Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குளிர்கால கதிர்த்திருப்பத்துக்கும், மகர சங்கராந்திக்கும் அடுத்ததாக வரும் முதல் பௌர்ணமி நாள் தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் தென்பகுதியில், இது “தன்ய பௌர்ணமி” - அதாவது, நிறைவடைதலின் பௌர்ணமி என்று அறியப்படுகிறது. சூரியனோடு தொடர்புடைய பூமியின் நிலைப்பாட்டின் காரணமாக, பல விதங்களிலும் அது வருடத்தின் மிகவும் சக்தி நிறைந்த பௌர்ணமியாகக் கருதப்படுகிறது. இயன்ற அளவுக்கு சிறப்பாக வாழ்க்கையை மேம்படுத்த விரும்புபவர்கள், இந்த நேரத்தில் அதிகபட்ச பலனை அடைவார்கள். பன்னெடுங்காலமாக, பொருள் உலகிலும், உணர்ச்சி நிலையிலும், ஆன்மீக நிலையிலும் வெற்றிபெறும் அவர்களது கருவிகளை கூர்தீட்டுவதற்கான ஒரு நாளாக, தைப்பூசத்தை கண்டறிந்துள்ளனர்.

ஸ்கந்தனின் கதை

புராணத்தின்படி, முருகன், குமரன், கார்த்திகேயன் மற்றும் சுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் ஸ்கந்தனிடம், பார்வதி தைப்பூச நாளில்தான் வேல் கொடுத்தார். இந்த ஆயுதத்துடன் துணைக்கண்டம் முழுக்க அவர் போரிட்டு, உலகமே கண்டிராத மாபெரும் போர் வீரனாகப் புகழ் பெற்றார். இப்போதைய பாரதத்தின் எல்லைகளையும் கடந்து, அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் அனைத்து ஆட்சியாளர்களையும் விஞ்சிய ஒரு பேரரசராக இருந்தார், ஆனால் அவர் எந்த இராஜ்ஜியத்தையும் கைப்பற்றவில்லை. அநீதியை அழிப்பதற்கு உறுதி எடுத்திருந்த காரணத்தால், அவர் போர் புரிவதை மட்டும் நிறைவேற்றினார். 
இந்தக் கலாச்சாரத்தில், பொருள்ரீதியான விஷயங்களையோ, அவன் அடைந்த வெற்றிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவனது நோக்கம் முழுமை பெறாமல் போனதையோ கருதாமல், அவன் தன்னையுணர்ந்த பேருண்மையை, ஒரு மகத்தான வெற்றியாக நாம் கருதுகிறோம்.

அந்த இளைஞன் கோபமாக இருந்தான், ஆசிர்வதிக்கப்பட்ட, அளப்பரிய திறமைகளுடன் இருக்கும் ஒருவர் கோபமடையும்போது, அப்படிப்பட்ட விஷயங்கள் நிகழக்கூடும்.  எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுவதாக அவன் கருதினானோ, அங்கு அவன் கொல்லத் தொடங்கினான். பெரும்பாலான அவனது இளமைப்பருவத்தை கொல்வதிலேயே செலவழித்தான். துணைக்கண்டம் எங்கும் மற்றும் சற்று அதைக் கடந்தும் அவன் அநீதியாளர்களைக் கொன்று குவித்தான். அதன்பிறகே, நீதியும், அநீதியும் எப்போதும் முழுமையானதல்ல என்பதை உணர்ந்தான். பெரும்பாலான நேரங்களில், அது தனிப்பட்ட கண்ணோட்டம் குறித்த கேள்வியாகவே உள்ளது.

ஆழமாக உள்ளே நிலைகொண்டிருந்த சீற்றமே, நீதியை நிலைநாட்டும் போர்வையில் பழிதீர்த்துக்கொண்டது என்பதை ஸ்கந்தன் உணர்ந்தான். நீங்கள் நீதி வழங்குவதாக நினைத்துக்கொண்டு யாரோ ஒருவரைப் பின்தொடரும்போது, அவர்கள் அதைப் பழிதீர்ப்பதாகவே உணர்கின்றனர். வரலாற்றில் ஒருபோதும் மனிதர்கள் முழுமையான நீதியை சாதித்ததில்லை. அது பெரும்பான்மையான நல்லது அல்லது பெரும்பான்மையான தீயதைக் குறித்ததாக மட்டும்தான் இருக்கமுடியும். பெரும்பாலானவர்களுக்கு நன்மையாக இருப்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தால் அநீதியாகப் புரிந்து, உணரப்படலாம்.

குடும்பத்துக்குள்ளேயும்கூட, எப்போதும் யாராவது ஒருவர் அவருக்கு அநீதி இழைக்கப்படுவதாக உணர்கிறார். முழுமையான நீதி என்பது இல்லை.

தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்?

தைப்பூசம், Thaipusam in Tamil, பாதயாத்திரை

அது ஸ்கந்தனின் கதை. புராணங்களின் கூற்றுப்படி, ஸ்கந்தனுக்கு தைப்பூசத்தன்று அவனது ஆயுதம் கிடைத்ததால், அவன் வெற்றிகரமாக இருந்தான். இறுதியில், அவனது நோக்கம் சரியல்ல என்ற உணர்தலை அவன் அடைந்தான். அவன் தன் நோக்கத்தில் தோல்வியடைந்ததால்... உலகின் மற்ற எந்த நிலப்பகுதியாக இருந்திருந்தாலும் அவன் தோல்வியடைந்த ஒருவனாகத்தான் கருதப்பட்டிருப்பான். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், பொருள்ரீதியான விஷயங்களையோ, அவன் அடைந்த வெற்றிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவனது நோக்கம் முழுமை பெறாமல் போனதையோ கருதாமல், அவன் தன்னையுணர்ந்த பேருண்மையை, ஒரு மகத்தான வெற்றியாக நாம் கருதுகிறோம். தென்னிந்தியா முழுவதும் அவனது தந்தை சிவனைவிட, இவனை அதிகமாக வழிபடுகின்றனர்.

வெற்றியடைதல் குறித்த நமது கருத்து, கைப்பற்றுவது அல்ல. வெற்றி குறித்த நமது கருத்து என்னவென்றால், விரிவடைந்து நம்மை நாமே கரைத்துக்கொள்வது. இது பக்தி விளைந்த மண். பக்தியின் இலக்கு கரைந்துபோவது. கரைதலுக்கான ஒரு வழியாக நாம் வேறு ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் பக்தியின் அடிப்படையான நோக்கம் கரைந்துபோவது. ஒரு புனிதயாத்திரையைத் தொடங்குவதற்கு, தைப்பூசம் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இயன்றவரை ஒவ்வொரு வழியிலும் நம்மை நாமே குறைத்துக்கொள்வதற்கு புனித யாத்திரை, ஒரு செயல்முறையாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் பழனிமலை மீதும், மற்றும் பல இடங்களிலும் இருக்கும் முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பாதயாத்திரை செல்லும் மக்களைக்கொண்ட, துடிப்பான புனிதயாத்திரைக் கலாச்சாரம் இன்னமும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

லிங்கபைரவி எப்படி உங்களுக்கு வல்லமையளிக்க முடியும்?

லிங்கபைரவி, தைப்பூசம், Thaipusam in Tamil

மனிதகுல வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக, இந்த நிலமும், கலாச்சாரமும் செழிப்புடனும், மகத்தான வெற்றியுடனும் இருந்துள்ளது. இதற்குக் காரணம், தனிமனித மேதைமையின் வெளிப்பாடுதானே தவிர, அதன் ஒருங்கிணைப்புத் திறமைகளின் அடிப்படையில் அல்ல. நாம் மகத்தான மனிதர்களை உருவாக்கியுள்ளோம்; கடவுள்களே பொறாமைகொள்ளும் விதமான மனிதர்கள் அவர்கள். லிங்கபைரவி தேவியாக நாம் குறிக்கும் சக்தி உருவாக்கமானது இன்றைக்கு, பலவாறான மனிதத் திறன்களையும் முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் பயன்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கிறது.

உங்களது புரிந்துணர்தலை குறிப்பிட்ட வழிகளில் நீங்கள் திறந்த தன்மையில் வைத்திருந்தால்தான், எந்தவொரு மனிதரும் எப்போதும் அறிந்திருக்கும் அனைத்தையும் நீங்கள் பெறமுடியும். வாழ்வின் பல அம்சங்களும் வெவ்வேறு மக்களிடத்தில், அறிதலின் சிறு பகுதிகளாக மூலதனம் செய்யப்பட்டிருந்தது. அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு மனிதரிடத்தில் வந்தால், அப்போது சுற்றிலும் நிகழ்பவை நம்புதற்கரியதாகவும், அற்புதமாகவும் இருக்கும். அதுதான் தேவியின் வல்லமை. இந்த வல்லமையைப் பெறுவதற்கு அதிநுட்பமான, அதிநவீன வழிமுறைகளை நாம் உருவாக்கமுடியும். இதற்கு அளவற்ற மனக்குவிப்பும், சக்திநிலையிலான திறன்களும் தேவைப்படும். ஆனால் தற்போது அதற்கான மிகச் சிறந்த வழி, தீவிர பக்தி ஒன்றுதான்.

பக்தி என்பதெல்லாம் எதைக் குறித்தது?

பக்தி, Devotion

பக்தியின் இலக்கு கரைதல். நீங்கள் உடலைக் கரைப்பதற்காகத் திட்டமிடவில்லை. தற்போது நீங்கள் என்று கருதும் அனைத்தையும், விருப்புகள் மற்றும் விருப்பமின்மைகள், வெறுப்புகள் மற்றும் நேசங்கள், ஆச்சரியங்கள் மற்றும் அருவெறுப்புகள் என்று எல்லாவற்றையும் கரைப்பது. உங்களுடைய இயல்பு, தன்மை, குணம் என்று நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் அனைத்தையும் நீங்கள் கரைத்தால், மற்றும் வாழ்வின் இருப்பை நீங்கள் நினைக்கும் விதத்தில் பார்க்காமல், வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படியே நீங்கள் பார்த்து, உணர்ந்து, அனுபவித்தால், அப்போது நீங்கள் அருளுக்குப் பாத்திரமாக இருப்பீர்கள். இந்த அருள் உங்களுக்கு வாய்த்துவிட்டால், நீங்கள் ஒரு சூப்பர் மனிதர், அதிபராக்கிரமசாலி என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு நீங்கள் வாழ்வீர்கள். ஆனால் இவையெல்லாம் சூப்பர் மனிதராக இருப்பது குறித்த விஷயமல்ல. மனிதராக இருப்பது சூப்பரானது என்று உணர்ந்துகொள்வதைக் குறித்தது.

இந்தக் கலாச்சாரத்தில், சூப்பர் மனிதர் என்பது இல்லை. கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களும், மனிதர்கள் கடவுளைப்போல ஆவதற்கு, உயர்வடைவதைக் குறித்தே இருக்கின்றன. நீங்கள் வழிபடுவது கிருஷ்ணன், ராமன், சிவன் அல்லது முருகன் என்று யாராக இருப்பினும், அவர்கள் அனைவரும் இந்த நிலத்தில் உயிர் வாழ்ந்து, வாழ்க்கையின் எல்லா வலிகள் மற்றும் போராட்டங்களையும் அனுபவித்தனர். ஆனால் இன்றைக்கு, நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கடவுளைப்போல் இருக்கின்றனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் சொர்க்கத்திலிருந்து இறங்கவில்லை. அந்த மாதிரி உயர்வடைய, நீங்கள் விரும்புவதற்கான ஒரு ஊக்கசக்தியாக அவர்கள் இருப்பது மிகவும் முக்கியமானது.

வாழ்க்கைக்கும், அதைக் கடந்து இருப்பதற்கும் எப்படித் தகுந்தவராக இருப்பது?

தேவி வித்தியாசமானவள் – நாம் அவளை உருவாக்கினோம், ஏனென்றால் கடவுளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாம் புரிந்துகொண்டோம் – அதனை வெறுமனே ஒரு உணர்ச்சிரீதியான கருவியாக மட்டும் இல்லாமல், பிரமிக்கத்தக்க ஒரு சக்தி உருவாக்கமாக வெளிப்படுத்தினோம். தேவி உங்களுக்கு அற்பமான அதிசயங்களைச் செய்யமாட்டாள். இன்றைக்கு நீங்கள் மரணமடைய வேண்டும் என்றாலும், நீங்கள் விருப்பத்துடன் செல்லும் விதத்தில், அவள் உங்களை உயிர்த்தன்மையுடன் தளும்பச் செய்வாள். அதற்காக நீங்கள் இறப்பதற்கு விரும்புகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது, உங்கள் உடலமைப்பை நீங்கள் நன்றாக வைத்திருப்பதால்தானே தவிர, நீங்கள் வாழவேண்டும் என்று விரும்புவதால் அல்ல. உங்களுக்கு வெற்றி தருவது உங்களது தகுநிலைதானே தவிர, உங்கள் ஆசையினால் அல்ல. தேவி உயிர்த்தன்மையுடன் உச்சபட்ச ஒத்திசைவுடன் இருக்கிறாள். உங்கள் விருப்பங்கள் என்ன என்பதில் அவள் அக்கறை காட்டுவதில்லை. இந்த வாழ்வுக்கும், அதைக் கடந்திருப்பதற்கும் உங்களை எப்படித் தகுதியான நபராக்குவது என்பதைத்தான் தேவி பார்க்கிறாள், அதுவே முக்கியமானது.