கைலாயத்தின் தெற்கு முகம்

Kailash yatra, kailash, manasarovar, sacred walks, shiva, sadhguru, isha, yoga, meditation, kriya

16 பேருடன் கடினமான மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்ற சத்குரு, தன் அனுபவங்களை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கடினமான பாதையும், நடுங்கும் குளிரும்கூட எப்படி சிவனை உணரும் அனுபவமாய் மாறியது என்பதை அழகாய் விளக்குகிறார். படித்து மகிழுங்கள்!

கைலாயத்திலிருந்து ஒரு நாட்குறிப்பு:

ஆகஸ்ட் 12, 2013

பெயரில்லாதொரு பள்ளத்தாக்கு

10 கிமீ மலையேற்றத்திற்கு பின் சித்துக்களில் தோய்ந்த இந்தப் பெயரில்லா பள்ளத்தாக்கில் தங்குவதென முடிவு செய்தோம். இங்குள்ள மனிதர்கள், புழுக்களைப் போல் கீழான எண்ணத்துடன், தன் சித்தப்படி இயற்கையை வளைக்க நினைக்கின்றனர். அற்ப விஷயங்களை, மாந்த்ரீகத்தால் அதிசய சக்தியால் இவர்கள் செய்ய நினைக்கின்றனர். ஆனால் எனக்கோ இது சிவனின் வாசம். இவ்விடம் மாரிஜுவனா காடாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நான் சிவனின் போதையால் கிறங்காமல் இருந்திருந்தால், போதையை நாடுபவருக்கு இது உகந்த இடமாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஓவென ஆர்ப்பரித்து ஓடும் ஒரு நதிக்கரையில் கொட்டகை இட்டிருக்கிறோம். ஏதோ எண்ண ஓட்டத்திலிருக்கும் இந்த மலை, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. சில வௌவால்கள், தன் இராப் பொழுது உலாவிற்காக தயாராய் கிளம்பிவிட்டன. இவை குருதியுறுஞ்சும் பிசாசுகள் அல்ல. ஆனால் அவைகளின் பார்வையற்ற விழிகளும் சலனமில்லாமல் பறக்கும் திறனும் மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்தவை போல் தோன்றுகின்றன. அறியாமையின் வழிகள் எத்தனை விசித்திரமாய் உள்ளன! இவை நம்மைப் போன்ற பாலூட்டி வகை, நம் நெருங்கிய சொந்தங்கள். ஆனால் நாமோ வௌவால்கள் போல் பார்வையற்றவர்களாய் உள்ளோம், அப்படித்தானே?

ஆகஸ்ட் 15, 2013

14.5 கிமீ டம்கோட்டிற்கான மலையேற்றத்தில் பல அற்புதமான, அழகான, தொன்மை வாசம் வீசக் கூடிய நிலப்பகுதிகளின் ஊடே சென்றோம். கிட்டதட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு, கால் முட்டுக்களுக்கும் நுரையீரல்களுக்கும் சவால்விடும்படி இருந்தது. பூதசுத்தி தீட்சை மற்றும் நாள் முழுவதும் நடைபெற்ற சத்சங்கத்திற்கு பின் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன், காற்றில் மிதப்பவர்கள் போல் உள்ளனர். ஒரு சில பள்ளத்தாக்குகளையும், சில மலைக் குன்றுகளையும் கடந்து செல்வது கனவுபோல் மலைப்பாய் இருந்தது. மூன்று இரவுகளுக்கு மேல் நான் ஒரே இடத்தில் தங்கி கிட்டதட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டன. இது வியப்பூட்டுவதாயும் எழுச்சியூட்டுவதாயும் இருந்தது.

கடுமையான மலையேற்றத்திற்கு பின், ஓடிவரும் சிற்றோடையின் அருகில் தங்கியது, வலியெடுத்த கால், கைகளுக்கு தேவைப்பட்ட ஒரு இடைவேளை என்றே சொல்ல வேண்டும். பங்கேற்பாளர்களின் ஆர்வமும் உற்சாகமும் நாள் முழுவதும் அந்த சத்சங்கத்தை நீட்டித்தது. நம்மில் ஒரே ஒருவரை மட்டும் உடல்நிலை காரணத்தால், டம்கோட்டின் பள்ளத்தாக்குகளிலிருந்து காட்மான்டுவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்ல நேர்ந்தது. அவரும் ஒரு நாளில் தேறிவிட்டார். நன்றாக இருக்கிறார்.

டம்கோட்டில் மேற்கொண்ட அந்த கடைசி பயணம், மிகக் கடினமானதாக இருந்தது. பாறைகளுடைய அந்த பள்ளத்தாக்குகள் நம் நுரையீரல்களையும் கால்களையும் மட்டும் சோதிக்கவில்லை, நம் மன உறுதியையும் சோதித்தது. ஆறு நாள் கடுமையான மலையேற்றத்திற்கு பின், இறுதியாக சிப்சிப் என்னும் இடத்தை அடைந்து அங்கு வாகனங்களைப் பார்த்தபோது உடலின் ஒவ்வொரு செல்லிலும் கொண்டாட்டம் மிகுந்திருந்தது. நரோலா கால்வாய் வழியாக நாம் வண்டியில் பயணம் செய்தோம். இந்த பயணத்தில் இடர்கள் நிறைந்திருந்தாலும் தன் அழகினால் மூர்ச்சையடையச் செய்தது. பசுமையிலிருந்து ஸ்தம்பிக்கச் செய்யும் நீர்நிலைகள், எலும்பை உலர்த்தும் வறட்சியான நிலப்பிரதேசங்கள், விண்ணை முட்டும் அடர்ந்த மலைகள் என பருவங்கள் நொடிப் பொழுதில் மாறி மாறி காட்சி அளித்து நம்மை திபெத்திய பீடபூமிக்கு வரவேற்றன. இது இந்த பூமிக்கே உரிய தனிச்சிறப்பு.

ஒருவர் எத்தனை முறை மானசரோவருக்கு வந்திருந்தாலும் மானசரோவரின் மந்திரம் மட்டும் மனதைவிட்டு அகல மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் நம்மை வசீகரித்து, அடிமைப்படுத்துகிறது. ஞானக் கிடங்காய் விளங்கும் அந்த நதிக்கரையில் இரண்டு இரவுகளும், வேறு பாதையில் மானசரோவரை அடைந்த இதர குழுக்களுடன் தொடர் சத்சங்கங்களும் நடைபெற்றன. யாத்திரீகர்களின் பக்தியும் தணியா பாசமும் மனம் நெகிழச் செய்கிறது.

இந்த சமயம் நாம் கைலாய மலையின் தெற்கு முகத்தில் தங்குவதென முடிவு செய்தோம். இதனை அஷ்டபதி என்று அழைக்கின்றனர். இது ஞானத்தின் இருப்பிடம். நான் இங்கு சில முறை வந்திருக்கிறேன், ஆனால் இரவு நேரத்தில் தங்கியதில்லை. இத்தடம் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுவதால், இங்கு ஊர்திகளுக்கு அனுமதி இல்லை. அஷ்டபதிக்கு நாம் செய்த இந்த மலையேற்றம் அளப்பரிய ஓர் அனுபவமாய் இருந்தது. 5200 மீ உயரத்தில், தங்குவதற்கு நாம் முயன்றாலும், சீதோஷண நிலை நம்மை சோதிப்பதாய் இருந்தது.

மாலை 6.30 மணிக்கே பனிப் பொழிவு ஏற்பட்டதால், எங்களில் 12 பேரால் மட்டுமே அங்கு தங்க முடிந்தது. அப்படிப்பட்ட ஒரு சீதோஷண நிலையில், கடுமையான மேகங்கள் கைலாய மலையை போர்த்தியிருக்க, கருணை அலை அனைத்தையும் தழுவிச் செல்ல, பனி போர்த்திய அந்த முக்காடு விலகி பிரம்மாண்ட உருவும் அருளும் வெளிப்பட்டது. மலையேற்றத்தின் வலியும், வானிலையின் விபரீத விளையாட்டுக்களும், குளிரும், நம் அனுபவத்தில் இல்லாமல் போயின. கைலாயம் மட்டுமே இருந்தது. அவ்வளவுதான், அவ்வளவேதான். இந்த இடத்தின் சுண்டியிழுக்கும் சக்தியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.

அந்த இரவு தனித்துவம் வாய்ந்ததாயும், நம் பயணத்தில் பிரதானமானதாயும் இருந்தது. நான் பல இரவுகளை காடுகளிலும் மலைகளிலும் கழித்திருக்கிறேன். பசித்திருப்பது, குளிரில் விரைத்திருப்பது எனக்கொன்றும் புதிதல்ல. என் சிறு வயதிலிருந்தே இவை என் துணையாய் இருந்திருக்கின்றன. அந்த இரவுகள் எப்போதும் மிக சக்தி வாய்ந்ததாய் எனக்கு இருந்திருக்கின்றன. அவை எனக்கு வலியையோ அல்லது தனிமையையோ நிச்சயம் அளிக்கவில்லை. ஆசீர்வதிக்கப்பட்ட அந்த இரவுகளில் சிவன் என் அனுமதி இல்லாமலே என்னை ஆட்கொண்டிருக்கிறார். ஆனால் அஷ்டபதியில் நாம் கழித்த இந்த இரவு மிகவும் தனித்துவமானது. ஒன்று, நாம் கைலாயத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. இரண்டு - எந்த தட்பவெட்ப சூழ்நிலையிலும் நம்மை காக்கும் ஒரு டென்டில் இருந்தது. மூன்றாவது - நாம் தங்கியிருந்த அந்த டென்ட் (குடில்) தன் தலை மேல் 8 இன்ச் பனி போர்த்தியதால் இக்ளூவாய்(Igloo) மாறியிருந்தது.

வெட்டவெளியில், இரவு முழுவதும் கொட்டும் பனியில் இதுவரைக்கும் நான் இருந்ததேயில்லை. காலை 7 மணி வரை பனிக் கொட்டிக் கொண்டிருந்தது, ஏதோ இடையில் எங்களுக்கு ஒரு மணி நேரம் இடைவேளை கொடுத்து மீண்டும் கொட்டத் துவங்கியதால், டென்டுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு செர்லங் என்னும் மடத்திற்கு உற்சாகத்துடன், உறுதியுடன் பயணம் செய்யத் தயாரானோம். அந்த மடத்தில்தான் நம்முடன் வந்த இதர பலர் தங்கியிருந்தனர். அசுத்தமான கண்கள் அவனைக் கண்டுவிடக் கூடாது என்பதுபோல், நாம் கிளம்பியவுடன் மீண்டும் வெண்பனி அவனைப் போர்த்திக் கொண்டது. ஓ! இயற்கை அன்னையே அவனுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அவனுக்கு சுத்தமும் கிடையாது, அசுத்தமும் கிடையாது. அவனுக்கு பாவியும் கிடையாது, பரிசுத்தமானவனும் கிடையாது. துறவியையும் மாந்திரீகனையும் அவன் ஒரே கண்களோடுதான் பார்க்கிறான். தெய்வீகமோ தீய சக்தியோ ஒரே கண்களுடன்தான் காண்கிறான். கறைபடாத, எண்ணமற்ற, மூன்றாவது கண் அவனுடையது.

அஷ்டபதியிலிருந்து கீழிறிங்கி வந்தவுடன் மானசரோவரில் ஓரிரவு தங்கினோம், அங்கு கடைசியாக வந்து சேர்ந்த குழுவுடன் ஒரு சிறிய சத்சங்கம் நடைபெற்றது. ஜிகாஜே என்னும் இடத்தை நோக்கி அதிகாலைப் பொழுதிலேயே கிளம்பினோம். இது ஓராயிரம் கிமீ ஊர்தி பயணம். இல்லையேல், சிறு நகரமான சாகாவில், திபெத்தின் மூன்று தடங்கள் சந்திக்கும் பெருவழிச் சாலை சந்திப்பில், பெருத்த கவனத்தை ஈர்த்து ஆராவாரப்பட்டுக் கொண்டிருக்கும் இராணுவ முகாமின் அருகாமையில் தங்க நேரிடும். ஐந்து வருடங்களுக்கு முன் நம் தியான அன்பர்கள் என் பிறந்த நாளிற்காக வைத்துவிட்டு வந்த ஒரு அடையாள சின்னத்தை இன்றும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, என் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது 'தி கிரேட் சாகா ஹோட்டல்'.

சாகாவில் ஒரு சிறிய நிறுத்தத்திற்கு பின் நாம் ஜிகாஜேவை நோக்கி பயணமானோம். 700 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் என்னுடைய லேன்ட் க்ரூசர் வாகனம் ரம்மியமற்ற ஓசைகளை எழுப்பி, தீவிரமான உராய்வுகளைப் பற்றி பேசத் துவங்கியது. ஒரு சில நிறுத்தங்கள், சரிபார்ப்புகளுக்கு பின் ஸ்டியரிங்குடைய பேரிங் (steering bearing) பழுதடைந்துவிட்டதெனத் தெரிந்தது. உராய்ப்புள்ள ஸ்டியரிங்குடன் இரவு 10 மணிக்கு மேல், 14 மணி நேர பிரயாணத்திற்கு பின் ஜிகாஜேவை வந்தடைந்தோம். நாம் பயணம் செய்த அந்த நிலப்பகுதி யார் ஒருவரையும் வார்த்தைகளறச் செய்து பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

ஜிகாஜேவில் திபெத்தின் மிகப் பெரிய மடங்கள் உள்ளன. இவை பதினோறாவது பான்சென் லாமா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் தற்சமயம் பீஜிங்கில் வாழ்கிறார். 650 வருட பழமையான இந்த மடம் மிக அழகாக இருந்தது. ஒரு நாளை இங்கு கழித்தோம். இவ்விடத்தின் கட்டிடக் கலையமைப்பும் கலையும் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சீரான அமைப்பு, அழகியல் விதிகளின் அத்தனை சாதனைகளையும் முறித்து உருவாக்கப்பட்டுள்ளது. அத்தனை அழகு!

ஆஹா! லாசா நகரம் பரிபூரண உருமாற்றம் பெற்றிருக்கிறது. சீன வடிவமைப்பாளர்களும் நிர்வாகமும் சில வருடங்களுக்கு முன் மிகச் சிறிய ஊராய் இருந்த லாசாவை இன்று பரபரப்பான, அழகிய நகராக மாற்றமடையச் செய்துள்ளனர். திபெத்திய பாரம்பரியத்தையும் நவீன கண்ணாடிகளையும் இரும்புச் சட்டங்களையும் பிணைத்து அற்புதமானதொரு பணியைச் செய்துள்ளனர். லாசாவிலும் அதைச் சுற்றியும் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் இதே அளவுடைய ஐரோப்பிய, வடக்கு அமெரிக்க நகரங்களுக்கு போட்டியாக உள்ளன. சீன பொறியாளர்களுக்கும் திட்டமிடுபவர்களுக்கும் நான் முழு மதிப்பெண்கள் வழங்குகிறேன்.

பல்வேறு பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் இந்தக் குழு ஒன்றென கரைந்துவிட்டது.... கடைசி இரவு உணவும் பிரம்மபுத்திரா ஹோட்டலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. இதனை 3 வார - என்னவென்று அழைக்க? ஒரு சாகசம்? ஒரு உலா? ஒரு மலையேற்றம்? ஒரு யாத்திரை? அனைத்திற்கும் ஆம் என்ற பதிலோடு, இவை அத்தனைக்கும் மிகுந்த, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அனுபவம் எனலாம். அந்த மலை, அந்த ஞானக்கீற்று, இந்த புனிதப் பயணத்தில் ஒன்றிணைந்தவர்களை அற்புதமாய் பிணைத்துள்ளது.

Love & Grace