ஓமம் சாப்பிட்டால் உயரும் ஆரோக்கியம் (Omam Benefits in Tamil)
ஓமம் எனும் மருத்துவ குணமிக்க விதை தற்போது வெகுவாக மறக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். நம் பாட்டிமார்கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு அன்றாடம் பயன்படுத்திய இந்த ஓமம் பற்றி, உமையாள் பாட்டியிடம் கேட்டு அறிந்துகொள்வோம் வாருங்கள்.

கொல்லைப்புற இரகசியம் தொடர்
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்ததற்கு யார் காரணம் என்று காலையில் அலுவலகத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், நான் அந்த விறுவிறுப்பான மேட்சை நேற்றுப் பார்க்கும்போது சாப்பிட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களால் ஏற்பட்ட அஜீரண பிரச்சனையால் வயிற்று வலியில் இருந்தேன்.
10 வயது சிறுவன் ஒருவன் மேட்ச்சை ரிவ்யூ செய்து, தவறு எங்கே நடந்தது என்று ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் இன்ஸ்ட்டா ரீல் ஒன்றை அலுவலகத்தில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் யாருக்கும் சொல்லாமல் கிளம்பி உமையாள் பாட்டியின் வீட்டிற்கு வண்டியை விட்டேன்.
"என்னப்பா அவசர அவசரமா ஆபீஸ்க்கு கிளம்பி போன, இப்போ சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி இங்கே வந்திருக்க." கைக்கு அடக்கமான அந்த சிறிய உரலில் எதையோ இடித்துக்கொண்டே உமையாள் பாட்டி என்னிடம் கரிசனமாக கேட்டாள்.
நேத்து IPL மேட்ச் பார்க்கும்போது சாப்பிட்ட சிப்ஸ் இப்போ வேலையை காட்டுது பாட்டி. மேட்ச் தோத்த சோகத்துல தண்ணி குடிக்காம அப்படியே தூங்கிட்டேன். இன்னைக்கு காலையில வயிறு உப்புசமா இருக்குது; வயிறு வலியும் இருக்குது; அஜீரண பிரச்சனைன்னு நினைக்கிறேன். என்ன செய்யறதுன்னு தெரியல பாட்டி! அதுதான் உங்கக்கிட்ட வந்திருக்கேன்."
Subscribe
பாட்டியிடம் விவரத்தை கூற, பாட்டி எதுவும் பேசாமல் உள்ளே சென்று, ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரை கொடுத்தாள். அதைக் குடித்த அரை மணி நேரத்தில் ஏப்பம் வந்து வயிறு லேசானது; வயிறு வலியும் காணாமல் போனது. பாட்டியிடம் அந்த தண்ணீர் பற்றி எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்?!
"அது என்ன தண்ணீர்?" என்று கேட்டதும், "ஓமம் தண்ணீர்!" என்று பாட்டி கூற, ஓமம் பற்றி விரிவாகக் கேட்காமல் விட்டுவிட முடியுமா என்ன?!
ஓமம் பயன்கள் (Omam Benefits in Tamil)
செரிமானப் பிரச்சனைகளுக்கு ஓமம்
"வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நம்ம வீட்டிலயே இருக்கும் அருமருந்துதான் இந்த ஓமம். அஜீரணம், வயிற்று வலி, வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வா ஓமம் விதைகள் இருக்குது. குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஓமம் தீர்வளிக்குது.
இந்த ஓம விதைகளை எடுத்து அதே அளவு சீரகம் சேர்த்து இரும்பு கடாயில் நல்லா வறுத்து பொடி செஞ்சு வச்சு, காலை மற்றும் இரவுல உணவுக்கு அப்புறம் 20 நிமிஷம் கழிச்சு, வெண்ணீர்ல கால் டீஸ்பூன் அந்த பொடிய கலந்து தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா செரிமான பிரச்சனைகள் , வயிறு உப்புசம் குறைஞ்சு, நல்ல செரிமான சக்தியும் கிடைக்கும்.
பசியின்மைக்கு ஓமம்
பசியின்மை, வயிறு மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமத்தை மட்டும் தனியா இரும்பு கடாயில வறுத்து, பொடி செஞ்சு வச்சு, கால் டீஸ்பூன் வெந்நீரில் கலந்து பத்து நாட்களுக்கு குடிச்சிட்டு வந்தா, பசியின்மை நீங்கி நல்ல பசி உண்டாகும். ஓமம் தண்ணீரை தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா வாய்ப்புண், நாக்கு புண் போன்ற பிரச்சனைகளும் சரியாகும். ஓமம் தண்ணீரை தொடர்ந்து குடிச்சிட்டு வரும்போது இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதோடு, உடல்ல கெட்ட கொழுப்புகள் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகுது.
பசியின்மை இருக்குற குழந்தைகளுக்கு குடுக்கும்போது, ஒரு வயசுக்கு கீழ இருக்கிற குழந்தையா இருந்தா, இந்த ஓமம் தண்ணீரை வாரத்துக்கு இரண்டு தடவை ஒரு டீஸ்பூன் அளவு மட்டும் கொடுக்கணும், ஒரு வயசுக்கு மேல இருக்கிற குழந்தைகளுக்கு கால் டம்ளர் அளவுக்கு ஓமம் தண்ணீர் கொடுக்கலாம்.
சுவாசப் பிரச்சனைகளுக்கு ஓமம்
சளி, இருமல், மூக்கடைப்பு மாதிரி பிரச்சனைகளுக்குகூட ஓமம் மருந்தாய் இருக்குது. ஓம விதைகளை கொஞ்சம் எடுத்து, அதை ஒரு பருத்தி துணியில பொட்டலமா கட்டி, நாசி பக்கத்துல வச்சு முகர்ந்து சுவாசிச்சா மூக்கடைப்பு சரியாகும்.
ஆஸ்துமா பிரச்சனையால மூச்சுவிட முடியாம இருக்கறவங்க, ஒரு பருத்தி துணியில் ஓம விதைகளை பொட்டலமா கட்டி, நெஞ்சு பகுதியில ஒத்தடம் கொடுத்து வரும்போது, மூச்சு திணறல் சரியாக உதவுது.
மூட்டுவலி பிரச்சனைக்கு ஓமம்
ஓமத்தில ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் இருக்கிறதால, உடல் வலிகளை குறைக்கிறதோட, மூட்டுகள்ல வரக்கூடிய வலி, வீக்கம் இவை எல்லாத்தையும் குறைக்க உதவுது.
ஆர்தரடிஸ் மாதிரி மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கிறவங்க ஓமம் தண்ணீரை தொடர்ந்து குடிச்சிட்டு வரலாம். அதோட ஓமத்தை ஒரு பருத்தி துணியில் பொட்டலமா கட்டி, வலி இருக்கிற இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். அதுமட்டுமில்லாம, ஓமத்தை தண்ணிவிட்டு அரைச்சு பேஸ்ட் மாதிரி ஆக்கி, மூட்டுகள்ல பற்று போட்டு, கால் மணி நேரம் கழிச்சு கழுவலாம். இப்படி செய்யும்போது மூட்டு வலி குறைந்து நிவாரணம் கிடைக்குது.
பல் வலி பிரச்சனைகளுக்கு ஓமம்
பல் வலி பிரச்சனைகளுக்கும் ஓமம் தீர்வா இருக்குது. பல் வலி இருக்கிறவங்க இரண்டு டம்ளர் தண்ணியில கொஞ்சம் ஓமத்தையும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து நல்லா கொதிக்க வச்சு, அது வெதுவெதுப்பா ஆனபிறகு வாய் கொப்பளிச்சிட்டு வந்தா பல் வலி, ஈறுகள்ல இரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகள் சரியாகுது.
உடல் எடை குறைய ஓமம்
உடல் எடையை ஆரோக்கியமான முறையில குறைக்கணும்னு நினைக்கிறவங்க, முறையான டயட் ஃபாலோ செஞ்சிட்டு, ஓமம் தண்ணீரை அப்பப்போ குடிச்சிட்டு வந்தா, வளர்சிதை மாற்றம் அதிகமாகி ஆரோக்கியமான முறையில உடல் எடை குறைய உதவுது.
உமையாள் பாட்டி ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகளை சொல்லி முடிக்க, அலுவலகத்தில் இருந்து அலைபேசிக்கு அழைப்பு வந்தது. பாட்டி இடித்து வைத்திருந்த ஓமப்பொடியை பேக் செய்துகொண்டு கிளம்பினேன்.
அலுவலகத்தில் CSK தோத்ததுக்கு யார் காரணம் என்ற விவாதம் முடியாமல் தொடர, IPL பார்ப்பதே கார்ப்பரேட் உலகின் மாயவலைக்குள் சிக்க வைப்பது என ஒரு ரீல் வந்து முன்னின்றது செல்ஃபோனில்.
ஒருவேளை இருக்குமோ?!
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S. சுஜாதா MD(S).,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.