய்ப்பிருக்கிறது. குறையவில்லையென்றால், தொண்டு நிறுவனங்கள் செலவை ஏற்றுக்கொள்ள முன் வருவார்கள். நாம், குறைந்தது ஆயிரம் முதல் ஐந்தாயிரம் நபர்களுக்கான தினசரி மருந்தினை வழங்க சிலரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம் .

சிறு குழந்தைகளைப் பொறுத்தமட்டில் சில வலிமையான யோகப் பயிற்சிகளை அவர்களுடைய வாழ்வில் ஆழப்பதிய வைத்தால், அவர்கள் வளர்ந்த மனிதர்களை விட மிக நன்றாக செயல்படுவர். என்னால் இதை 100% உறுதியாகக் கூறமுடியும். வளரும் குழந்தைகள், அவர்களுடைய வயது, உடலமைப்பைப் பொறுத்து, முழு வளர்ச்சியடைந்த மனிதர்களைவிட மிக நல்லமுறையில் செயல்படுவார்கள். இதைத்தான், குழந்தைகளுக்கு நாம் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் 12,000 குழந்தைகள் எச்.ஐ.வி. - யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எச்.ஐ.வி. - ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகள், 6 அல்லது 7 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், நாம் அவர்களுக்கு சில எளிமையான யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கலாம். பெற்றோருடன் வசிக்கிறார்கள் என்றால் பெற்றோர்களும், ஆசிரமங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் வசிக்கிறார்கள் என்றால் அதன் காப்பாளர்களும், குழந்தைகளைப் பயிற்சி செய்ய வைப்பதில் பொறுப்பெடுத்துக் கொண்டால், குழந்தைகளின் நிலைமை நிச்சயமாக மாறும். தற்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்டும் 25 வருடங்கள் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதை நம்மால் 60 வருடங்களுக்கு நீட்டிக்க முடிந்தால், அது இயல்பான வாழ்க்கையாகும். இந்த நிலை, மிக அதிக தூரத்திலிருப்பதாக நான் நினைக்கவில்லை. பல மருத்துவ முறைகளை இணைத்துக் கொடுப்பதன் மூலமும், யோகப் பயிற்சிகளை அளிப்பதன் மூலமும், இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை, அதன் முழுமையான ஆயுட்காலத்திற்கு வாழச் செய்ய முடியும். ஆனாலும் நோய்க்கான மருந்தை அளிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

அநேக மக்கள், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லை என்றாலும், அநேக குறைபாடுகளுடன் தான் வாழ்கிறார்கள். எனவே, கையாள முடியாத ஒன்று வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டதே என்கிற நினைவை முதலில் மனதிலிருந்து ஒழிக்க வேண்டும். பெற்றோர்கள், இந்த சூழ்நிலையை அறிவோடும், ஞானத்தோடும் கையாண்டால், இச்சூழ்நிலையைக் கண்டிப்பாக சரிப்படுத்த முடியும். எனவே, இந்த 12,000 குழந்தைகளையும் ஓரிடத்தில் நம்மால் ஒன்று சேர்க்க முடியுமானால், அவர்களைக் கையாளுவது எளிதாக இருக்கும். அப்படியில்லையென்றால், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து இந்தக் குழந்தைகளை 300 அல்லது 500 பேர் கொண்ட குழுக்களாக அமைத்து, அவர்களை ஓரிடத்தில், ஒருவார காலத்திற்கு தங்க ஏற்பாடு செய்தால், பயிற்சிகளை எளிதாக கற்றுக் கொடுக்க முடியும். சில யோக ஆசிரியர்களை, இந்த குழந்தைகளுக்காக நாம் அர்ப்பணிக்க முடியும். நாம், அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

ஈஸ்வரி என்றால் தைரியமும் தெம்பும்!

தைரியம், Courage

கேள்வி: என் பெயர் ஈஸ்வரி. நான் தேனி மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் முதன் முதலில் கவுன்சிலராக ஜெயித்து வந்திருக்கிறேன். நானும், என் கணவரும், என் மகனும், எச்.ஐ.வி. -யால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் ஊரிலுள்ள எச்.ஐ.வி./எய்ட்ஸ் - ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எந்த உதவியாக இருந்தாலும், அரசு உதவியாக இருந்தாலும் நான் வாங்கிக் கொடுப்பேன். எச்.ஐ.வி. வந்தவுடன், மக்கள் இறந்துவிடுவார்களென்று மற்றவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நான் கவுன்சிலராக ஜெயித்தது எனக்கே பெருமையாக இருக்கிறது. எச்.ஐ.வி. மக்களாகிய நாங்கள் வாழ்ந்து காட்டுவோம். ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சத்குரு: இப்போது, இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியமான ஒரு தீர்வு என்னவென்றால், ஈஸ்வரி வேண்டும். ஈஸ்வரி என்றால் தைரியமும் தெம்பும் என்று பொருள். வாழ்க்கையில் இந்த தைரியமும், தெம்பும்தான் ஒவ்வொருவருக்கும் வேண்டும். இவையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. அனைவருக்குமே, ஏதோவொரு குறை இருக்கிறது. ஒருவருக்கு நோய் வருகிறது, இன்னொருவருக்கு மனதில் ஏதோ குறை இருக்கிறது; மற்றொருவருக்கு, வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை வருகிறது. பலவிதத்தில் குறைகள் நமக்கு வருகின்றன. ஆனால் அவைகளையெல்லாம் தாண்டி, நம் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்கின்ற ஒரு தெம்பையும், தன்னம்பிக்கையையும் மனிதன் உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும், முக்கியமானது ஈஸ்வரிதான். ஈஸ்வரி, இப்போது நம் எல்லோருக்குள்ளும் பிறக்க வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தத் தன்மையை நமக்குள் கொண்டு வந்தால்தான், நம் வாழ்க்கையில் எந்த பாதிப்பு வந்தாலும், அதைத் தாண்டி வாழ வாய்ப்பிருக்கிறது. இந்தத் தன்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும்.

எப்போது நீங்கள் சமூகத்தில் வாழ்கிறீர்களோ, அப்போது யாரும், ஏதும் தன்னை சொல்லக் கூடாது அல்லது விமர்சிக்கக் கூடாது என்கிற ஆசையை விட்டுவிடவேண்டும்.

ஆனால், யாரோ ஒருவர் உங்களைக் கண்காணிக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எப்போது நீங்கள் சமூகத்தில் வாழ்கிறீர்களோ, அப்போது யாரும், ஏதும் தன்னை சொல்லக் கூடாது அல்லது விமர்சிக்கக் கூடாது என்கிற ஆசையை விட்டுவிடவேண்டும். நாம் எதைச் செய்தாலும், யாரோ ஒருவர், ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார். உங்களுக்கு எச்.ஐ.வி. வருவதற்கு முன்பும் உங்களை யாராவது ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள் முழுமையான தெம்போடும், தன்னம்பிக்கையோடும் இருந்தால்தான், யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்று இருக்க முடியும். உங்களுடைய நோக்கமும், செயலும் சரியாக இருந்தால் யார் உங்களை இன்று அப்படி பார்க்கிறார்களோ, அல்லது பேசுகிறார்களோ, அவர்களே 10 வருடத்திற்குப் பிறகு, உங்களைக் கும்பிடுவார்கள். அப்படித்தான் வாழ்க்கை சென்றிருக்கிறது. சமூகத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் இப்படிப்பட்ட பேச்சுக்களிலிருந்து தப்பித்துக் கொண்டதில்லை. எல்லோருக்குமே இது நடந்திருக்கிறது.

நம்முடைய நோக்கத்தையும், வாழ்க்கையையும் தூய்மையாக்கி, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையையும் நன்றாக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு இருந்தால், யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், அல்லது செய்து கொள்ளட்டும் என்று நம்மால் இருக்க முடியும். நமக்குள் இருக்கிற உயிர்த்தன்மையை முழுமையாக செயல்படுத்துகிற நிலையில் நாம் இருக்க வேண்டும்.

நீங்கள் பிறந்திருந்தாலும் எப்படி? எங்கிருந்து வந்தீர்கள்? என்று உங்களுக்குத் தெரியவில்லை. நாம், நம்முடைய தாய், தந்தையால் பிறந்தோமென்றாலும், இந்த உயிர் எப்படி உருவாக்கப்பட்டதென்று தெரியவில்லை. இந்த உடல் பிறந்தபோது, சிறிய அளவில் தான் இருந்தது. இப்போது இவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது. அப்படியானால், இந்த உடலை உருவாக்குகின்ற செயல், உள்ளேயிருந்து நடந்ததா? வெளியேயிருந்து நடந்ததா? உள்ளேயிருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து, சாப்பாடு கொடுத்தால் அது தசையாக வளர்கிறது. அதாவது இந்த உடல், உயிர் ஆகியவற்றையெல்லாம் உருவாக்கத் தேவையான சக்தி உள்ளிருந்துதான் செயல்பட்டிருக்கிறது. எது படைத்தலுக்கு மூலமோ, எதை படைத்தவன் என்று கூறுகிறீர்களோ, அது நமக்குள்ளேயிருந்து தான் செயல்பட்டிருக்கிறது.

இந்த உடலை படைக்கும் சக்தி நமக்குள்ளேயே இருப்பதால், உடலில் பாதிப்பு நேரும்போது படைக்கும் சக்தியோடு தொடர்பு வைத்துக்கொண்டால், நமக்கு நேரும் பாதிப்பை சரிசெய்துகொள்ள முடியும். இந்த உடலை முழுமையாக உருவாக்கிய சக்தியோடு தற்போது நமக்கு சிறிதும் தொடர்பில்லை. நம் மனதின் ஓட்டம் தான் அதிகமாய் இருக்கிறது. நம்முள் உள்ள சக்தியுடன் தொடர்பு வைத்திருந்தால், உலகம் எப்படிப் பேசினாலும் அது நம்மை பாதிக்காமல் முழுமையாய் வாழலாம். இந்தத் தொடர்பை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளை, உதவிகளை நாம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

எல்லாவற்றையும் உருவாக்கினவன் எவனோ, அவனை ‘ஈஸ்வரா’ என்கிறோம். படைத்தல் செயலைச் செய்யும் ‘ஈஸ்வரா’ நமக்குள்ளே இருக்கிறார். சுயநினைவோடு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, சாப்பிட்டாலும் சரி, தூங்கினாலும் சரி, மூச்சு மட்டும் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. எல்லாமே செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. யாரோ தொடர்ந்து இவற்றை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் தூங்கிவிட்டீர்களென்று, உங்கள் உயிர் போய்விடவில்லை. நீங்கள் தூக்கத்தில் இருந்தாலும், உங்களுக்குள் எல்லாமே செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் கவனம் வைத்தாலும், கவனம் வைக்கவில்லை என்றாலும், தினமும் யாரோ உங்களுக்குள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அந்த ஈஸ்வராவுடன் தொடர்பு உருவாக்கினால், நம் உடல்நிலை, மனநிலை மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலையை நமக்குத் தேவையான விதத்தில் உருவாக்குவதற்கு நமக்கு சக்தி இருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான கவனம் கொடுக்கப்படாமல் இருப்பதேன்?

மனச்சோர்வு, Depression

கேள்வி: என் பெயர் ராதாகிருஷ்ணன். நான் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறேன். 1995 - லிருந்து எனக்கு எச்.ஐ.வி. இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், நம் நாட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர்தான் எச்.ஐ.வி. - ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நம் நாட்டில், மற்ற அனைவருக்கும் கொடுக்கும் அக்கறையை, இந்த ஒரு சதவீதம் மக்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். இந்நோயினால் பாதிக்கப்பட்டோர், தமிழ்நாட்டில் சிறிதளவுதான் இருக்கிறார்கள். 4 கோடி மக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, 13,000 பேருக்கு கொடுக்க மறுக்கிறார்கள். இது குறித்து, தங்களுடைய கருத்து என்ன?

மேலும் இந்த நோய், நோய் இருப்பவர்களிடமிருந்துதான், நோய் இல்லாதவர்களுக்குப் பரவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தாலே அவர்கள் மூலமாக நோய் பரவுவதை நாம் தடுக்கமுடியும். ஆனால், அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும், நோய் இல்லாதவர்களுக்காக, நோய் பரவுவதில் இருந்து தடுப்பதற்காக, கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும், எப்போது அக்கறையும், கவனமும் செலுத்தப் போகின்றன? இது சம்பந்தமாக, உங்களுடைய கருத்து என்ன?

சத்குரு: எச்.ஐ.வி. வந்ததால் மட்டுமல்ல, நன்றாக இருந்தாலும் நாட்டில் பாதி மக்களுக்கு சாப்பாடு கிடைப்பதில்லை. இந்த நிலையில், ஒரு மனிதனுக்கு நோயும் வந்துவிட்டால், மேலும் கடினமான சூழ்நிலையில் அவன் சிக்கிக்கொள்வான். ஏனென்றால், இருக்கிற திறமையையும் இழந்து, சமூகத்தின் எதிர்ப்பையும் சந்தித்து, எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலை அவன் வாழ்க்கையில் உருவாகிவிடும். அரசாங்கம் இந்த விஷயத்தில் ஓரளவிற்கு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நம்முடைய அனுபவத்தில், அரசாங்கத்தால் கொள்கைதான் உருவாக்க முடியும். அதை செயல்படுத்துவதற்கான திறமை முற்றிலும் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. இதனால் பல நிறுவனங்கள் இப்போது இந்த வேலைகளைத் தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். மாற்று அமைப்புகளின் பணிகள் இப்போதுதான் துவங்கியிருக்கின்றன, முழுமையான உத்வேகம் இன்னும் வரவில்லை. தேவையான வேகம் வரவேண்டுமானால் நீங்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக, உறுதியாக இருந்து நல்லவிதமாக ஒரு சூழ்நிலையை உருவாக்கினால்தான், அந்த வாய்ப்பும் பயனும் உங்களுக்குக் கிடைக்கும்.

பெரும்பாலான மக்களுக்கு இதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. இவ்வளவு துன்பப்படுகிறார்களே, இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கம் அநேக மக்களுக்கு இருந்தாலும், எப்படிச் செய்வதென்று புரியாமல் உள்ளனர். இதற்காக மாநாடு கூட்டி, என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்று யோசித்து இப்போதுதான் ஒரு செயல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நான், உங்களுடைய துன்பத்தைப் புறக்கணிக்கவில்லை. ஆனாலும், மற்ற நோய்களோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் இந்த நோய்க்கு சிறிது அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அதிக கவனம் தேவைதான். மற்றவருக்குப் பரவக்கூடாது என்பதும்கூட மிகவும் முக்கியமான விஷயம்தான். நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் பார்த்தே ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மற்றவருக்கு, இந்நோய் பரவாமல் பார்த்துக் கொள்வதும் மிக மிக முக்கியமானது.

இப்போதுள்ள 13,000 என்ற எண்ணிக்கை எதிர்காலத்தில் 13 லட்சமாக 13 கோடியாக ஆகிவிட்டால் பிரச்சினை மிகப் பெரியதாக மாறிவிடும். அப்போது, நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? பிரச்சினை சிறியதாக இருந்தால்தான், அதற்கு எளிதாக தீர்வு காண முடியும். பிரச்சினை மிகவும் பெரியதாகிவிட்டால், அப்போது எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். இந்த அறிவு இருப்பதால்தான், நோய் மேலும் பரவாமல் பார்த்துக் கொள்வதில் முழுமையாக கவனம் செலுத்தப்படுகிறது.

பெற்றோர்கள் செய்த தவறுக்கு குழந்தைகள் என்ன செய்வார்கள்?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, Child with AIDS

கேள்வி: என் பெயர் லிவ்யா. என் அப்பா ஒரு லாரி ஓட்டுநர், என் அம்மா ஒரு டெய்லர். அவர்கள் இருவருக்கும் எச்.ஐ.வி. இருந்ததால், நானும் எச்.ஐ.வி. - யால் பாதிக்கப்பட்டேன். இப்போது, அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். பெற்றோர்கள் தவறு செய்ததால், என்னைப் போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்ன செய்வார்கள்? உங்கள் கருத்து என்ன?

சத்குரு: ஒரு சிறு குழந்தையின் மனதில், பெற்றோர் தவறுகள் செய்தார்கள் போன்ற எண்ணங்கள் வேண்டாதது. நோய் என்பது, பலவிதத்தில் நமக்கு வர முடியும். இப்போது நமக்கு அது வந்துவிட்டது. இப்போது, இதைத் தாண்டி வாழ்வது எப்படி? என்றுதான் பார்க்கவேண்டும். பாதிப்பு வரும்போது சிலர் இந்தப் பாதிப்பினால் பக்குவம் அடைவார்கள். அந்த மனிதர் தனக்குள் அன்பு, கருணை ஆகியவற்றை உருவாக்கிக் கொள்வார். ஆனால் வேறு சிலர், வெறுப்பு, கோபம் மற்றும் குற்றவுணர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். தன்னைத்தானே இப்படி செய்துகொள்வார்கள்.

உங்களுக்கு சின்ன வயதிலேயே இந்த சூழ்நிலை வந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் காலமிருக்கிறது. உலகில், இந்நோய் குறித்து பலவிதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, நிச்சயம் ஒரு வழி பிறக்கும். ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால், நமக்கு இந்த பாதிப்பு வந்திருப்பதால் நாம் மற்றவர்களை தவறு செய்தவர்களாக நினைக்கத் தேவையில்லை. அப்படி நினைப்பதால் கோபமும், வெறுப்பும் வந்துவிடும். அதற்குப் பதிலாக, நம்மைச் சுற்றி இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள், அதிலே நோயிருப்பவர்களும் இருக்கிறார்கள், நோய் இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று பார்த்தோமானால் உங்கள் வயதுக்கும் மீறி வாழ்க்கையை புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

உரமென்பது, பலவிதமான அசிங்கங்கள் சேர்ந்த ஒன்று. உரத்தை தலைமேல் வைத்தால் நன்றாக இருக்காது, அசிங்கமாக இருக்கும். ஆனால் அதே உரத்தை ஒரு செடியின் வேருக்குப் போட்டால் அதில் அழகான பூக்கள் பூக்கும். உரம் அசிங்கமாக இருக்கிறதென்று அதை நாம் தொடுவது கூட இல்லை. ஆனால் அந்த உரத்தின் மூலமாக ஒரு மாம்பழம் விளைந்தால் அதை நாம் சாப்பிடுகிறோம். அதேபோல, நம் வாழ்வில் ஒரு அசிங்கம் நேர்ந்துவிட்டால் அதை உபயோகப்படுத்தி நம்மால் ஒரு மலராகவும் மலர முடியும். இந்த இளம் வயதில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், மற்றவர்கள் செய்த தவறினால் எனக்கு இந்நிலை வந்தது என்ற எண்ணம் இல்லாமல், நமக்கு இந்நிலை வந்துவிட்டது, நம் மனதை உபயோகப்படுத்தி எப்படி ஒரு உயர்ந்த மனிதராக வளருவது என்பதைப் பார்க்க வேண்டும்.

மற்றவர்களால்தான் நமக்கு இந்நிலை வந்ததென்று நினைத்தால், வெறுப்பும், கோபமும்தான் வரும். பிறகு நாம் ஒரு கசப்பான மனிதனாக மாறிவிடுவோம். ஏற்கனவே, நமது உடலில் பாதிப்பிருக்கிறது, இப்போது நமது உயிரும் பாதிக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளத் தேவையில்லை. நம்மால், ஒரு அன்பான மனிதனாக, வாழ்வைப் புரிந்துகொள்கிற மனிதனாக மாறமுடியும். அநேக மனிதர்கள், பாதிப்பு வந்தால்தான் வாழ்வைப் புரிந்துகொள்கிறார்கள். அதுவல்ல என் விருப்பம்.

தியானம் எந்த வகையில் உதவும்?

தியானம், Meditation

கேள்வி: ஐயா, நான் எச்.ஐ.வி. - யால் பாதிக்கப்பட்டு, 4 வருடங்கள் ஆகின்றன. தியானம் செய்தால் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

சத்குரு: எச்.ஐ.வி. என்பதை ஒரு குறிப்பிட்ட நோயென்று சொல்ல முடியாது. உடலில், நோய் எதிர்க்கிற சக்தி சிறிது சிறிதாகக் குறைந்து, பின்பு இல்லாமலே போய் விடுவதைத்தான் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என்று கூறுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை, நிச்சயமாக சில யோகப் பயிற்சிகளால், தியானத்தால் அதிகப்படுத்த முடியும். எந்த அளவிற்கு என்பது, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடும். அனைவருக்கும் ஒரேவிதமாக நடக்கும் என்றில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் மனநிலையை நாம் சரிப்படுத்திக்கொள்ள முடியும். மனமானது நாம் நினைத்தவிதமாக நடந்தால், நமக்குள்ளே பாதிப்பு இருக்காது. மனதில் நடக்கும் பாதிப்புதான் இப்போது பெரிய பாதிப்பாக இருக்கிறது. இந்த பாதிப்பை நிச்சயமாக தியானத்தால் நீக்கிவிட முடியும்.

போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பது எப்படி?

போதைப் பொருளுக்கு அடிமையாதல், Drug Addiction

கேள்வி: என் பெயர் பழனிச்சாமி. நான் தூத்துக்குடியிலிருந்து வந்திருக்கிறேன். கடந்த 14 வருடங்களாக நான் எச்.ஐ.வி. -யுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எச்.ஐ.வி. -யால் பாதிக்கப்பட்ட மக்களில் நிறையப்பேர் போதை பொருளுக்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த அடிமைத்தனத்திலிருந்து அவர்களை எப்படி வெளியில் கொண்டு வருவது?

சத்குரு: எச்.ஐ.வி. - யால் பாதிக்கப்பட்டதினால் மட்டுமல்ல, போதைப் பழக்கமென்பது ஒரு பெரிய கலாச்சாரமாகவே வளர்ந்திருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில், போதைப் பொருள்கள் சாப்பிடாதவர்களை எதிர்க்கும் நிலையும் வரலாம். சமூகத்தில் இப்போது அப்படி ஆகிவிட்டது. நீங்கள் மது அருந்தாவிட்டால், சில இடங்களில், உங்களை பிரயோஜனம் இல்லாதவரென்று சொல்கிறார்கள்.

எச்.ஐ.வி. - யால் இவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிறார்கள் என்பதல்ல. ஆனால் எச்.ஐ.வி. - யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சினை சிறிது அதிகமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த நோயின் பயத்தினாலேயே, அவருடைய வாழ்க்கையில் போதைப் பழக்கம் ஒரு சுகமான உணர்வாக இருக்கலாம். குடித்துவிட்டுப் படுத்துவிட்டால் எச்.ஐ.வி. பாதிப்பு தெரிவதில்லை. நம் மனநிலையில், நம் உள்நிலையில், நாம் இருக்கும் இடத்திலேயே சுகமாக இருக்க முடியவில்லை. உட்கார்ந்தாலே ஆனந்தமாக இருந்தால் போதைப் பொருட்களைத் தேடுவதற்கான தேவை ஏதுமில்லை.

ஆரோக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், போதைப் பொருள்களைப் போல் 100 மடங்கு அதிகமான போதை நமக்குள்ளே நடக்கிறது. அதேநேரத்தில், முழு விழிப்புணர்வோடும் நம்மால் இருக்க முடியும். இதுபோன்ற ஒரு மருந்தைத் தான் “யோகா” என்கிறோம். யோகியென்றால், மிகப்பெரிய குடிகாரர். ஆனால் வெளியில் உள்ளதை குடிக்கமாட்டார்கள், உள்ளுக்குள்ளேயே குடித்துக் கொள்வார்கள். உள்ளுக்குள்ளேயே குடித்தீர்களென்றால் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும், முழு விழிப்புணர்வும் இருக்கும்.

குறிப்பு:

எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கான சத்குருவின் சத்சங்கம்  2007ம் வருடம் ஜனவரி மாதத்தில் நடந்தது. அந்நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் சத்குருவிடம் மனம் திறந்து  கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த நம்பிக்கை தரும்  பதில்கள் "கருணைக்கு பேதமில்லை" என்ற  மின்புத்தகமாக வெளிவந்துள்ளது. நீங்கள் விரும்பும்  தொகையை செலுத்தி டவுன்லோடு செய்து  கொள்ளலாம். இலவசமாக டவுன்லோடு செய்ய  தொகையைக் குறிப்பிடுவதற்கான இடத்தில் '0' என்று உள்ளீடு செய்யுங்கள்.