Question: எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு, நோய் குறித்த பயம். சரியாகக் கூறினால் நோயுற்றவர்களிடமிருந்து தூர விலகி நிற்கிறேன். இதிலிருந்து நான் எப்படி வெளிவருவது?

சத்குரு:

உண்மையில் நோயை எவரும் விரும்புவதில்லை. நோயாளியாக இருப்பதை எவரும் தேர்வு செய்யமாட்டார்கள். ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கே விரும்புகின்றனர். அதேநேரத்தில், உங்களுக்கு உடல் என்பது இருந்துவிட்டால், நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவை வாழ்வின் இயற்கையான செயல்முறைகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நோய்வாய்ப்படுவது எந்தக் கணத்திலும் நிகழலாம். நோய் வராமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்கிறோம், ஆனால் நோயுறுதல் அல்லது ஆரோக்கியம் குறித்து மிதமிஞ்சிய கவனம் எடுத்தால், அதுவே ஒரு நோயாகிவிடும். நோயைத் தவிர்ப்பதற்கு முயற்சிப்பதே ஒரு நோய்தான். ஏதோ ஒருவிதத்தில் உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் ஒன்றுதான் நோய் எனப்படுகிறது. அதனால்தான் நீங்கள் அதை விரும்புவதில்லை. ஆனால் நோய்வாய்ப்பட்டுவிடுவோம் என்ற பயம்கூட, உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது. ஆக, அதுவே தன்னளவில் ஒரு நோயாக இருக்கிறது.

“நான் இறக்கக்கூடியவன், இன்றே கூட இறந்து போகக்கூடும் என்பதை உங்களுக்கே நினைவூட்டிக் கொள்வதற்கு தினமும் ஐந்து நிமிடங்கள் மட்டும் செலவழியுங்கள்”

குறிப்பாக, நீங்கள் நாற்பத்தி ஐந்து வயதைக் கடந்துவிட்டால், நோய் குறித்த உங்கள் பயம் மிக அதிகமாகி விடுகிறது. நீங்கள் இளமையாக இருந்தபோது, நீங்கள் அது பற்றி சிந்திக்கவே இல்லை. ஏனெனில் உங்களுக்கு இறப்பே இல்லை என்று எண்ணியிருந்தீர்கள். நீங்கள் நாற்பத்தி ஐந்து வயது அடைந்த பிறகுதான், உண்மை தெரியவருகிறது. உங்களது பயம், நோய் குறித்து அல்ல, மரணம் குறித்துதான். நோய்வாய்ப்படுதல் என்பது அதற்கான வழியாகவும், மரணத்தை நோக்கிய முதல் படியாகவும் இருக்கிறது. அடிப்படையான பயம் எப்போதும் மரணம் குறித்ததாகவே இருக்கிறது. இருப்பினும் அப்போதுகூட நீங்கள் மரணத்தைப் பற்றி நேரடியாகப் பேசுவதில்லை. நீங்கள் நோய் பற்றிதான் பேசுகிறீர்கள். ஏனென்றால், நோய் வந்துவிட்டால், அடுத்ததும் தொடரும் என்பது உங்களுக்குத் தெரியும்.

பொதுவாக, சமூகத்தில் மக்கள், “என்ன இருந்தாலும் மரண பயம் இயல்பானதுதான்” என்று உங்களிடம் கூறிக்கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் செய்வது எல்லாமே “இயல்பானது” என்றாகி விடுவதுதான் இதில் பிரச்சினை. பெரும்பான்மையானோர் புகைபிடிக்கின்றனர் என்றால், புகைபிடித்தல் இயல்பான விஷயம் என்று மக்கள் கூறுவார்கள். ஆனால், ஒரு மனிதன் புகைபிடிப்பதற்காக உருவானவன் அல்ல. நீங்கள் ஒன்றும் மோட்டார் வாகனம் அல்ல, புகை விட்டுக்கொண்டு இருப்பதற்கு! நீங்கள் புகைபிடிப்பது இயற்கை அல்ல. ஆனால் மக்கள் அதை இயற்கை என்பதுபோல் செய்துவிடுவார்கள். ஆகவே, மரண பயம் என்பதும், இந்த சமூக சூழ்நிலைகளினால்தான், இயல்பான உணர்வு போல ஆக்கப்பட்டுவிட்டது.

ஒருவிதமான அறியாமை மற்றும் விழிப்புணர்வற்ற தன்மையின் காரணமாகத்தான் மரணம் குறித்த பயம் வருகிறது. வாழ்வு நிகழும்போது, மரணம் ஒரு இயற்கையான போக்கு. இயற்கையின் போக்கு குறித்து அஞ்சுவது இயற்கைக்கு மாறானது. மரணம் குறித்து பயம் கொள்வது ஏனெனில், நீங்கள் உண்மையுடன் தொடர்பில் இல்லை. இந்த உடலுடன் உங்கள் அடையாளம் அவ்வளவு வலிமையாகிவிட்டது. ஏனெனில் நீங்கள் மற்ற பரிமாணங்களை இன்னமும் கண்டடையவில்லை. அந்த பரிமாணங்களை நீங்கள் உங்கள் அனுபவத்தில் அடைந்திருந்தால், உடல் இவ்வளவு பெரிய விஷயமாக உங்களுக்கு இருக்காது. அந்த மற்ற பரிமாணங்களில் நீங்கள் உங்களை நிலைநிறுத்தியிருந்தால் வாழ்வோ அல்லது சாவோ ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. உடலை உதறுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. அது மிகவும் எளிமையான ஒரு விஷயம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த உடல் தனக்கான காலம் முடிவு பெற்றதும், நீங்கள் அதை விரும்பினாலும், இல்லையென்றாலும், அது எப்படியும் விழுந்துவிடும். உங்கள் சம்மதம் இருந்தாலும் இல்லையென்றாலும் அது எப்படியும் நிகழும். உடல் இருக்கும் காலம் வரை, அதை நல்லவிதமாக கவனிப்பது நிச்சயம் நமது பொறுப்புதான். ஆனால் நோய்வாய்ப்படுதல் அல்லது மரணம் குறித்து பிரமையிலேயே இருந்தால், நீங்கள் உடலை நல்லபடி கவனிக்கமாட்டீர்கள். உங்கள் கவலையிலேயே நீங்கள் உங்கள் உடலைச் சிதைத்துவிடுவீர்கள். “இந்த உடலுக்கு எதுவும் நிகழலாம்” என்னும் மனக்கவலையே அந்த உடலைச் சிதைத்துவிடும்.

ஒரு இறந்துபோன உடலைப் பார்ப்பதிலேயே மக்கள் பயந்துவிடுகின்றனர், ஏன்? தினமும் மக்கள் இறக்கின்றனர். அவர்களை நேசித்து, கவனித்துக் கொண்டவர்களுக்கு அந்த மரணம் ஒரு சிறிய விஷயம் அல்ல. ஆனால், ஒரு இறந்த உடலைப் பார்ப்பதற்குக்கூட மற்ற மக்கள் ஏன் பயப்படுகின்றனர்? உயிருள்ள உடல்கள்தான் ஆபத்தானவை, அவைகள் உங்களுக்குப் பலவற்றையும் செய்ய முடியும். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பல விஷயங்களைச் செய்யும் திறன் கொண்டவர்கள். ஒரு இறந்த உடல் உங்களுக்கு என்ன செய்துவிடும்? இறந்த ஒரு உடல் மிகுந்த பாதுகாப்பானது.

எனக்கு சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வயதாக இருந்தபோது, ஏறக்குறைய ஐந்து வருடங்கள் மைசூரின் மயானங்களில் மணிக்கணக்காக நேரம் செலவழித்தேன். எப்படியோ நான் அம்மாதிரி இடங்களால் ஈர்க்கப்பட்டேன். ஒரு இரவு முழுவதும் நான் அங்கு அமர்ந்திருப்பேன். ஏனெனில் ஒவ்வொருவரும் ஆவிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால், நான் அவைகளைப் பார்க்க விரும்பினேன். அதோடு மட்டுமின்றி, யாரோ ஒரு மனிதர், ஒவ்வொரு அமாவாசையன்றும் அங்கு சென்று, தன் உடலிலிருந்த இரத்தத்தை ஆவிகளுக்கும், பிசாசுகளுக்கும் கொடுப்பதாக என்னிடம் கூறினார். இரத்தம் கொடுப்பதற்காக வெட்டுப்பட்டு, காயங்களாக இருந்த தன் விரலை என்னிடம் காண்பித்தார். ஆகவே நான் அந்த மனிதருடன் சென்று, மூன்று அமாவாசைகளுக்கு, இரவு முழுக்கக் காத்திருந்தேன். ஆனால் எப்போதும் அவர், “இல்லை, இன்று அது வரவில்லை” என்றே கூறிவிடுவார்.

மரணத்திற்குத் திறந்த நிலையில் உங்களை வைத்துக்கொள்வது நல்லது. 'மரணம்' என்ற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கவும் கூடாது என்று உங்களுக்கு வீட்டில் கூறப்பட்டிருப்பதை நான் அறிவேன். இந்த வார்த்தையை நாம் உச்சரிக்கவில்லை என்றால், அது நமது வீட்டிற்குள் வராது என்று மக்களுக்கு முட்டாள்தனமான ஒரு நம்பிக்கை உண்டு. 'மரணம்' என்ற வார்த்தை உங்களுடைய சொல் வழக்கத்தில் இல்லாமல் போகும் காரணத்தினாலேயே, மரணம் உங்களுக்கு ஏற்படாது என்று நினைக்கிறீர்களா?

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் உங்களுக்கு அனுபவமாக நிகழ வேண்டிய அவசியமில்லை, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தே நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோகாவின் செயல்முறைகள் முற்றிலும் மரணத்தில் வேர் கொண்டிருக்கிறது. உண்மையில், மரணத்தை எதிர்கொள்ளத் துவங்கினால்தான் நீங்கள் ஆன்மீகத்தன்மைக்கு மாறுகிறீர்கள். நீங்கள் கடவுள் பற்றி சிந்தனை செய்தால், ஆன்மீகவாதியாக மாட்டீர்கள். கதைகளைத்தான் உருவாக்குவீர்கள். மேன்மேலும் பிழைப்பு, நல்வாழ்வு மற்றும் பொருள்வளம் இவற்றையே தேடுவீர்கள். கடவுளைப் பற்றி சிந்தனை செய்வது ஆன்மீகத்தன்மை இல்லை. எப்படியாவது நன்றாக வாழ்வதற்கான மற்றுமொரு பலவீனமான முயற்சியாகத்தான் அது இருக்கும். பௌதிக உடல் கடந்து இருப்பது என்னவோ, அதுவே ஆன்மீகம் என்று நாம் குறிப்பிடுகிறோம். மரணத்தை எதிர்கொள்பவராக நீங்கள் இருக்கும்போதுதான், இந்த உடல் தாண்டியும் பார்க்கத் தொடங்குகிறீர்கள். அப்போது உங்களுக்கான ஆன்மீக நிகழ்வு திறக்கத் தொடங்கும்.

உங்களைச் சுற்றி எது நிகழ்ந்தாலும் - நோய்வாய்ப்படுதல், மரணம் அல்லது பெருந்துன்பம் எதுவாக இருந்தாலும் - அதைப் பயன்படுத்தி நீங்கள் விடுபடவோ அல்லது சிக்கிப்போகவோ முடியும். வாழ்க்கை என்று சாதாரணமாக நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த எல்லையைத் தாண்டிப் பார்ப்பதற்கு, குறிப்பாக மரணம் மற்றும் நோய் போன்ற துன்பங்கள் பெரும் வாய்ப்பாக இருக்கின்றன. சாதாரணமாக வாழ்க்கையை எப்படி புரிந்திருக்கிறீர்கள் என்றால், காலையில் எழுந்திருப்பது, ஒரு காபி மற்றும் சிற்றுண்டி எடுத்துக் கொள்வது, பணிக்குச் செல்வது, வேலைகள் செய்வது, மறுபடி சாப்பிடுவது மற்றும் ஏதேதோ செய்வது, பிறகு மறுபடியும் மாலையில் வீடு திரும்புவது என்றே நினைத்தீர்கள். இதுதான் வாழ்க்கை என்று நினைத்தீர்கள். ஒருநாள் நீங்கள் நோய்ப்படுக்கையில் இருக்க நேரும்போது, திடீரென்று, வாழ்க்கை என்பது நீங்கள் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக உங்களுக்குத் தோன்றுகிறது. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், இப்படி இது நிகழத் தேவையில்லை. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் உங்களுக்கு அனுபவமாக நிகழ வேண்டிய அவசியமில்லை, மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தே நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கௌதம புத்தர் ஒரே ஒரு நோயாளி, மூப்படைந்த ஒரு மனிதன் மற்றும் ஒரு இறந்த உடல் இதை மட்டும் பார்த்துவிட்டு, என்றைக்கோ ஒருநாள் தனக்கும் இது நிகழக்கூடும் என்று உணர்ந்தார். ஆகவே அதிலிருந்து விலகி ஓடுவதில் எந்தப் பொருளுமில்லை. இதை இப்படிப் பார்க்கலாம், யாராவது நோயுற்றால், இது நீங்களாகவும் இருந்திருக்கலாம் என்றும், என்றைக்கு வேண்டுமென்றாலும் உங்களுக்கும் இது நிகழலாம் என்றும் பாருங்கள். யாரோ ஒருவருக்கு இருக்கின்ற மிகக்கொடிய நோய் - நமக்கு அது வரவும் வேண்டாம், நாம் அதை விரும்பவும் இல்லை - எந்த நாளிலும் உங்களுக்கும் வரலாம், உங்களுக்கு வயது பதினெட்டாகவோ அல்லது எண்பதாகவோ இருப்பது ஒரு பொருட்டில்லை. எல்லாவற்றையும் ஒரு உறுதியோடும், சமநிலையான மனதுடனும் எதிர்கொள்வது முக்கியமானது. அதைப் புறக்கணிப்பது தீர்வு அல்ல. நீங்கள் அதைப் புறக்கணித்தால், அதில் சிக்கிப் போவதுதான் நிகழ்கிறது. நோயை அல்லது மரணத்தைத் தவிர்க்காதீர்கள். தயவு செய்து அதை எதிர்கொள்ளுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் பெங்களூருவில் இருந்தபோது, காய்கறிச் சந்தைக்கு சென்றேன். என்னுடன் இருந்த நபர் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தார். நான் கடைகளின் மத்தியில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று நான் ஒரு காய்கறிக் கடைக்காரரைப் பார்த்தேன். அவர் அவ்வளவு பிரகாசமாக ஒளியோடு காணப்பட்டார். இத்தகைய நிலையில் இருக்கும் ஒரு மனிதர் காய்கறி விற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் அவரைப் பார்த்தேன், சட்டென்று எங்கள் இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. நான் சிரித்தேன், அவரும் சிரிக்கத் தொடங்கினார். நான் அவர் அருகே சென்றேன், பிறகு நாங்கள் பேசத் தொடங்கினோம். அவர் ஒரு சாதாரண காய்கறிக் கடைக்காரராக இருந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு தான் இறந்துவிடப் போவதாக எண்ணியவாறு இருந்திருக்கிறார். நான்கு மாதங்களுக்கும் அதிகமாக அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். தினமும் “இன்று நான் இறந்துவிடப் போகிறேன்” என்று எண்ணியிருந்திருக்கிறார். இந்த எண்ணத்திலேயே நான்கு மாதங்கள் இருந்தவர், பிறகு நோயிலிருந்து மீண்டிருக்கிறார். அப்போது அற்புதமான ஒன்று அவருக்கு நிகழ்ந்தது - அவர் ஞானம் அடைந்துவிட்டார்!

அவர் கூறினார், “இப்போது என் கடைக்கு யார் வந்தாலும் அவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்படுமாறு ஆசிர்வதிக்கிறேன்.” நான் கூறினேன், “அது மகத்தான விஷயம்தான், ஆனால் உங்களுக்கு நேர்ந்ததை மக்கள் அறிய வேண்டும்.”

நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதையும், இன்று நீங்கள் இறந்து போகக்கூடும் என்பதையும் உங்களுக்கே நினைவூட்டிக் கொள்வதற்கு, தினமும் ஐந்து நிமிடங்களை மட்டும் செலவு செய்யுங்கள். இன்றைக்கே நீங்கள் இறந்து விழுவதற்கான சாத்தியம் உள்ளது, அப்படித்தானே? உங்களுக்கே இதை தினமும் நினைவூட்டிக் கொள்ளுங்கள். அற்புதமான விஷயங்கள் உங்களுக்கு நிகழும்.