iyo_banner

சத்குரு: உண்மையில் நீங்கள் அல்லாத வேறொன்றுடன் நீங்கள் அடையாளப்படும் கணமே, மனதின் செயல்பாடு ஆரம்பித்துவிடுகிறது. அதை உங்களால் நிறுத்தமுடியாது. நீங்கள் இதை முயற்சி செய்துள்ளீர்களா? உங்களையே நீங்கள் கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்க்கையைக் கடத்திவிடுகிறீர்கள். உங்களைக் கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஒரு 24 மணி நேரங்களுக்கு மட்டும் அமர்ந்திருந்து மனதை நிறுத்துவதற்கு மிகக் கடுமையாக முயற்சி செய்யுங்கள். உங்களை அது எங்கே எடுத்துச் செல்லும் என்பதை அப்போது நீங்கள் பார்ப்பீர்கள். மூன்று நாட்களில் நீங்கள் பித்துப்பிடித்த நிலையில் இருப்பீர்கள். இது நீங்கள் மோசமான உணவைச் சாப்பிட்டதால், வயிற்றில் வாயு உருவாகும் நிலையைப் போன்றது. நீங்கள் அதைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அது பலனளிக்காது. நீங்கள் மோசமான உணவைச் சாப்பிடுவதைத்தான் நிறுத்தவேண்டும்.

நீங்கள் தவறான அடையாளங்கள் வைத்திருக்கிறீர்கள். தவறான அடையாளங்கள் வந்துவிட்டால், மனதின் செயல்பாடு நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதை உங்களால் நிறுத்தமுடியாது. அது என்னவென்றால், மனதின் செயல்பாடு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால், அது சாதாரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அது சாதாரணம் அல்ல. சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பைத்தியக்காரத்தனத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அனைவரும் அதேவிதமாக இருக்கிறார்கள், ஆகவே அது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதில் ஒரே ஒரு எண்ணம்கூட இல்லாமல் இங்கே வெறுமனே அமர்ந்திருக்கும் ஆனந்தத்தை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு இருந்தால், அந்த நான்கு, ஐந்து நாட்களும் எனக்கு ஒரே ஒரு எண்ணம்கூட எழுவதில்லை. நான் எதையும் படிப்பதில்லை அல்லது ஜன்னலுக்கு வெளியேகூடப் பார்ப்பதில்லை. ஒரே ஒரு எண்ணம்கூட இல்லாமல் நான் வெறுமனே அமர்ந்திருக்கிறேன்.

 

உதாரணமாக, நீங்கள் அதிசயமான ஒன்றைப் பார்க்கத் தொடங்கினீர்கள் என்றால், மகத்தான ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்துகொண்டிருந்தால், உங்கள் எண்ணம் சிறிது நேரத்திற்கு மறைந்துவிடுகிறது. அல்லது முக்கியம் என்று நீங்கள் கருதிய ஏதோ ஒன்றில் ஈடுபட்டால், அந்த நேரத்தில் சிறிது நேரத்திற்கு எண்ணம் மறைகிறது. அந்தக் கணங்கள் உங்கள் வாழ்வின் மிக அழகான கணங்களாக இருக்கின்றன.

உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உயிரின் மூலமானது, எண்ணப்போக்கை விடவும் மகத்தான அற்புதச் செயல்பாடு.

நீங்கள் மகத்தான ஏதோ ஒன்றுடன் தொடர்புகொண்டால், சிறிய விஷயங்கள் இயல்பாகவே மறைந்துவிடுகின்றன. உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உயிரின் மூலமானது, எண்ணப்போக்கை விடவும் மகத்தான அற்புதச் செயல்பாடு. அதனுடன் நீங்கள் ஒருபோதும் தொடர்பு கொள்ளாத காரணத்தால், இந்த எண்ணம் மிகவும் முக்கியமானதாகியுள்ளது. அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், உங்கள் எண்ணம் மிகவும் முக்கியமாக இருக்கிறது என்றால், உங்களுடைய மாறுபட்ட புரிதலில், படைப்பாளியின் படைப்பு முக்கியம் இல்லை என்பதே அதற்கான பொருள். உங்கள் சொந்த உருவாக்கமே மிகவும் முக்கியமாகிவிட்டது. உள்ளே இருக்கும் படைப்பாளிக்கோ அல்லது படைப்புக்கோ நீங்கள் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் நீங்கள் உங்கள் சொந்த படைப்பில் மும்முரமாக இருக்கிறீர்கள். ஒரு படைப்பாளிக்குச் செலுத்தக்கூடிய மிக மோசமான மரியாதை அல்லவா இது? ஒரு கண நேரத்திற்குக்கூட நீங்கள் உங்களுக்குள் இருக்கும் உயிரின் மூலத்திற்கு கவனம் செலுத்துவதில்லை. எதையும் நினைக்காமல் அல்லது எந்தச் செயலையும் செய்யாமல், உயிராக மட்டும் இருந்துகொண்டு, வெறுமனே இங்கே அமர்ந்திருப்பதன் பரவசத்தை நீங்கள் அறிந்தால், அப்போது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருப்பது

வெளி உலகத்தின் செயல்பாடு என்று வரும்போது, வெவ்வேறு மனிதர்களும் வெவ்வேறு விதங்களில் திறனுடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் உள்நிலை என்று வரும்போது, நாம் அனைவரும் சமமான திறனுடன் இருக்கிறோம். அது இன்னமும் நிகழாமல் இருப்பதற்குக் காரணம், அது கடினமானது என்பதாலோ அல்லது அடையமுடியாதது என்பதாலோ அல்லது நீங்கள் தகுதியில்லாதவர் என்பதாலோ அல்ல, நீங்கள் அதற்கு ஒருபோதும் கவனம் செலுத்தியதே இல்லை. உள்நிலை இயல்புக்கான சமமான தகுதி ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. வெளிச்சூழலின் வேலைக்கு, நீங்கள் ஒரு கட்டடம் கட்டுவதற்கோ அல்லது உணவு சமைக்கவோ அல்லது வேறு ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால் உள்தன்மையின் நிதர்சனங்கள் என்று வரும்போது, நாம் அனைவரும் சமமான திறனுடையவர்கள். அது ஒருவருக்கு நிகழ்ந்து, மற்றவருக்கு நிகழாமல் இருப்பதற்கு, அந்த ஒருவர் கவனம் செலுத்தாததே காரணம், அவ்வளவுதான்.

உங்களுக்குள் இருப்பதை, உங்களைத் தவிர வேறு யாரும் மறுக்கமுடியாது.

ஆன்மீகச் செயல்முறை மிகவும் கடினமானது என்று மக்கள் இத்தகை தீர்மானங்களுக்கு வந்திருப்பது ஏனென்றால், அவர்கள் தவறான விஷயங்களையே செய்துக் கொண்டிருக்கின்றனர். வெளியுலக விஷயங்களில், நீங்கள் சரியான விஷயத்தைச் செய்தால் தவிர அது செயல்படாது என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உள்தன்மையின் விஷயங்களிலும் அதுதான் உண்மை. ஒரு நாள், சுற்றுலாப் பயணி ஒருவர், அருகாமை கிராமத்துக்கு வந்து,” ஈஷா யோக மையம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டார்.

அந்தக் கிராமத்து இளைஞன், “அது 24,996 மைல்கள் இருக்கிறது” என்றான்.

இலேசாக அதிர்ந்துப் போனவராக, “என்ன! அவ்வளவு தூரமா?” என்று சுற்றுலா வந்தவர் கேட்டார்.

“ஆமாம், நீங்கள் சென்றுக் கொண்டிருக்கும் பாதையில் சென்றால், அவ்வளவு தூரம்தான். நீங்கள் அப்படியே திரும்பினால், அது நான்கு மைல் தூரம்தான்” என்றான் அந்த இளைஞன்.

நீங்கள் ஆன்மீகத் தன்மையுடன் இருப்பதற்கு முயற்சித்துக் கொண்டு வேறு ஒரு திசையில் தேடிக்கொண்டிருந்தால் – இப்போது இது ஒரு மிக நீண்டப் பாதையாக இருக்கிறது. இந்த நிலையில், நீங்கள் பிரபஞ்சத்தைக் கடந்து சென்று, மீண்டும் திரும்பி வரவேண்டும். நீங்கள் அப்படியே வட்டமடித்துத் திரும்பினால், அது இங்கேதான் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உங்களுக்குள் இருக்கிறது, உங்களுக்கு வெளியில் அல்ல. உங்களுக்குள் இருப்பதை, உங்களைத் தவிர வேறு யாரும் மறுக்கமுடியாது. உங்களுக்கே உரிய உள்நிலைக்குள் செல்வதை யாராவது உங்களுக்கு மறுக்கமுடியுமா? அது நிகழவில்லை என்றால், நீங்கள் அதற்குத் தேவையான விருப்பத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை.

உங்கள் மனதை விட்டு விலகி இருக்கிறீர்களா?

எண்ணத்தை அடக்குவதற்கு முயற்சிக்காதீர்கள். “உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்”, என்று உங்களிடம் அனைவரும் கூறுவது மிகப்பெரும் தவறான ஒன்று. உங்கள் மனதைக் கட்டுப்படுத்த நீங்கள் முயற்சிக்கத் தொடங்கினால், நீங்கள் முடிந்துப் போனீர்கள்! இப்போது நீங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்துக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த செயல்முறையில் இருந்தால், அது உங்களுக்கும், உடலுக்கும் இடையில் மற்றும் உங்களுக்கும், மனதுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை உருவாக்கும். நீங்கள் ஷாம்பவியில் வெறுமனே அமர்ந்திருக்கும் நிலையில் – உங்கள் உடல் இங்கே இருக்கிறது, உங்கள் மனம் சற்று விலகி இருக்கிறது மற்றும் “நான்” என்று நீங்கள் பார்ப்பது எதுவோ அது வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. இந்த வேற்றுமை எழுந்துவிட்டால், இப்போது மனதுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை.

யாரேனும் உங்களை, “உங்கள் மனத்தின் பிடியில் நீங்கள் இல்லை” என்று கூறினால், அவமதிக்கப்பட்டதாக உணராதீர்கள். உங்களுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பாராட்டு அது.

நீங்கள் மனதிலிருந்து விலகிவிட்டால், பிறகு பிரச்சனை இல்லை. யாரேனும் உங்களை, “உங்கள் மனத்தின் பிடியில் நீங்கள் இல்லை” என்று கூறினால், அவமதிக்கப்பட்டதாக உணராதீர்கள். உங்களுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பாராட்டு அது. அவர்கள், “நீங்கள் ஒரு புத்தன்” என்று உங்களிடம் கூறுகின்றனர். புத்தன் என்றால், அவர் தனது மனதை விட்டு விலகியிருக்கிறார் என்பது பொருள். மனதை விட்டு விலகியிருப்பது பைத்தியக்காரத்தனம் என்று மக்கள் எண்ணுகின்றனர். அது பைத்தியக்காரத்தனம் அல்ல. பைத்தியக்காரத்தனம் எப்போதும் மனதைச் சார்ந்திருப்பது. நீங்கள் உங்கள் மனதிற்கு வெளியில் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் நூறு சதவிகிதம் நிதான புத்தியுடையவராக இருப்பீர்கள். அது பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது. இப்போது நீங்கள், வாழ்வை அது உள்ளபடியே பார்க்கிறீர்கள்.

உங்கள் மனம் பிரதிபலிக்கும் விதத்தில் வாழ்வைப் பார்க்காமல், வாழ்வை அது உள்ளபடியே நீங்கள் பார்க்கத் தொடங்கினால், அப்போது எல்லாமே மிகவும் சிறியதுதான் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் மனம் செய்யக்கூடியவைகளும், உலகம் செய்யக்கூடியவைகளும் எந்த அளவுக்குச் சிறிய விஷயங்கள் என்றால், நீங்கள் விரும்பும் அளவுக்கு அதனுடன் உங்களால் விளையாட்டாகவே ஈடுபடமுடியும். உங்களுக்கு விளையாட விருப்பமில்லை என்றால், நீங்கள் ஈடுபடாமலே இருக்கலாம். இரண்டுமே விழிப்புணர்வாக நிகழ்கின்றன. அதற்குப் பிறகு உங்களுக்குள் நிர்ப்பந்தம் என்பது இல்லை. படைப்பின் மூலமாக இருப்பதையே நீங்கள் சாட்சியாகப் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே, உங்களுக்குள் இருக்கும் நிர்ப்பந்தங்கள் அனைத்தும் காணாமல் போகிறது. இப்போது எல்லாமே உங்களது தேர்வின்படி நிகழ்வதால், வாழ்க்கை அழகாகிறது.

என்ன நிகழ்கிறது என்ற காரணத்தால் வாழ்க்கை அழகாக மாறுவதில்லை, ஆனால் நீங்கள் தேர்வு செய்து நிகழ்த்துவதால் மட்டுமே வாழ்க்கை அழகாகிறது. எதுவும் அழகானதோ அல்லது அசிங்கமானதோ அல்ல. எந்தச் செயலையும் செய்வதற்கு நீங்கள் தேர்வு செய்து, உங்களை அதில் ஈடுபடுத்திக்கொண்டால், எல்லாமே அழகானது. அது உங்கள் மீது திணிக்கப்பட்டால் அல்லது அது கட்டாயமானது என்றால், அப்போது எல்லாமே மோசமாக இருக்கிறது. இதுவே உளவியல் செயல்பாட்டுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வு இருந்திருந்தால், அற்புதமான ஒரு கருவியாக இருக்கின்ற மனதுடன் நீங்கள் விளையாடி இருந்திருக்கக்கூடும், ஆனால் அது ஒரு நிர்ப்பந்தமாக இருக்கும் காரணத்தால், அது அழுத்தம் நிறைந்ததாக உருவாகியுள்ளது.

ஆசிரியர் குறிப்பு: தொன்மையானதும், சக்திவாய்ந்ததுமான ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்வதற்கான முதல் அடி எடுத்து வையுங்கள். ஈஷா யோகா ஆன்லைன் - கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.