டிசம்பர் 1 - இன்று உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் பற்றிய விளக்கம், அதற்கான தீர்வு ஆகியவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார் சத்குரு...

சத்குரு:

நோய்!

ஒரு உயிர் முழுமையாக வளர, அதற்கேற்ற உடல் தேவைப்படுகிறது. நமது உடலை, நமது உயிரை, ஒரு உயர்ந்த நிலையில் கொண்டு செல்ல, வாழ்க்கையில் பல விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் பிறக்கும்போதே ஏதோவொரு நோயோ அல்லது குறையோ உடலில் இருந்தால், அது நமது உயிரை முழுமையாக வளரவிடாமல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது, நல்லவிதமாகப் பிறந்திருந்தாலும், ஏதோவொரு நோயாலோ அல்லது உடலில் அடிபட்டோ, நமது உயிர் முழுமையாக செயல்பட வாய்ப்பில்லாத நிலை ஏற்படலாம்.

நாம் உண்ணும் உணவு, நம் சுவாசம், வாழும் முறை, நமது செயல்கள் ஆகியவற்றை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயமாக அதிகரித்துக்கொள்ள முடியும்.

தற்போது உலகெங்கும் பரவியுள்ள எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோயினால் சமூகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு மனப்பான்மை உருவாகியுள்ளது. அடிப்படையாக இது எந்தவிதமான நோய்? ஏன் வருகிறது? இந்த நோய் வந்தால் என்ன செய்வது? மற்றொருவருக்கு இந்த நோய் எப்படி பரவுகிறது? போன்றவை புரியாததால்தான் சமூகத்தில் இந்நோய் குறித்து எதிர்ப்புநிலை ஏற்படுகிறது. அயல்நாடுகளில் இந்த நோய் குறித்த அறிவு இருப்பதால் அங்கே எதிர்ப்புநிலை பெரிதாய் இல்லை. ஆனால் இந்தியாவில் எதிர்ப்புநிலை அதிகம் என்பதால் அந்நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது மிக அவசியம். எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோயால் மட்டும் பாதிப்பு வரும் என்றில்லை. மனிதன் பலநோய்களால் பாதிக்கப்படுகிறான். இந்த நோயால் பாதிப்பு வந்ததா? அல்லது அந்த நோயால் பாதிப்பு வந்ததா என்பது முக்கியமல்ல. பாதிப்பென்றால் பாதிப்பு தான். ஒரு மனிதன் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பிலிருந்து அவனை எப்படி மீட்டெடுப்பது என்பதே முக்கியமானது.

எய்ட்ஸ் என்பது...

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்பது ஒரு நோயல்ல. நோயை எதிர்க்கும் சக்தியில்லாமல் போய்விடுவது. நோய் எதிர்ப்பு சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. சிலருக்கு ஏதோ ஒன்றை சாப்பிட்டாலே நோய் வருகிறது. இன்னும் சிலருக்கு அவர்கள் எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும் எதுவும் ஆவதில்லை. ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியென்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. ஆனால் நம்முடைய உயிர்சக்தியை தீவிரமான நிலையில் வைத்திருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். எல்லா சக்தியையும் பெறமுடியாமல் போனாலும், நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் உண்ணும் உணவு, நம் சுவாசம், வாழும் முறை, நமது செயல்கள் ஆகியவற்றை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயமாக அதிகரித்துக்கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தேவை?

நோயால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எதிர்க்கத் தேவையில்லை. நோயால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு மற்றவர்களின் அன்பும், ஆதரவும்தான் தேவை, எதிர்ப்பு தேவையில்லை. ஒரு மனிதனுக்கு காலில் முள் குத்தினால்கூட அந்த நேரத்தில் சுற்றியிருப்பவர்களின் கருணை தேவைப்படுகிறது. காலில், பெரிய நோய் ஒன்றும் வராவிட்டாலும்கூட சாதாரணமாக முள் குத்துவதே அந்த நேரத்தில் பெரிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஒரு பாதிப்பு பெரியது, மற்றொன்று சிறியது என்றெல்லாம் இல்லை. கேன்சர் வந்தால் அன்பு செலுத்தவேண்டும், எச்.ஐ.வி. வந்தால் அன்பு செலுத்தக் கூடாது என்பதெல்லாம் தேவையில்லை. ஒரு மனிதன் பாதிப்பில் இருக்கும்போது, அவனுக்காக துடிப்பதென்பது, இயற்கையாகவே ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் நிகழ்வது. ஆனால் நமக்குள் இருக்கும் இந்த மனிதத்தன்மை என்னும் துடிப்பை ஏன் செயல்பட விடாமல் இருக்கிறோம்?

நாம் பலவாறாக முன்கூட்டியே முடிவெடுத்திருக்கிறோம். இது சரியல்ல அது சரியல்ல என்று முடிவெடுத்திருக்கிறோம். மற்றொரு மனிதனுக்கு பாதிப்பு வந்தால் அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கும் தன்மை, ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது. இப்படியிருக்க யாரும் உங்களுக்கு சொல்லித்தரத் தேவையில்லை. நமக்குள் மனிதத்தன்மை என்பது இருந்தால் மற்றொரு மனிதனின் பாதிப்பிற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே வெளிப்படும். இதற்கு யாருடைய போதனையும் தேவையில்லை. ஆனால், இந்த அடிப்படையான மனிதத்தன்மையையே அழித்ததோடு, தவறான முன்முடிவுடன், எதிர்மறையாக செயல்படக்கூடிய சூழல் சமூகத்தில் நடந்து கொண்டேயிருக்கிறது.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவில்லையென்றால், இந்நோயை பரவவிடக்கூடாது என்ற பொறுப்பை நம் கைகளில் எடுக்கவில்லையென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் இதனால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இப்போது இந்த நோய் சிறிது குறைய ஆரம்பித்திருக்கிறது. சில தேசங்களில், ஒரு சில நேரங்களில், 80% மக்களுக்கு எச்.ஐ.வி நோய் இருந்திருக்கிறது. அப்போது மற்ற நாடுகளிலிருந்து சென்று தேவையான உதவியினை அங்கே செய்யவில்லையென்றால், அங்கிருந்த மக்கள்தொகை முழுதும் அழிந்துவிடும் அபாயம் இருந்தது. இந்தியாவில் 10, 15 வருடங்களாக அதற்கான செயல்களைச் செய்தும், எய்ட்ஸ் நோய் பற்றிய அறிவு தொடக்க நிலையிலேயே இருப்பதாகத்தான் தெரிகிறது.

நோயின் பாதிப்பிலிருப்பவர்கள், சிறிது கவனமாக இது நம்மால் மற்றொருவருக்கு பரவக்கூடாது என்ற பொறுப்புடன் இருக்கவேண்டும். நம் உயிர் இதைத் தாண்டிப்போவதற்குத் தேவையான பயிற்சிகளை வாழ்வில் கொண்டுவர வேண்டும். பயிற்சிகளை மேற்கொள்வதால் முழுமையாக அகன்றுவிடும் என்பதல்ல. ஆனால் சில எளிமையான யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், நிச்சயமாக நோயின் பாதிப்பைத் தணித்து வாழ வாய்ப்பிருக்கிறது. சாப்பாடு, பயிற்சி, வாழும் முறை ஆகியவற்றில் சிறிதளவு ஒழுக்கத்தினைக் கடைபிடித்தாலே, நிச்சயமாக நாம் இந்த சூழ்நிலையைத் தாண்டி, முழுமையான வாழ்க்கை வாழ வாய்ப்பிருக்கிறது.

கருணைக்கு பேதமில்லை

குறிப்பு: இந்த வீடியோவின் முழுப் பதிவும் 'கருணைக்கு பேதமில்லை' என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.