தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 16

தியானலிங்கத்தில் சத்குரு எதற்காக ஒரு விரிசலை தன் கரவொலியால் ஏற்படுத்தினார்? அதற்கு அவசியம் என்ன? கி.பி.992ல் போபாலில் ஏற்கனவே ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட தியானலிங்கத்தின் நிலை என்ன? இந்த கேள்விகளுக்கு விடை கொண்டு வருகிறது இந்த வாரப்பதிவு.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானலிங்கத்தில் சத்குரு தம் கரவொலியால் ஒரு விரிசலை ஏற்படுத்தியது எல்லோரும் வியக்கும் வண்ணம் இருந்தது. மிக அழகாக வடிவமைத்து, முறையாகத் திட்டமிட்டு பிராணப் பிரதிஷ்டை செய்து முடித்த தியானலிங்கத்தில் சத்குரு எதற்காக அப்படி ஒரு விரிசலை ஏற்படுத்தினார்? அதற்கு அவசியம் என்ன? அதைத் தம் கரவொலியால் எப்படி நிகழ்த்தினார்? இதென்ன ஆன்மீகச் சாதனையா... இல்லை மந்திர தந்திர சாகசமா எனப் பலப் பல கேள்விகள் மனதில் உதித்திருக்கும்.

மந்திரம், யந்திரம் மற்றும் தந்திரம் இந்த மூன்றும் சக்தி மிக்க வடிவங்களை உருவாக்கும்.

ஒரு பிரதிஷ்டையில் பல விதமான அணுகுமுறைகள் உள்ளன. மந்திரங்கள், பூஜைகள் மூலமாகப் பிரதிஷ்டை செய்வது ஒரு வகை. மந்திரம் என்றால் தூய ஒலி என்று அர்த்தம். ஒலியாகிய ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒரு வடிவம் உள்ளது. ஒவ்வொரு வடிவத்துக்கும் ஓர் ஒலி உள்ளது. உங்கள் கணினியில் நீங்கள் கேட்கும் பாடலை அது ஒலிக்கும் வண்ண வடிவத்தை அமைத்துப் பார்த்திருப்பீர்கள். ஒலியின் அலை வரிசைக்குத் தகுந்தபடி அந்த வடிவங்கள் மாறுவதையும் கவனித்திருப்பீர்கள்.

அப்படி மந்திரங்களின் ஒலிகளை ஆஸ்லோஸ்கோப் கருவியில் சேர்த்தால், அந்த ஒலிகளுக்கான வடிவங்களைப் பார்க்க இயலும். ஒலி என்பது மந்திரம் என்றால், அதன் வடிவம் தான் யந்திரம். இந்த இரண்டையும் பயன்படுத்துகிற நுட்பம்தான், தந்திரம். மந்திரம், யந்திரம் மற்றும் தந்திரம் இந்த மூன்றும் சக்தி மிக்க வடிவங்களை உருவாக்கும்.

ஆனால், தியானலிங்கத்தின் பிராணப் பிரதிஷ்டையில் இந்த மந்திர வழிமுறையை சத்குரு பயன்படுத்தவில்லை. இங்கே தூய சக்தி நிலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இது வேறு வகையான வழிமுறை. வேறுவகையான ஆத்ம சாதனை. அப்படி சக்தி நிலைகளை உச்சத்துக்கு எடுத்துச் சென்று தியானலிங்கம் என்கிற உச்சமான சக்தி வடிவத்தை உருவாக்கியதால்... பிரதிஷ்டையில் ஏதேனும் கடைசி நிமிடப் பின்னடைவு ஏற்பட்டால், லிங்கம் அந்த சக்தியின் உச்ச நிலையைத் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறும் அபாயம் இருந்தது. எனவேதான் ஒரு முன்னெச்சரிக்கையாக லிங்கத்தில் விரிசல் ஏற்படுத்தினார் சத்குரு.

இது அனுபவம் கற்றுத் தந்த ஒரு நல்ல முன்யோசனையாகும். அது என்ன அனுபவம்?

போபாலிலிருந்து 30கி.மீ தொலைவில் உள்ள போஜ்பூரில் தியானலிங்கத்தை அமைக்க ஒரு யோகி முயன்றபோது நிகழ்ந்த சம்பவங்களே அந்த அனுபவம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

கி.பி 992-ம் ஆண்டு ஓர் அரசனின் ஆதரவோடு ஒரு யோகி தியானலிங்கத்தையும், அதற்கென ஓர் அற்புதமான கோயிலையும் நிர்மாணிக்கத் திட்டமிட்டார். அவர் யோகக் கலையில் சகலமும் கற்றவர் என்பதால், அதற்கான சூத்திரங்களையும் அறிந்திருந்தார்.

ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் என்று மொத்தம் 14 ஆத்ம சாதனையாளர்களைத் தேர்வு செய்தார். அவர்களுக்கு பல விதமான யோகப் பயிற்சிகள் அளித்து குறிப்பிட்ட சக்தி நிலைக்கு அவர்களைத்
தயார்படுத்தினார்.

கி.பி 992-ம் ஆண்டு ஓர் அரசனின் ஆதரவோடு ஒரு யோகி தியானலிங்கத்தையும், அதற்கென ஓர் அற்புதமான கோயிலையும் நிர்மாணிக்கத் திட்டமிட்டார்.

முதல் நாள் மாலை, பிராணப் பிரதிஷ்டையைத் துவங்கி மறுநாள் காலைக்குள் முடிப்பது என்பது செயல்திட்டம். திட்டமிட்டபடி பிராணப் பிரதிஷ்டை துவங்கியது. நிறைவு நிலையை நோக்கி செயல்கள் சென்றுகொண்டு இருந்தன. அந்த நேரத்தில் அதில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் உடல்களுடனான தொடர்பு குறைவாகவே இருக்கும். உடலைவிட்டு நீங்கி விடுவதற்கான இச்சையும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். கொஞ்சம் முயற்சித்தாலே, உடலைவிட்டு விலகிவிடச் சாத்தியம் உள்ள நேரம் அது.

அந்த சமயத்தில், பிராணப் பிரதிஷ்டையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் சட்டென்று தனது உடலைக் கடந்து சென்றுவிட்டார். அதனால் எல்லா செயல்களும் தடைப்பட்டு விட்டன. அந்த யோகி அந்தப் பெண்ணின் பணியையும் சேர்த்து செய்து முடிக்க முயன்றார். அது அவரது உடலுக்குப் பெரிய சுமையாக இருந்தது. அப்படியும் முயற்சியை விடாமல் அவர் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார். ஆனால், அந்தச் சமயம் அங்கே ஏதோ ஒரு வன்முறை நிகழ்ந்திருக்கிறது. அது இந்தப் பிராணப் பிரதிஷ்டைக்கு எதிரான சில நபர்களின் ஆவேசச் செயலாக இருந்திருக்க வேண்டும். அந்த வன்முறையில் யோகியின் இடது கால் வெட்டப்பட்டது. ஆகவே பிராணப் பிரதிஷ்டை நிறைவடையாமல் பாதியில் நின்றுபோனது.

ஆனாலும் விடாப்பிடியாக அந்த யோகி தன்னை சீரமைத்துக் கொண்டு மீண்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இந்த முறை அந்த யோகியும் இன்னொரு பெண்ணும் அந்த லிங்கத்துடன் சக்தி ரூபமாகக் கரைந்துவிடுவது என்று முடிவு செய்தார்கள். அதன் பிறகு, அந்தச் சக்தி நிலையை மற்றொரு யோகி பூட்டுவது என்று ஏற்பாடு. அந்த மற்றொரு யோகிக்கு பூரணமான பயிற்சிகள் தரப்பட்டன.

இந்த இரண்டாவது முயற்சியில், யோகியும் ஒரு பெண்ணும் சக்தி நிலையில் தங்கள் உடல்களை நீங்கி லிங்கத்தில் கரைந்தார்கள். ஆனால் அந்த அபூர்வமான சூழ்நிலையில் மற்றொரு யோகியால் திறமையாகச் செயல்பட்டு சக்தியை லிங்கத்தில் பூட்ட இயலாமல் போயிற்று. உச்சமாகச் சக்தியூட்டப்பட்ட லிங்கம் அந்த சக்தியைத் தாங்க முடியாமல் உடனே நான்கு அங்குலத்துக்கு விரிசல்விட்டது. கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பூர்த்தியான அந்த பிராணப் பிரதிஷ்டை முழுமையாக நிறைவாகாமல் நின்றுவிட்டது.


அடுத்த வாரம்...

கர்மயாத்திரையின்போது போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை என்ன செய்தது?-விடைகாணக் காத்திருங்கள் அடுத்த வாரம் வரை!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை