சத்குரு: இந்த கைலாயப் பர்வதத்திற்கு நான்கு முகங்கள் இருக்கிறமாதிரி இயற்கையாகவே உள்ளது. சாமானியமாக மக்கள் நடந்து போனார்கள் என்றால், அவர்களுக்கு மேற்கு முகம் மற்றும் வடக்கு முகம்தான் அதிகமாகத் தெரிகிறது. தென்முகம் அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது, ஏனென்றால் அங்கே போகவேண்டும் என்றால், வழி கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம், இந்த கடைசி ஒரு வருடத்தில் எல்லாம் சாலையாக ஆக்கிவிட்டார்கள். இப்போதெல்லாம் அங்கேயும் எல்லோரும் போய்விடுவார்கள்.

இவனுக்கு சக்தி இருக்கிறது; திறமை இருக்கிறது; புத்தி இருக்கிறது. ஆனால் அகங்காரம். அது ஒன்று இல்லையென்றால் இவனும் பிரமாதமான மனிதனாக வளர்ந்திருப்பான். ஆனால் பிரச்சனையாக ஆகிவிட்டான்.

கைலாயத்தின் தென்முகத்தின் சிறப்பு

என்னுடைய உணர்வில் இந்த தென்முகம் மிகவும் அழகான முகம். ஏனென்றால் நமக்கு தெற்கு என்றால் பாகுபாடு (பாரபட்சம்) இருக்கிறது. எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் தென்முகம்….

ஏனென்றால் நமக்கு தெற்கு என்றால் பாரபட்சம் இருக்கிறது. நமக்கு தெற்கு என்றால் கொஞ்சம் அப்படித்தான். இந்தத் தென்முகத்தில் கடைசியில் அகஸ்திய முனி போய் சேர்ந்துவிட்டார் என்ற ஒரு தன்மையும் இருக்கிறது. இந்த தென்முகத்தில், மற்ற முகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் அதிகமான பனி சேர்ந்திருக்கிறது. நடுவில் ஆழமான ஒரு கோடுமாதிரி இருக்கிறது. அதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்த இராவணன் போய் ஏதோ பண்ணினான் என்ற கதையெல்லாம் கேட்டிருக்கிறீர்களா? அதில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் சம்பந்தப்பட்ட பலவிதமான கதைகள் தென்முகத்துடன் தொடர்புடையது.

இராவணனின் நற்குணமும், தீய குணமும்

இராவணன் மிகவும் சக்திசாலியான ஒரு ராஜன். அதுமட்டுமல்ல, அவன் ஒரு மகத்தான சிவபக்தனும் கூட. அவன் பக்தன்தான், பக்தி இருக்கிறது, ஆனால் மிகவும் அகங்காரம். பக்தியும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது, திறமை இருக்கிறது, புத்தி இருக்கிறது, ஆனால் அகங்காரம்! இந்த அகங்காரத்தினால் அந்த புத்தி எப்படியோ வேலை பண்ணுகிறது; அந்த சக்தி எப்படியோ வேலை பண்ணுகிறது; அந்த பக்திகூட தவறாக வேலை பண்ணுகிறது.

இப்படி கைலாயப் பர்வதத்திற்கு சென்றான் இராவணன். அவன் அங்கேபோய் கவிதை எழுதுவான், பாடுவான். கவிதை எழுதுவது என்றால், பேனா-பேப்பர் வைத்தல்ல; அப்படியே வாய்மொழியாக கவிதை பாடுவான். அங்கே போய் அவன் பக்தியினால் சிவனைக் கும்பிட்டு ஒரே கவிதையாகப் பாடினான். 1008 கவிதைகளை அப்படியே அங்கே உருவாக்கினானாம். எழுதி வைத்த கவிதைகளல்ல, அங்கேயே உருவாக்கி அப்படியே பாடுகிறான். இந்த பக்தியையும் இந்த திறமையையும் பார்த்த சிவன், "ஓ… நன்றாக இருக்கிறாயே, என்ன வேண்டும் கேளுப்பா!" என்று சொன்னான். ஆனால் இவன் எந்த மாதிரி ஆள்? என்ன வேண்டும் என்று கேள் என்றால்…

இவன் பார்வதியைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தான். அவ்வளவு அழகாக இருக்கிறாள், அப்படி இப்படியென்று.

"உன் மனைவி வேண்டும்" என்று கேட்கிறான். இப்படி இருக்கிறான் அவன்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவா ஒருமாதிரி நிலையில் இருக்கிறான். இந்த கவிதையை எல்லாம் கேட்டுவிட்டு, அவனுக்கு போதை வந்துவிட்டது. "சரி கூட்டிக்கொண்டு போ!" என்று சொன்னான்.

தவளையிலிருந்து மண்டோதரியை உருவாக்கிய பார்வதி

இராவணன் அதுவே போதும் என்று பார்வதியைத் தேடப் போகிறான். பார்வதி அங்கே மானசரோவருக்குப் பக்கத்தில், தேவிகுண்டம் என்று ஒன்று இருக்கிறது. அதில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த தகவல் வந்துவிட்டது. இப்படி இராவணன் கேட்டான், ஏதோ போதையில் இருந்த சிவா சரி என்று சொல்லிவிட்டான் என்று.

"இந்த முட்டாள் இங்கே வந்து இன்னும் என்ன பண்ணப்போகிறானோ?" என்று சொல்லி, அவள் என்ன செய்தாள் என்றால், ஒரு தவளையைப் பிடித்தாள்; அந்த குளத்தில் ஒரு தவளை இருந்தது, அதைப்பிடித்து அந்த தவளையை ஒரு அழகான பெண்ணாக உருவாக்கி, அடுத்த குண்டத்தில் விட்டுவிட்டாள். இராவணன் வந்தான்; இந்த காமப் பைத்தியம் பிடித்துள்ள ஆள், அவன் இவளைப் பார்த்துவிட்டு பார்வதி என்று நினைத்துவிட்டான். அவளைக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணி, அவளை ராணியாக ஆக்கிவிட்டான். அவள்தான் மண்டோதரி. மண்டோதரி என்றால் தவளை. அவனுக்கு இந்தப் பிரச்சனை முன்னமே வந்துவிட்டது. ராமாயணம் எல்லாம் நடந்துவிட்டதே அவன் பெயரில்? இதே பிரச்சனை தான்!

அதற்குப் பிறகு வீட்டிற்கு போய் கல்யாணம் பண்ணி, அவள்கூட இருந்து, அதற்குப் பிறகு புரிந்துவிட்டது, “நான் ஏமாந்து போய்விட்டேன். வீட்டிற்கு தவளையைப் பிடித்து வந்துவிட்டேன்” என்று.

டோலினால் உண்டான கோடு

மீண்டும் சில வருடங்களுக்கு பின் திரும்பவும் போனான். திரும்பிப் போய் பாடினான், பாடினான், பாடினான், இப்படியே பாடுகிறபோது, டோல் அடித்து பாடல்களாகப் பாடியபோது, திரும்பவும் சிவனுக்கு அப்படியே போதை பிடித்துவிட்டது. அந்த இசையை கேட்டுக் கேட்டு அவனுக்கு பிடித்துவிட்டது போதை! ஆனால் பார்வதி முழித்தபடி அப்படியே இருக்கிறாள்.

இந்தக் கதையை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்தால் அவன் எப்படி நடந்து கொள்கிறான்? அதனால் என்ன ஒரு பிரதிபலன் வரப்போகிறது என்பதை ஒரு கதை மூலமாக சொல்கிறார்கள்.

இவ்வாறு ஏறி வருகிறான், கைலாயப் பர்வதத்தை அப்படியே ஏறி வருகிறான். அப்போது பார்வதி சொன்னாள், “திரும்பவும் ஏறி வருகிறான் அவன். நீ சும்மா தலையாட்டியபடி உட்கார்ந்தால், என்ன பண்ணுவது?” என்றாள்.

அப்போது சிவா “அப்படியா?” என்று சொல்லி, இப்படி (சைகை) பண்ணிவிட்டான். தன் காலினால் இப்படித் தள்ளிவிட்டான். அப்படியே அங்கேயிருந்து சரிந்து கீழே வந்துவிட்டான் இராவணன். இந்த டோலினால் அந்த கோடு ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். இது எல்லாம் என்னவென்றால், இந்தக் கதையை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்தால் அவன் எப்படி நடந்து கொள்கிறான்? அதனால் என்ன ஒரு பிரதிபலன் வரப்போகிறது என்பதை ஒரு கதை மூலமாக சொல்கிறார்கள்.

இப்படி அதையும் இதையும் செய்து முயற்சி பண்ணினான். இப்போது பார்வதி சிவன் பக்கத்திலேயே உட்கார்ந்து கவனித்து, இராவணன் என்ன பண்ணினாலும், அடுத்து என்ன பண்ணவேண்டும் என்று சிவனிடம் சொல்கிறாள். அவன் அப்படியே பண்ணிவிடுவான். அதற்குப் பிறகு இராவணன் அந்த ஆசையை விட்டுவிட்டான்.

இராவணனுக்கு கிடைத்த சக்திவாய்ந்த லிங்கம்

இப்போது சிவனை மிகவும் வேண்டிக்கேட்டு, “எனக்கு ஒரு ஆத்மலிங்கம் கொடுங்கள்” என்றான். சிவா, “சரி” என்று சொல்லி, ஆத்மலிங்கம் கொடுத்துவிட்டான்.

எல்லோருக்கும், மற்ற ராஜாக்களுக்கும், தேவ தேவர்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. இவன் கையில் ஆத்மலிங்கம் வந்தால், மிகவும் சக்திசாலி ஆகிவிடுவான். இவ்வளவு சக்திசாலியாகிவிட்டான் என்றால், இந்த மாதிரி அகங்காரம் வைத்து, யாரையும் இவன் வாழ விடமாட்டான். எப்படியாவது அவன் கையிலிருந்து அதனை எடுத்துவிட வேண்டும். ஆனால் சிவன் கொடுத்துவிட்டான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதற்கு பையன்கள் இருக்கிறார்கள். அப்பாவால் எதையோ வாங்க முடியவில்லை என்றால் பையன்களிடம் போவதுதானே?

அதற்குப் பிறகு எல்லோரும் ஏதோ திட்டம் தீட்டினார்கள். இவன் ஆத்மலிங்கத்தை ஒரு தட்டில் வைத்து, அதற்குமேல் ஒரு தலைப்பாகை எல்லாம் போட்டு, அதனை மிகவும் பக்தியாக அப்படியே எடுத்து வருகிறான். அதனைக் கீழே வைக்கக்கூடாது. இப்படியே கையில் வைத்துக்கொண்டே வந்தான். அங்கிருந்து அப்படியே நடந்தபடியே வந்தான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வாயில் போட்டுக்கொள்ளாமல், சாப்பாடு இல்லாமல், அப்படியே நடந்து வந்தான். கர்நாடகத்தில் அந்த கடலோரமாக அப்படியே நடந்து வருகிறான். நடுவில் வந்தால் ஏதோ ஆகிவிடலாம் என்று! கடலோரமாகவே அப்படியே வந்தால் இலங்கை போய்விடலாமே!

ஆத்மலிங்கத்தைக் கைப்பற்ற கணபதியின் திட்டம்

கணபதி, Ganapathi, Ganesha
அங்கிருந்து வந்தான்; அவ்வளவு தூரம் நடந்து வந்தான். அந்த தட்டை கீழே வைக்கக்கூடாது; ஆத்மலிங்கத்தை கீழே வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அவசரம் வந்துவிட்டது. உடல்தானே, என்ன செய்வது? அப்படி இப்படிப் பார்த்தான். அங்கே மாடு மேய்க்கிற ஒரு பையன் இருந்தான். கொஞ்சம் இளிச்சவாயன்போல் இருந்தான். இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மிகவும் புத்திசாலியாக யாரோ இருக்கிறார் என்றால், அவன் கையில் கொடுத்தால் அவன் என்ன பண்ணிவிடுவானோ, எடுத்துக்கொண்டு ஓடிவிடுவானோ என்னவோ? இந்தப் பையனை பார்த்தால், கொஞ்சம் இளிச்சவாயன் மாதிரி இருந்தான். அவனைக் கூப்பிட்டு "டேய் பாரு இந்த தட்டை நீ கையில் வைத்துக்கொள், ஐந்து நிமிடம், அவ்வளவுதான்... இதை நீ வைத்தால்..."

இராவணன் ஒரு முத்துமாலை அணிந்திருக்கிறான்.

"பாரு நீ இதை சும்மா ஐந்து நிமிடம் இப்படி பிடித்து நின்றுகொள். எனக்கு கொஞ்சம் உடலில் பிரச்சனை இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன். ஐந்தே நிமிடம் இப்படி வைத்துக்கொள். என்னுடைய முத்துமாலையை உனக்கு கொடுத்துவிடுவேன்" என்று சொன்னான்.

அந்தப் பையன் "சரி" என்று சொன்னான். பார்த்தாலே இவன் கொஞ்சம் புத்தி கம்மியாகத்தான் இருக்கிறான். எங்கே ஓடிவிடப் போகிறான்? இங்கேதான் இருக்கப் போகிறான். “சரி” என்று அவன் கையில் கொடுத்துவிட்டான். இவன் மரத்திற்கு பின்னால் போனான்.

அந்த பையன் கணபதி…!

அவன் மரத்திற்கு பின்னால் போன உடனேயே கீழே வைத்துவிட்டான். அந்த லிங்கம் அப்படியே பூமிக்குள் போய்விட்டது. இராவணன் அவனுடைய வேலையை முடித்து வந்தான். வந்து பார்த்தால் கீழே வைத்துவிட்டான் முட்டாள். உள்ளே போய்விட்டது! என்னென்னமோ பண்ணினான் எடுப்பதற்கு, முடியவில்லை. கோபத்தில் வீசினால் தட்டு ஒரு பக்கம் அதற்கு போடப்பட்டிருந்த தலைப்பாகை ஒரு பக்கம் வீசினான். இப்படி ஐந்து தன்மைகளை ஐந்து நோக்கத்தில் வீசினான். இப்போது அந்த ஐந்து தன்மைக்கு 5 விதமான ஷேத்திரங்கள் வந்துள்ளன.

கணபதியின் தலையில் குட்டு வைத்த இராவணன்

எங்கே இந்த ஆத்மலிங்கம் வைக்கப்பட்டதோ, இதற்கு கோகர்ணா என்று சொல்கிறார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் இந்த மாடு (கோ) மேய்க்கிற ஆளிடம் அவன் கையில் கொடுத்தான். அவன் முதலிலேயே திட்டம் போட்டு இருந்தான் கையில் கொடுத்த உடனே கீழே வைத்துவிட்டான்; உள்ளே போய்விட்டது; கோபத்தில் தலைமேல் ஒரு குட்டு வைத்தான். இப்போதுகூட அங்கே போய் அந்த கணபதியின் உருவத்தைப் பார்த்தீர்கள் என்றால், தலைமேல் தொட்டுப்பார்த்தால் கொஞ்சம் உள்ளே போய்விட்டது. ஏனென்றால் இராவணன் அவனை அப்படி அடித்துவிட்டான்.

இந்த ஆத்மலிங்கம் கிடைத்திருந்தால்… அவன் பாரத தேசம் முழுமையுமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆளுமையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால் சக்தி பூமிக்குள் போய்விட்டது. அதற்குப் பிறகு அவன் திரும்பவும் கைலாயம் போகவில்லை. அதற்குப் பிறகு இங்கேயே ஏதோ சேஷ்டை பண்ணினானே?! எங்கெங்கோ என்னென்னமோ ஆகிவிட்டது.

இவனுக்கு சக்தி இருக்கிறது; திறமை இருக்கிறது; புத்தி இருக்கிறது. ஆனால் அகங்காரம். அது ஒன்று இல்லையென்றால் இவனும் பிரமாதமான மனிதனாக வளர்ந்திருப்பான். ஆனால் பிரச்சனையாக ஆகிவிட்டான்.

ஏனென்றால் இது ஒரு பிரச்சனை, “நான்” என்ற அகங்காரத்தினால், அவ்வளவு சக்தி, அவ்வளவு புத்திசாலித்தனம், அவ்வளவு திறமை எல்லாமே பாழாய் போய்விட்டது. எல்லா மனிதனுக்கும் இதேதான். எவ்வளவோ இருக்கலாம், 'நான்' என்ற அகங்காரம் வந்துவிட்டதென்றால், எல்லாமே நமக்கு எதிர்மறையாக வேலை பண்ணுகிறது. நமது புத்தி நமது நன்மைக்காக வேலை செய்தால், கொஞ்சமாக புத்தி இருந்தாலும் போதுமானது, நன்றாக வாழமுடியும். இவ்வளவு வைத்துக்கொண்டு என்ன செய்வது. நமக்கு எதிர்மறையாக வேலை பண்ணினால்.. நமக்கு நாமே எதிரி. நமக்கு வேறு எதிரி தேவையே இல்லை. இவன் எப்படி இருந்தாலும் பிரச்சனையைத் தேடுவான். எங்கெல்லாமோ போய், இமயமலையில், கைலாயத்தில் எல்லாம் பிரச்சனையைத் தேடினான். அங்கே அந்தளவுக்கு சிக்கிக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு, இங்கே எங்கேயோ காட்டில்போய், ராமன் வந்தபோது பிரச்சனையைத் தேடி, முடிந்துவிட்டது கதை.