கேள்வி

சம்பாதிப்பதற்கே வாழ்வின் பெரும்பாலான நேரம் செலவாகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியில் இருக்கும்போது, என் உள்நிலையை அறிவதற்கும், மேம்படுத்திக் கொள்வதற்கும் நேரம் ஒதுக்குவது எப்படி?

சத்குரு:

இவ்வுலகில், இன்று, ஒரு வருடத்திற்கு உங்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒரே தடவையில் நீங்கள் வாங்கிவிட முடியும். அதற்குத் தேவையான பணம், அல்லது அந்த அளவிற்கு ‘பாலன்ஸ்’ உள்ள கிரெடிட் கார்ட் உங்களிடம் இருந்தால் போதும். இதற்கு முன் இது போன்ற ஒரு வசதி நமக்கு இருந்ததில்லை. பிழைப்பு அத்தனை பெரிய விஷயமாகவே இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் இப்போது, பிழைப்பை நன்றாக நடத்துவதற்கேற்ற இத்தகைய வசதிகள், இவ்வுலகிலேயே முதன்முறையாக, ஏற்பட்டிருக்கின்றன. தன் ஆழமான பரிமாணங்களை மனிதன் உணர்வதற்கு இதுதான் ஏற்ற நேரம். துரதிர்ஷ்டவசமாக, பலர் தங்கள் பிழைப்பை தேவையின்றி சிக்கலாக்கிக் கொள்கின்றனர். நம் வாழ்வில் பிழைப்பைத் தாண்டியும் வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் பிழைப்புதான் எல்லாம் என்பது போல், தங்கள் வாழ்வில் மீதமிருக்கும் நேரத்தில் எல்லாம் பிழைப்பிற்கான போராட்டத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

உங்கள் பிழைப்பை மேன்மேலும் சிக்கலாக்கிக் கொள்வதன் மூலம், வாழ்வை அழகாக்கிக் கொள்ளலாம் என நீங்கள் செய்யும் முயற்சி முட்டாள்தனமானது. ஏனெனில் இவ்வழியில் அதை அடைய முடியாது.

 

உங்களுக்கு நல்அறிவு சிறிதேனும் இருந்தால், உங்கள் பிழைப்பை எளிதாக வைத்துக்கொண்டு, உங்களின் ஆழமான பரிமாணங்கள் வெளிப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் இவ்வுலகில் வாழ்வதன் ஆனந்தத்தை, ஒரு உயிராய் இங்கிருப்பதன் மேன்மையை நீங்கள் உணர்வீர்கள். இப்போது மனிதர்களின் பிழைப்பு ஏறத்தாழ தடையின்றி நடப்பதால், செல்லும் இடமெல்லாம் ஒரு ஆனந்த அலையை நாம் உருவாக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதை நாம் செய்யாவிட்டால், மனித வாழ்வு ஒன்றுக்கும் பயன்படாத, துயரத்தை மட்டுமே வரவழைக்கக் கூடியது என்ற முடிவிற்கே மனிதர்கள் வந்துவிடுவார்கள். பல நேரங்களில் மனிதர்கள், ‘நான் வெறும் மனிதன்தானே’ என்று சொல்லும்போது, ‘நான் எதற்கும் இலாயக்கற்றவன்’ என்றுதான் அர்த்தமாகிறது. இந்த உலகில் இதை அப்படியே மாற்றியமைக்க வேண்டும். ‘நான் மனிதன்’ என்று சொன்னால், அது, ‘நான் பரவசத்தில் திளைக்கிறேன். என்னுள் அற்புதமான நிலைகளை எட்டிட என்னால் முடியும்’ என்று சொல்வதாக இருக்கவேண்டும்.

தன் பிழைப்பிற்காக காலமெல்லாம் பாடுபடும் ஒரு புழுவைப் போல் மனிதனையும் ஆக்கிவிட நாம் முடிவு செய்துவிட்டோம். நம் பிழைப்பை நல்ல நிலையில் ஒருங்கிணைத்துக் கொள்ளாமல், தினம்தினம் பிழைப்பிற்காக பாடுபடும் அளவிற்கு பிழைப்பை சிக்கலாக்கிக் கொண்டுவிட்டோம். ஒரு காலத்தில் பிழைப்பு என்றால், உணவு, உடை மற்றும் இருப்பிடம் அவ்வளவுதான். ஆனால் இப்போது உணவு, உடை, இருப்பிடம், வாகனங்கள் ஆகியவை தேவைக்கேற்ற வகையில் எளிமையாக இல்லாமல் சிக்கலாக இருப்பதுடன் விலை அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றை வைத்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் இவையே உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்பவையாக ஆகிவிடக் கூடாது. எந்த வகையான உணவை உண்கிறீர்கள், எப்படிப்பட்ட உடைகளை அணிகிறீர்கள், எம்மாதிரியான வீட்டிலே வசிக்கிறீர்கள் என்பதெல்லாம், அவரவரின் திறனைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அவை எப்படிப்பட்டவையாக இருந்தாலும், அவை உங்கள் வாழ்க்கைக்குப் பக்கபலம் மட்டும்தான். அவற்றையே அதிமுக்கியமாக மாற்றி, உங்கள் வாழ்க்கைக்கு அவற்றையே தடையாக மாற்றிக் கொண்டு விடாதீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து உங்கள் அலுவலகத்திற்கு நீங்கள் நடந்து செல்கிறீர்களோ, சைக்கிளில் செல்கிறீர்களோ, அல்லது மாருதி அல்லது பென்ஸ் காரை ஓட்டிச் செல்கிறீர்களோ, அது அவரவரின் பொருளாதார நிலை, அல்லது தேவையைப் பொறுத்தது. இதில் முக்கியமானது நீங்கள் அங்கு போய் சேர வேண்டும். இது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குமே பொருந்தும். அவ்விடத்தை எப்படி அடைந்தீர்கள் என்பது அத்தனை முக்கியமல்ல. அது வெறும் அல்ப விஷயம்தான். ஆனால், இப்போது இந்த அல்ப விஷயங்களே மிகவும் முக்கியமானவையாக ஆகிவிட்டன. எனவே வாழ்வின் அடிப்படைகளையே மறந்துவிட்டீர்கள். அடையவேண்டிய நிலையை விட, அடையத் தேர்ந்தெடுக்கும் வழி அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மாருதியில் இருந்து ‘மெர்சிடிஸ்’க்கு முன்னேற விரும்புகிறோம், ஏனெனில் அதுதான் மகிழ்ச்சியளிப்பது என்று நம்புகிறோம். ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல் எதுவாகினும், அது இவ்வுலகில் அவனின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. ஆனால் உங்கள் பிழைப்பை மேன்மேலும் சிக்கலாக்கிக் கொள்வதன் மூலம், வாழ்வை அழகாக்கிக் கொள்ளலாம் என நீங்கள் செய்யும் முயற்சி முட்டாள்தனமானது. ஏனெனில் இவ்வழியில் அதை அடைய முடியாது.

ஒருமுறை, ஒரு அரசன் தன் மாளிகையின் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அப்போது ஓரு முதியவர் வந்து இவர் காலில் விழுந்து, “அரசே! என் ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. அவள் என் ஒரே மகள் என்பதால் அதை விமரிசையாக நிகழ்த்த நான் விரும்புகிறேன். அதற்குத் தாங்கள்தான் உதவி செய்யவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அரசனோ, ‘‘உன்னிடம் பணம் இல்லாதபோது, திருமணத்தை விமரிசையாய் செய்ய அவசியம் என்ன வந்தது?” என்று கேட்டான். அதற்கு முதியவர், “இல்லை அரசே! அவள் என் ஒரே மகள். நான் நிச்சயம் அவளுக்கு ஏதேனும் செய்யவேண்டும்” என்றார். அதற்கு அரசன் தன் தோட்டத்தில் அமைந்திருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, “அப்படியென்றால்… நீங்கள் ஒன்று செய்யுங்கள். இன்று மாலை சூர்ய அஸ்தமனத்தின்போது அக்குளத்தில் இறங்கி, நாளை காலை சூர்யோதயம் வரை அதிலேயே உங்கள் கழுத்து வரை நீரில் நில்லுங்கள். அவ்வாறு நின்றுவிட்டால், உங்கள் மகளின் திருமணத்திற்குத் தேவையான பொருளை நான் தருகிறேன்.” என்றான்.

யாரோ ஒருவர் வந்து உங்களிடம் ஏதோவொன்றைக் கேட்கிறார் என்றால், அவர் கேட்டதை உங்களால் கொடுக்க முடிந்தால், கொடுங்கள். நீங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவேளை கொடுக்க முடியாவிட்டால், அல்லது கொடுக்க விருப்பமில்லை என்றால், ‘இல்லை, எனக்குக் கொடுக்க மனமில்லை. தயவுசெய்து சென்றுவிடுங்கள்’ என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவுதான். கேட்பது ஒன்றும் எளிதான விஷயமில்லை. தன் தயக்கங்களைத் தாண்டி ஒருவர் கேட்கத் துணிந்து, கேட்டும் விட்டார். இதை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அந்த அரசனோ, ‘நடுங்கும் குளிரில், குளிர்ந்த நீரில் இரவெல்லாம் நின்றால், பணம் தருகிறேன்’ என்கிறான். உதவி கேட்டு வந்தவர் வயதானவர், நீரும் மிகக் குளிராக இருந்தது. எனவே அரசனை ஒட்டி நின்றிருந்த மந்திரிக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. அவர் நினைத்தார், ‘இது வன்மையாய் கண்டிக்கப்பட வேண்டிய கீழ்த்தரமான செயல்’. ஆனால் அரசனை எதிர்த்துப் பேசினாலோ, தலை துண்டிக்கப்படும்! அதனால் அவரும் பேசவில்லை.

வந்த முதியவர் அந்த நடுங்கும் குளிரில், குளிர்ந்த நீரில் இரவெல்லாம் நின்றுவிட்டு, மறுநாள் காலை அரசன் தன் தோட்டத்திற்கு வந்தவுடன், அவர் காலில் விழுந்து, தன் பரிசை வேண்டினார். அரசன் ஸ்தம்பித்தான். ‘யாருமே செய்யமுடியாத மிகக் கடினமான செயலை அல்லவா இவருக்குக் கொடுத்திருந்தோம். இவர் எப்படி செய்து முடித்தார்?’ என்று அதிசயித்தவாறு, “உங்களுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று? உங்கள் உடலில் அத்தனை வலுவில்லை, உங்களுக்கு வயதும் வேறு ஆகிவிட்டது. அதற்கும் மேலாக அது குளிர்ந்த நீர் வேறு. எப்படி இரவு முழுவதும் அதில் நின்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர், “உங்கள் மாளிகையில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை நான் பார்த்துக் கொண்டு நின்றேன். என் மனதை அதில் ஒருநிலைப்படுத்தி நான் நின்றிருந்ததால், நேரம் சென்றதே எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு விடிந்தும் விட்டது. இதோ நான் உங்கள் முன் வந்துவிட்டேன்” என்றார். தன் தோல்வியை ஒப்பமுடியாத அரசன், “அப்படியெனில், என் மாளிகையில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் கதகதப்பில் நீ குளிர் காய்ந்திருக்கிறாய். இது முறையல்ல. அதனால் உனக்கு பரிசு கிடையாது” என்று அவரை அனுப்பிவிட்டான். இதை அந்த மந்திரியும் பார்த்துக் கொண்டே நின்றார். ஆனால் அரசன் அனுமதிக்கும் முன் பேசுவதற்கு, மந்திரிகளுக்கு உரிமை இல்லையே. அதனால் அவர் அமைதி காத்து நின்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது நடந்த சில நாட்களில் அரசன் வேட்டைக்குக் கிளம்பினான். காட்டிலே அரசனுக்கு ஒரு சிறிய கூடாரம் அமைக்கப்பட்டது. அந்த மந்திரியும் அரசனுக்கு அருகில் அமர்ந்து, அரசனுக்குப் பிடித்த உணவு வகைகள் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு, அதை அரசனுக்கு அன்று விருந்தளிக்க நடந்து கொண்டிருக்கும் ஏற்பாடுகள் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார். கேட்டுக்கொண்டிருந்த அரசனுக்கோ நாவில் எச்சில் ஊற, பசியெடுத்தது. ‘சரி வாருங்கள்! எனக்குப் பசியெடுக்கிறது. உணவருந்தச் செல்வோம்’ என்றான். ஆனால் மந்திரியோ, “சற்றுப் பொறுங்கள்! பத்தே நிமிடம்… உணவு தயாராகிவிடும்” என்றார். பத்து நிமிடம், அரை மணி ஆனது. மீண்டும் அரசன், “உணவருந்தச் செல்வோமா’ என்றான். மந்திரியோ, ‘பொறுங்கள்… பொறுங்கள். இன்னும் பத்தே நிமிடம்தான் உணவு தயாராகிவிடும்.” என்றார். இப்படியே மந்திரி சில மணிநேரங்களைக் கழித்துவிட்டார். நேரம் நள்ளிரவைத் தொட்டது. பொறுமையிழந்து வெகுண்ட அரசன், “என்ன நடந்து கொண்டிருக்கிறது? பத்து நிமிடம், பத்து நிமிடம் என்று சொல்லி இத்தனை மணி நேரமாக என்னதான் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நானே சென்று பார்க்கிறேன்.” என்று கிளம்பினார். வெளியில் சென்று பார்த்தால், சமைக்கும் நெருப்பு நன்றாகத்தான் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் சமையல் பாத்திரங்கள் நெருப்பின் மீது இல்லாமல், தரையில் இருந்து 30 அடி உயரத்தில், மரத்தின் மேலே கட்டப்பட்டிருந்தது. பார்த்த அரசனுக்கு கோபம் கட்டுக்கடங்கவில்லை. “அடிமுட்டாள்களே! இதுபோல் என்றேனும் சமைக்க முடியுமா? சிறிதளவு கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது, அதில் இருந்து 30 அடி மேலே பாத்திரங்களை தொங்க விட்டிருக்கிறீர்கள். இப்படி இருந்தால் சமையல் எப்படி நடக்கும்?” என்று கத்தினார். பொறுமையாய் முன்வந்து நின்ற மந்திரியோ, “நம் நாட்டில் இது நிச்சயம் நடக்கும் அரசே! குளிர்நடுக்கும் இரவிலே, குளிர்ந்த நீரில் இரவெல்லாம் நிற்கும் ஒருவர், வெகு தூரத்தில் எரிந்துகொண்டிருந்த ஒரு மாளிகையின் விளக்கிலே குளிர்காய முடியுமெனில், இதெல்லாம் எம்மாத்திரம்? வெறும் 30 அடி உயரத்தில்தான் பாத்திரங்கள் இருக்கின்றன. பத்தே நிமிடங்கள்தான் அரசே! சமையல் முடிந்துவிடும்’ என்றார்.

உலகில் இருந்து மகிழ்ச்சியை பிழிந்தெடுக்க நினைத்தால், அது இப்படித்தான் நிகழும். காலமெல்லாம் நீங்கள் அதற்காக ஏங்கித் தவித்துக் கொண்டே இருந்தாலும், அது உங்களுக்குக் கிடைக்காது. இவ்வுலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆம், நீங்கள் நடக்கும் இந்த மண்ணிலே, சுவாசிக்கும் இந்தக் காற்றிலே, ஏன் சொர்க்கத்தில் கூட மகிழ்ச்சி என்பதே இல்லை. ஏனெனில், மகிழ்ச்சி என்பது உங்களுக்கு உள்ளேதான் நிகழமுடியும், உங்களைச் சுற்றி நிகழாது. உங்களுக்குள் மகிழ்ச்சி நிறையும்போது, இவ்வுலகே மகிழ்ச்சியாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் முழு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள். உங்களுக்குள் அதை நிகழ்த்திக் கொள்ளாமல், வேறெங்கேனும் இருந்து அது வரும் என்று காத்திருந்தால், அது அந்த அரசன் உணவிற்குக் காத்திருந்தது போல்தான்.

மனித இனம் இந்த உலகில் இருந்து மகிழ்ச்சியை பிழிந்தெடுக்க முடிவேயில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறது. வேறெங்கோ இருந்து உங்களால் மகிழ்ச்சியை களவாடி வரமுடியாது. மகிழ்ச்சியை நீங்கள் உணர வேண்டுமென்றால் நீங்கள் முதலில் மகிழ்ச்சியான மனிதராக மாற வேண்டும். பேரானந்தத்தின் அங்கமாக ஆகாமல், பேரானந்தத்தை உங்களால் உணர முடியாது. மனிதனாய் பிறந்ததன் அழகே இதுதான். அல்லது இதையே சாபக்கேடாகவும் சொல்லலாம். அது என்னவெனில், உங்களுக்குள் நடப்பவை அனைத்தும் முழுமையாய் உங்களுடையதுதான், 100 சதவிகிதம் நீங்களே உருவாக்குவதுதான்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எது உங்களுக்குள் இருக்கிறதோ, எது உங்களுடையதாக இருக்கிறதோ, அவற்றைக் கூட வெளியில் இருக்கும் இலட்சம் விஷயங்கள் நிர்ணயிக்கின்றன. இதுதான் இப்போது மிகப்பெரிய சாபக்கேடு. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அந்த வெளி விஷயங்களை சரிசெய்ய, அதாவது இந்த உலகை மாற்றியமைக்க ஒரு நாள் ஆகுமோ, அல்லது ஒரு இலட்சம் வருடம் ஆகுமோ! ஆனால் இந்த உயிரை – உங்களை – நீங்கள் நினைத்தால் இந்தக் கணத்தில் மாற்றிவிடலாம்.

உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நீங்கள் உங்கள் தேர்வுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் உங்களைச் சுற்றி நடந்துகொண்டிருப்பது, பலவகையான மனிதர்களின் விருப்பக் கலவைகள். இந்த உலகம் முழுமையாய் உங்களுடையது அல்ல. இங்கு 700 கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்கு வேண்டியதைத்தான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களுக்குள் நடப்பது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். உங்களுக்குள் நீங்கள் இனிமையாய் இருந்தால், இந்த உலகும் அவ்வாறே இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆனால் அதுதான் ஒரே வழி.

இவ்வுலகில் இருக்கும் ஒரே சந்தோஷப்பிணக்கு மனிதன் மட்டும்தான். ஆம், எப்போது ஒருவன் தன்னுள் மகிழ்ச்சியற்று இருக்கிறானோ, அப்போது அவன் தன்னைச் சுற்றியும் அதையே பரப்புவான். உங்களுக்குள் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், இயல்பாகவே உங்களைச் சுற்றியும் நீங்கள் மகிழ்ச்சியைத்தான் பரப்புவீர்கள். இது உங்கள் வாழ்வில் நடந்ததில்லையா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்களைச் சுற்றி இனிமை பரவச் செய்வீர்கள். இதுவே நீங்கள் துன்பமாக இருக்கும்போது, உங்களைச் சுற்றி இனிமையற்ற செயல்களைச் செய்வீர்கள். இதைப் புரிந்துகொள்ள ஏன் இவ்வளவு காலம் ஆகிறது? எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 

பிழைப்பு என்று வரும்போது, பிழைப்பே வாழ்வில் பெரிய விஷயமாக இருக்கும்போது, வாழ்வின் நுட்பமான விஷயங்கள் எதையுமே நீங்கள் உணரமுடியாது. மனிதனாய் இருப்பதில் உள்ள சிறந்த அம்சங்களை நீங்கள் உணரமுடியாது.

 

எப்போதுமே வெளியில் இருந்து சந்தோஷமும் ஆனந்தமும் கிடைக்கவேண்டும் என்றே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் – தொலைதூர சமையல்! பானையை மரத்திலே தொங்கவிட்டு சமைப்பது போல. வாழ்க்கை எப்போதும் உங்களுக்குள்தான் நிகழ்கிறது. உங்களுக்கு வெளியே அல்ல. நீங்கள் உணர்ந்தவை எல்லாம், உங்களுக்கு உள்ளே நடந்தவைதான், வெளியில் நடந்தவை அல்ல. இருந்தாலும், உங்கள் அனுபவங்களை நீங்கள் வெளியிலேயே தேடுகிறீர்கள்! இதுபோல் எப்போதும் நடக்காது. அனுபவம் உள்ளிருந்து மட்டுமே கிடைக்கும். தேவைப்பட்டால், உள் அனுபவத்தை தூண்டுவதற்கு வெளியில் இருந்து பல விஷயங்களை நீங்கள் ஊக்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒவ்வொன்றையுமே சுய ஊக்கத்திலும் செய்யலாம். சுய ஊக்கத்தில் செய்யும்போது, மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்கள் மூச்சைப் போல் எப்போதும் உங்கள் கூடவே இருக்கும். எப்போதாவது தோன்றி மறைவதாக இருக்காது! ஒரு அன்பான, ஆனந்தமான உயிராய் உங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று நீங்கள் பார்க்கவேண்டும். இல்லையெனில் வாழ்வில் அர்த்தமேது?

திருமணமாகி 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஒரு தம்பதியர் இருந்தனர். ஒருநாள், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அம்மனைவி தன் கணவனிடம், “ஒருவேளை நான் இறந்துவிட்டால், நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்வீர்களா?” என்று கேட்டாள்.

அதற்குக் கணவன், “இல்லையில்லை. நிச்சயம் நான் மறுமணம் செய்து கொள்ளமாட்டேன்” என்றார்.

இதைத் தவறாய் புரிந்துகொண்ட மனைவியோ, “ஏன்? ஏன் இன்னொரு திருமணம் வேண்டாம் என்கிறீர்கள்? திருமண வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“இல்லையில்லை. அப்படியெல்லாம் இல்லை. இந்த வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. நான் நிச்சயம் மறுமணம் செய்துகொள்வேன்” என்று சொன்னார் கணவர்.

மனமுடைந்த மனைவியோ, “இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?” எனக் கேட்டாள்.

“ஆமாம். நான் மறுபடியும் மணந்து கொள்வேன்”

கொஞ்சம் நேரம் தனியாய் சிடுசிடுத்துவிட்டு, “மணம் முடித்துவிட்டால், நீங்கள் அவளுடன் சேர்ந்து இந்த அறையில்தான் தூங்குவீர்களா?”

“ஆமாம். வேறு எப்படி..? இல்லையெனில்… கடலோரமாய் வீடு வாங்கி, அங்கே வாழவேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. அதை வாங்கிவிட்டால், அவளோடு நான் அங்கு குடிபெயர்ந்து விடுவேன்”

“என்ன! கடலோரமாய் அவளுக்கு வீடு வாங்கிக் கொடுப்பீர்களா?” என்று மனைவி அதிர்ச்சியுற்றாள். தன்மீதே பச்சாதாபம் அதிகரிக்க, “என்னுடைய இந்தப் புகைப்படங்களை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவளுடைய புகைப்படங்களை மாட்டி வைப்பீர்களா?”

“ஒருவேளை நான் மறுமணம் செய்துகொண்டால், அவ்வாறு செய்வதுதானே முறை.”

இன்னும் சற்றுநேரம் தயங்கிவிட்டு, “என்னுடன் விளையாடுவது போல், அவளுடனும் கால்ஃப் விளையாடுவீர்களா?”

“ஆமாம். அவளுடனும் கால்ஃப் விளையாடுவேன்”

“என்னுடைய கால்ஃப் மட்டைகளை அவளுக்குத் தந்துவிடுவீர்களா..?”

“இல்லையில்லை. அவள் இடதுகைப் பழக்கம் உடையவள்!”

இது ஒரு முடிவில்லாத சுழற்சி! உங்கள் பிழைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு மிக முக்கியமாய் இருக்கும்போது, நீங்கள் உங்கள் ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் இருப்பீர்கள். எனவே வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படி உங்களால் பார்க்கமுடியாது. அப்படி இந்த ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் நீங்கள் இருக்கும்போது, வாழ்வை எதிர்திசையிலிருந்தே அணுகுவீர்கள். ஆம், முதலில் படித்து முடித்துவிடலாம், அடுத்து வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும், அடுத்து கல்யாணம், அடுத்து குழந்தை… இதெல்லாவற்றிற்கும், பிறகு, கடைசியாக அமைதி தானாய் கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆமாம், எப்படியும் கடைசியில் மரணத்தில் அமைதியாக இருப்பீர்கள்தானே. குறைந்தபட்சம் அப்படி நம்புகிறோம்!

பிழைப்பு என்று வரும்போது, பிழைப்பே வாழ்வில் பெரிய விஷயமாக இருக்கும்போது, வாழ்வின் நுட்பமான விஷயங்கள் எதையுமே நீங்கள் உணரமுடியாது. மனிதனாய் இருப்பதில் உள்ள சிறந்த அம்சங்களை நீங்கள் உணரமுடியாது. அதனால் உங்கள் பிழைப்புப் பிரச்சினைகளை சற்றே குறைத்து வையுங்கள். அப்போதுதான், வாழ்வை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே உங்களால் உணரமுடியும்.