கேதாரம்... இமயமலையின் மெய்மறக்கச் செய்யும் அழகிய பனிபடர்ந்த சிகரங்கள் சூழ, உத்தரகாண்ட் மாநிலத்தில், அமைந்திருக்கும் ஊர். சற்றே ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த இடம், ஒரு யாத்ரிகருக்கு அளவற்ற தெய்வீகத்தன்மை நிறைந்த புண்ணிய புராதன பூமி. ஒரு ஞானிக்கோ அனைத்துவித ஆன்மீகங்களும் நிறைந்த ஓர் இடம்.

‘‘இந்த உலகில் இரண்டு மூன்று விஷயங்கள் மட்டுமே என்னை ஆட்கொண்டு விடுகின்றன. கேதாரமும் அவற்றுள் ஒன்று.’’-சத்குரு

சத்குரு, இமயத்தின் இயல்பை நிறைய கதைகள், உவமானங்கள் மூலம் அப்படியே நமக்கு அள்ளித் தருகிறார். பல யோகிகள், நெடுந்தொலைவில் இருந்து வந்து இந்த மலையில் தம் சக்தியை பொதித்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஞானத்தின் சாரத்தை பின்வரும் சந்ததியினருக்காக விட்டுச் சென்றுள்ளார்கள். நம் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அது இங்கு இன்னமும் உயிரோட்டமாக இருக்கிறது. இதுதான், தன்னை உணரும் நோக்கில் இருப்பவருக்கு, கேதாரத்தை, ஒரு வரமாக ஆக்கியிருக்கிறது.

சிவபெருமானைப் பற்றிப் பேசாமல் கேதாரம் பற்றி விவரிக்கவே முடியாது. பல நூற்றாண்டுகளாக “சார்தாம்” பயணம் அதாவது “நான்கு தலங்கள்” செல்வது இந்தியாவில் மிகவும் பிரசித்தமானது. அவற்றுள் கேதாரத்தில் உள்ள இந்த சிவன் கோவில் மிகவும் முக்கியமானது. இந்த மண்ணின் வேர்போல் திகழும் ஆன்மீகத்தில் மிக முக்கியமான பாத்திரமாக விளங்குபவர் சிவபெருமான். சாமானியர்களின் புரிதலுக்கு எட்டாத கோணத்தில் இருப்பவர்.

இமயமலையில் இருக்கும் அதிசயம்... கேதாரம் & காந்திசரோவர்!, Imayamalaiyil irukkum athisayam ketharam and kantisarovar

அவரைப் பற்றிய நமது புரிதலை இன்னும் ஆழமாக்குகிறார் சத்குரு. மிக நெருக்கமான ஒருவரை அழைப்பது போல், அதேநேரத்தில் உருவமற்ற ஒன்றை நாடுவதுபோல், ஒரு விசித்திரமான தொனியில் சிவனை அழைக்கும் சத்குரு, சிவனை வெறுமை, ஒன்றுமற்ற தன்மை, சுயம்பு, முதல் யோகி, முதல் குரு, 50% கூட்டாளி என்று நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு வகைகளில் அறிமுகம் செய்கிறார். அப்போது, கடவுள், தெய்வச்சிலை, யோகிகள், துறவிகள், சாதுக்கள், குருமார்கள் குறித்து, பல காலமாக யாத்திரிகர்களுக்கும், உண்மையை நாடுபவர்களுக்கும் இருக்கும் ஐயங்களை தீர்த்து வைக்கிறார். பல சூட்சுமமான விஷயங்கள் இந்த பகுதியில் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை நமக்கு ஏற்கனவே புதிர்களாக இருக்கும் பல விஷயங்களுக்கு விடைதரும் என்று நிச்சயமில்லை. மாறாக அப்புதிர்களை இன்னும் ஆழமாக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

கேதாரம், ஆயிரக்கணக்கான யோகியரும் ஞானியரும் வந்தருளிய இடம். மனதில் நீங்கள் நினைக்கும் எவ்வகையான யோகியரையும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கண்ட இடம். எனவே தான் நாம் இங்கு வந்துள்ளோம். இந்த யோகியர் யாருக்கும் எதையும் சொல்லித் தருபவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தம் சக்தியை, வழிகளை, செயல்முறைகளை, தம் எல்லாவற்றையும், இங்கு வருபவர்களுக்கு கிடைக்கும்படியாக, ஒரு குறிப்பிட்ட விதத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்கள் ஞானத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடம் ஒரு விசித்திரமான ஆன்மீகக் கலவை நிறைந்த இடம் என்று சொல்லலாம்.

‘‘மிகவும் ஆவலைத் தூண்டக்கூடிய வகையில் அனைத்துவித ஆன்மீகங்களும் கலந்த இடம் உலகிலேயே இதுதான்’’-சத்குரு

உலகில் வேறெந்த இடமும் இந்த அளவிற்கு பலவகையான மனிதர்களைக் கண்டதில்லை இன்னும் சொல்லப்போனால் எல்லா வகையிலுமான மனிதர்கள் இங்கு வந்து இருந்திருக்கிறார்கள். எல்லாவகை என்று நான் சொல்லும்போது, சில வகைகளை உங்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. அப்படிப்பட்ட பலரின் ஆன்மீகப் பதிவு இங்கு உள்ளது.

25,000 அல்லது 50,000 ஆண்டுகளாக இத்தகைய பணிகள் இங்கு நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இங்குதான் எல்லா முனிவர்களும் துறவிகளும் வாழ்ந்தார்கள் என்று புராணக்கதைகள் கூறுகின்றன. அவை கதை அல்ல; சரித்திர உண்மைதான். இந்த மலைக்கு அப்பால் காந்த்திசரோவர் என்று ஒரு ஏரி உள்ளது. சிவனும் பார்வதியும் அங்கு தான் வசித்தார்கள், அவ்வப்போது கேதாரம் வந்து சென்றார்கள் என்கிறது புராணம். அந்த ஏரிக்கரையில் தான் கணபதி உருவானார் என்றும் கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன், 1994 ஏப்ரலில் நான் இந்த இடத்திற்கு வந்தபோது, எனக்கு ‘நாதப்பிரம்மா’ அனுபவம் ஏற்பட்டது. பத்து ஆண்டுகள் ஆன பின் இப்போது மீண்டும் நாம் எல்லோரும் அங்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பற்றி வார்த்தைகளில் விளக்குவது எனக்கு கடினம் தான்.

பண்டை காலத்தில் இந்தியா ஒரே தேசமாக இல்லாவிட்டாலும், பாரதம் என்று ஒரே பெயரால் அழைக்கப்பட்டது. மக்கள் ஒரே மதத்தை, ஒரே இனத்தை, ஒரே மொழியை சேர்ந்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ஒரே கடவுளை வணங்கவில்லை. ஒரே அரசாங்கத்தின் கீழும் இல்லை. இருப்பினும் இமயத்திற்கு தென்பகுதியில் உள்ள நிலம் முழுதும் பாரதம் தான். அவர்கள் அனைவரும் ஆன்மீகக் கலாச்சாரத்தில் ஊறி இருந்ததால், அங்கு மிகுந்த ஒற்றுமையும் இருந்தது.

ஆன்மீகக் கலாச்சாரம் என்றால் என்ன? நீங்கள் யாராக இருந்தாலும் சரி, என்ன தொழில் செய்தாலும் சரி, அரசனோ, உழவனோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் உயர்ந்த குறிக்கோள் முக்தி அடைவதுதான். இப்போதுகூட இதை நாம் பார்க்கலாம். ஒருவர் ஏழை விவசாயியாக இருப்பார். ஆனால் அவருக்கு முக்தி என்றால் என்னவென்று தெரியும். அந்த அளவிற்கு ஆன்மீகம் இந்த தேசத்தில் ஊடுருவி இருந்தது. இத்தகைய செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிவபெருமான். அவர்தான் மனித விழிப்புணர்வை செம்மைப்படுத்தியவர்.

யோகக் கலாச்சாரத்தில் சிவனைக் கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை முதல் குருவாக, ஆதிகுருவாகத்தான் பார்க்கிறார்கள். அவர்தான் முதல் யோகியும் கூட. தன்னுடைய உணர்தல் மூலமாக அவர் பேரானந்தம் கொண்டு தாண்டவம் ஆடினார். சிலசமயம் வெறுமனே அசைவற்றும் இருந்தார். தாண்டவமும், அசைவின்றி இருத்தலும், மாறி மாறி நிகழ்ந்தது. தேவர்கள் எல்லாம் இதைக் கண்டார்கள். அவருக்குள் என்ன நிகழ்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. எனவே தேவர்கள் உறையும் சொர்க்கம் களையிழந்து போனது. சொர்க்கத்தில் இருக்கும் நம்மைவிட அவர் அதிகமான ஆனந்தத்தில் இருக்கிறாரே என்று தேவர்கள் எண்ணினார்கள். எனவே அங்கு மிகுந்த அதிருப்தி தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பின், ஒரு வழியாக சிவனை தங்களுக்கு கற்றுக்கொடுக்க சம்மதிக்க வைத்தனர். சிவனும் தன்னிடத்து வந்த சிஷ்யர்களின் தயார்நிலைக்கு ஏற்ற வகையில், பலவிதமான யோகங்களை கற்றுக்கொடுத்தார்.

சிவனின் முதல் சிஷ்யை பார்வதி, அவருடைய மனைவி. அங்கு கற்பித்தல் ஒருவிதமான நெருக்கத்தில் நிகழ்ந்தது. மிகவும் விரிவாகவும், அதேசமயம் சூட்சுமமாகவும் பார்வதிக்கு பல்வேறு யோகமுறைகளை கற்பித்தார் சிவன். அவைதான் சிவ சூத்திரங்கள். அதில் அவர் பார்வதியை ‘ஒளி பொருந்தியவளே, கருணை மிக்கவளே, எழில் மிக்கவளே’ என்றெல்லாம் அன்பொழுக அழைத்து, அந்த யோக முறைகளை எடுத்துரைத்தார். இது மிகுந்த நெருக்கத்துடன் நிகழ்ந்த வகுப்பு. நெருக்கம் என்றால் பாலியல் சார்ந்த உடல் நெருக்கம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நெருக்கம் என்றால் முற்றிலும் எதிர்ப்பு இல்லாத தன்மை. கற்றுக்கொள்பவர் முற்றிலும் திறந்த தன்மையில் இருந்து பெற்றுக்கொள்கிறார் என்று பொருள்.

பார்வதிக்கு அடுத்தபடியாக சப்தரிஷிகளுக்கு யோகக்கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. யோகா என்று நான் சொன்னதும் அது உடலை வளைத்துச் செய்யும் ஆசனங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அப்படியானால் அது மூச்சுப் பயிற்சியா? இல்லை. யோகா என்பது வெறும் மூச்சுப் பயிற்சியும் அல்ல, உடற்பயிற்சியும் அல்ல. நாம் இந்த படைத்தலுக்கு மூலமாக இருக்கும் அறிவியலையும், படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் உங்களை, இறைநிலைக்கு அழைத்துச்செல்லும் முறைகளையும்தான் யோகா என்று குறிப்பிடுகிறோம். யோகா என்றால் உயிர்தன்மையின் செயல்பாடுகளை நம் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவது; படைத்தலையும் அழித்தலையும் நம் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவது என்றுகூட கூறலாம்.

ஒரு மனிதர் இப்போது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கட்டும். அவருக்கும் இறைநிலையைத் தொடும் வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் இந்த வாய்ப்பைத் தருவது தான் யோகா. இந்த வாய்ப்பை தேவர்கள் அறிந்துகொண்ட இடம் காந்த்திசரோவர் ஏரிக்கரை. உலகின் முதல் யோகா நிகழ்ச்சி நடந்த இடம் இதுதான்!