ஸ்வாமி நிர்விச்சாரா ~ காரணம் / தர்க்கத்திற்கு அப்பால்

ஒவ்வொரு சத்குரு தரிசனத்தின்போதும் சத்குருவிடம் கேள்வி கேட்க கையுயர்த்தும் மக்களிடம் சரியான நேரத்தில் மைக் கொடுக்கத் தவறாத இந்த மௌன சந்நியாசியை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்வாமி நிர்விச்சாரா, 1995ம் ஆண்டு மஹாசிவராத்திரியன்று பிரம்மச்சரியம் பூண்ட முதல் எட்டு பிரம்மச்சாரிகளுள் ஒருவர். அன்று முதல் ஸ்வாமி தனது சாதனாவை காலை 3 மணிக்குத் துவங்குவது வழக்கம், சில நாட்களில் 2 மணிக்கெல்லாம் துவங்குகிறார். தினமும் அங்கமர்தனா செய்யும் இந்த ஸ்வாமி, இன்று 50 வயதைக் கடந்த பின்னும், ஏழாவது மலை வரை ஓடியே செல்லக்கூடிய திறமையுடையவர்.

மே 1998ம் ஆண்டில் ஸ்வாமிக்கு மௌன சாதனா வழங்கப்பட்டது. ஒரு வருடம் தேசாந்திரியாக, நாடு முழுவதும் தெருக்களில் நடந்துதிரிந்த காலத்தில்கூட, தன் மௌனத்தை எட்டாவது மாதத்தில்தான் கலைத்தார். இன்றுவரை சத்குருவிடம் மட்டுமே பேச்சு, மற்றவர்களுடன் தொடர்புகொள்ளத் தேவை வந்தால் எழுத்தில் மட்டுமே.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் புரொடக்ஷன் மேனேஜ்மென்ட் படிப்பில் டிப்ளமா பெற்றுள்ள சுவாமி, 25 வருடங்களுக்கு முன்பு ஈஷாவிற்கு வந்தபோது கணினி அனுபவமே இல்லாதவர். இன்றோ, பிரம்மச்சாரிகள் சந்திப்புகளில் சத்குரு பேசுவதை டிஜிட்டல் வடிவில் பதிந்து, பட்டியலிட்டு, வருங்காலத்தில் இப்பாதையில் நடப்போருக்கு அழியாப் பொக்கிஷமாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இறந்தவர்களுக்காக செய்யப்படும் காலபைரவ கர்மா செயல்முறை செய்வதற்கு முதன்முதல் பயிற்சிபெற்ற பிரம்மச்சாரியும் இவரே. சமீபத்தில் சுவாமியைப் பற்றி சத்குரு கூறுகையில், “22 வருடங்களுக்கு முன்பு நான் சுவாமியை எப்படி பார்த்தேனோ, இன்றும் அவர் நடமாடும் விதத்தில் அதே உற்சாகமும், கால்களில் அதே துடிப்பும் இருக்கிறது. ஏனெனில், இறந்தவர்களுக்கு அவர் தேவை. அவர் நீண்டகாலத்திற்கு இங்கு இருக்கவேண்டும். வாழ்பவர்களுக்கு நீங்கள் தேவை என்றால் பரவாயில்லை, அவர்கள் எப்படியும் ஒருநாள் இறப்பார்கள். ஆனால், இறந்தவர்களுக்கு உங்கள் தேவை இருப்பது, இன்னும் தனிச்சிறப்பு வாய்ந்தது.

ஸ்வாமி நிர்விச்சாரா : மீண்டும் ஒரு திங்கட்கிழமை, அன்று எனக்கு விடுமுறை. என் வாழ்க்கை என்னை எங்கு கொண்டுசெல்கிறது என்பதை எண்ணி என் எண்ணங்களையும் உணர்வுகளையும் சல்லடை போட்டு அலசிப்பார்த்தேன். மீண்டும், பதில்கள் மட்டும் நழுவின. இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, 1990களில் வாழ்க்கை நன்றாகவே இருந்தது, நல்ல உணவு, திரைப்படங்கள், சாகசங்கள் என்று எல்லாம் இருந்தது. ஆனால், தாங்கமுடியாத ஓர் அதிருப்தி எனைச் சூழ்ந்திருந்தது, அதை ஈடுசெய்ய என்னென்னவோ செய்ய முயற்சி செய்திருக்கிறேன். ஒரு நாள் காரணமேயில்லாமல் என் வேலையை ராஜினாமா செய்தேன். வேலையை விட்டதால் மாற்றமொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. மேலும் இரண்டு வேலைகளில் சேர்ந்து, என் தந்தையுடன் சண்டைகள் போட்டு, எனக்குள் உணர்வளவில் நிறைய கொந்தளிப்புகளை சந்தித்த பின்னரே, என் அம்மா கட்டாயப்படுத்தியதால் ஏப்ரல் 1994ம் ஆண்டில் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தேன். அன்று முதல் சர்வமும் மாறியது.

வகுப்பு முடிந்ததும், ஒவ்வொரு ஞாயிறும் தமிழகமெங்கும் நடக்கும் ஈஷா யோகா வகுப்புகளைத் தேடிச்சென்று தன்னார்வத் தொண்டு செய்தேன். ஒரு வாரம் தங்குவோம் என்ற எண்ணத்துடன் நான் 90- நாள் ஹோல்னெஸ் நிகழ்ச்சிக்கு தன்னார்வத் தொண்டராக வந்தேன். ஆனால், நிகழ்ச்சி முழுவதும் தன்னார்வத் தொண்டு செய்தேன். அந்த சமயத்தில் சத்குரு தனது ஆன்மீகப் பரிமாணங்களை உணர்த்தியதும், ஒரு சாதாரண மனிதர் நிர்விகல்ப சமாதிநிலையை எட்டுவதைக் கண்டதும் (சமாதி நிலைகள் அனைத்திலும் உயர்ந்தது நிர்விகல்ப சமாதி), தீவிரமான தியானங்களும், அதே தீவிரத்துடன் ஆசிரமத்தில் நான் உணர்ந்த ஏகாந்தமும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள்.

ஹோல்னெஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு, சத்குருவுடன் இருக்கவேண்டும் என்ற வேட்கை தீயாய் தகிக்க, நான் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பினேன். டிசம்பர் 1994ல், பிரம்மச்சரியம் எடுக்க விரும்புவோரை விண்ணப்பிக்கச் சொல்லி சத்குரு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். இப்பாதை குறித்து அன்று நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை, ஆனால் சத்குருவிற்கு அருகில் இருக்கவேண்டும் என்பதற்காக விண்ணப்பித்தேன். 1995ம் ஆண்டு பிப்ரவரி 27ல், மஹாசிவராத்திரி தினத்தில், மற்றொரு ஏழு பேருடன் நானும் பிரம்மச்சரிய தீட்சை பெற்றேன். பிரம்மச்சரிய பாரம்பரியம் ஈஷாவில் துவங்கிய தினமும் அன்றே.

கடின உழைப்புடன் கூடிய கொண்டாட்டமான நாட்கள்

ஆசிரம வாழ்க்கைமுறை எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. நாங்கள் மிகவும் ரசித்த நாட்கள் அவை. சொர்ப்ப எண்ணிக்கையிலான மக்கள், பாட்டியின் அற்புதமான சமையல், பணியாற்ற குறிப்பிட்ட நேரம் என்றில்லை, நீரோடையில் தினமும் mud bath எடுத்தோம், காட்டுக்குள் வாக்கிங் சென்றோம், தண்ணீர்த் தொட்டியில் நீச்சலடித்தோம், ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாடினோம், மலர்தரும் செடி கொடி மரங்களுக்கு நீர்ப் பாய்ச்சினோம், எங்களில் சிலர் ஒன்றாக சேர்ந்து ‘இக்லூ’ (சாதனாவிற்கான குகை போன்ற சிறு அமைப்பு) கட்டினோம், சாதனா செய்தோம், அவ்வப்போது ஆசிரமத்திற்கு வந்துபோன மக்களை கவனித்தோம். வாழ்க்கை மிக அற்புதமாகவும் சுலபமாகவும் இருந்தது.

1995ம் ஆண்டு மே மாதத்தில் ஆசிரமத்தில் முதன்முதல் சம்யமா நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தியானலிங்க பிரதிஷ்டை பணி விறுவிறுப்படைந்தது. மெதுவாக ஆசிரமம் சற்று ஒருங்கிணைவாக, திட்டமிடலுடன் நடக்கத் துவங்கியது. எனினும் இன்று பார்க்கும் அளவு திட்டமிடலும் நுட்பங்களும் அன்று இருக்கவில்லை. 3 மாதங்களுக்கு சத்துமாவு (சஞ்ஜீவினி) தயாரிக்கும் பணியில் இருந்தேன். அதனுடன், யோக வகுப்புகளின்போது, எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை, flooring வேலை ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தேன். அத்தனையும் முன் அனுபவமின்றிதான்.

அந்நாட்களில் நாங்கள் செய்த வேலைகளில் ஒன்று, தியானலிங்கத்திற்கு பொருட்கள் எடுத்துவந்த லாரி, டிரக் வண்டிகளுக்கு உதவுவது. தண்ணீர்ப்பந்தல் முதல் ஆசிரமம் வரை நீண்டிருந்த அந்த சேரும் சகதியுமான ரோட்டின் வழியே லாரிகளை தள்ளவேண்டி இருக்கும். வண்டியை தள்ளும்போது உதவியாளர்கள் இறங்கிவிடுவார்கள். பல சமயங்களில், அந்த சேற்றையும் சகதியையும் கண்டபிறகு, ஆசிரமத்திற்கு வர அவர்கள் மறுத்துவிடுவார்கள். அதனால் ஆசிரமத்தை அடைந்ததும் நாங்களே பொருட்களை இறக்கவும் வேண்டியிருக்கும். ஒரு சம்பவம் இன்னும் நினைவிருக்கிறது. ஒரு டிரக் நிறைய, தலா 10 கிலோ எடைகொண்ட கடப்பா கற்கள் வந்திருந்தன, அவை அனைத்தையும் நாங்களே இறக்கிமுடித்தோம்.

இன்னொரு முறை, சிமெண்ட் மூட்டைகளுடன் லாரியில் வந்திருந்த கூலியாட்கள், அவற்றை இறக்குவதற்கு மூட்டைக்கு ரூ.2 கேட்டார்கள். ரூ.1.75 வரை கொடுக்கத் தயாராக இருந்தோம், அவர்கள் குறைப்பதாய் இல்லை, ஒதுக்குப்புறமான இவ்விடத்தில் அவர்களை விட்டால் வேறு வழியில்லை என்று கட்டணத்தை உயர்த்திக் கேட்டார்கள். எங்களைப் பற்றித் தெரியாதவர்கள் அல்லவா. நானும் இன்னுமிரண்டு பிரம்மச்சாரிகளும் தாணிக்கண்டியிலிருந்து வந்திருந்த ஒரு கூலியாளும் சேர்ந்து வெகுவிரைவாக 200 மூட்டைகளையும் இறக்கிமுடித்தோம். இதைக் கண்ட அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் ஆச்சரியம்தான்!

லிங்கத்தில் மயிரிழை அகலப் பிளவு

dhyanalinga-consecration-sadhguru-sitting-front-of-linga

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜூன் 1996ம் ஆண்டு, தியானலிங்கத்திற்கான கல் ஆசிரமத்திற்கு வந்த சமயம். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, லிங்கத்தைச் சுற்றி அனைவரையும் கூடச்சொல்லி சத்குரு அழைத்திருந்தார். லிங்கம், ஒரு மணல் படுக்கையில், அதன் உச்சமாகிய சஹஸ்ரார் பகுதி தென்திசை நோக்கியபடி கிடத்தப்பட்டிருந்தது. சத்குரு லிங்கத்திற்கு விபூதியிட்டு, சஹஸ்ராரத்தைச் சுற்றி விபூதியால் ஒரு பெரிய வட்டமிட்டார். நாங்கள் கண்மூடியபடி “ஆஉம் நமஹ் ஷிவாய” உச்சரித்துக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் சத்குரு கைதட்டினார், சாதாரணமாக சக்திநிலையை உயர்த்துவதற்கு சத்குரு கைதட்டுவது எங்களுக்குப் பரிட்சயமானதே. சற்று நேரத்தில் process முடிந்து நாங்கள் அனைவரும் கிளம்பினோம்.

அடுத்த நாள் காலை நான் லிங்கத்திற்கு அருகில் சென்றபோது, முந்தைய நாள் இரவு சத்குரு விபூதியால் போட்டிருந்த வட்டத்தின் ஊடே ஒரு சிறுகோடு இருந்ததைக் கண்டேன். உற்றுப் பார்த்தபோது, அந்த சிறு கீரல் லிங்கத்தின் பக்கவாட்டிலும் நீடித்ததை கவனித்தேன். லிங்கத்தில் மயிரிழை அகலப் பிளவு ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து சத்குருவிற்குத் தகவல் தந்தோம். அவரும் உடனே பார்வையிட வந்தார். கல்லை அனுப்பியவர்களிடம் அந்தக் கீரலை சோதித்துப் பார்க்க ஆள் அனுப்பச்சொல்லி ஸ்ரீநிவாசன் அண்ணாவிடம் சொன்னார்.

சென்னையிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இரு நிபுணர்கள் வந்து பார்த்துவிட்டு, அந்த மயிரிழை அகலப் பிளவு அதற்குமேல் விரியாது என்றும், எவ்விதத்திலும் கல்லை பாதிக்காது என்றும் உறுதிசெய்துவிட்டுக் கிளம்பினர். அவர்கள் சென்றபிறகு லிங்கத்தை வெள்ளைத் துணியால் சத்குரு மூடச்சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு லிங்கத்திற்கு மேல் ஓலைக்கூரை வேய்ந்தோம்.

தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான், ஒரு சத்சங்கத்தின்போது அந்த மயிரிழை அகலப் பிளவு பற்றி சத்குரு பேசினார். பிரதிஷ்டையின்போது லிங்கம் பிளப்பதைத் தவிர்ப்பதற்கு, ஆரம்பகட்டத்திலேயே ஒரு process ன்போது கைதட்டி ஒரு மெல்லிய பிளவை ஏற்படுத்தியதாகச் சொன்னார். அவர் என்ன சொல்கிறார் என்பதை நான் உடனே உணர்ந்துகொண்டேன்.

லிங்கம் நிறுவப்பட்ட பிறகு, அந்த மெல்லிய பிளவு லிங்கத்தின் பின்புறம் இருந்ததைக் கண்டேன். இன்றும் அது அதே இடத்தில்தான் உள்ளது.

நாடோடியாகத் திரிந்தபோது

2001 செப்டம்பர் 24ம் தேதி, மாலை 7 மணிக்கு சத்குருவை shrine ல் சந்திக்கச்சொல்லி தகவல் வந்தது. அது என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியும். உள்ளே நுழைந்ததும், சத்குரு தான் பயன்படுத்திய ஒரு நீளமான சால்வை ஒன்றை என்னிடம் கொடுத்து, “ஒரு வருடம். காசி & கேதார்” என்று எழுதிய சீட்டு ஒன்றைத் தந்தார். அடுத்தநாள் காலை 5.40 மணிக்கு நான் முக்கோண கட்டிடத்தைவிட்டு வெளியேறியபோது, மா கம்பீரியும் சுவாமி நிசர்காவும் நான் கொண்டு செல்வதற்கான பையை வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். அந்தப் பையில் ஒரு சால்வை, ஒரு பிச்சைப் பாத்திரம், அதோடு என் முதல் பிச்சையான ஒரு உணவுப் பொட்டலமும் இருந்தது. சத்குரு கொடுத்த சால்வையை நான் மூன்றாகக் கிழித்தேன். அதில் ஒன்றை துண்டாகவும், ஒன்றை வேட்டியாகவும், இன்னொன்றை கோவணமாகவும் பயன்படுத்தினேன். நான் மீண்டும் பரிவ்ராஜிகா சாதனாவிற்கு செல்லவிருந்தேன். முந்தைய வருடம் டிசம்பர் மாதத்தில், சத்குரு என்னை இந்த சாதனாவை ஒரு மாதகாலத்திற்கு செய்யச் சொல்லி அனுப்பியிருந்தார். இம்முறை அது ஒரு வருடகாலமாக இருக்கப்போகிறது.

அதனால் காலை 6 மணிக்கு தியானலிங்கத்தை தரிசித்து விட்டுக் கிளம்பினேன். ஆசிரமத்தை விட்டு வெளியே காலடி வைத்த அந்தக் கணத்தில், ஒரு வருடம் முழுவதும் ஆசிரமத்தைவிட்டு நான் பிரிந்திருப்பதை நினைத்தபோது மூச்சே நிற்பதுபோல இருந்தது. ஆனால் அந்த உணர்வு உடனே மறைந்து என்னை கேள்விகள் சூழ்ந்தன. “என்ன செய்வேன்? என்ன சாப்பிடுவேன்? எங்கு தூங்குவேன்? எங்கு செல்வேன்?” போன்ற சிந்தனைகள் என்னை நெருடியது. அதுவும் ஒரு நாளைக்கு மட்டுமே நீடித்தது. இந்த சாதனாவை நிறைவு செய்யாமல் நான் திரும்பிச்செல்ல முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தது. அதனால் குறிப்பிட்ட நோக்கமெதுவும் இல்லாமல், தேசத்தின் குறுக்கும்நெடுக்குமாக சுற்றித் திரிந்தேன். பலவிதமான நிலப்பகுதிகளை கடந்தேன், பலவித மனிதர்களை சந்தித்தேன். என்ன வழங்கப்பட்டாலும் உண்டேன், பலவிதமான பிரச்சனைகளையும் துயரங்களையும் எதிர்கொண்டேன். ஆசிரமத்திற்குத் திரும்பிய பிறகும் வாழ்க்கை முன்புபோல இருக்கவேயில்லை.

முதலில் காசிக்குச் சென்றேன், பிறகு போபால் அருகிலிருந்த போஜ்பூர் லிங்கத்தைப் பார்க்கச்சென்றேன். அங்கு என் வேட்டி கிழிந்துபோனது. அதை தைக்கச் சென்ற இடத்தில், 12 ஜோதிர்லிங்கங்கள் வீற்றிருக்கும் தலங்களைக் காட்டும் சுவரொட்டி ஒன்றைக் கண்டேன். மிக அருகிலேயே ஒரு ஜோதிர்லிங்கம் இருப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன். அதனால் அடுத்து உஜ்ஜெயினில் உள்ள மஹாகாலா கோயிலுக்குச் சென்றேன். ஒரு ஜோதிர்லிங்கத்திலிருந்து அடுத்தடுத்து என, கோடைக்காலத்தில் கேதாரை சென்றடைந்தேன். வழியில், என் குழந்தைப்பருவ விருப்பத்தை நிறைவுசெய்ய ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகாலையும் காணச் சென்றேன். தேசாந்திரியாக சுற்றித்திரியும் சாதுவாக இருப்பதன் சுவையை நான் உண்மையாகவே ருசித்தேன்.

என் நினைவில் நிற்கும்
குறிப்பிட்ட சில சம்பவங்கள்...
குருபூஜையில் ஒரு தடுமாற்றம்

நான் இமயமலையில், ஒரு நாள் காலையில் நடந்துகொண்டு இருந்தபோது, ஏதோ காரணத்தால் என்னால் குருபூஜை முழுவதையும் சொல்ல முடியவில்லை. நடுவில் தடைப்பட்டது. மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தேன், தொடர்ந்து தடைப்பட்டது. ஒவ்வொரு முறையும் எவ்வளவு உறுதியாக முயன்றாலும், சில வரிகளுக்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை. “எனக்குள் குருபூஜை வெளிப்படாமல் இருக்கும் நாளில் நான் இருப்பதைவிட, பள்ளத்தாக்கில் குதித்துவிடுவதே மேல்,” என கீழே குதிக்க ரோட்டின் விளிம்பை நோக்கி நடக்கலானேன். அந்த சமயத்தில், எனக்குள் குருபூஜை வரிகள் ஊற்றெடுத்தன, எனக்குள் முயற்சியின்றி குருபூஜை நடந்தது. அந்த வருடம் முழுவதும், சத்குரு எனக்குள்ளும் எனைச் சுற்றியும் எப்போதும் இருக்கிறார் என்பதை நான் முதன்முதலாக அன்று உணர்ந்தேன்.

கண்ணுக்குத் தெரியாத கை தாங்கிப்பிடித்தபோது

ஹேம்குண்ட சாஹிப் என்ற இடத்திற்கு நான் சென்றுகொண்டிருந்தேன். பாதை முழுவதும் பனியால் மூடியிருந்தது, வெறும் ஒன்றரை அடி அகலத்தில் இருந்த பாதையை யாத்திரிகர்களும் கூலியாட்களும் பயன்படுத்தினர். திடீரென அவசர அவசரமாக ஒருவர் கீழே வந்தார். பள்ளத்தாக்கின் விளிம்பில் நான் நின்றுகொண்டிருந்தேன். அவர் கடக்கும்போது என் கால் விளிம்பிலிருந்து சருக்கியது. அப்போதுதான் அது எவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கு என்பதைக் கண்டேன். விழுவதிலிருந்து நான் தப்பியிருக்க வாய்ப்பேயில்லை, ஆனால் விழவில்லை. ஏதோவொரு கை என்னை நிறுத்தியதுபோல உணர்ந்தேன். எப்படி? எனக்கு தெரியாது.

பாதையில் கற்களை வீசிய மக்கள்

நான் ஹைதராபாத்தை அடையும்முன் இது நடந்தது. பத்து கிலோமீட்டருக்கு மேல் மழையில் நடந்து வந்திருந்ததால், மிக மோசமான சளியும் காய்ச்சலும் பிடித்திருந்தது. அச்சமயம், ஊரெங்கும் தசரா கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. ஹுசைன் சாகர் ஏரியைக் கடக்கும்போது சில சிறுவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து கேலி செய்யத் துவங்கினர். அதைத் தொடர்ந்து காலை 4 மணி வரை எனக்குத் தூங்க இடம் கிடைக்கவில்லை. அதன்பின், செகந்திராபாதில் ஒரு கடை வாசற்படியில் இரண்டு மணி நேரம் தூங்கினேன். காலை ஏழு மணிக்கு க்ரியா செய்வதற்கு வேறொரு இடத்தைக் கண்டுபிடித்தேன். க்ரியா ஆரம்பித்த மறுகணம், ஒரு குடிகாரர் தன் கையிலிருந்த பாக்கெட் சாராயத்தை, என்னை வற்புறுத்திக் குடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகு என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அழ ஆரம்பித்துவிட்டேன். மறுபடியும் எழுந்து வேறு இடம் தேடிச் சென்றேன்.

உதவி நம்மை நாடி வருகையில்

அதீலாபாத் தாண்டும்போது, எனக்கு மூச்சிரைப்பு அதிகரித்திருந்தது. அதிர்ஷ்டவசமாக, ஒரு மருத்துவர் எனக்கு இலவசமாக சிகிச்சையளித்து இரவு உணவுக்கு பிஸ்கட்களும் தந்தார். மக்களின் தாராள குணத்தால் எப்போதும் என் சட்டைப்பையில் பிஸ்கட்கள் இருந்தன. ஒருநாள் பாதி பாட்டில் தண்ணீரை வைத்துக்கொண்டு முப்பது கிலோமீட்டருக்கு மேல் நடந்தேன். இருந்தாலும், அந்த முழு வருடத்திலும் எனக்கு உணவு கிடைக்காமல் போனது வெறும் மூன்றே நாட்களுக்குத்தான். எப்போதெல்லாம் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் யாராவது சால்வை, ஸ்வெட்டர் அல்லது போர்வை வழங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள், நான் பசியாக இருப்பதைக் கண்டபோதெல்லாம் எனக்கு உணவு தந்தார்கள்.

பசியின் கோரப்பிடி

ஒருமுறை நான் பசியின் கோரத்தைக் கண்ணால் கண்டேன், ஆனால் அந்நிலை எனக்கு ஏற்படவில்லை. ராஜஸ்தானில் நடந்தது என்று ஞாபகம். நான் சென்றுகொண்டிருந்த ரோட்டில் ஒரு மனிதர் எதிரே வருவதைக் கண்டேன். அவர் ரோட்டோரங்களில் உணவு தேடுவதையும் கண்டேன். நான் நின்ற இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உண்பதற்காக கீழேயிருந்து ஏதோவொன்றை அவர் எடுப்பதைப் பார்க்க நேர்ந்தது. தூரத்திலிருந்து பார்த்தபோது, மண்போலத் தெரிந்தது. அதில் உண்பதற்கு என்ன இருக்கமுடியும் என யோசித்தபடி அருகில் சென்றேன்.

அங்கு நான் பார்த்தது என்னை உள்ளிருந்து உலுக்கியது, இன்றும் நினைத்தாலே நடுங்கச்செய்யும் ஞாபகம் அது. எவரோ வாந்தி எடுத்து காய்ந்து போயிருந்ததை, உண்பதற்காக அவர் எடுத்தார். அந்தக் கணத்தில் வானமே இடிந்து விழுவதுபோல இருந்தது. எப்படியோ நிதானித்துக்கொண்டு அவருக்கு பிஸ்கட் கொடுத்தேன். எனக்கு நன்றி சொல்லும் நிலையில்கூட அவர் இருக்கவில்லை. அங்கேயே உட்கார்ந்து இரண்டு கைகளாலும் பிஸ்கட்களை சாப்பிட்டார்.

அந்த வருடத்தில் சில முறை நானும் தெருவோரத்திலிருந்து உணவை எடுத்திருக்கிறேன். பரிவ்ராஜிகா சாதனா என்னை பரவசத்தில் ஆழ்த்தவில்லை. அந்த ஒரு வருடத்தில் ஆன்மீக அனுபவங்களும் இல்லை. ஆனால் ஒன்று, பசியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தது. நான் நிச்சயம் பசியால் உயிர்விடமாட்டேன் என்பதை உறுதியாக உணர்ந்தேன்.

எல்லைக்கோட்டில் சில பிரச்சனைகள்

சோம்நாத் கோயிலிலிருந்து போர்பந்தர் நோக்கி நான் பீச் ரோடு வழியாக செல்லும்போது, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஒருமுறையும், கிராமத்து மக்கள் இரண்டுமுறையும் என்னை நிறுத்தி, நான் பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த அகதியா என சோதிக்க விரும்பினர். என் உடைமைகள் முழுவதையும் சோதனை செய்தார்கள். அன்று முதல் நான் எல்லைப் பகுதிகள் வழியாகப் பயணிப்பதைத் தவிர்த்தேன்.

இமயமலையிலிருந்து அமர்நாத்திற்கு பயணம் செய்தேன், பிறகு நேபாள் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் சென்றேன். அங்கிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணித்து அசாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்றேன். அங்கு தெருக்களில் எப்போதும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருந்ததால், உடனே கோல்கத்தா நோக்கித் திரும்பினேன். பிறகு சம்பல்பூர், கடப்பா, கடைசியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் என் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளியது.

குருவை மீண்டும் கண்ணுற்ற சமயத்தில்

நான் வளர்ந்த ஊரான சேலத்தில், சத்குரு மஹாசத்சங்கம் நடத்திய நாளில், நானும் அங்கு இருக்கும் சூழ்நிலை அமைந்தது. 11 மாத நாடோடி வாழ்க்கைக்குப்பின் இது நடந்தது. காலை முதல் மைதானத்தில் நடந்த ஏற்பாடுகளை கவனித்தவண்ணம் இருந்தேன். எந்தவொரு பிரம்மச்சாரியும் தன்னார்வத் தொண்டரும் என்னை அடையாளம் காணவில்லை, ஒரு தன்னார்வத் தொண்டரைத் தவிர. அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார் என்று உணர்ந்ததும் அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன். பிறகு மாலை மீண்டும் சத்சங்கத்திற்கு வந்து, சத்குருவிற்கு மிக அருகில் சென்றுவிட்டு சட்டென கூட்டத்தினுள் நழுவிச்சென்றேன். எனினும் ஒரு தன்னார்வத் தொண்டர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, உணவுப்பொட்டலம் கொடுத்துச் சென்றார்.

அதற்கு சில வருடங்கள் முன்புவரை, அதே ஊரில், வீடு எனக்கு கொடுத்த சௌகரியத்தில், ஊர் முழுக்க இருசக்கர வாகனத்தில் பயணித்திருந்தேன். அன்று இரவு அதே ஊரில் ஒரு கடை வாசற்படியில் படுத்தேன், அன்று மிக நன்றாக உறங்கினேன்.

12 வருட சாதனாவிற்குப் பின் கிடைத்த வரம்

ஜனவரி 2003ம் ஆண்டில் சில பிரம்மச்சாரிகள் சந்நியாச தீட்சை பெற்றனர். அதில் நான் இல்லை. சிறிது காலத்திற்கு அது எனக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், சத்குருவிற்கு எது சிறந்தது என்று தெரியும் என்பதை உணர்ந்தவுடன் தெளிந்தேன். பிறகு டிசம்பர் 2006ல், பிரம்மச்சரிய தீட்சை பெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்தபின், சந்நியாச தீட்சை பெற்றேன். நம் பாரம்பரியத்தில், வழக்கமாக ஒரு தீட்சைக்குப் பிறகு 12 ஆண்டுகள் காத்திருந்த பிறகே அடுத்து தீட்சை வழங்கப்படும். தீட்சைக்குப் பிறகு, என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை, ஆனால் என் எல்லைகள் பலவும், நிர்பந்தங்கள் பலவும் உதிர்ந்தன. சந்நியாசம் என்பது பதவி உயர்வல்ல, கரைந்துபோகச் செய்யும் ஒரு செயல்முறை என்பதை உணர்ந்தேன். என் ஆன்மீக வாழ்வில் பின்னோக்கி செல்லமுடியாத ஒரு நிலையை தொட்டுவிட்டதாக நான் உணர்ந்தேன்

காலபைரவ கர்மா நடத்துகையில்

நான் குழந்தையாக இருந்தபோது எதைக் கண்டாலும் பயப்படுவேன். ஆனால் இப்போதெல்லாம் இறந்தவர்களுக்கான சடங்குகளிலும், எரியும் உடல்களுடனும் அதிக நேரம் இருப்பதை நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. இந்த செயல்முறைகளின்போது என்ன நடக்கிறது என்று நான் கிரகித்துக் கொண்டதில்லை, ஆனால் சத்குரு வழிகாட்டுதல்படி அப்படியே செய்கிறேன். தினசரி ரீதியில் இதில் ஈடுபட்டிருப்பது, மரணத்தை என் வாழ்வின் மிக நெருக்கமான அங்கமாக்கிவிட்டது. ஒருநாள், இந்த ஐம்புலன்களைக் கடந்து, உயிர்களின் விளையாட்டை நிச்சயமாக உணர்வேன் என நம்புகிறேன்.

சத்குரு உள்ளவரை உயிர்வாழ விரும்புகிறேன்

ஞானோதயம் என் குறிக்கோள் இல்லை, அது என் குருவின் குறிக்கோள், அதில் அவர் கண்டிப்பாக தவறமாட்டார். இது 500 சதவிகிதம் உறுதி. அதுகுறித்து நான் கொஞ்சமும் கவலைப்பட தேவையில்லை. இது என் கடைசி பிறவியாக இல்லாமல், மற்றொரு முறையும் தியானலிங்கத்தை சுற்றி இருக்க விரும்புகிறேன். உடலை விட்டபின் தன் சூட்சும உடலில் இன்னும் 80 ஆண்டுகள் என் குரு இங்கிருக்க தேர்வு செய்திருக்கும்போது, அவருடன் இருக்கும் வாய்ப்பினை தவறவிடுவது எப்படி? அவரது திருப்பணிக்கு அவர் என்னை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை தவறவிடுவது எப்படி?­