ஆண்-பெண் பாகுபாட்டால் மறுக்கப்பட்ட பெண் கல்வி

சத்குரு: ஒரு குழந்தையை கருவில் வைத்து வளர்த்து, அந்தக் குழந்தையை பிறக்கின்ற நிலைக்கு கொணர்ந்து, பிறந்த குழந்தையை சமூகத்தில் ஒரு நல்மனிதனாக உருவாக்குவதில் பெண்ணின் பங்கு மிகமிக இன்றியமையாததாய் இருக்கிறது. இந்த தலைமுறையில் பெண்கள் எத்தகைய நிலையில் இருக்கின்றார்களோ, அத்தகையதொரு தலைமுறையைத்தான் அடுத்த தலைமுறையாக உருவாக்கப் போகின்றோம். இந்த அளவிற்கு முக்கியத்துவம்மிக்க பொறுப்பு பெண்ணுக்கு இருக்கின்றபோது, பெண்களின் நலம் குறித்து நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், இல்லையா?

பெண்தன்மைக்குத் தேவையான முக்கியத்துவத்தினை சமூகத்தில் நாம் கொண்டு வரவில்லையென்றால், நமது அடுத்த தலைமுறை அழிந்தது போலத்தான்.

 

அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களது விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும், உள்நிலை எப்படி இருக்க வேண்டும், அவர்களது மனநிலை, உணர்வுநிலை எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு எத்தகைய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்? ஆனால், உண்ணும் உணவாக இருந்தால்கூட ஆண் குழந்தைக்கு நல்ல உணவும், பெண் குழந்தைக்கு பழையதும் கொடுக்கும் வழக்கம் இன்னும்கூட கிராமங்களில் உள்ளது.ஏனென்றால், பொருளாதாரச் சூழல் மிக முக்கியமாக, பிழைப்பு மிக முக்கியமாக இருக்கின்றபோது, ஆண்மகன் வெளியே போய்ப் போராடுகிறான், அவன் நல்ல உணவாக உண்ணட்டும். வீட்டிலிருப்பவர்கள், பழையதை உண்ணட்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால், தற்போது பிழைப்பை மட்டுமே நோக்கிய எண்ணம் குறைந்து, ஒரு மனிதன் உச்சநிலைக்கு வருவது எப்படி? என்ற நோக்கம் வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்ணினத்தின் பங்கு சமூகத்தில் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது. பெண்தன்மைக்குத் தேவையான முக்கியத்துவத்தினை சமூகத்தில் நாம் கொண்டு வரவில்லையென்றால், நமது அடுத்த தலைமுறை அழிந்தது போலத்தான். எனவே, அதற்குத் தேவையான மாறுதல்களை சம்பிரதாயத்திலும், சட்டத்திலும், சமூக முறைகளிலும் நாம் கொண்டுவந்தாக வேண்டும். இந்த மாற்றத்தை கொணர்ந்தால் மட்டுமே, இந்த தலைமுறையினர் நன்முறையில் வாழ்வதற்குத் தேவையானதொரு அடிப்படையினை நம்மால் உருவாக்க முடியும். இந்த சூழ்நிலையில், இந்த சமூகத்தில் பெண்களுக்கு எந்தவிதமான வாய்ப்பினை உருவாக்குகிறோமோ, அந்தவிதமான தலைமுறையைத்தான் நாம் உருவாக்கப் போகின்றோம்.

பெண் கல்வி (Pen Kalvi) மறுக்கப்பட்டதன் பின்புலம் என்ன?

pen-kalvi-2

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதனின் வாழ்க்கை, ஒரு நிலைக்கு வருகின்றவரை அவன், "நான், நான்" என்றே வாழ்வான். அவனது வாழ்க்கை ஒரு நிலையைத் தாண்டியவுடன், தன் குழந்தையின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாழ்வான். ஏனென்றால், தன் வாழ்க்கையென்பது கல்லறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்துவிடுகிறது. இளமையில் இது புரியவில்லை. நின்றால், அமர்ந்தால் உடலில் வலி வருகிறபோது, இது கல்லறைக்குப் போவதுதான், இனி எதிர்காலம் நம் குழந்தைகள்தான் என்ற நோக்கம் மனிதனுக்குள் வருகிறது. நாம் நன்றாக வாழாவிட்டாலும், நம் குழந்தைகள் நன்றாக வாழவேண்டும் என்ற நோக்கம் வந்துவிடுகிறது. இந்த நோக்கம் நல்லதுதான். ஆனால் இதற்கு வெறுமனே ஆசைப்பட்டால் போதாது. பெண்கள் விழிப்புணர்வுடன், நல்ல மனநிலையுடன், ஆரோக்கியமான உடல்நிலையுடன் வாழும்போதுதான், அடுத்த தலைமுறையின் நன்மையை நம்மால் உறுதிப்படுத்த இயலும்.

ஏனென்றால், ஆணுக்கு இருக்கிற அதே அளவு புத்திசாலித்தனம், பெண்ணுக்கும் இருக்கிறது. ஆனால், நம் சமூகத்தில், வெளியுலகுடன் தொடர்பில்லாத நிலையில் பெண்கள் வளர்ந்து வந்ததால், அவர்களை வெளியே அனுப்பினால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இப்போது அத்தகைய சூழ்நிலை இருப்பது உண்மைதான். ஆனால், வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தால், வெளியுலகப் பிரச்சினைகளை அவர்களால் எப்படி எதிர்கொள்ள முடியும்? அவர்களுக்கு வெளியுலகுடன் தொடர்பு, நல்ல கல்விமுறை இவையெல்லாம் கிடைத்தால்தான், ஆணும் பெண்ணும் முழுமையான மனித இனமாக மாறுகிறபோதுதான், அவளொரு நல்ல தாயாக பரிணமிக்க முடியும். அப்போதுதான் நல்ல தாயாக பரிணமிக்கத் தேவையான திறமை அவளுக்குக் கிட்டும். இந்த மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவருகிற தருணம் தற்போது வந்திருக்கிறது. எனவே, சமூகத்தில் பொறுப்பான நிலையில் இருப்போர் இதற்கென செய்ய வேண்டியவற்றைச் செய்து ஒரு மாற்றத்தினைக் கொண்டுவந்தால்தான், அழகானதொரு தலைமுறையை உருவாக்குவதற்கான சக்தி நம்மிடமிருக்கும்.

பெண் கல்வி இல்லையென்றால் தாய்மையின் நிலை?

pen-kalvi-3

 

முதலில் திருமணம் மற்றும் குடும்பம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. முழு சமூகத்திற்கும் தேசத்திற்கும் உலகத்திற்கும் சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் குழந்தைகள்தானே வருங்கால உலகம்?

படிப்பறிவில்லாத தாயிடம் குழந்தை எப்படி வளரும்? நிச்சயம் தாய்மார்கள் அத்தனை பேராலும் குழந்தைகளை அன்பாக பார்த்துக் கொள்ள முடியும். அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில், ஒரு குழந்தையின் மனநிலை உருவாக்கப்படும் அந்தத் தருணத்தில், அக்குழந்தையோடு நெருங்கிய தோழியாய் இருப்பது தாய்தான். குழந்தையின் உருவாக்கத்தில் தாயின் திறமை மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே சமூகம், தேசம், இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறையே முன்னோக்கிச் செல்ல மிக முக்கியமான காரணமாக இருப்பது ஒவ்வொரு தாயின் திறமையே.

பெண்களின் படிப்பறிவு அடுத்த தலைமுறையை நிர்ணயிக்கிறது. பெண்கள் படிப்பறிவு பெற்றால் ஏதோ தவறு நேரும் என்று இதுநாள்வரை இப்படியே வாழ்ந்துவிட்டோம். தற்போதைய சூழ்நிலையில், கல்வி இல்லாத பெண், குழந்தை பெற்றுக் கொள்வதற்கே தகுதி இல்லாதவள் என்றே சொல்லலாம்.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் பல இடங்களில், ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியில் மட்டுமல்ல, ஆரோக்கியம், திறமை போன்றவற்றிலும் கூட அதிக எண்ணிக்கையிலான மக்கள், இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு கல்வியறிவு தர முயற்சிக்காமல், அவர்களை குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே உபயோகப்படுத்தியதுதான்.

நாளைய தலைமுறை திறமையோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?

pen-kalvi-1

 

இப்போது இந்தியாவில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் உலத்தில் எந்த மூலையிலும் வேலை செய்யும் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம்? தோராயமாக பத்து சதவீதம் பேர் மட்டுமே உலகில் எந்த இடத்திலும் சமாளித்து வாழும் திறமை படைத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருக்கும் ஊரைத் தாண்டினாலே, பிழைப்புக்கு வழி இல்லாதவர்களாகத் தான் இருக்கிறோம். கல்வியறிவு அற்ற தாயின் சூழ்நிலையில் வளர்ந்ததே இதற்கு முக்கியமான காரணம்.

இதற்காகவே பெண்களுக்கு, கல்வி அறிவு கொடுத்தே ஆக வேண்டும். இதைத் தாயோ, கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும் தடுக்கக்கூடாது, தடுக்க வாய்ப்பளிக்கவும் கூடாது.

ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்றால் நாம் சற்று தீவிரமாக செயலாற்றினால் மட்டுமே நடக்கும். சிறிதளவாவது மாற்றம் உருவாக்க வேண்டுமென்றால் தீவிரம் இல்லாமல் எதுவும் நடக்காது. அந்த தீவிரத்தைப் பெண்கள் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெண் கல்வி மிகவும் அவசியம். நாம் இன்னமும் பலகாலம் பின்னோக்கியே வாழ்கிறோம். நாம் முன்னோக்கிப் போக வேண்டுமென்றால், நம் வீட்டில் இருக்கும் பெண்கள் நல்லமுறையில் கல்வியறிவு பெற்றால்தான் நாளைய தலைமுறை திறமையோடு இருக்கும்.