கேள்வியாளர்: நான் முதன்முதலாக ஈஷா யோகா வகுப்புக்கு வந்தபோது, உங்கள் மீதும், இந்த ஒட்டுமொத்த செயல்முறையின் மீதும் தீராத ஒரு ஆர்வத்தில் உன்மத்த நிலையில் வந்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த பித்து மனப்பான்மை குறைந்துகொண்டே வருகிறது. இதை எனக்கு விளக்கமுடியமா, சத்குரு?

சத்குரு: இந்த உன்மத்த நிலையை அதே நிலையில் வைத்திருப்பதற்கு மிக அதிகமான ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. இந்த உன்மத்த நிலை உங்களைத் தொட்டிருக்கவில்லை என்றால், உயிர் – உயிரின் செயல்முறை மற்றும் உயிருக்கு மூலமாக இருப்பது எதுவோ அது – உங்களை ஏதோ வழியில் வெடித்தெழச் செய்யவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் வாழவில்லை என்பதே அதன் பொருள். நீங்கள் உயிருடன் இருந்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் வாழ்ந்திருக்கவில்லை.

நீங்கள் முதன்முதலாக ஈஷா யோகா வகுப்புக்கு வந்தபோது, நீங்கள் அதற்கு முன்பு அறிந்திருந்த எந்த ஒன்றையும்விட, வகுப்பின் செயல்முறை உங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. நான் மங்கவில்லை – நீங்கள்தான் மங்கிப்போயுள்ளீர்கள். நான் இன்னமும் அதே விதமாக வெளிப்படுத்திக்கொண்டு, அதேபோன்று இருக்கிறேன். “நான்” என்று நீங்கள் எதனைக் கருதிக்கொண்டிருக்கிறீர்களோ, அதை அகற்றுமளவுக்கு, ஆரம்பத்தில் இந்த செயல்முறை உங்களை பொங்கிப் பிரவாகிக்கச் செய்தது. “நான்” என்று நீங்கள் கருதுவது என்ன என்பதை கவனமாகப் பாருங்கள். உங்களது தனித்தன்மை என்பது உண்மையில் விருப்பு, வெறுப்புகளின் ஒரு குவியல்தான்,

ஒவ்வொரு முறை ஷாம்பவி செய்வதற்கு முன்னர், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு ஈஷா யோகா வகுப்பின் கருவிகளை உங்களுக்குள் நினைவுபடுத்திக்கொண்டு, அதை தினமும் நடைமுறைப்படுத்துங்கள். இன்றைக்கும்கூட அது வேலை செய்யும்.

உங்களது தனித்தன்மைக்கும், உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரின் தனித்தன்மைக்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உங்களது விருப்பு, வெறுப்புகள் – இதுதான் உங்களை “வித்தியாசமானவர்கள்” என்று காட்டுகிறது. “உங்களைப் போன்றவர்கள்” என்றால், நீங்கள் இருவரும் ஒரே விஷயங்களை விரும்புகிறீர்கள் என்பது பொருள். நீங்கள் ஏறக்குறைய எதையும் விரும்பாமல் இருந்தால், நீங்கள் கோபமும், கசப்புமாக இருப்பீர்கள். உங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிடுவீர்கள். உங்களைத் தவிர வேறு ஒருவரும் சரியில்லை என்று நீங்கள் நினைக்கத் தொடங்குவதுதான், மருத்துவரீதியாக மனப்பிறழ்வின் முதல் அறிகுறியாக இருக்கிறது.

ஆன்மீக செயல்முறையின் உன்மத்த நிலையையும், அற்புதத்தையும் உங்களுக்குக் கொடுத்தோம். மாறாக, மருத்துவரீதியாக சொல்லப்படும் உன்மத்த நிலையை தேர்வு செய்யாதீர்கள். மருத்துவர்கள் உங்களைப் பரிசோதிக்கும்போது, நீங்கள் 100% சகஜமாக இருக்கவேண்டும். உங்கள் கண்களை நீங்கள் மூடும்போது, நீங்கள் உன்மத்தமாக வேண்டும். அவர்கள் உங்களைப் பரிசோதித்து, உங்களை உன்மத்தன் என்று சான்றளித்தால், அது நல்லதல்ல. ஆனால் நீங்கள் விருப்பு, வெறுப்பின் செயல்முறையை மிகவும் வலிமையாக உருவாக்கும்போது, நீங்கள் சான்றிதழ் பெறுவதை நோக்கிச் செல்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இங்கே உங்களை இழுத்து வந்த இந்த உன்மத்தம்தான் வாழ்வின் அற்புதம். ஒரு மனிதர் என்ற நிலையில், உங்களால் ஒரு பறவை போலப் பறக்கமுடியாது, ஒரு புலியைப் போல் ஓடமுடியாது அல்லது ஒரு வெட்டுக்கிளியைப் போல் தாவக்கூட முடியாது – அந்த வகையில் நீங்கள் முடமாக்கப்பட்ட ஒரு படைப்பு. ஆனால் இந்த முடமாக்கப்பட்ட படைப்பு கண்களை மூடி, வாழ்வின் வேறொரு பரிமாணத்துக்குச் செல்லமுடியும். விழிப்புணர்வு இருக்கும் காரணத்தினால், உயிராக மட்டும் இல்லாமல், உயிரின் மூலமாகவே இருக்கின்ற, உயிரின் மற்றொரு பரிமாணத்துடன் நம்மால் உங்களைத் தொடமுடியும். வார்த்தை இல்லாமையினாலும், காரண அறிவின் எல்லைகளுக்கு உட்பட்டு அதை வரையறுக்க முடியாத காரணத்தாலும், இந்த நிலையை நாம் “உன்மத்த நிலை” என்று அழைக்கிறோம். முதலாவது நாளில் நீங்கள் இருந்ததைப் போல, அதே விதமாக இன்றைக்கு என்னுடன் அமர்ந்திருங்கள். இப்போதும்கூட, நான் அதேபோல இருக்கிறேன் – எதுவும் மாறிவிடவில்லை.

யார் ஒருவர் நாசிகளை சுத்தமாக வைத்திருக்கின்றாரோ அவரால்தான் சுலபமாக சுவாசிக்க முடியும். காற்று சிறுத்துப் போகவில்லை. உங்கள் நாசியில்
அடைத்துள்ளதை நீங்கள் வெளியேற்ற வேண்டும், அவ்வளவுதான் தேவை. நீங்கள் முதல் நாள் நிகழ்ச்சிக்கு வந்தபோது எப்படி திகைத்தீர்களோ, அப்படி திகைத்துப் போவீர்கள். உடனடியாக அனைத்தும் பிரகாசிக்கும். அந்த பிரகாசம் வெளியில் இருந்து இல்லை. உங்கள் நாசியை சிந்தி சுத்தப்படுத்தும் விருப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்த இங்கு ஒருவர் இருக்கிறார். நீங்கள் அதை செய்தீர்கள். அன்று நான் உங்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர சொன்னால், நீங்கள் அதை செய்தீர்கள். ஆனால் இன்று நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்

நீங்கள், ஒரு விஷயத்தைச் செய்தால், மற்றொன்றைச் செய்வது கிடையாது. அதனால் சாதனா மறைந்துவிட்டிருக்கிறது. சாதனாவைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், அது நீங்கள் உருவாக்கக்கூடிய ஒரு சாதனம் அல்ல – அது நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனமாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் இதைப்போன்ற பல சாதனங்கள் இருக்கின்றன. நீங்கள் நிச்சயமாக உங்களுக்கென்று ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது. உங்களால் முடியுமா? நான் உங்களுக்கு 10 வருட அவகாசம் கொடுத்தாலும், நேரம் காட்டும் ஒரு கைக்கடிகாரத்தை உங்களால் கட்டமைக்க முடியாது. ஆனால் அனேகமாக, 10 நிமிடங்களில், ஒரு கைக்கடிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று நீங்கள் கற்றுக்கொள்ள முடியும், அது எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் இது பொருந்துகிறது. உங்களுக்குரிய மூக்குக் கண்ணாடியை உங்களால் உருவாக்க முடியுமா? அப்படி நீங்கள் உருவாக்கினால், ஒட்டுமொத்த உலகமும் மாறுபாடாகத் தோன்றும்.

நாங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில், எப்போதும் ஈஷா யோகா வகுப்பின் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டுதான், சாதனா வருகிறது. நாம் ஒருபோதும் ஷாம்பவியை அல்லது ஷூன்ய தியானத்தை தனியாகக் கற்றுக்கொடுப்பதில்லை. ஷாம்பவியைக் கற்றுக்கொடுப்பதற்கு, நாங்கள் உங்களுடன் ஏழு நாட்கள் செலவழிக்கிறோம். ஷூன்ய தியானத்தை கற்றுக்கொடுப்பதற்கு, நாங்கள் உங்களுடன் நான்கு நாட்கள் செலவழிக்கிறோம். ஆனால், இப்போது நீங்கள் ஒரு “மூத்த” தியான அன்பராகியுள்ள காரணத்தால், இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறீர்கள். இந்த அடித்தளம் இல்லாமல், உங்களது மனதிலிருந்து புகைக்கரி படிமத்தை அகற்றாமல், இந்த செயல்முறையானது, முதலில் செயல்பட்ட அதே விதத்தில் வேலை செய்திருக்காது.

இப்போது மண்ணின் தரத்தை நீங்கள் பராமரித்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சவேண்டும்.

இப்போது மீண்டும் ஒருமுறை, உங்கள் எண்ண ஓட்டம் மற்றும் உணர்ச்சிகள் மூலம் உங்களையே நீங்கள் வரையறுத்துக்கொண்டுள்ளீர்கள். ஆகவே, ஒவ்வொரு முறை ஷாம்பவி செய்வதற்கு முன்னர், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு ஈஷா யோகா வகுப்பின் கருவிகளை உங்களுக்குள் நினைவுபடுத்திக்கொண்டு, அதை தினமும் நடைமுறைப்படுத்துங்கள். இன்றைக்கும்கூட அது வேலை செய்யும். அல்லது மற்றொரு தேர்வு என்னவென்றால், அது அவ்வளவு அற்புதமாக இருந்தால், அந்த நாளில் என்னுடன் நீங்கள் எப்படி அமர்ந்திருந்தீர்கள் என்பது நிச்சயம் உங்களுக்கு நினைவிருக்கும். அதேபோன்று இப்போதும் என்னுடன் அமர்ந்திருங்கள். அடுத்த 10 நிமிடங்களில், இன்றைக்கும்கூட, பெயரற்ற பரவசங்களுடன் உங்களை சிலிர்ப்புக்குள் ஆழ்த்துவேன், ஏனென்றால் அடிப்படைகள் மாற்றப்படவில்லை.

உங்களது மனம், அதிகப்படியான கருத்துக்கள், அதிகப்படியான என்ணங்கள், அதிகப்படியான விருப்பு, வெறுப்புகளால் நிரம்பி வழிகின்றது. அடிப்படையில், ஈஷா யோகாவில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்னவென்றால், எதைக் குறித்த கருத்துகளும் இல்லாமல், பாரபட்சமில்லாமல் இங்கே அமர்ந்திருப்பது – வாழ்வை உள்ளது உள்ளபடியே முழு விருப்பத்துடன் பார்ப்பது. முட்டாள்தனமான வேறு ஏதோ ஒன்றாக இருப்பதாக உங்களையே நம்பச் செய்வதற்கு முயற்சிக்காமல், ஒரு உயிர்த்துகளாக மட்டும் இருப்பதற்குத்தான் ஈஷா யோகாவின் ஒட்டுமொத்த செயல்முறையும் வழி நடத்துகிறது. இங்கே நீங்கள் ஒரு சிறு உயிராக அமர்ந்தால், இன்றைக்கும்கூட அந்த உன்மத்த நிலையை உணர்வீர்கள்.

iyo-blog-banner

 

இருந்தாலும், நீங்கள் அசைக்கமுடியாத, முழுமையான ஒரு ஆண் அல்லது பெண்ணாக, அமெரிக்கர் அல்லது இந்தியராக இங்கே அமர்ந்தால், என்னால் உங்களுடன் எதையும் செய்யமுடியாது. அவ்வாறு நீங்கள் இருக்கும்பட்சத்தில், உங்களுடன் எதையும் செய்வதற்கு நான் விரும்புவதில்லை, ஏனென்றால் அது காலவிரயம்தான். வரையறைக்கு உட்பட்ட அடையாளங்களுடன் நீங்கள் சிக்கிப்போய்விட்டால், ஆன்மீக செயல்முறையுடன் தொடர்புடைய எதையும் உங்களுடன் நிகழ்த்துவதற்கில்லை. உங்களுக்குள்ளேயே வித்தியாசமான ஒரு பரிமாணத்துடன், உங்களை வெடித்தெழச் செய்வதற்கு நம்மால் இயலாது. உளவியல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும், சக்தி நிலையிலும், நீங்கள் எல்லைகளை அழித்துள்ளீர்கள் என்றால்தான், உங்களை வெடித்தெழச் செய்வது சாத்தியம். இதைத்தான் ஈஷா யோகா செயல்முறை உங்களுக்கு நிகழ்த்தியது. அந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் நீங்கள் தலைகீழாக்கியிருந்தால், மீண்டும் ஈஷா யோகா வகுப்பு செய்யவேண்டிய நேரம் இது. ஆரம்பத்தில் உணர்தலின் வெடிப்பை அனுபவித்து, பிறகு மெல்லமெல்ல அது தேய்ந்து விலகியதாக உணர்பவர்கள், அது உங்களுக்குள் நிகழ்ந்த இடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். ஈஷா யோகா வகுப்புக்கு திரும்பவும் செல்லுங்கள். வெறுமனே அங்கு சென்று பின்னால் அமராமல், மறுபடியும் வகுப்புக்கு பதிவு செய்துகொள்ளுங்கள். அதுதான் முதல்முறை என்பதைப்போல், வகுப்பை உள்வாங்குங்கள்.

இன்றைக்கும்கூட, ஒரு ஈஷா யோகா வகுப்புக்குச் சென்று நான் உட்கார்ந்தால், எனக்குள் நானே வெடித்துக் கிளம்புகிறேன். இதனை உணர்வதற்கு நான் அங்கு உட்காரவேண்டும் என்பது கிடையாது, ஆனால் அப்படி இருந்தாலும் – நான் ஒரு ஆயிரம் வகுப்புகள் அல்லது அதற்கும் கூடுதலாக எடுத்திருக்கலாம் – சில விஷயங்களை நான் உச்சரிக்கும் கணத்திலேயே – ஆங்கில மொழியில்தான், வேறு எந்த மந்திரமும் உச்சரிக்கவில்லை – எனக்குள் இருக்கும் அனைத்தும் சிறகு விரித்துவிடும். முழுமையான திறந்த தன்மையுடன் நீங்கள் உட்கார்ந்தால் உங்களுக்கும்கூட அப்படித்தான் இருக்கவேண்டும். திறந்த தன்மையில் எப்படி இருப்பது என்று சிந்திக்கவேண்டாம் – உங்கள் பயிற்சியைத் தொடங்குவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு, தினமும் ஈஷா யோகா கருவிகளை மட்டும் துரிதகதியில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சாதனா வளர்ச்சியடைவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அதைக் கொன்றாலே தவிர, சாதனா என்பது வளர்ச்சியடையும் ஒரு கருவியாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஷாம்பவி மஹாமுத்ராவை நீங்கள் எட்டிலிருந்து பத்து வருடங்கள் பயிற்சி செய்திருந்தால், இத்தனை காலத்திற்குள் அது ஒரு வெடிகுண்டாக இருக்கவேண்டும் – உங்களை மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றியிருக்கும் எவரையும் வெடிக்கச் செய்ய வேண்டும். அது வளர்ச்சியடைவதற்கு நீங்கள் அனுமதித்திருந்தால், உங்களைச் சுற்றியிருக்கும் சூழல் பொறி பறப்பதாக இருக்கவேண்டும். அதைக் கொல்வதற்கான வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்றால், அது உண்மையில் இறக்காது, ஆனால் இறப்பதாக அது பாவனை செய்கிறது.

மண்ணைத் தயார் செய்யவில்லை என்றால், வீரியமான விதைகூட வளராது. நாம் மண்ணைத் தயார் செய்து, விதை ஊன்றினோம், அது வெடித்துக் கிளம்பியது. இப்போது மண்ணின் தரத்தை நீங்கள் பராமரித்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சவேண்டும்.

நீங்கள் ஒருமுறை தீட்சை நாளன்று அதை செய்தால் மட்டும், அது வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது அந்த மாதிரி வேலை செய்வதில்லை. ஆனால் நீங்கள் அதை முற்றிலுமாகக் கொன்றுவிட முடியாது. உங்களையே முழு விருப்பத்துடன் நீங்கள் உருவாக்கிக்கொண்டால், அது இப்போதே வேலை செய்யும். நாளை காலையில் நீங்கள் ஷாம்பவி செய்யும் வரைகூட நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களை தயார்ப்படுத்திக்கொண்டு, ஈஷா யோகா வகுப்பின் கருவிகளை உங்களுக்கே நினைவுபடுத்திக்கொள்வதனால், இப்போதே நீங்கள் உங்களை உயிரூட்டிக்கொள்ள முடியும். உடனடியாக, உங்களுக்குள் எல்லாம் நிகழத் தொடங்கும்.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா ஹட யோகா பள்ளியின், 21- வார ஹட யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சத்குருவின் உரையிலிருந்து எடுக்கப்பட்டது. யோக முறையின் ஆழமான புரிதலையும், ஹட யோகா கற்றுத் தருவதற்கான திறனையும் பெறுவதற்கான இணையற்ற ஒரு வாய்ப்பை இந்த வகுப்பு வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, visit www.ishahathayoga.com or mail info@ishahatayoga.com